ஜனநாயக சவாலால் சூடானில் மீள துளிர்க்கிறது இராணுவ ஆட்சி? -ஐ.வி.மகாசேனன்-
அரசியல் என்பது அதிகாரத்தை மையப்படுத்திய அலகாகவே காணப்படுகிறது. இவ்அதிகாரப் போட்டிக்குள் வரலாறு தோறும் ஜனநாயகத்துக்கு முரணான அதிகார கைப்பற்றுகைகளும் பதிவாகியே வருகின்றது. எனினும் அண்மைய சர்வதேச அரசியல் பரப்பில் ஜனநாயகத்துக்கு முரணான அதிகாரக்கைப்பற்றுகையின் செய்தியிடல்கள் அதிகரித்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அண்மைய ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பதிவுகளாய் மியான்மார், ஆப்கானிஸ்தான், கினியா எனும் வரிசையில் ஒக்டோபர்(2021) இறுதியில் சூடானும் இணைந்துள்ளது. இக்கட்டுரை சூடானில் ஏற்பட்டுள்ள இராணுவ சதிப்புரட்சி அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
சூடானின் நீண்ட கால அரசியல் வரலாறு இராணுவ அட்சியினுள்ளேயே காணப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியான ஒமர் அல் பஷீர் 1989இல் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். இவரது ஆட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு மக்கள் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொண்டு சிவிலியன்-இராணுவ கூட்டமைப்பு ஒன்று இடைக்கால அரசாங்கமாக பதவியேற்றது. சூடானின் இறையாண்மை சபை சிவிலியன்-இராணுவ கூட்டுறவில் கட்டமைக்கப்பட்டது. இக்கூட்டுறவு இடைக்கால அரசாங்கத்தில் அப்தல்லா ஹம்டோக் பிரதராகவும், ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் இராணுவ முகவராகவும் செயற்பட்டனர். இரண்டு வருட காலப்பகுதியில் பொதுத்தேர்தல் ஒன்றினூடாக முழுமையாக ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதாக உறுதி பூண்டதன் அடிப்படையில் அடுத்த வருடம் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையிலேயே இராணுவம் ஒக்டோபர்-25அன்று முழுமையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இடைக்கால அரசாங்க பிரதமர் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மற்றும் அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் மறுநாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தவர்களை விடுதலை செய்துள்ள போதிலும், ஏனைய அரச அதிகாரிகள் தொடர்ந்து தடுப்பு காவலிலேயே உள்ளார்கள்.
கடந்த மாதங்களில், ஹம்டோக்கின் தலைமையின் மீது புர்ஹான் பொறுமையின்மையைக் காட்டினார். நாட்டைக் காப்பாற்ற ஒரு வலுவான ஆட்சியாளர் தேவை என்று சமிக்ஞை செய்தார். தலைநகர் கார்ட்டூமில் இராணுவ ஆதரவுடன் ஹம்டோக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இவ்ஆர்ப்பாட்டங்களில், கிழக்கில் உள்ள முக்கிய துறைமுகத்தினை அரசாங்கம் முற்றுகை இட்டுள்ளமையால் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்து வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்து வருவதாக ஹம்டோக்கைப் பற்றி எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாகவே இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதியும் இடம்பெற்றுள்ளது.
இராணுவ சதிப்புரட்சி அமெரிக்க இராஜதந்திர மட்டத்தை சீற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது. அமெரிக்க சிறப்புத் தூதர் ஜெப்ரி பெல்ட்மேன், சிவில் நிர்வாகத்தினருக்கும் இராணுவ தரப்பினருக்கும் இடையே சமரச உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வார இறுதியில் சூடானுக்குச் சென்றிருந்தார். ஒப்பந்தம் முழுமை பெற்று விட்டதென்ற எண்ணப்பாங்குடனேயே ஒக்டோபர்-25அன்று அதிகாலை அவர் நகரத்தை விட்டு வெளியேறி சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை அமெரிக்க அதிகாரிகளை முற்றிலுமாக கவனத்தில் கொள்ளவில்லை. பெல்ட்மேனுடனான அவர்களின் சந்திப்புகளின் போது எந்த நேரத்திலும் இராணுவத் தலைவர்கள் தாங்கள் அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற அல்லது பிரதமரைக் கைது செய்ய விரும்புவதாகக் குறிப்பிடவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இது அமெரிக்கர்களை திகைக்க வைத்தது மட்டுமல்லாமல் சீற்றமும் அடைய செய்துள்ளது. சீற்றத்தை வெளிவுபடுத்தும் வகையில், அமெரிக்க நிர்வாகம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவிப் பொதியை இடைநிறுத்தியுள்ளது.
மேலும், இவ்சதிப்புரட்சியானது, புதிய ஜனநாயக நாடாக சூடானின் சர்வதேச நிலைப்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு வருட வலிமிகுந்த தாமதங்களுக்குப் பிறகு, சூடானின் பொருளாதாரத்தை மீட்பதற்கான சர்வதேச உதவி இறுதியாக எதிர்பார்த்தது. அது இப்போது ஆபத்தில் உள்ளது. ஆபிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, கிழக்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பு மற்றும் சூடானின் அனைத்து மேற்கத்திய நன்கொடையாளர்களும் ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து மீண்டும் சிவில் ஆட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அரபு லீக் அரசியலமைப்பு சூத்திரத்தை மதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. 2019 இல் ஜெனரல் புர்ஹானுக்கு முக்கியமான நிதி உதவி வழங்கிய சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதுவரை மௌனமாகவே உள்ளன. எனவே அவர்களின் அனுதாபங்கள் இராணுவ பலத்துடன் இருக்கலாம். ஆனால் சூடானை பிணை எடுப்பதற்கான செலவுகளை அவர்களால் ஈடுசெய்ய முடியாதே நிலையே காணப்படுகின்றது. எனினும் சூடான் இராணுவ சதிப்புரட்சிக்கு ரஷ்சியா மற்றும் சீனா இதுவரை நேரடியாக எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ வெளிப்படுத்தாத போதிலும், சிவில் அரசாங்கத்தை கவிழ்த்ததை கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையை வெளியிடும் மேற்கு நாடுகளின் முயற்சியை ரஸ்சியாவும் சீனாவும் முடக்கி உள்ளன.
சூடானின் இராணுவ சதிப்புரட்சிக்கான சர்வதேச சக்திகளின் நிலைப்பாடுகளை அவதானிக்குமிடத்து அவை இவ்விடயத்தில் அதிகமாக பார்வையாளர்களாவே உள்ளனர். இனிவரும் காலங்களில் தமது தேசிய நலனுக்கு ஏற்ப இவ்சதிப்புரட்சியை பயன்படுத்த முற்படலாம். எனினும் சூடானில் இடம்பெற்றுள்ள இராணுவ சதிப்புரட்சிக்கான காரணங்களாக சூடானின் அரசியல் இயல்பே அடையளப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதற்குரிய காணங்களை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.
முதலாவது, 2019இல் உருவாக்கப்ட்ட சிவிலியன்-இராணுவ கூட்டமைப்பு இடைக்கால அரசாங்கத்தின் பலவீனமான அதிகாரப்பகிர்வை வெளிப்படுத்தி நிற்கிறது. நீண்டகால இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக புரட்சியில் நிறுவப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் ஜனநாயக தேவைகளை வலியுறுத்தும் வகையில் ஜனநாயத்தை முக்கியவப்படுத்தி இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக நீண்ட காலமாக சிரியாவில் நிலைத்துள்ள இராணுவ ஆட்சியினையும் இணைத்து கூட்டமைப்பு கூட்டமைப்பு இடைக்கால அரசாங்க உருவாக்கம் ஜனநாயக அமைப்பின் தனித்துவத்தை சிதைப்பதாகவும் மக்களிடம் ஜனநாயகத்தின் தேவையை வெளிப்படுத்துவதற்கு போதிய வாய்ப்பில்லா நிலையையும் உருவாக்கி உள்ளது. இச்சூழலியே ஜனநாயகக் கூறாகிய மக்கள் போராட்டம் இராணுவத்தின் ஆதரவுடன் சூடானில் ஜனநாயக தரப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெனரல் புர்ஹான் ஏற்கனவே நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக இருந்தார். இடைக்கால அரசாங்க உருவாக்கத்தின் போது இராணுவத்திற்கு இடையேயான 2019-ஆகஸ்ட் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் அவரது பங்கு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இது சிவிலியன் குழுவை கூட்டணியில் தளர்வாக்கியது.
இரண்டாவது, இடைக்கால அரசாங்கத்தில் மக்கள் நலனுக்கு எதிராக செயற்பட்டோர் உள்வாங்கப்பட்டிருந்தமை. மக்கள் புரட்சி மூலம் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்க கட்டமைப்பில் கடந்த காலங்களில் மக்களுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினர் உள்வாங்கப்பட்டிருந்தனர். டார்பூர் இனப்படுகொலையின் போது பொதுமக்களுக்கு எதிரான பரவலான அட்டூழியங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றிருந்த ரேபிட் சப்போர்ட் போர்ஸ் என்ற சக்திவாய்ந்த போராளிக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் ஜெனரல் ஹெமெட்டி ஆகும். இவர் நாட்டின் இடைநிலைக் குழுவின் துணைத் தலைவராக காணப்படுகின்றார். இது மக்களிடமும் அதிக விசனத்தை உருவாக்கி இருந்தது. சிவில் அரசாங்கத் தலைவர்களுக்கு எதிரான புர்ஹானின் நடவடிக்கையை ஹெமெட்டி ஆதரித்ததாக நம்பப்படுகிறது.
மூன்றாவது, இடைக்கால சிவிலியன்-இராணுவ கூட்டமைப்பு அரசாங்க நிர்வாக காலப்பகுதிக்கு பின்னர் அமைக்கப்பட உள்ள முழுமையான ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் இராணுவ கட்டமைப்பின் தலைவர்கள் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்களுக்காக தண்டிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு அவர்களிடம் காணப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜெனரல் புர்ஹான் அடுத்த மாதம் அடுத்த மாதம் இறையாண்மை கவுன்சிலின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதன் பின்னர் சிவிலியன் குழுவான சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடிமகன் அரச தலைவராக வருவார். மேலும் அரசாங்கத்தில் உள்ள குடிமக்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய விஷயங்களைச் செயல்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் கொள்கையளவில் உறுதிபூண்டுள்ளது. டார்பூர் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களில் பஷீர் தங்களைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடுவார் என்ற அச்சம் பஷீர் நிர்வாகத்தின் கீழ் லெப்டினன்ட்களாக செயற்பட்ட ஜெனரல் புர்ஹான் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமது ஹம்டன் ஹெமெட்டி டகோலோ ஆகியோருக்கு உள்ளது. அத்துடன் சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படை புர்ஹான் மற்றும் ஹெமிட்டி ஆகிய இருவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தாவிடினும் சூடான் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்க்கை காணப்படுகின்றது.
எனவே, 2019இல் மக்களிடம் உருவாக்கப்பட்ட ஜனநாயக புரட்சியை சரியான வகையில் ஜனநாயக அரசியல் தலைவர்கள் கட்டமைக்கத்தவறியதன் விளைவாகவே குறுகிய காலப்பகுதியில் சூடான் மீளவொரு இராணுவ ஆட்சிக்குள் நகர்ந்துள்ளது. சர்வதேச அரசுகள் இவ்உள்ளக முரண்பாட்டை தமது நலனுக்குள் பயன்படுத்த முன்னர் சூடான் நிலையான தீர்வை பெற முற்பட தவறின் சூடான் அரசியலின் தொடர்ச்சியான சகதி தவிர்க்கப்பட முடியாததாகவே அமையும்.
Comments
Post a Comment