ரஷ்சியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனைகளை மையப்படுத்தி மூலோபாய ஆயுத போட்டி ஆரம்பித்துள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-

கொரோனாவிற்கு பின்னரான சர்வதேச அரசியல் களத்தில் உலக வல்லாதிக்க போட்டி நாடுகளாக அமெரிக்கா எதிர் சீனா என்பதே அதிக உரையாடலாக காணப்படுகிறது. எனினும், ரஷ்சியா அடிக்கடி தனது ஆயுத பலத்தை காட்ட தவறியதில்லை. உலக அரசியலில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க பிரிட்டன் அவுஸ்ரேலிய கூட்டில் உருவாக்கப்படும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பான ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்கா எதிர் சீனா போட்டியாகவே அதிக சர்ச்சையை உருவாக்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ரஷ்சியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையும் ரஷ்சியா  மேற்கொண்டுள்ள ஏவுகணை பரிசோதனையை மையப்படுத்திய அரசியலை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர்-04(2021)அன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து முதல் முறையாக ஹைப்பர்சோனிக்(hypersonic) வகையிலான 'சிர்கோன் ஏவுகணையை'(Zircon Missile) வெற்றிகரமாகச் சோதித்ததாக ரஷ்சியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. மேலும், சிர்கோன் ஏவுகணை வெள்ளை கடலில் உள்ள அட்மிரல் க்ரோஷ்கோவ்(Admiral Groshkov) அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பலில் 131அடி ஆழத்திலிருந்து ஏவப்பட்டதாகவும், ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஏழு மடங்கு அதிகமாக பறந்து சென்று பேரண்ட்ஸ் கடலின் கரையோரத்தில் 350 கிலோமீட்டர் (217 மைல்) தொலைவில் உள்ள நியமிக்கப்பட்ட பயிற்சி இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 'இது ரஷ்சிய இராணுவத் திறனை கணிசமாக அதிகரிக்கும். உலகில் வேறொன்றுடனும் சமப்படாத வகையில் புதிய தலைமுறை ஏவுகணை அமைப்புகளின் ஒரு பகுதி.' என்று குறிப்பிட்டுள்ளார். சிர்கோனின் சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கப்பட உள்ளதாகவும், அது 2022இல் ரஷ்சிய கடற்படையால் இணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிர்கோன் ரஷ்சிய போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆயுதமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரஷ்சியாவின் சிர்கோன் ஏவுகணை பரிசோதனைக்கு ரஷ்சியாவின் பிரதான எதிர்த்தரப்பு பாதுகாப்பு கூட்டான நேட்டோ வழமையான தனது எதிர்ப்பை அறிக்கையூடாக வெளிப்படுத்தியுள்ளது. 'ரஷ்சியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் யூரோ-அட்லாண்டிக் பகுதி முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகின்றன. நேட்டோ நட்பு நாடுகள் ரஷ்சியாவின் வளர்ந்து வரும் வழக்கமான மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளுக்கு அளவிடப்பட்ட முறையில் பதிலளிக்க உறுதிபூண்டுள்ளது. ரஷ்சியா என்ன செய்கிறது என்பதை நாங்கள் பிரதிபலிக்க மாட்டோம். ஆனால் எங்கள் நாடுகளைப் பாதுகாக்க நம்பகமான தடுப்பு மற்றும் பாதுகாப்பை நாங்கள் பராமரிப்போம்.' என நேட்டோ கூட்டணி தெரிவித்துள்ளது.

சிர்கோன் ஏவுகனை பரிசோதனை ரஷ்சியாவின் ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சியின் உறுதிப்பாட்டை மீளவும் நிரூபித்துள்ளது. பனிப்போர் வீழ்ச்சிக்கு பின்னர் இருதுருவ அரசியலில் அதிகார இடைவெளி ஏற்பட்ட போதிலும் ரஷ்சியா ஆயுத தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக முதன்மை நிலையை தக்க வைத்து வருகிறது. குறிப்பாக 16வருடங்கள் சோவியத் ஒன்றியத்தின் உளவுத்துறையில்(KGB) பணியாற்றி லெப்டினன்ட் கேணல் பதவி வரை உயர்வு பெற்ற விளாடிமிர் புடின் ரஷ்சியாவின் தலைவராக பதவியேற்றதும் ரஷ்சியாவின் ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பில் ரஷ்சியா அரசாங்கத்தின் கவனமும் அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் நாட்டுக்கு நிகழ்த்தப்பட்ட வருடாந்திர உரையின் போது சிர்கோன் ஏவுகணை புடினால் மற்ற இணையற்ற ஆயுதங்களின் வரிசையுடன் வெளியிடப்பட்டது. ரஷ்சியாவின் புதிய ஆயுத தொழில்நுட்பங்கள் 'உலகின் எந்த இலக்கையும் சென்றடைய முடியும்' எனக் குறிப்பிட்டார். மேலும் அந்த உரையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு, 'அவர்கள் ஒரு புதிய யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இது ஒரு தவறு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.' என்ற அறைகூவலையும் விடுத்தார். சில மேற்கத்திய வல்லுநர்கள் இந்த வளர்ச்சி ஆயுதங்களின் உண்மையான திறன்களையும், அவற்றின் உற்பத்தி மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். ஆனால் ரஷ்சிய இராணுவம் அதைப் பொருட்படுத்தாமல் முன்னேறி, முன்னேற்றத்தைக் கோருகிறது. அதனோர் நகர்வே அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் ஹைப்பர்சோனிக் வகையிலான சிர்கோன் ஏவுகணை பரிசோதனையாகும்.

சிர்கோன் ஏவுகணை பரிசோதனை நீண்டகால திட்டமிடலாக காணப்படினும், தற்போது அமெரிக்க, பிரிட்டன் கூட்டில் அவுஸ்ரேலியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் சார்ந்த ஆக்காஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் சர்வதேச வெளியில் அமெரிக்க-சீன பனிப்போருக்கான சமிக்ஞையாக உரையாடலை திறந்துள்ள நிலையில் ரஷ்சியா அணுசக்தி நீர்முழ்கி கப்பலில் ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்தமை வல்லாதிக்க போட்டியில் ரஷ்சியா தன் இருப்பையும் அடையாளப்படுத்தும் சமிக்ஞையாகவே அவதானிக்கப்படுகிறது. 

சர்வதேச வல்லரசு நாடுகள் தம் வல்லாதிக்க சக்தியை உறுதிப்படுத்த ஆயுத தொழில்நுட்பத்தை அதிகரிப்பது,  உலகின் மூலோபாய ஆயுத போட்டிக்கான அச்சாணியாக அமைந்துவிடுமா என்ற சந்தேக பார்வைகளும் சர்வதேச போரியல் நிபுணர்களிடையே உருவாக்கி உள்ளது.

ஒன்று, சிர்கோன் ஏவுகணையை கட்டுப்படுத்துவது கடினமானதாகும். இவ்அச்சுறுத்தல் போட்டி நாடுகளையும் புதிய ஆயூத தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு தூண்டலை ஏற்படுத்தக்கூடியதாகும். ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பற்றிய கேள்விகள் இருந்தாலும், 'வேகம், சூழ்ச்சி மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உயரம் ஆகியவற்றின் கலவையானது அவற்றைக் கண்காணித்து இடைமறிக்க கடினமாக்குகிறது' என்று வல்லுனர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் (USS Gerald R. Ford) போன்ற மிக முன்னேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பலை கூட மூழ்கடிக்க சிர்கோன் ஏவுகணைகளில் அரை டசனுக்கும் குறைவாகவே போதுமானதாகும்.' ரஷ்சியா வரும் ஆண்டுகளில் நீர்மூழ்கிக் கப்பல்களையும், மேற்பரப்பு கப்பல்களையும் ஹைப்பர்சோனிக் வகை சிர்கோன் ஏவுகணைகளுடன் பொருத்த திட்டமிட்டுள்ளது. இது ரஷ்சியாவின் போட்டி நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலான செய்தியாகும்.

இரண்டு, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் இப்போது ரஷ்சியாவிற்கு ஒரு குறிப்பிட்ட வரப்பிரசாதமாக உள்ளன. ஏனெனில், உலக வல்லாதிக்க போட்டி நாடுகளிடையே இவ்ஏவுகணை பயன்பாடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்ட ஐரோப்பிய கவுன்சில் வெளிநாட்டு உறவுகளுக்கான பிரிவின் ரஷ்ய இராணுவப் பிரச்சினைகளின் நிபுணர் குஸ்டாவ் கிரெஸல், 'இந்த ஆயுதங்களை செயல்பாட்டு முறையில் பயன்படுத்துவதற்கான திறனை வெளிப்படுத்திய ஒரே நாடு ரஷ்யா மட்டுமே ஆகும். அமெரிக்காவும் சோதனைகளை நடத்தியது ஆனால் இந்த வகை ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியோக தளத்திலிருந்தாகும். இந்தத் துறையில் சீனத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை.' என்று கூறியுள்ளார். இதன் பின்னணியில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எதிர்கால ஆயுதமாக பல ஆய்வாளர்கள் கருதும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியதன் மூலம் ரஷ்சியா ஆயுதப் போட்டியில் முதன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்று, ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் முயற்சிகளில் ரஷ்யா தனியாக இல்லை. வடகொரியாவும் அண்மையில் ஈடுபட்டதற்கான செய்திகள் கிடைக்கப்பெறுகிறது. கடந்த செப்டெம்பர்-28அன்று(2021) வடகொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதித்ததாகக் கூறுகிறது. வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஹ்வாசோங்-8 (hypersonic Hwasong -8) ஏவுகணையின் சரியான விவரக்குறிப்புகள் இன்னும் அறியப்படவில்லை. எனினும் ஆய்வாளர்கள், 'வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை வெற்றிகரமாக தயாரித்து பயன்படுத்தினால், அது இப்பகுதியில் இராணுவ சமன்பாட்டை கூட மாற்றும்' என்று கூறுகின்றனர். சுவிட்சர்லாந்தில் உள்ள வெப்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும், ஜப்பானின் மீஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான லியோனல் பாட்டன், ' வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை உண்மை என்றால், தற்போதைய தென்கொரிய மற்றும் ஜப்பானிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பலவீனத்திற்கு நெருக்கமாகின்றன என்று அர்த்தம்' என்று கூறினார். போரியல் நாட்டம் கொண்ட ரஷ்சியா மற்றும் வடகொரிய யதார்த்தவாத தலைவர்களின் உயர் ஆயுத தொழில்நுட்ப நாட்டம் சர்வதேசத்துக்கு குறிப்பாக அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முன்னேற்றங்களால் தூண்டப்படுவதாகவே தோன்றுகிறது.

நான்கு, போரியல் நிபுணர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்சியாவை போன்றே புதிய தலைமுறை தொழில்நுட்ப ஆயுதங்கள் மீதான கரிசனையை அதிகரிக்க வேண்டும் என்ற செய்தியை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். 'ஐரோப்பாவும் அமெரிக்காவும் சமீபத்திய ஆண்டுகளில் தங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளின் நவீனமயமாக்கலை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர். மேலும், அவற்றின் தொழில்நுட்பம் சில நேரங்களில் 1990களுக்கு பழையது.' என்பதை சுட்டிக்காட்டும் பாதுகாப்பு நிபுணர் மற்றும் ரெவ்யூ மிலிட்டேர் சூசி சிறப்பு வெளியீட்டின் தலைமை ஆசிரியர் அலெக்ஸாண்ட்ரே வரவட்ராவர்ஸ், 'ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா தனது தேர்ச்சியை வெளிப்படுத்தினால், அமெரிக்கா தனது ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தனது சொந்த முன்னுரிமையாக மாற்ற வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். வாஷிங்டன் அத்தகைய போக்கைத் தொடர்ந்தால், உலக அளவில் ஆயுதப் போட்டி மீண்டும் தொடங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வளர்ந்து வரும் கடல்சார் அரசியல் போட்டிகள் ஹைப்பர்சோனிக் மற்றும் பிற ஆபத்தான ஆயுத அமைப்புகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புகள் அவதானிக்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதால், அது ஏற்கனவே ஒரு சுழல் ஆயுதப் போட்டிக்கு வழிவகுத்துள்ளது. அத்துடன் இக்களத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும் இந்நாடுகளும் பதிலளிக்க வேண்டிய சூழலே காணப்படுகிறது. அதனையே குவாட், ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டுக்களும் ஒப்பந்தங்களும் வெளிப்படுத்தி நிற்கிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-