செம்மணி மனிதப் புதைகுழியை திசைதிருப்பும் தென்னிலங்கையும் மௌனிக்கும் தமிழ் தரப்பும்! -ஐ.வி.மகாசேனன்-
உலகின் அழகிய தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கைத்தீவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடர்ச்சியான அகழ்வில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோரின் என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைத் தீவின் அழகில், ஒரு பகுதி மக்களின் கண்ணீர் கவனத்தைப்பெற தவறுகின்றது. இலங்கைத் தீவு, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றின் மூலமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாகவே வடக்கில் செம்மணியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகள் சாட்சியங்களாகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்படுகொலையை மறுத்துவரும் நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி அவலம் தொடர்பிலான கருத்தை தவிர்த்து வருகின்றது. மறுமுனையில் கடந்த கால தென்னிலங்கை அரசாங்க பிரதிநிதிகள், தமது குற்றங்களை மூடி மறைப்பதற்காக செம்மணி மனிதப்புதைகுழியை இறந்த உடல்களை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக பிரச்சாரப்படுத்துகின்றார்கள். இது செம்மணி மனிதப்புதைகுழி சாட்சியம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் தொடர்பில் தென்னிலங்கை அச்சம் கொள்வதனையே வெளிப்படுத்துகின்றது. எனினும் ஈழத்தமிழர்கள், செம்மணி மனிதப்பு...