தமிழ்த்தேசிய அரசியல் தரப்புக்களும் மாகாணசபை தேர்தல் முனைப்புக்களும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் மீளவும் மாகாண சபை தேர்தல் விவகாரம் சூடான விவாத பொருளை உருவாக்கியுள்ளது. மாகாண சபை தேர்தல் விவகாரம் இலங்கையின் இறைமைக்கு முரணான வகையில் சர்வதேச தலையீடு என்பதாக எதிரணிகளால் குற்றச்சாட்டுகள் நிரல்படுத்தப்படுகின்றது. ஆளுங்கட்சி தேர்தல் முறைமை தொடர்பான சிக்கல்களே மாகாண சபைத்தேர்தலின் தாமதத்துக்கு காரணமெனவும் விரைவில் அது பூர்த்தியடைய உள்ளமையால் மாகாண சபை தேர்தல் பற்றி சிந்திப்பதாகவும் தம்தரப்பு நியாயப்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அரசியல் முரண்நிலைகளுக்கு அப்பால் தென்னிலங்கை மாகாணசபை தேர்தலை இலங்கை தேசிய நலனுடன் தொடர்புறுத்தியே முரண்படுகிறார்கள். எனினும் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிடையே மாகாணசபை தேர்தல் தொடர்பான சிந்தனை அரசியல் அதிகார போட்டிக்கான களமாகவே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பு கவணத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வருகை மற்றும் அரசியல் சந்திப்புக்களில் 13ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலே அதிகமான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்க தரப்பிடமிருந்தும் மாகாணசபை தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஒக்டோபர்-11(2021) அன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மாகாண சபை தேர்தல் விரைவாக நடைபெற உள்ளமை தொடர்பில் கருத்துரைத்தார். மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும். அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மாகாணசபை அறிவிப்புக்கள், ஏற்பாடுகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரை கையாள்வதற்கான ஏற்பாடுகளை தற்போதே நகர்த்த ஆரம்பித்துள்ளார்கள் என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பீரிஸ், 'ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை' என சுட்டிக்காட்டி உள்ளார். மார்ச் மாத கால குறிப்பீடும் மற்றும் ஜனநாயகம் பற்றிய குறிப்புக்களும் இதன் பின்னாலுள்ள ஜெனிவா அரசியல் கையாள்கையை வெளிப்படுத்தி நிற்கின்றது. 2021 மார்ச் மாதம் நடைபெற்ற 46வது ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 13ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. இலங்கை அரசாங்கம் பொதுவெளிகளில் ஜெனிவா தீர்மானங்களை நிராகரிப்பதாக உரையாடல்களை உள்ளூர் அரசியலுக்காய் பயன்படுத்தினாலும், சர்வதேச அரசியல் நெருக்கடிகளை தளர்த்த ஜெனிவா தீர்மானங்களை அனுசரித்தே செல்கின்றார்கள். இன்றும் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகள் வழமையான முறையில் பகுதியளவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயற்படுத்தப்பட்டு கொண்டே உள்ளது. இவ்வாறாகவே மார்ச் மாதத்தை அண்டித்து மாகாணசபை தேர்தலை அரசாங்கம் தீர்மானிப்பதுவும் ஜெனிவா தீர்மானத்தை பகுதியளவில் இலங்கை நகர்த்த முற்படுகின்றது என்ற சாதக சமிக்ஞையை மனித உரிமைள் பேரவைக்கு வெளிப்படுத்துவதூடாக சர்வதேச நெருக்கடியை தளர்த்துவதற்கான உத்தியாகவே காணப்படுகிறது.
மேலும், வடமாகாண ஆளுநர் மாற்றத்தினுள்ளும் அரசியல் இராஜதந்திர பொறிமுறையே அவதானிக்கப்படுகிறது. தற்போது நியமனம் பெற்றுள்ள வடமாகாண ஆளுநரின் சுயவிபரம் மனித உரிமைச்செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்படுகின்றார். பொதுஜன பெரமுன அரசாங்கம் மனித உரிமைகளை மையப்படுத்தி செயற்படும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களிலேயே பௌத்த மத சங்கங்களின் தலைவரையும், மனித உரிமைகள் தொடர்பான ஆழமான அறிவற்ற, சுயாதீன செயற்பாடற்றவர்களை நியமிக்கையில், வடமாகாண ஆளுநராக மனித உரிமை செயற்பாட்டாளராக சுயவிபரம் உடையவரை நியமிப்பது ஆழமான அரசியல் இராஜதந்திர பொறிமுறையே ஆகும். எதிர்காலத்தில் வடமாகாண சபையூடாகவே இலங்கை அரசாங்க தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்கு வாய்ப்புகளும் சூழலும் அதிகமாய் உள்ளது.
அரசு இயந்திரம் நீண்டகால திட்டமிடல்களுடன் இலங்கை தேசியம் என்ற சிந்தனையில் தேச நலனை மையப்படுத்திய வெளியுறவுக்கொள்கையை வெற்றிகரமாக நகர்த்துகின்றது. மாகாணசபை தேர்தல் என்ற ஒன்றின் மூலம் பல அனுகூலங்களை தென்னிலங்கை அரசியல் தரப்பு சிந்தித்து செயற்படுகின்றது. மாறாக தமிழ்த்தேசிய அரசியல் தரப்பு மாகாணசபை தேர்தல் விவகாரத்தை தமிழ்த்தேசிய அரசியல் நலனுடன் சிந்திக்கிறார்களா என்பது நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய விடயமாக உள்ளது.
முதலாவது, தமது சுயநல அரசியல் நலனுக்கான நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார்கள். தமிழ்த்தேசிய அரசியல் கடந்த காலங்களில் அதிக பொய்மைகளை காட்சிப்படுத்தியே தேர்தல்களை எதிர்கொண்டு வந்தன. எனினும் தென்னிந்திய அரசியல் பாணியிலான சினிமா அரசியல் தோற்றப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டதில்லை. தமிழ் மக்கள் ஆழமான சிந்தனை உடையவர்கள் என்ற ரீதியில் இலங்கை தமிழ்ப்பரப்பில் நாடக அரசியல் இலகுவில் வீழ்த்தப்படும் என்ற சிந்தனை அரசியல் தரப்புகளிடமும் காணப்பட்டது. எனினும் இன்று தமிழ் மக்கள் அரசியல் சார்ந்து நுணுக்கமான சிந்தனைகளற்று செயற்படுவதனால் மக்களை நாடக அரசியல் மூலம் முட்டாளாக்கி தமது சுயநல அரசியல் பலத்தை அதிகரித்திடலாம் என்ற எண்ணம் தமிழ்த்தேசிய அரசியல் பட்டி அணிந்துள்ள தரப்புகளிடமே தொற்ற ஆரம்பித்துள்ளது. மாகாண சபை தேர்தல் விவாகரங்கள் சூடுபிடித்ததும் தம்சுய நல அரசியலுக்கான நாடகங்களை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு, முதன்மை வேட்பாளருக்கான போட்டி கட்சிகளுக்கே அதிக முரண்பாட்டை உருவாக்கியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற ஆசனங்களை பெற தவறியோர், பாராளுமன்ற தேர்தலில் தாம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து கொண்டு முதலமைச்சர் வேட்பாளாருக்கான கனவுகளுடன் கட்சிக்குள்ளே குழுக்களை உருவாக்கி தமக்கான ஆதரவு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அயல்தேச இராஜதந்திரிகள் தீர்வு விடயத்தில் ஒற்றுமைப்படுமாறு பாடமெடுத்து சென்று ஒரு வாரங்களினுள்ளேயே அதிகாரமற்ற முதலமைச்சர் வேட்பாளருக்காக ஒரு கட்சியினுள்ளேயே அதிகம் முதுகில் குத்தும் செயல்கள் அரங்கேறுகின்றது. இந்த ஒருமைப்பாடின்மைகளுடனேயே தமிழ் மக்களிடம் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு தேர்தல் பிரச்சாரங்களை தமிழ்த்தேசிய கட்சிகளும் வலியுறுத்துகிறது. தமிழ்த் தேசிய பட்டியணிந்துள்ள கட்சிகள் தேர்தல் அரசியலில் ஒற்றுமை அவசியமற்ற போதிலும் தென்னிலங்கையின் இராஜதந்திர நகர்வுகளை கையாள ஒரு ஐக்கிய முன்னணியாக தமிழ்த்தேசிய நலனை முன்னிறுத்தி ஆலோசித்து செயற்படுவது அவசியமாகிறது.
மூன்றாவது, தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள முதுமையான அரசியல்வாதிகள் தமிழ்த்தேசிய அரசியலை தாமே குத்தகைக்கு எடுத்தால் போன்று செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள். ஐந்து தசாப்தங்களாக பாராளுமன்ற அரசியல் பிரதிநிதியாக, மாகாணசபை பிரதிநிதிகளாக இருந்தும் தமிழ் மக்களுக்கு சரியானதொரு அரசியல் வழிகாட்டலையோ அல்லது முன்னேற்றகரமான வாழ்க்கை தரத்தையோ ஏற்படுத்தி கொடுக்காத அரசியல்வாதிகளே மீளவும் மாகாண சபை ஆசனங்களுக்கான போட்டிகளில் மும்மரமாக உள்ளனர். புதிய தலைமுறைகளுக்கு வாய்ப்பு கொடுக்கவோ அல்லது புதிய தலைமுறைகளை நெறிப்படுத்தவோ தயாராக இல்லை.
நான்காவது, சில தரப்பு கொள்கைகளை துறந்து பெரியகட்சியை வீழ்த்தவோ அல்லது விரோதிக்கவோ கூடாதென்ற புதிய கொள்கையை வகுத்துள்ளனர். தமிழ் மக்கள் ஓர் தேசிய இனமாக தம் சுயநிர்ணயத்துக்காக நீண்டகால போராட்டங்களூடாக நீண்ட இழப்பு பட்டியலை உடையவர்கள். இவ்வினம் தேசிய விழுமிய கொள்கைகளை துறந்து பெரிய கட்சி எனும் புதிய கொள்கைக்குள் பயணிக்க முற்படுவது ஈனச்செயலாகும். இந்நெறியை தமிழ்த்தேசிய பட்டியணிந்த ஓர் தரப்பு முன்னெடுப்பது தமிழினத்தின் அவலமே ஆகும். பெரிய கட்சியோ சிறிய கட்சியோ தமிழ்த்தேசிய பரப்பில் தமிழ்த்தேசிய கொள்கை அதுசார் விழுமியங்களே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அதனையே மக்கக்களுக்கான அரசியலறிவாக புகட்ட வேண்டிய பணி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கு காணப்படுகிறது.
13ஆம் திருத்த சட்டமூலம் அதிலும் குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபை கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் தீர்வாக முடியாது. எனினும் இலங்கை அரசாங்கம் அத்தீர்வற்ற பொறியை நகர்த்தி சர்வதேச நெருக்கடிகளை தளர்த்தும் இராஜதந்திர பொறிமுறைகளை நகர்த்தி செல்கையில் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பு கதிரை போட்டிக்காக மோதுவது தமிழ்த்தேசியத்தையே பலவீனப்படுத்தும் செயலாகவே காணப்படுகிறது. மேலும், தமிழ்த்தேசிய பட்டி அணிந்த கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்வது அரசாங்க தரப்பிடம் மாகாண சபை செல்லக்கூடிய வாய்ப்புக்களும் உருவாகும். மாகாணசபை தீர்வற்ற கட்டமைப்பாயினும், அதனை அரசாங்க தரப்பு கைப்பற்றுவதை தடுத்து தமிழ்த்தேசிய தரப்பு கைப்பற்றி அதன் பலவீனத்தை சர்வதேச வெளியில் காட்சிப்படுத்த வேண்டும். சர்வதேச அரங்கிலேயே மாகாணசபையை தமிழர் தீர்வாக உரையாடப்படுகையில் அதன் பலவீனத்தை சர்வதேச அரங்கிற்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய பட்டியை அணிந்துள்ள அனைத்து அரசியல் தரப்பினரதும் தலையாய கடமையாகும். இதற்கு தமிழ்த்தேசிய ஆதரவை குறித்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் ஒரு பொதுப்பட்டியலை தயாரிப்பதுவே சமயோசித புத்தியாகும். எனினும் சுயநல அரசியல் அவாக்கொண்ட தமிழ்த்தரப்பிடம் இவ்வாறான இராஜதந்திர அரசியல் சிந்தனை ஏற்படுவது சந்தேகத்திற்குரியதேயாகும்.
எனவே, தமிழரசியல் தரப்பும் மாகாணசபை தேர்தல் விவகாரத்தை அதிகார போட்டிக்கான களம் என்பதை கடந்து இராஜீக களமாக உள்வாங்கி செயற்பட வேண்டும். தமிழரசியல் தரப்புகள் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்காது பிராந்திய அரசுகளும் சர்வதேச அரசுகளும் தமிழ்த்தேசிய நலனை முன்னெடுக்க வேண்டுமென நினைப்பது அரசியல் கையாளாத்தனமாகும். தமிழ் தரப்பின் அரசியல் இராஜதந்திரமே பிராந்திய சர்வதேச அரசுகளின் தேசிய நலன்களுக்குள் தமிழ்த்தேசிய நலனை பிணைத்திடும் வகையில் செயற்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment