ஈழத்தமிழர்-தமிழக உறவை பலவீனப்படும் முயற்சியில் தமிழரசியல் தரப்பு செயல்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை அரசியல்வாதிகள் அதிகம் நாடும் அரசியல் கலாசாரம் தென்னாசிய அரசியல் பரப்பிலோர் அடையாளமாக மாறியுள்ளது. தமிழ்த்தேசிய பரப்பில் மக்களின் உரிமைப்போராட்டங்களை அதிகம் வெறுப்பாக கடந்து சென்ற தரப்பினர்கள் அண்மைய நாட்களில் நேரசூசியை இட்டு சில போராட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். மக்களும் இதனை தேர்தல் அரசியல் நடாகமாக கடந்து செல்ல முற்படுகின்றார்கள். எனினும் தெரிவு செய்யப்பட்ட போராட்டங்கள் பல தளங்களில் அரசியல் விளைவுகளை கொண்டதாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் உரையாடல்களில் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக மீனவர்-ஈழத்தமிழ் மீனவர் சமூக நெருக்கடிகளை மையப்படுத்தி இடம்பெற்ற போராட்டம் அதிக காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் மீனவ சமூகங்களின் நெருக்கடிகளை மையப்படுத்தி இடம்பெற்ற போராட்டத்தின் அரசியல் தார்ப்பரியத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் வட இலங்கை கடற்பரப்புக்களில் நுழைவதும், இலங்கைத்தமிழ் மீனவர்கள் தமிழக கடற்பரப்புக்குள் நுழைவதும் இரு மீனவ சமூக மக்களிடையேயும் நீண்டகால பிரச்சினையாக காணப்படுகிறது. இந்நெருக்கடிகளுக்குள் தமிழக மீனவ சமூகத்திலுள்ள பெரிய முதலாளிகள் தடைசெய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதால் மீன்வளம் அழிந்து போகும் நிலை காணப்படுவதும் ஓர் அபத்தமான சூழலாகவே தென்படுகிறது. இந்நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் இரு சமூக பிரதிநிதிகளிடமும் நீண்டகால பேச்சுவார்த்தைகளும் தளத்தில் இடம்பெற்று கொண்டுள்ளன. மறுதளத்தில் இலங்கை தமிழ் மீனவ சமூகங்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைப் பயன்பாட்டை அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென்ற போராட்டங்களும் வடஇலங்கையில் இடம்பெற்று வருகிறது.

தமிழக மீனவர் மற்றும் இலங்கை தமிழ் மீனவ சமூகங்களிடையேயான நெருக்கடி நிலைமை என்பது இரு தமிழ் சமூகங்களிடையேயான நெருக்கடி நிலையாகவே அவதானிக்க வேண்டும். மாறாக அயல் நாட்டு பிராந்திய பிரச்சினையாக அரசியல் தலையீடுகளுடன் அரசியல் நலன்களுடன் கையாள முற்படுவது ஆபத்தான விளைவுகளை ஈழத்தமிழ் சமூகத்துக்கு ஏற்படுத்தக்கூடியதாக காணப்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இதனை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, 2009ஆம் ஆண்டு சூழலில் ஈழத்தமிழர்களுக்கு சரியான பாதுகாப்பை அன்றைய தமிழக அரசு உறுதிப்படுத்தாத போதிலும் தமிழக மக்கள் பலர் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென கோரி உயிரையே தியாகம் செய்துள்ளார்கள். பல மாணவ சமூகங்கள் வீதியிலிறங்கி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடினார்கள். அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது கரிசனையை காட்டாத திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சியையும் தோற்கடித்தார்கள். இவ்வாறாக தமிழக மக்கள் ஈழத்தமிழர்களை தம் சமூகமாகவே கருதி வருகிறார்கள். அச்சமூகத்தை இருதரப்புக்கும் பொதுவான எதிர்த்தரப்பாகிய இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என போராட்டத்தை நகர்த்துவது, தமிழக மக்களின் உணர்வை ஈழத்தமிழ் சமூகத்திடமிருந்து பிரிப்பதற்கே ஈடாகும். அண்மைக்காலங்களில் தமிழகத்தின் ஒரு கட்சியுடன் மாத்திரம் ஈழத்தமிழர்களின் உறவுகள் வலுப்படுத்தி வருகின்றது என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையிலான உறவில் சில விரிசல்கள் உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் இவ்வாறான போராட்டங்கள் முழுமையான பிளவுகளையே உருவாக்கக்கூடியதாகும்.

இரண்டாவது, தமிழகத்தின் தற்போதைய திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி கடந்த கால விமர்சனங்களை களையும் வகையில் ஈழத்தமிழர்களுக்கான நலத்திட்டங்களை அதிகமாக அறிமுகப்படுத்தி வருகின்றது. அத்துடன் தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்படும் அகதி அடையாளங்களை மாற்றும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழக ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்கள் நலனை மையப்படுத்தி சிந்தித்து செயற்படுகையில் தமிழக மக்களுக்கு எதிராக ஈழத்தமிழரசியல் தலைமைகள் களமிறங்கி போராடுவது தமிழக ஆட்சியாளர்களையும் ஈழத்தமிழர் நலன்சார் செயற்பாடுகளிலிருந்து பின்வாங்கவே வழிஏற்படுத்தும். குறிப்பாக தமிழக மீனவ சமூகத்தில் தமிழக ஆட்சியிலுள்ள திராவிட முன்னேற்றக்கழகமே ஆதிக்கமிக்க அரசியல் கட்சியாகவும் காணப்படுகின்றது. தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எதிரானது என்ற பார்வையையே உருவாக்கக்கூடியதாகும். குறிப்பாக ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் களத்திலிறங்கி போராடுவது தமிழக அரசின் ஈழத்தமிழர் மீதான கரிசனையை இல்லாமல் செய்யக்கூடிய வாய்ப்பை அதிகமாக்குகிறது.

மூன்றாவது, மரபின் அடிப்படையில் மீனவ சமூத்தவர்கள் அதிகம் உணர்வுகளுக்குள் ஆக்கிரமிக்கப்படுபவர்களாக உள்ளனர். பிரதேச வேறுபாடுகளின்றி தமிழ்த்தேசியத்திற்காக அதிக விலை கொடுக்க துணிபவர்களாக மீனவ சமூகம் இருந்து வந்துள்ளது. எடுத்துக்காட்டுகளாக தமிழக இளையோரின் தமிழ்த்தேசிய உணர்வை பறைசாற்றிய மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் இறுதிதருணத்தில் பொலிஸாரின் தடியடிக்கு உட்பட்டபோது இளைஞர்களை காப்பாற்றுவதற்காக தமிழக மீனவ சமூகங்கள் யாருடைய வற்புறுத்தலுமின்றி சுயாதீனமாக களத்திலிறங்கி போராடினர்கள். இளையோரை தமது படகுகள் மூலம் காப்பாற்றினார்கள். அவ்வாறே ஈழத்தமிழ் பரப்பிலும் ஆயுதப்போராட்ட உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் மீனவ சமூகத்தின் பங்கு அளப்பெரியது. அத்துடன் தமிழ் மக்களின் உரிமை கோஷங்களை வலியுறுத்தி இறுதியாக இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுகளிலும் சுயாதீனமான பங்களிப்பை நிறைவாக வழங்கி எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். இவ்வகையில் அதிகம் தமிழ்த்தேசிய உணர்வை சுயாதீனமாக முன்னிறுத்தும் இரு தரப்பு நெருக்கடிகளை அரசியல் தலையீடுகள் மூலம் அதிகரித்து முரண்பாடாக உருவாக்குவது தமிழ்த்தேசியத்திற்கே பின்னடவை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இவ்வகையில் ஈழத்தமிழ் சமூகம் குறித்த போராட்டத்தினூடாக எதிர்விளைவுகளையே அதிகம் எதிர்கொண்டுள்ளது. இதனூடாக இலங்கை தமிழ் மீனவ சமூகம் எதிர்பார்க்கும் நலன்கள் பூர்த்தியடையுமா என்பது சந்தேகத்திற்குரியதேயாகும். போராட்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நாட்களில் ஏறத்தாழ இருபதிற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தனர். அத்துடன் போராட்டத்தின் பின்னர் இலங்கை கடற்படை கப்பல் இந்திய மீனவரின் படகில் மோதி இந்திய மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்னர். இந்திய ஊடகங்களும் எட்டு மாதங்களுக்கு  பின்னர் இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது அட்டூழியம் என முதன்மை செய்தியிடல்களை மேற்கொள்கின்றன. இது, தமிழக மீனவர்களுக்கு எதிரான ஈழத்தமிழர்களின் போராட்ட விளைவானது என்ற பிரச்சாரமும் அதிகம் முதன்மைப்பெறவே வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இவ்வகையில், குறித்த போராட்டமானது இலங்கை அரசாங்கத்துக்கே அதிக சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

ஒன்று, கொழும்புக்கும் புதுடில்லிக்குமான உறவு பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வருகையோடு நெருக்கடிக்கு உள்ளாகியது. எனினும் தற்போது மீள தேனிலவை பெற்றுவருகிறது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு ஒப்படைத்துள்ளமை வலுப்பெறும் பொருளாதார பிணைப்பை உறுதி செய்வதுடன், இந்தியாவிலுள்ள பௌத்தத்தின் புனித இடமான குஷிநகரில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவிற்கு இலங்கை அரசாங்கத்தை அழைத்திருந்தமை கலாசார பிணைப்பையும் உறுதி செய்கின்றது. இவ்வாறாக புதுடில்லி கொழும்பு உறவு நெருக்கமாகையில் எதிர்மாறாக தமிழக அரசு ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவது புதுடில்லி-கொழும்பு அரசாங்கங்களுக்கே நெருக்கடியாகும். இந்நிலையில் தமிழக மக்களுக்கும்-ஈழத்தமிழருக்குமான உறவில் விரிசலை உருவாக்குவது புதுடில்லி-கொழும்பு உறவை பலப்படுத்த ஏதுவாக அமையும்.

இரண்டு, இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளையே அதிகம் முதன்மைப்படுத்துகிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கருத்துரைக்கும் தேசங்களோடு இராஜீக உறவை பலப்படுத்தி ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கருத்துக்களை துண்டிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுத்த போது ஐரோப்பிய தேசிய நலனை வலுப்படுத்தும் வகையில் பொருளாதார ரீதியிலான இராஜீக உறவை பலப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈழத்தமிழர் நிலைப்பாட்டை வலுவிழக்க செய்துள்ளது. எனினும் வரலாற்று ரீதியாக தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையிலான உறவை எந்தவொரு இலங்கை அரசாங்கத்தாலும் வலுவிழக்க செய்ய முடியவில்லை. ஈழத்தமிழர்களின் பலமாக தமிழக உறவு காணப்பட்டு வருகிறது. இவ்உறவை சிதைக்கும் வகையிலான செயற்பாட்டை ஈழத்தமிழ் அரசியல் தரப்பே முன்னெடுப்பது இலங்கை அரசாங்கத்தின் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்கு சூழலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் வழமைக்கு மாறாக தமிழ் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு செயற்படுவதாக காட்டிக்கொள்வது ஈழத்தமிழ் மக்களின் உண்மையான ஆதரவு தளங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையாகவே அமைகின்றது. இவ்அபத்தத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும், ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளும் சரியான முறையில் வெளிச்சத்துக்கு கொண்டு வர தவறுகின்றமை ஈழத்தமிழ் மக்கள் அனைவரும்  தமிழக மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார்கள் என்ற பிரச்சாரத்தை வலுப்படுத்தவே ஏதுவாக அமைகின்றது. ஈழத்தமிழ் மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் நியாயமானவை. அந்நியாயமான கோரிக்கைகளை ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்தி செயற்படும் தமிழக திராவிட முன்னேற்ற கழக அரசுடன் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் உரையாடலை திறக்க வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும். மாறாக தமது அரசியல் நலனை மீனவ சமூக பிரச்சினையில் புகுத்துவது ஈழத்தமிழ் தேசிய போராட்டத்தையே பலவீனப்படுத்தக்கூடியதாக அமையும்.   


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-