ஜனநாயக சவாலால் சூடானில் மீள துளிர்க்கிறது இராணுவ ஆட்சி? -ஐ.வி.மகாசேனன்-
அரசியல் என்பது அதிகாரத்தை மையப்படுத்திய அலகாகவே காணப்படுகிறது. இவ்அதிகாரப் போட்டிக்குள் வரலாறு தோறும் ஜனநாயகத்துக்கு முரணான அதிகார கைப்பற்றுகைகளும் பதிவாகியே வருகின்றது. எனினும் அண்மைய சர்வதேச அரசியல் பரப்பில் ஜனநாயகத்துக்கு முரணான அதிகாரக்கைப்பற்றுகையின் செய்தியிடல்கள் அதிகரித்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அண்மைய ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பதிவுகளாய் மியான்மார், ஆப்கானிஸ்தான், கினியா எனும் வரிசையில் ஒக்டோபர்(2021) இறுதியில் சூடானும் இணைந்துள்ளது. இக்கட்டுரை சூடானில் ஏற்பட்டுள்ள இராணுவ சதிப்புரட்சி அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. சூடானின் நீண்ட கால அரசியல் வரலாறு இராணுவ அட்சியினுள்ளேயே காணப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியான ஒமர் அல் பஷீர் 1989இல் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். இவரது ஆட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு மக்கள் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொண்டு சிவிலியன்-இராணுவ கூட்டமைப்பு ஒன்று இடைக்கால அரசாங்கமாக பதவியேற்றது. சூடானின் இறையாண்மை சபை சிவிலியன்-இ...