கொழும்பு-புதுடில்லி உறவு புவிசார் பொருளாதார உறவாக வலுவடைகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவானது கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான பிணைப்பை உருவாக்கி வருகிறது. குறிப்பாக குஷிநகர் விமானநிலைய திறப்பும் அதுசார் நிகழ்வுகளும் கலாசாரப்பிணைப்பின் வலுவையும், கொழும்பு துறைமுக மேற்கு முனைய ஒப்பந்தம் மற்றும் அதைத்தொடர்ந்தான அவ்ஒப்பந்த இந்திய நிறுவன முதலாளி கௌதம் அதானியினது இலங்கைக்கான விஜயங்களும்  வலுப்பெறும் இருநாட்டு உறவின் சாட்சியமாகின்றது. இக்கட்டுரை வலுப்பெறும் இருநாட்டு உறவின் தார்ப்பரியங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொடா, இலங்கை-இந்திய உறவை கலாசார மற்றும் பொருளாதார ரீதியிலான பிணைப்பினூடாக வலுப்படுத்துவது தொடர்பாகவே தனது செயற்றிட்டங்களை வகுத்துள்ளார். மிலிந்த மொறகொட தயாரித்துள்ள 2021/2023ஆம் ஆண்டுகளுக்காக ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விரிவான வழிவரைபடத்தில் அரசியல் உரையாடல் தவிர்க்கப்பட்டு, அதிகம் கலாசாரக்கூறுகளை அடையாளப்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரரீதியாக இந்திய-இலங்கை உறவை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான எண்ணங்களே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சார்ந்த இலங்கையின் வெளியுறவுக்கொள்கையின் அண்மைய நகர்வுகள் இவ்வழிவரைபட செயற்பாடுகளின் வெற்றியையே அடையாளப்படுத்துகிறது.

இலங்கை மற்றும் இந்தியாவின் தற்போதைய அரசாங்கங்கள் மதரீதியிலான விடயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவையாக காணப்படுகின்றன. இந்தியாவின் பாரதீய ஜனதா அரசாங்கம் இந்துத்துவ அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி செயற்படும் கட்டமைப்பாக காணப்படுகின்றது. அவ்வாறே இலங்கையின் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வெற்றி என்பது பௌத்த அடிப்படைவாதப்பிராச்சரத்தின் விளைவிலானதேயாகும். இதனடிப்படையில் இவ்இருஅரசாங்கங்கங்களும் மத அடிப்படைவாத கருத்தியலை முன்னிறுத்தும் அரசாங்கங்களாக பொதுமைப்படுகின்றன. இதனை முன்னிறுத்தி நெருக்கடியினுள் காணப்பட்ட இலங்கை-இந்திய உறவை சீர்செய்யும் வெளியுறவுக்கொள்கையை இலங்கையின் ஆட்சியாளர்கள் புணரமைத்து வருகின்றார்கள். குறிப்பாக பௌத்தம் மற்றும் இந்து மதங்களுக்கிடையிலான கலாசாரப்பிணைப்பு மற்றும் அதுசார்ந்த இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலே நிலவும் வரலாற்று தடங்களின் நினைவுகளை புதுப்பிப்பதனூடாக இலங்கை-இந்திய உறவு செப்பனிடப்பட்டு வருகின்றது. இலங்கை-இந்திய வெளியுறவில் பௌத்தம் மற்றும் இந்து மைய கருத்தியல்கள் முதன்மை பெறுவதனை பிரதானமாக இரு சம்பவங்களில் அவதானிக்கலாம்.

ஒன்று, மிலிந்த மொரகொட செப்டெம்பர்-22(2021) அன்று, புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்திடம் நற்சான்றிதழ் கடிதத்தை கையளித்த நிகழ்வில், தனது பணியின் பிரதான நோக்கத்தை நனவாக்குவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான பழமையான மற்றும் காலத்தால் சோதிக்கப்பட்ட பல பரிமாண உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவைக் கோரினார். அதில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு பௌத்தம் என்பதை சுட்டிக்காட்டிய மிலிந்த மொறகொட, புத்தரின் போதனைகளான 'பற்றுறுதி அல்லது நம்பிக்கை கொண்டிருத்தல்' மற்றும் 'புரிந்துகொள்வதன் மூலம் முழுமையாக உணர்தல்' போன்றவற்றின் அடிப்படையில் அடிப்படையில் இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களுக்கான தனது ஒருங்கிணைந்த மூலோபாய கொள்கையை உருவாக்கியதாக இந்திய ஜனாதிபதிக்கு தெரிவித்தார். மேலும், இந்தியாவில் பெரும் சர்ச்சைகளின் பின் நிர்ணயிக்கப்படும் அயோத்தி இராமர் கோயிலுக்கு இராமரோடு தொடர்புறும் இலங்கையின் புனித தலமாகிய சீதாஎலிய ஆலயத்திலிருந்து மிலிந்த மொறகொட கல் எடுத்து சென்று ஒப்படைத்துள்ளார்.

இரண்டு, கௌதம புத்தர் பரிநிர்வானம் அடைந்ததாக நம்பப்படும் பௌத்தர்களின் புனித நகரமான இந்தியாவின் குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவிற்கு ஒக்டோபர்-20 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் தலைமையில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷா விஜயம் செய்தார். அவ்விஜயத்தில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடிய நாமல் ராஜபக்ஷா, 'இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த மிகஉயரிய பரிசு பௌத்தம்' எனக்கூறி சிலாகித்துள்ளார். மேலும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கீதாசாரத்தின் முதல் பகுதியை இந்திய பிரதமருக்கு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பரிசளித்துள்ளர்.

மேற்குறித்த இரு இராஜீக சந்திப்பு உரையாடல்களும் இலங்கை-இந்திய உறவை இந்து-பௌத்த கலாசார பிணைப்பினூடாக இலங்கை அரசாங்கம் சிறப்பாக கட்டமைத்து வருகின்றது என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. அதிலும், குறிப்பாக குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவிற்கான விஜயத்தில் பொதுஜன பெரமுன அடையாள அரசியலை அதிகம் முதன்மைப்படுத்தி செயற்பட்டுள்ளனர். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், குஷிநகருக்குப் பௌத்த யாத்திரீகர்களின் தொடக்க விமானத்தை இந்தியா-இலங்கை உறவில் ஒரு அடையாளமாகவும் விழித்திருந்தார். 

இலங்கைக்கு பௌத்த மத வருகையானது இந்தியாவின் அசோக பேரரசின் காலத்தில் அவரது இளவரசர்களின் வருகையுடன் இடம்பெற்றதாகும். அதனை மீள அடையாளப்படுத்தியே குஷிநகருக்கு ராஜபக்ஷாக்களின் அடுத்த தலைமுறை ராஜபக்ஷாவாகிய நாமல் 100 பௌத்த பிக்குகள் சகிதம் விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் நினைவுப்பரிசாக இந்தியாவிற்கு இலங்கை அளித்துள்ள ஓவியங்களும் இலங்கைக்கு பௌத்தம் அசோக பேரரசின் காலத்தில் கொண்டுவரப்பட்ட வரலாற்று செய்திகளை உணர்த்தகிறது. இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் சோலியாஸ் மெண்டிஸால் வரையப்பட்ட இரண்டு சுவரோவியங்களின் புகைப்படங்களை, இந்தியாவிற்கு களனிய ராஜமஹா விகாரையில் இலங்கை வழங்கும் என்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் தி இந்து இதழுக்கு தெரிவித்தனர். சுவரோவியங்களில் ஒன்று, அசோகப் பேரரசரின் மகன் அரஹத் பிக்கு மகிந்த இலங்கையின் மன்னன் தேவநம்பியதிசாவிடம் புத்தரின் செய்தியை வழங்குவதை சித்தரிக்கிறது. மற்றொன்று, கௌதம புத்தர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் புனித போதி மரத்தின் மரக்கன்றை தாங்கி அசோக பேரரசரின் மகள் தெறி பிகுனி சங்கமித்தாவின்  இலங்கை வருகையை காட்டுகிறது.

இலங்கை-இந்திய உறவு கலாசாரத்தை பிரதிபலிப்பது போன்றே பொருளாதார நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. குறிப்பாக இலங்கை-இந்திய பொருளாதார ரீதியிலான உறவுசார் உரையாடல்களை இந்திய தொழில் வல்லுனர்கள் தரப்பினரோடு இலங்கை நேரடியாக ஈடுபட்டு வருகின்றது. மிலிந்த மொறகொடவின் நியமனத்தின் பின் இலங்கை-இந்தியாவின் பொருளாதார பிணைப்பை பிரதானமாக மூன்று விடயங்களில் அவதானிக்கலாம்.

முதலாவது, மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு முதல்வாரங்களில்  ஆகஸ்டில் இந்திய-இலங்கை உறவுகள் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலுக்காக இந்திய ஊநுழு மன்றத்தை சந்தித்தார். இந்திய ஊநுழு மன்றம் என்பது இலங்கையில் இந்திய முதலீட்டிற்கான முதன்மையான அமைப்பாகும். இது இந்திய நாட்டின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்திய தொழில் வல்லுநர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. குறித்த சந்திப்பில், இலங்கையில் உள்ள முதல் ஐந்து முதலீட்டாளர்களில் இந்தியா உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய இந்திய தொழில் வல்லுநர்கள் இந்திய வர்த்தக பங்காளிகளுடன் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட மொரகொட வழங்கிய வாய்ப்பை பாராட்டினார்கள். மேலும், மிலிந்த மொறகொட இலங்கை-இந்திய பொருளாதார உறவுகளை சீரமைப்பதில் உள்ள தடைகளை அகற்றி முதலீட்டாளர்களுக்கு தீர்வுகளைக் கண்டறிய ஒத்துழைப்பதிலும் உதவுவதில் ஆர்வமாக இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார். இந்திய தொழில் வல்லுனர்களுடன்;  மூலோபாயக்கொள்கையை உத்தியை மிலிந்த மொறகொட பகிர்ந்து கொண்டமை இலங்கை-இந்திய உறவில் இந்திய முதலீட்டாளர்களில் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்படுவதாக அமைந்துள்ளது. 

இரண்டு, இலங்கை-இந்திய உறவில் நெருக்கடியை ஏற்படுத்திய காரணியாக கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டமை காணப்படுகிறது. அதனை சீர்செய்யும் வகையில் தற்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை இந்தியாவின் முதன்மையான தொழில் நிறுவனமாகிய அதானி குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. 700மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியான இந்த உடன்படிக்கை, இலங்கையின் துறைமுகத்துறையில் இதுவரை இல்லாத அதிக வெளிநாட்டு முதலீடாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 35ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதானி குழுமம் இலங்கையில் முதல் இந்திய துறைமுக செயற்பாட்டாளராக மாறுகின்றது. மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய கூட்டு முயற்சியில் 51சதவீத பங்குகளை பெறுகின்றது. இந்த முதலீட்டின் மூலம், பிராந்திய பொருளாதாரங்களுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், சர்வதேச மைய துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தின் உலகளாவிய நற்பெயரை மேலும் மேம்படுத்துவதையும் இலங்கை துறைமுக அதிகார சபை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மூன்று, செப்ரெம்பர்-24அன்று இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவ்விஜயத்தின் போது கௌதம் அதானி ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்திருந்ததுடன், மன்னாருக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் அதானியுடனான இலங்கை அரச தலைவர்களின் சந்திப்பு பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. அதானி இலங்கை அரச தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், 'கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.' எனக்குறிப்பிட்டுள்ளார். அதானி-இலங்கை அரச தலைவர்களின் சந்திப்பை இலங்கை அரசு பகிரங்கப்படுத்த விரும்பாத போதும் குறித்த சந்திப்பு இலங்கை-இந்திய உறவு பொருளாதார ரீதியாக பிணைக்கப்படுவதனையே உறுதி செய்கிறது.

எனவே, இலங்கை-இந்தியா உறவானது வெளிப்படையாக கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியாக பலமான பிணைப்பை உறுதி செய்துள்ளமையையே அண்மைய நகர்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஈழத்தமிழ் பரப்பில் அதிகமாக உரையாடப்படும் புவிசார் அரசியலை இலங்கை அரசாங்கம் புவிசார் பொருளாதாரமாக கையாள ஆரம்பித்துள்ளது. இது ஈழத்தமிழரின் அரசியல் நகர்வுகளை மலினப்படுத்தி அரச தரப்பாகிய தென்னிலங்கைக்கு அதிக வாயப்புக்களை உருவாக்குகிறது. அதனை முன்னிறுத்தியே இலங்கை அரசாங்கம் இந்தியாவை பொருளாதார ரீதியாக கையாள்கிறது. பரபரப்பான உலகளாவிய கடல்வர்த்தக பாதையில் உலகின் தலைசிறந்த மூலோபாய முனைகளில் ஒன்றாக இலங்கையின் இருப்பிட அனுகூலத்தை இலங்கை அரசாங்கம் தெளிவாக பயன்படுத்துகின்து. அவ்வாறே இலங்கை இந்திய கலாசார உறவு என்பதுவும் ஈழத்தமிழரை தாண்டி இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமான செல்நெறியிலேயே காணப்படுகின்றது. இவை இலங்கை அரசாங்கம் தமிழர் அரசியலை புறக்கணித்து இந்தியாவுடன் சீரான உறவை உருவாக்க ஏதுவாக அமையப்பெற்றுள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-