ஆப்கானிஸ்தானை போல அமெரிக்கா தைவானை கைவிடுமா? -ஐ.வி.மகாசேனன்-
உலக அரசியலில் சில நிலப்பரப்புகள் சிறிய தீவாக காணப்படுகின்ற போதிலும், அதன் புவியியல் அமைவிடம் அந்நிலப்பரப்புக்கு கணதியான பெறுமதியை வழங்குகின்றது. இதனை விளங்கிக்கொள்ளும் விதத்தில், கியூபா அரசியல் அமைவிடம் சார்ந்து பனிப்போர் காலத்தில் சர்வதேச ஈர்ப்பை பெற்றிருந்தது. அவ்வாறே இந்தோ-பசுபிக் மூலோபாய அரசியலில் இலங்கையும் சர்வதேச சக்திகளின் விருப்புக்குரிய நிலமாக அமைகின்றது. இவ்வாறே தென்சீனக்கடலில் தைவானும் சீனாவிற்கெதிரான அமெரிக்க தலைமையிலான மேற்கின் அரசியலுக்கு துணைபோவதால் ஒரு உலகப்போர் பற்றிய உரையாடல்கள் மற்றும் எதிர்பார்க்கைகளில் தைவான் நிலப்பரப்பு முதன்மையாக உள்ளது. இக்கட்டுரை தைவான் நிலப்பரப்பில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதட்டம் மற்றும் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தைவான் ஜலசந்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அதன் செயல்பாட்டை அதிகரித்துள்ளது. தினசரி தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு ( ADIZ ) போர் விமானங்களை அனுப்புதல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளில் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் கண்காணிப்பு விமானங்கள் அடிக்கடி அனுப்பப்பட்டாலும் தற்போது போர் விமானங்களூடாக ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது. அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட குண்டுவீச்சுக்காரர்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பெரிய அளவிலான நடவடிக்கைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இணைக்கப்படுகின்றன. ஒக்டோர்-01அன்று சீனாவின் தேசபக்தி விடுமுறை தினமாகும். அன்றைய தினம் சீன இராணுவம் தைவான் மீதான பதட்டத்தை உயரளவில் அதிகரித்தது. ஒக்டோபர்-01அன்று 39 விமானங்களிலும் மற்றும் ஒக்டோபர-02அன்று 38 விமானங்களிலும் தைவானின் ஏ.டி.ஐ.எஸ் பகுதிக்கு ஊடுருவல்களை மேற்கொண்ட சீனா அமெரிக்கா கண்டித்த பிறகு, ஒக்டோபர்-04அன்று 56 விமானங்களை ஏ.டி.ஐ.எஸ் பகுதிக்கு அனுப்பி இருந்தது. இது தைவான் ஜலசந்தியின் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
சீனா தைவான் மீது ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் தொடர்பில் கருத்துரைத்த தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் சீனாவின் நெருக்கடிகள் ஒரு எச்சரிக்கைக்கு வழிவகுப்பதாக குறிப்பிடுகின்றார். அவர் தைவான் ஜலசந்தி முழுவதும் ஏற்பட்டுள்ள பதற்றம் தனது 40 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ சேவையில் பார்த்த மிகக் கடுமையானதென விபரித்துள்ளார். தைவான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 2025-க்குள் தைவான் மீது முழு அளவிலான படையெடுப்பை பெய்ஜிங் செய்ய முடியும்.
தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் சீனாவின் ஊடுருவல்களுக்கு பிரதான காரணமாக அமைவது, தென்சீனக்கடலை மையப்படுத்தி சமீபத்தில் எழுந்துவரும் சீனாவிற்கான நெருக்கடிகளுக்களை தீர்ப்பதற்கான உபாயமாக தைவான் ஜலசந்தி பதட்டத்தை பிரயோகிக்க சீனா முற்படுகின்றமையாகும். அமெரிக்க தனது இந்தோ-பசுபிக் மூலோபாயத்தில் சமீபத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கூட்டுக்களின் முன்ஏற்பாடுகள் சீனாவிற்கான தென்சீனக்கடலில் நெருக்கடியாக அமைகின்றது. குறிப்பாக அமெரிக்க, பிரிட்டன் கூட்டில் அவுஸ்ரேலியா மேற்கொண்டுள்ள ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தமும் அதன் உள்ளடக்கங்களும் சீனா-தைவானின் சமகால முரண்பாட்டில் ஒருவகையிலான தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஆக்கஸ் எனும் ஒரு புதிய இந்தோ-பசிபிக் மூலோபாய கூட்டணியின் ஒரு பகுதியாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற ஆஸ்திரேலியாவுக்கு உதவுவதாக அமெரிக்கா அறிவித்தது. இது சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதற்காக வாஷிங்டனின் நடவடிக்கையாக இருக்கும் என்று பெயர் தெரியாத நிலையில் பேசிய ஒரு அமெரிக்க அதிகாரி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை முதன்மைப்படுத்தி அமெரிக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் குவாட் மற்றும் ஆக்கஸ் போன்ற பாதுகாப்பு கூட்டுக்களை சீனாவிற்கு எதிராக கட்டமைக்கப்படும் நேட்டோ-2 என்ற புதிய பார்வையையும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆக்கஸ் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தைவானுக்கு அருகில் சீன விமானங்கள் கணிசமாக அதிகரித்து வந்துள்ளன.
எனவே தைவான் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதட்டமானது உண்மையில் அமெரிக்க-சீன போரினையே தைவான் எதிர்கொள்கின்றது. எனினும், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேறியதன் பிற்பாடு அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் சர்வதேச நாடுகளிடையே அதிக சந்தேகப்பார்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தைவானுக்கான பாதுகாப்பை அமெரிக்கா இதயசுத்தியுடன் மேற்கொள்கின்றதா என்பதை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் அதிகரித்து வரும் சீனாவின் பாதுகாப்பு படை ஊடுருவல்கள் தொடர்பில் பிரசல்ஸில் பிபிசியின் இராஜதந்திர நிருபர் ஜேம்ஸ் லாண்டேல் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிகம் அமெரிக்க சீனாவுடனான மோதலிலிருந்து விலகி இருப்பதையே உறுதி செய்கின்றது. தைவானைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாரா என்று சல்லிவனிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர், 'நான் இதைச் சொல்கிறேன், அந்த நாள் எப்போதாவது நடக்காமல் தடுக்க நாங்கள் இப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.' எனத்தெரிவித்திருந்தார். மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வெளியேறியதை அடுத்து, அமெரிக்கா தனது சக்தியைப் பயன்படுத்த தயங்குகிறதா என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். சல்லிவன், அந்த மோதலில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முயன்றது மிகப்பெரிய தவறு. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவருவது எப்படியாவது எந்த நாட்டிற்கும் அமெரிக்காவின் அர்ப்பணிப்பின் ஆழம் மற்றும் நிலை பற்றி ஏதாவது சொல்கிறது என்பது மிகப்பெரிய தவறு.' என்று கூறினார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கருத்துக்கள் முழுமையான தெளிவில்லாது தர்மசங்கடமான நிலைமையினை கடந்து செல்லும் பதிலாகவே காணப்படுகின்றன. இது அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையும் ஆப்கான் விவகாரத்தால் பெரும் தர்மசங்கட நிலைக்குள் உள்ளமையையே உறுதி செய்கிறது.
இரண்டாவது, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தைவான் ஜலசந்தி அருகே சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தி மாநாட்டில் வெளியிட்டுள்ள கருத்துக்களும் தைவான் தொடர்பிலான அமெரிக்காவின் உறுதியற்ற நிலைப்பாட்டையே உறுதி செய்கிறது. தைவான் ஜலசந்தியில் அண்மையில் சீன பலம் காட்டினாலும், அதன் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் தைவானுக்கு போதுமான சுய பாதுகாப்பு திறனைப் பராமரிக்க தொடர்ந்து உதவப்போகிறோம் என்றும் கிர்பி கூறினார். அதேநேரம் தைவானைப் பாதுகாக்க பென்டகன் ஏதேனும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமா என்றும், இதுபோன்ற செயல்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையா என்றும் கேட்டதற்கு, அவர் கருதுகோள்களுக்கு பதிலளிக்க மாட்டார் என்று குழப்பகரமான வினாக்களுக்கு உறுதிப்பாடான நிலைப்பாடின்மையால் கடந்து செல்லவே முற்பட்டுள்ளார். மேலும், ஊடகவியலாளர், வாஷிங்டன் பெய்ஜிங்கின் 'ஒரு சீனா கொள்கை'யிலிருந்து வேறுபட்ட அமெரிக்காவின் 'ஒரு சீனா கொள்கைக்கு' இணங்க வாஷிங்டன் செயல்படுகிறது. இதன் கீழ் தைவான் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி இறையாண்மையை உறுதிப்படுத்துகிறது என்பதை வலியுறுத்தினார். ஜான் கிர்பி 'தைவான் மீதான இறையாண்மை குறித்து நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை' என்று கூறினார். தைவானின் இறையான்மை குறித்த எந்த நிலைப்பாடும் இல்லாத அமெரிக்கா சீனாவின் தைவான் மீதான நெருக்கடிக்கு உறுதியான பாதுகாப்பளிக்கும் என்ற உறுதிப்பாட்டோடு முரண்படுவதையே உறுதி செய்கிறது.
மூன்றாவது, ஒக்டோபர்-05அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் செய்தியாளர்களிடம் கூறியபோது அவரும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், தைவான் விவகாரங்களுக்கு உடன்படவதாக ஒப்புக்கொண்டனர் எனத்தெரிவித்த விடயம் சர்வதேச அரசியல் பரப்பில் அதிக குழப்பத்தை உருவாக்கியது. சீனாவின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பிடன் கூறுகையில், 'நான் தைவானைப் பற்றி ஷியுடன் பேசியுள்ளேன். நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் தைவான் ஒப்பந்தத்திற்கு கட்டுப்படுவோம்.' என்று தெரிவித்தார். அவரது கருத்து அச்சங்களை அமைதிப்படுத்தும் நோக்கில் தோன்றினாலும், அது குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியது. ஏனெனில் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே தைவான் பற்றி அதிகாரப்பூர்வ உடன்பாடு இல்லை. தைவான் மீதான அமெரிக்க கொள்கை குறித்து பிடன் குழப்பத்தை ஏற்படுத்தியது இது இரண்டாவது முறையாகும். மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவை அடுத்து, ஆசிய பசிபிக்கில் அதன் நட்பு நாடுகளுக்கு அமெரிக்காவின் உறுதிப்பாட்டைப் பற்றி கேட்டபோது, சீனாவின் தாக்குதலுக்கு உள்ளானால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று பிடென் பரிந்துரைத்தார். அதில் நேட்டோ கூட்டாளிகளுக்கு ஒப்பான பாதுகாப்பு ஒப்பந்தம் தைவானுடன் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். எனினும் தைவானுடன் அமெரிக்காவுக்கு முறையான பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் தெளிவுபடுத்தியிருந்தனர். அமெரிக்காவின் ஹார்வர்டின் பேர்பேங்க்ஸ் மையத்தின் முதுகலை ஆய்வாளர் லெவ் நாச்மேன், தைவான் ஜலசந்தியில் பதற்றத்தை பிடன் நிர்வாகம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக தெரிகிறது. ஆனால் தைவான் ஒப்பந்தத்தை குறிப்பிடுவதில், அமெரிக்க ஜனாதிபதி வெறுமனே தவறாக பேசியிருக்கலாம். ஆனால் மொழி துல்லியமாக உண்மையில் இருக்க வேண்டிய நேரத்தில் துல்லியமாக இல்லாததைப் பார்க்க வெறுப்பாக இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். பிடனின் கருத்து தைவான் சார்ந்து அமெரிக்காவிடம் மூலோபாய தெளிவின்மையை உறுதி செய்கின்றது.
எனவே, தைவானின் நிலைப்பாடு அதிகம் அமெரிக்க தேசிய நலனுக்குள் சிதைந்து செல்லக்கூடிய வாய்ப்பே அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் கடந்த கால அனுபவங்களில் தேசிய இனங்களின் உரிமைப்போராட்டங்களை தமது தேசிய நலனுக்காக பயன்படுத்தி கைவிட்டு செல்லும் இயல்புகள் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக மேற்கு ஆசியாவில் தாயக மீட்புக்காக போராடும் குர்து மக்களின் போராட்டத்தை அமெரிக்க தனது தேசிய நலனுக்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுக்களுக்காக பயன்படுத்தி அக்குழுவின் தலைமைகளை அழித்து தனது தேவை பூர்த்தியடைந்த பின்னர் குர்து மக்களுக்கு எத்தீர்வையும் பெற்றுக்கொடுக்காது நட்டாற்றில் விட்டு சென்றனர். இவ்அனுபவம் நாளை தைவானுக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களையே களநிலவரங்கள் உறுதி செய்கின்றது.
Comments
Post a Comment