சீனாவிற்கு எதிரான கடன்பொறி பிரச்சாரத்தினால் அமெரிக்கா பலவீனமான நாடுகளை ஆக்கிரமிக்க முயலுகிறது? -ஐ.வி.மகாசேனன்-
சீனாவின் கடன் பொறி(Debt Trap) தொடர்பிலே சர்வதேச அரசியலில் அமெரிக்க தலைமையிலான சீன எதிர்ப்பு சக்திகளினால் அதிகளவில் பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகிறது. குறித்த பிரச்சாரம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மேற்கொள்காட்டியே அதிகமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது உகண்டா விமான நிலையத்தினையும் கடன் பொறியூடாக சீனா கைப்பற்றியுள்ளதென ஊடகப்பரப்பில் செய்திகள் முதன்மைப்படுத்தப்படுகிறது. எனினும், இலங்கையின் சீனத்தூதரகம் சீனாவின் கடன் பொறி தொடர்பிலான எதிர்மறையான பிரச்சாரங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவினால் வழங்கப்டும் கடன்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளது. இக்கட்டுரையும் சீனாவின் கடன் பொறி தொடர்பிலான பிரச்சாரங்களின் உண்மைத்தன்மையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-சீனா அதிகாரப்போட்டியே இன்றைய சர்வதேச அரசியலையும், நாடுகளுக்கிடையிலான சர்வதேச உறவுகளினையும் முழுமையாக நிரப்பி வருகிறது. சித்தாந்தங்களூடாக தமது உலக அதிகாரத்தை உறுதிப்படுத்திய அமெரிக்கா, சீனாவின் அதிகாரப்போட்டியை சிதைப்பதற்கு சீனா மீதான குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் உலாவ விடுவதனையே முதன்மையாக பிரச்சாரமாக கையாண்டு வருகின்றது. அவ்வகையிலேயே 2013ஆம் ஆண்டிலிருந்து சீனா தனது வெளியுறவுக்கொள்கையில் இணைத்துள்ள பட்டி மற்றும் சாலை முன்முயற்சி மூலோபாயத்திட்டத்தை அமெரிக்கா சீனாவின் கடன் பொறி என்பதன் மூலம் முன்னெடுத்து வருகின்றது. ஆரம்பத்தில் சீனாவின் உட்கட்டமைப்பு முதலீடுகள் ஆசியாவையும் பின்பு ஆபிரிக்காவையும் மையப்படுத்தியது என்ற அடிப்படையில் ஆசிய ஆபிரிக்க நாடுகளை மேற்கொள்காட்டியே சீனாவின் கடன் பொறி தொடர்பான விளைவுகள் முன்வைக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் கடன் நெருக்கடியால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99வருட குத்தகைக்கு சீனா நிறுவனத்திற்கு கொடுத்தது. இதன் பிற்பாடு இலங்கை பொறுத்து சீனாவிற்கு எதிரான விமர்சனத்தில்; ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரமே முதன்மையான மேற்கோளாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே இலங்கையின் சீனத்தூதரகம் ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை விபரத்தை தெரிவித்து சீனாவிற்கு எதிரான விமர்சனங்களுக்கு தனது எதிர்பை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது, '2017ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை (ஐளுடீ) திருப்பிச் செலுத்துவதற்காக மிகவும் தேவையான டாலர்களை திரட்ட முடிவு செய்தது. இது சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்திற்கானதல்ல. இன்னும் சொல்லப்போனால், மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியது.' என டுவிட் செய்துள்ளது.
கடனுதவி, கடன் பொறி தொடர்பிலான சீனா மற்றும் அமெரிக்காவின் கருத்தாடலுக்கு புறத்தே சீனாவின் கடன் பொறி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களையும், சீனாவின் எதிர்க்கருத்துக்களையும் தேட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
முதலாவது, கடன் பொறி என்பது அரசியல் செயற்பாட்டில் நீண்டகாலமாக காணப்படுமோர் இராஜீக செயற்பாடாகும். எடுத்துக்காட்டாக கி.மு 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தத்துவஞானி, அரச ஆலோசகர் சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரம் எனும் நூலில் அரசியல் இராஜீக செயற்பாட்டு முறைமைகளாய் 'சாமம்', 'தானம்', 'பேதம்', 'தண்டம்' எனும் நான்கு வழிமுறைகளை அடையாளப்படுத்துகின்றார். இங்கு தானம் என்பது பணம், சலுகைகள் அளிக்கும் இன்றைய கடன் பொறி முறையையே அடையாளப்படுத்துகின்றது. அத்துடன் அமெரிக்காவும் பனிப்போர் கால இருதுருவ உலக ஒழுங்கிலும், பனிப்போருக்கு பின்னரான ஒற்றை மைய உலக ஒழுங்கிலும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நாடுகளை கடன் பொறியூடாக அதிகாரம் செலுத்தியுள்ளது. எனினும் அக்காலத்தில் அதற்கு கடன்பொறி எனும் அர்த்தத்தைக் கொடுக்கவில்லை. அமெரிக்காவின் கடன் பொறி வடிவத்தை ஜான் பெர்க்கின்ஸ் தனது அனுபவத்தினூடாக எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (ஊழகெநளளழைn ழக யn நுஉழழெஅiஉ ர்வை ஆயn) எனும் நூலில் தெளிவாக விபரித்துள்ளார். எனவே கடன்பொறிமுறை சிறப்பானது தவறாதென்ற வாதங்களுக்கு அப்பால் கடன்பொறிமுறை தொடர்பில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாததது. இது பிரச்சாரத்தை முதன்மைப்படுத்தும் தரப்பினருக்கு நீண்டகால நலன்களை நிறைவு செய்யக் கூடியதே அன்றி நியாயமான கருத்தடலாக கொள்ள முடியாது.;
இரண்டாவது, உலகமயமாக்கல் அதிக நன்மைகளை ஏற்படுத்தும் அதேவேளை அபிவிருத்தி குறைவான நாடுகளில் உலகமயமாக்கவின் சரிவான விளைவுகள் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. இதனை சீர்செய்ய கடனுதவி பெறுவது தவிர்க்க இயலாத சர்வதேச உறவாக மேற்குலக நாடுகள் கடந்த காலனித்துவ தசாப்தங்களில் ஏற்படு:த்தியிருந்தனர் என்பது கவனிக்கத் தக்கதாகும். கடன் மூலமே நாடுகள் தமது உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அதிகம் முதன்மைப்படுத்துகின்றனர். இதனை வினைத்திறனாக பயன்படுத்தும் ஆற்றலுடைய அரசாங்கங்கள் தங்கள் நாட்டின் nhருளாதார முதலீடுகளை ஊக்குவிப்பதோடு நாட்டின் நிதிநெருக்கடியை சீர்செய்வதும் ஏதுவாக கொள்ளுகின்றனர். அவ்வாறே சீனா தனது சந்தையை உலகத்துக்கான சந்தையாகவும், அனைவராலும் பகிரப்படும் சந்தையாகவும், அனைவருக்கும் அணுகக்கூடிய சந்தையாகவும் மாற்றும் திட்டங்களையே முதன்மைப்படுத்துகின்றது. சமீபத்திய ஆண்டுகளில் சீனா அதுசார்ந்து பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு சந்தையில் அதிக அணுகலை அனுமதிக்கும் மூலோபாயத்தைத் திறப்பது மற்றும் வணிக நட்புச் சூழலை உறுதி செய்யும் வெளிநாட்டு முதலீட்டுச் சட்டங்களை இலகுபடுத்துவதென பொருளாதார ரீதியில் சீனாவின் நகர்வுகள் நிகழ்கின்றது.
மூன்றாவது, ஒப்பீட்டளவில் சீனாவின் கடனுதவிகள் நாட்டின் உள்ளக அரசியல் விடயங்களில் தலையிடாது பொருளாதார நலன்களை மையப்படுத்தியதாகவே காணப்படுகிறது. சீனாவின் கடனுதவி கடன் பொறிகளாக மாறுவதில் அரசாங்கங்களின் பலவீனமான நிர்வாக செயற்பாடுகளே காரணமாகின்றது. இலங்கையில் சீனாவின் முதலீட்டு திட்டங்கள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவிhலேயே முன்மொழியப்பட்டிருந்தது. இவை அவரது அரசாங்கத்தின் ஊழல் மற்றும் நீடிக்க முடியாத வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் காணப்பட்டது. இதனாலேயே ஆரம்பத்தில் வெள்ளை யானையாக காணப்பட்ட சீனாவின் அபிவிருத்தி முதலீடுகள் விரைவில் பரந்த அதிக கொள்ளளவை உருவாக்கியது மற்றும் இலங்கையின் நிதிச் சிக்கல்களைச் சேர்த்தது. இலங்கையின் கடன் நெருக்கடியானது சீனக் கடனினால் மட்டுமானது அல்ல. மாறாக மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் மூலதனச் சந்தைகளில் அதிகப்படியான கடன் வழங்குவதனாலும் எழுந்தது. இலங்கையின் முக்கிய கடன் வழங்குனர்களின் தரவை வெளியிட்டுள்ள வெளிவளங்கள் துறையின் 2021 ஏப்ரல் தரவுகளின் படி சீனா இலங்கையின் மொத்த கடனில் 10சதவீதத்தை வழங்கியுள்ளதுடன் மேற்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் சந்தைக்கடனாக 47சதவீதம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இது தனித்துவமானது அல்ல. இவ்வாறானதொரு நிலைமையே ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது.
நான்காவது, சீனாவின் கடன் பொறி சார்ந்த பிரச்சாரங்கள் உண்மைத்தன்மை பொறுத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக உகண்டா விமான நிலைய விவகாரம் அதனை அதிகம் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வாரங்களில் உகண்டாவிடம் காணப்பட்ட ஒரேயொரு விமான நிலையமான என்டபே விமான நிலையத்தை கடன் பொறியால் சீனா பெற்றுக்கொண்டுள்ளதான செய்திகளே சர்வதேச செய்திகளில் முதன்மை பெறலாயிற்று. எனினும் உகண்டா சிவில் விமானப்போக்குவரத்து ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் வியானி எம் லுக்கியா தனது டுவிட்டர் தளத்தில் அத்தகைய குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அதாவது, 'உகண்டாவின் என்டபே விமான நிலையம் பணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது என்பதை நான் திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். உகண்டா அரசாங்கத்தால் அத்தகைய தேசிய சொத்தை கொடுக்க முடியாது. அது நடக்கவில்லை என்று நாங்கள் முன்பே சொன்னோம். மீண்டும் சொல்கிறோம். அதில் ஒரு துளியும் உண்மை இல்லை.' என டுவிட் செய்துள்ளார். சமீபத்தில் உகண்டாவில் உள்ளக மோதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள் செல்வது இயல்பானதேயாகும். இந்த சந்தர்ப்பத்தில் சீனாவின் கடன் பொறியின் எதிர்மறை விளைவுகளை பிரச்சாரம் செய்வதால் இலகுவில் மக்களிடம் சென்றடையலாம் என்ற கணிப்பிலேயே இப்பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் கடன் பொறிக்கு எதிரான அமெரிக்காவின் பிரச்சாரத்தில் போலிகளும் நிறைந்து உள்ளமையையே உறுதி செய்கின்றது.
எனவே, சீனாவின் கடன்பொறிமுறை பிரச்சாரமானது அமெரிக்க-சீன அதிகாரப்போட்டி சார்ந்ததாகவே அமைகிறது என்ற வாதத்தை அதிகம் சார்ந்துள்ளது. சீனாவின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கடனுக்காக இணையும் நாடுகள் ஏற்கனவே அதிகம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அபிவிருத்தியடையாத மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நாடுகளாகும். இவற்றிற்கு சீனா வழங்கும் கடனும் தொழில் முதலீடு என்பதை தாண்டி அதிகம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மையப்படுத்தி அமைவதனால், உட்கட்டமைப்பு அபிவிருத்தி இடம்பெறுகின்ற அதேவேளை மறுதலையாய் நாட்டின் கடனளவை அதிகரித்து நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலும் ஒருங்கே உருவாகின்றது. சீனாவின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கடனுதவிகள் நிதி நெருக்கடிக்கான உடனடி காரணங்களாக அமைகின்ற போதிலும், குறித்த நாட்டின் அரசாங்க ஸ்திரமின்மை மற்றும் நிர்வாக குறைபாடுகளே குறித்த நாடுகளின் நிதி நெருக்கடிகளுக்கு அடிப்படை காரணமாகின்றது என்பதுவே நிதர்சனமானது. மேலும் சீனாவின் கடன் பொறி பிரச்சாரங்களை முதன்மைப்படுத்திவரும் அமெரிக்கா அந்த நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்கின்ற உத்தியை வெளிப்படுத்துகிறதைக் காணமுடிகிறது.
Comments
Post a Comment