தமிழர்களின் அரசியல்போராட்டமும் ஐரோப்பிய ஒன்றியமும்! -ஐ.வி.மகாசேனன்-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச்சலுகை நீக்கம் ஆகிய இரண்டும் இலங்கை அரசாங்கத்திற்கான சமீபத்திய சர்வதேச நெருக்கடியாக காணப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஆணையாளரின் குறிப்புகளோடு கடுமையான நெருக்கடிகளின்றி கடந்து சென்றுள்ளது. அதேவேளை இலங்கையின் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் ஐ.நா வரை சென்று தமது உள்ளக பொறிமுறை பிராச்சரத்தை வீரியமாக முன்னெடுத்தும் இருந்தனர். இந்நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி+ வரிச்சலுகை தொடர்பான தீர்க்ககரமான முடிவுகளை மேற்கொள்வதற்கான களஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ளனர். இக்கட்டுரை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் இலங்கைக்கான வருகையும் சந்திப்புகளுக்கும் பின்னாலுள்ள அரசியலை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள், தொழிலாளர் நிலைமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி பற்றிய 27 சர்வதேச மாநாடுகளை ஒப்புதல் மற்றும் திறம்பட செயல்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஜி.எஸ்.பி+ வழங்கப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி ஜி.எஸ்.பி+ சலுகை நீக்கப்பட்டிருந்தது. 2017இல் ஜி.எஸ்.பி+ சலுகையை மீள இலங்கைக்கு மீள வழங்கப்பட்டிருந்தது. சிறப்பு ஊக்க ஏற்பாட்டிற்கு பொருந்தும் 27 சர்வதேச மாநாடுகளை செயல்படுத்துவதை ஆய்வு செய்ய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு ஜி.எஸ்.பி+ சலுகை பெறும் நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்வது வழமை. 2018அம் ஆண்டு இலங்கைக்கு இறுதியாக வந்திருந்தார்கள். அக்டோபர் 2020இல், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி+ திட்டம் மறு வகைப்படுத்தப்படும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என்று கூறியது. இத்திட்டத்தின் மூலம் இலங்கை தொடர்ந்து பயனடைவதற்கு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்குவது முக்கியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியது. இந்நிலையிலேயே தற்போது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வந்ததுள்ளனர். அவர்கள் அரசாங்க பிரதிநிதிகள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், தேசிய இனங்களின் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினருடனான சந்திப்புக்களை செப்டெம்பர்-27 முதல் அக்டோபர்-5 வரை மேற்கொள்ள உள்ளார்கள்.
எனினும், இலங்கைக்கு தற்போது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு வருகை தந்துள்ள சூழல் வேறுபட்டதாகும். இலங்கை தொடர்பான அதன் முந்தைய தீர்மானங்கள் மற்றும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' அறிக்கையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கையின் நிலைமை குறித்தவொரு தீர்மானத்தை ஜூன்-10 அன்று நிறைவேற்றியிருந்தார்கள். அதாவது, ஜி.எஸ்.பி+ இற்கான தொடர்ச்சியான தகுதி இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2021 மார்ச் 12அன்று வெளியிடப்பட்ட விதிமுறைகள் இல.01 (2021) மற்றும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது பற்றிய 'பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கைக்கு வருகை' என்ற தலைப்பில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் 2018ஆம் ஆண்டு அறிக்கை கவணத்தில் எடுத்துக்கொள்ளும் என்பதை இலங்கைக்கு நினைவூட்டியது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கை வந்துள்ளதுடன் சந்திப்புக்களையும் மேற்கொள்ள உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக்குழுவின் தற்போதைய விஜயம் ஐரோப்பிய பாரளுமன்ற ஜூன் மாத தீர்மான முன்நிபந்தனையுடன் வருகை தந்துள்ளமையினாலேயே தேசிய இனங்களின் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு முதன்மை பெறுகின்றது. இம்முதன்மை தன்மையை தேசிய இனங்களின் பிரதிநிதிகள் சரியாக கையாண்டுள்ளர்களா என்பதை அறிய அவர்களின் உரையாடல்களை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
ஓன்று, இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையே சந்திப்பு செப்டெம்பர்-28அன்று கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி+ சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பரதிநிதிகளிடம் வலியுறுத்தியதுள்ளனர். 'இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி.எஸ்.பி+ சலுகையை வழங்கக்கூடாது. மீறி இந்தச்சலுகை வழங்கப்பட்டால் அது சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது.' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைகளை சுட்டிக்காட்டியுள்ளர் வரவேற்றகத்தக்க செயற்பாடாகும். எனினும் வழமை போன்றே அதிகமாக வாய்மொழி சம்பாசனைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். மாறாக ஆதாரங்களை திரட்டி கையளிக்கும் வழிமுறைகளை பற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாகவே அலட்சியம் செய்து கொண்டே வருகின்றார்கள். எனினும் ஒடுக்குமுறைகளை அதிகமாக செய்யும் அரசாங்க தரப்பு கடந்த கால சீர்திருத்த பொறிமுறைகளை ஆதாரமாக முன்வைத்து தமது நியாயப்பாட்டை சர்வதேச அரங்கில் முன்னிறுத்துகிறார்கள்.
இரண்டு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூல் ஹக்கீமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். இச்சந்திப்பில், மனித உரிமைகள் பாதுகாப்பது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கு எடுத்துக்கூறியதாக ரவூல் ஹக்கீம் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்துதான் ஜி.எஸ்.பி+ சலுகை எமக்கு தொடர்ந்து நீடிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார். ஹக்கீமின் உரையாடலும் வழமை போன்றே அரசாங்கத்துக்கும் நோகாது தம் இனக்குழுமத்திற்கும் நோகாத வகையில் அமையப்பெற்றுள்ளது. மேலும், ஊடகச்சந்திப்பிலேயே உரையாடப்பட்ட விடயங்கள் தெரிவித்துள்ளமையால் எத்தகு மொழிநடையில் தமது இனக்குழுமத்தின் பிரச்சினைகளை தெரிவித்தார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்சந்திப்புக்கள் மற்றும் உரையாடல்கள் தேசிய இனங்கள் தங்களுக்குரிய வாய்ப்பை கையாளுவதற்கான உரையாடலே ஆகும். எனினும் ஐரோப்பிய ஒன்றியம் தனக்குரியதொரு நிகழ்ச்சி நிரலை கவனமாக தயாரித்துள்ளது. ஐரோப்பிய பாரளுமன்ற ஜூன் மாத தீர்மானம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கானதொரு அழுத்தப்பிரயோகமேயாகும். அதாவது சீனா சார்புநிலையை அதிகரித்து செல்லும் ராஜபக்ஷாக்களின் அரசாங்க நிகழ்ச்சி நிரலுக்குள் மேற்கின் நலனை உள்ளீர்ப்பதற்கான பொறியாகவே ஐரோப்பா பாராளுமன்ற தீர்மானம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனை இலங்கை அரசாங்க தரப்பு சிறப்பாக கையாண்டுள்ளது. இலங்கை அரசு கையாண்ட முறைகளை முன்னைய வாரங்களில் இப்பகுதியில் நிறைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கீடற்ற முடிவுகளையே அதிகமா மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கான சான்றுகளை அவதானமாக நோக்குதல் வேண்டும்.
முதலாவது, இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய குழு முழுமையாக பொருளாதார ரீதியிலான நிபுணத்துவம் வாய்ந்த குழுவாகவே காணப்படுகிறது. இந்த குழுவில் வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த மூத்த ஆலோசகர் நிகோலாஸ் ஜைமிஸ், ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவை தெற்காசிய பிரிவின் தலைவர், ஜிஎஸ்பி வர்த்தக விருப்பத்தேர்வுகளின் ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஆணையத்தின் வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்கள் மற்றும் சேர்த்தலுக்கான பொது இயக்குநரக பிரிவின் தலைவர், ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மேசை அதிகாரி ஆகியோர் உள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது மனித உரிமைகளை ஆய்வு செய்வது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதான இலக்காக காணப்படுமாயின் அதுசார் நிபுணர்களே இக்குழுவில் அதிகம் இடம்;பெற்றிருக்க வேண்டும். மாறாக பொருளாதார ரீதியிலான நிபுணர்களை அதிகமாக உள்ளீர்த்திருப்பது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ள பொருளாதார நலன்களையே இக்குழு அதிகம் கரிசணை கொள்ள தயாராக உள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசாங்கமும் பொருளாதார ரீதியிலாவே மேற்கை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு, ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையில் மனித உரிமையை அதிகம் கரிசணை கொள்வதாயின் இலங்கை அரசாங்கங்கள் தேசிய இனங்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நில ஆக்கிரமிப்பு, மத உரிமைகளை தடுத்தல், நினைவுகூர்தலை தடுத்தல், காணமலாக்கப்பட்டோருக்கு சரியான தீர்வின்மை, சிங்களமயமாக்கல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லக்கூடியது. எனினும் தனித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை மாத்திரம் ஐரோப்பிய ஒன்றியம் முதன்மைப்படுத்தவதனூடாக இது தனித்து இலங்கை அரசாங்கத்தத்தின் மீது அழுத்தத்தினை பிரயோகிப்பதனூடாக தமது தேசிய நலனை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கை மாத்திரம் என்பது தெளிவாகின்றது.
மூன்று, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளை பட்டியலிட்டு தெரிவிக்கையில், 'இந்த விவகாரங்களில் குறுகிய கால தீர்வு எதையாவது யோசிக்கலாமா' என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்டனர். அதற்கு கூட்டமைப்பினர் அவ்வாறு வழங்க வேண்டாம் எனவும் நீடித்த, நிலையான தீர்வே தமிழ் தரப்பால் ஆராயப்படும், அதுவே தேவையானது என்றுள்ளனர். அதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, இந்த விவகாரங்களில் தமக்கும் வரையறைகள் உள்ளன. நாளை அரசாங்கத்துடன் நடக்கும் மீளாய்வு கூட்டத்தில் இந்த விவகாரங்களை ஆராய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த உரையாடல் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு கடுமையான அழுத்தங்களின்றி இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியற்ற முடிவுகளையே பரிசீலிக்க ஆர்வமாக உள்ளார்கள் என்பதையே புலப்டுத்துகிறது.
எனவே, கடந்த ஜூன் மாத காலப்பகுதியில் ஈழத்தமிழ் மக்கள் தமக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக மேலுமொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றதாக அங்கலாய்த்தமையும் கைநழுவும் சூழலியே காணப்படுகின்றது. தமிழ்மக்களின் தொடர்ச்சியான ஏமாற்றங்களுக்கு ஈழத்தமிழரசியல் தரப்பின் ஆளுமையற்ற அரசியல் நகர்வே காரணமாகும். எந்தவொரு உலக நாடுகளும் தமது தேசிய நலனை முன்னிறுத்தியே வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்கின்றனர். ஈழத்தமிழர் அரசற்ற உரிமைக்காக போராடும் தரப்பு என்ற ரீதியில் சர்வதேச சக்திகள் தங்களது தேசிய நலன்களை ஈடேற்றி கொள்வதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக பயன்படுத்தவே முற்படுவார்கள். அதுவே இதுவரை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தம் செய்ய அழுத்தத்தை பிரயோகிக்கும் சமகாலப்பகுதியில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது. இதுதான் சர்வதேச அரசியலின் யதார்த்தம். இவ்யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஈழத்தழிரசியல் தனக்கானதொரு வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்கும் போதே மீட்ச்சி சாத்தியமாகும்.
Comments
Post a Comment