ஒற்றுமை எனும் அரசியல் இராஜதந்திரத்தை தமிழ்தரப்பு பின்பற்றுமா? -ஐ.வி.மகாசேனன்-
தமிழ்த்தேசிய பரப்பில் நீண்டகாலம் பிரச்சாரப் பொருளாகவே இருப்பது ஐக்கியம் ஆகும். 1976ஆம் ஆண்டு அன்றைய முதிர்ச்சியான தமிழ்த்தேசிய தலைமைகளின் விட்டுக்கொடுப்பின் விளைவான தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கம் மற்றும் 2001ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டக்குழுவின் முனைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் எனும் இரு சந்தர்ப்பங்களில் தமிழ்த்தேசிய பரப்பில் ஐக்கியம் அடையாளம் காணப்பட்டது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிதறல்கள் புதிய அரசியல் கட்சிகளின் உதயங்கள் தமிழ்த்தேசியத்தை பல கூறாக்கியது. அதன் பின்னர் சிவில் சமூக தலைவர்கள், மாணவர் ஒன்றியங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல முனைப்புக்களில் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒற்றுமைப்படுத்த முனைப்புக்கள் மேற்கொண்ட போதிலும் யாவும் இறுதியில் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. இக்கட்டுரையும் இந்திய வெளிவிவகார செயலாளரின் ஐக்கியத்துக்கான கோரிக்கை பற்றிய தேடலாக உள்ளது.
தமிழ்த்தேசிய கட்சிகளிடையேயான ஐக்கியம் பற்றிய உரையாடல்கள் அதிகமாக தேர்தல்களை மையப்படுத்தியே எழுவதுண்டு. எனினும் தற்போது தமிழ்த்தேசிய பரப்பில் ஐக்கியம் பற்றிய உரையாடல் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன ஷ்ரிங்லாக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் கடந்த செப்டெம்பர்-04 அன்று இடம்பெற்ற உரையாடலை மையப்படுத்தி எழுந்துள்ளது. '13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்ற ஒரு விடயத்திலாவது தமிழ்த்தரப்புக்கள் ஒரே குரலை வலியுறுத்த வேண்டும்.' என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மத்திய அரசு முன்னரும் தமிழ்த்தரப்பை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிளவுபட்டு கஜேந்திரகுமார் அணி வெளியேறியிருந்த ஆரம்ப காலப்பகுதிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற பிரதிநிதிகளாக இல்லாத போதிலும் அவர்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் இணைத்து புதுடில்லிக்கு அழைக்கப்பட்டனர் அங்கு தமிழ் மக்களுக்கு தேவைப்படும் தீர்வு திட்ட நகலை ஒற்றுமையாய் தயாரித்து வழங்குமாறு கோரப்பட்டது. எனினும் அம்முயற்சி முதல் கூட்டத்திலேயே வேறுபட்ட எண்ணங்களாலும் விட்டுக்கொடுப்பற்ற தன்மையாலும் சிதைந்தது. தற்போது மீளவும் இந்தியா ஓர் குரலாய் 13வது திருத்தத்தை மையப்படுத்திய தீர்வை வலியுறுத்த கோரியுள்ளது. தமிழ்த்தரப்பை 13வது திருத்தத்தை மையப்படுத்திய ஒற்றுமையை கோருவது இந்தியாவின் எதிர்பார்ப்பாக அமையலாம்.
எனினும், ஈழத்தமிழர்களிற்கான ஆதரவு தளங்களிலும் 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தாயகத்திலிருந்து பல்வேறு கருத்து நிலைகள் புறத்தே வருவதால் ஈழத்தமிழரின் சரியான நிலைப்பாட்டை அறிய முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒடுக்கப்பட்டு உரிமைக்காக போராடும் சமூகத்தின் கோரிக்கைள் ஒரு குரலாய் ஒலிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. தமிழ்த்தேசிய பரப்பில் அதன் வடிவத்தை நிர்ணயிப்பதிலேயே பெரும் இடர்பாடு காணப்படுகின்றது.
தற்போது வரை தமிழ்த்தேசியப்பரப்பில் ஒற்றுமையின் அடையாளமாக காணப்படுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பே ஆகும். எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளும் சீரான ஒற்றுமை காணப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கட்சிகள் பலதும் சிதறுண்டு பிரதானமாக மும்முனை போட்டியை களம் அமைத்தது. இந்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தமிழ் மக்களின் ஒற்றுமையை அடையாளப்படுத்த ஓரணியாய் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பிரச்சாரமும் அதன் சாரப்படவே அமைந்திருந்தது. தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் கூட்டமைப்பினருக்கு 10 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றது. தேர்தல் நிறைவடைந்து ஒன்றரை வருட காலப்பகுதியினுள்ளேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மீளவும் ஒற்றுமை பிரச்சாரத்தை முன்னிறுத்துகிறார். எனினும் இம்மறை மக்களிடம் அல்ல. மாறாக ஒற்றுமையின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட தமது பங்காளி கட்சிகளிடம். இந்நிலையில் தான் கூட்டமைப்பின் ஒற்றுமையும் காணப்படுகிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையின் வடிவம், அரசியல் ஒற்றுமை (Political Solidarity) எனும் புத்தகத்தை எழுதிய சல்லி ஜெ ஹோல்ஸ் ( Sally J. Scholz )இன் அரசியல் ஒற்றுமை வகைப்பாடுகளில் ஒன்றாகிய ஒட்டுண்ணி ஒற்றுமையாகவே காணப்படுகின்றது. ஒட்டுண்ணி ஒற்றுமையானது, ஒற்றுமையுடன் தொடர்புடைய சில உணர்வுகளைத் தூண்டலாம். ஆனால் குறைந்தபட்சம் அதன் வரையறுக்கும் கூறுகளில் ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. பொதுவாக கட்சிக்குள் ஜனநாயக தன்மை கொண்டிருக்கவில்லை. தமிழ்ப்பரப்பில் தேர்தல் அரசியலை முன்னிறுத்தி களமிறங்கியுள்ள அரசியல்கட்சிகளை வலிந்து ஒன்றிணைப்பது ஒட்டுண்ணி ஒற்றுமை பண்பையே கொண்டிருக்கும். அல்லது ஒற்றுமைக்கான முயற்சிகளை தோற்கடிக்க முயற்சிக்கும்.
தமிழ் மக்களை பொறுத்தவரை அரசியல் கட்சிகளில் மாத்திரமின்றி சிவில் அமைப்புக்களிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு பொதுவான கட்டமைப்பு உருவாக்கம் பெற முடியவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் சிவில் சமூகங்களில் செயற்பாடுகளுக்கு பெரும் சிரமங்கள் காணப்பட்ட சூழலிலும் தமிழ் சிவில் சமூக அமையம் ஒப்பீட்டளவில் செயலாற்ற முன்வந்தது. எனினும் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜனநாயக இடைவெளி தமிழ் சிவில் அமைப்பின் வீரியமான செயற்பாடாக தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் பெற்றது. எனினும் சரியான நிர்வாக கட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவை அடையாளப்படுத்தாமையினால் குறுகிய காலப்பகுதியில் மூன்று மக்கள் எழுச்சி போராட்டாங்களுடன் அது ஸ்தம்பித்து விட்டது.
எனினும் தமிழ் மக்களின் தேவைகளை எதிர்பார்ப்புக்களை ஓர் குரலில் முன்னிறுத்த கூடிய கட்டமைப்பு தேவைப்பாடும் தமிழ் மக்களுக்கு அவசியமாகிறது. அதேநேரம் அக்கட்டமைப்பு முழுமையாக ஒர் தலைமையின் கீழ் செயற்படும் ஓர் குழு அல்லது கட்சி என்ற நிலையினையும் பெறக்கூடாது. ஒரு தலைமையின் கீழ் செயற்படும் ஓர் குழு அல்லது கட்சி என்கையில் கையாள விரும்பும் தரப்புக்கள் இலகுவாக கையாண்டு செல்லக்கூடிய சூழல் காணப்படும். 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சிக்கு முன்னர் தமிழ்த்தரப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் ஒற்றைத்தலைமைத்துவம் இலகுவாக எதிர்த்தரப்புக்களால் கையாளப்பட்டமையால் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான நிகழ்ச்சிநிரலுக்குள் சென்றது. அதன் விளைவே அதன் வீழ்ச்சியுமாகும். எனவே தமிழ்த்தரப்பு தேர்தல் அரசியலில் வேறுபட்ட குழுக்களாக நின்று போட்டியிடும் அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தி ஐக்கியப்பட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
தமிழ்த்தரப்பு சர்வதேசரீதியிலான அனுபங்களையும் தமது உரிமைப்போராட்டத்தில் இணைத்திட வேண்டும். யூதர்கள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இரு துருவங்களாக பிளவுபட்ட நேச நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஆதரவான தரப்புக்களாளக இயங்கிய போதிலும் யூத தேசியவாதம் என்ற ஒற்றை அரசியல் இலக்கில் ஒன்றுபட்டு செயற்பட்டனர். தற்போதும் குர்துமக்கள் சிரியா ஆதரவு தரப்பு, துருக்கி ஆதரவு தரப்பு, ஈரான் ஆதரவு தரப்பு என வேறுபட்டு நின்றாலும் குர்திஸ்தான் உருவாக்கம் என்பதிலும் தமது அடையாளத்தை பேணுவதிலும் ஒற்றுமைப்பட்டு செயற்படுகின்றார்கள். வல்லரசு சக்திகள் தமது இலகுவான கையாள்கைக்காக கூட்டுப்பாதுகாப்புக்கான கோசத்தை முன்னிறுத்தலாம். குர்து மக்கள் விடயத்திலும் குர்துக்களின் பலவீனமாக வல்லரசுகளின் பிரதிநிதிகள் கூட்டுபாதுகாப்பின்மையையே குறிப்பிடுகின்றார்கள். வல்லரசு சக்திகளின் கூட்டு பாதுகாப்புக்கான கோரிக்கை தமது தேசிய நலனை முன்னிறுத்தி தேசிய இனங்களை கையாள்வதற்கு பயன்படுத்தும் உத்தியாகவே காணப்படுகின்றது. எனினும் தேசிய இனங்கள் தமது தேவை உணர்ந்து ஐக்கியத்துக்கான வடிவங்களை தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஈழத்தமிழர்களும் சர்வதேச அனுபவங்களிலிருந்து தமக்கான ஐக்கியத்துக்கான வடிவத்தை சரியாக கட்டமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான ஐக்கியத்துக்கான வடிவத்தில் ஈழத்தமிழ் அரசியலில் மூத்த அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவருமாகிய சி.யோதிலிங்கம் அவர்கள் முன்வைக்கும் அரசியல் கட்சிகளின் ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் அமைப்புக்களின் ஐக்கிய முன்னணி இணைவிலான ஒரு பொதுக்கட்டமைப்பு என்பது பெறுமதியான விடயமாக காணப்படுகின்றது. அதாவது அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலில் தனித்து நின்று பயணித்தாலும் தமிழ்த்தேசிய கொள்கை அளவில் ஒற்றுமையுடன் பயணிப்பதாகும். அரசியல் கட்சிகள் ஒரு ஐக்கிய முன்னணியாக செயற்பட வேண்டும். அவ்வாறே மக்கள் அமைப்பும் ஐக்கிய முன்னணியாக செயலாற்ற வேண்டும். இவ்இரு ஐக்கிய முன்னணிகளினதும் இணைவாக மக்கள் அமைப்புகளின் மேலாதிக்கம் உள்ள கட்டமைப்பாக தேசிய அரசியல் இயக்கம் செயற்பட வேண்டும் என்று முன்மொழிகின்றார். இக்கட்டமைப்பு தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாள்கையில் தமிழ்த்தேசிய அபிலாசைகள் ஓர் குரலாய் பொதுவெளியில் ஒலிக்கக் கூடிய வாய்ப்பும் காணப்படும்.
எனவே, தமிழ்த்தரப்பு வல்லரசுகளின் கையாள்கைக்குள் கரைந்து போகாதும் தமித்தேசிய அரசியல் அபிலாசைகளை ஓர் குரலாய் ஒலிக்கக்கூடிய வகையிலான ஐக்கியமே தமிழ்த்தேசிய அரசியலையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தையும் பாதுகாக்கக்கூடியதாக அமையும். இங்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்று நினைவு கொள்ளத்தக்கது. அதாவது ஒரு தேசியப் போராட்டம் தேசிய அரசியலினால் தான் உருவாகும். வளரும். ஆனால் அதன் வெற்றியைச் சர்வதேச அரசியலே தீர்மானிக்கும் இராஜதந்திரத்தில் ஒப்பற்ற ஆற்றல் இல்லாமல் சர்வதேச அரசியலை நகர்த்த முடியாது. அரசியல் ஒற்றுமை என்பதுவும் சர்வதேச அரசியலில் ஒரு இராஜதந்திர வடிவமாகவே நோக்கப்படுகின்றது. அரசியல் ஒற்றுமை எனும் இராஜதந்திரத்தை ( Diplomacy of Political Solidarity) தமிழ்தரப்பு நுணுக்கமாக கையாள வேண்டும். இதனையே இந்திய வெளியுறவுச் செயலாளரும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment