இந்துசமுத்திர மகாநாட்டின் மூலோபாயமும் இந்தியா-இலங்கை நட்புறவும் -ஐ.வி.மகாசேனன்-
சமகால புவிசார் அரசியல் போட்டியில் இந்து சமுத்திரம் உலகின் மிக முக்கியமான களங்களில் ஒன்றாக காணப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான உலகின் ஏழு முக்கியமான கடல்பாதைகளில் மூன்று இந்த பிராந்தியத்தில் உள்ளன. இதனடிப்படையிலும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரசியல் புவியியல் அமைவிட முக்கியத்துவம் சார்ந்தும் இக்களம் மூலோபாயப் போட்டி நிறைந்து உள்ளது. இது இப்பிராந்தியத்துக்கு புறத்தே உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் சோவியத் யூனியனின் மூலோபாய அரசியல் களமாக வரலாற்றில் இருந்து வந்துள்ளது. இந்து சமுத்திரத்தின் சமீபத்திய வல்லரசாக பிராந்தியத்துக்கு புறத்தே சீனா எழுச்சியடைந்த வருகின்றது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் அடிக்கடி இந்து சமுத்திர கடற்பரப்பில் பயணிப்பதுவும், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை மையப்படுத்திய அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பு கூட்டுக்களும் இந்து சமுத்திரத்தின் கொதிநிலையை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இக்கட்டுரை துபாயில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாட்டின் அரசியல் உரையாடல்களின் தன்மையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4-5(2021) தேதிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியில் ஐந்தாவது இந்து சமுத்திர மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாடு 'இந்து சமுத்திரம்: சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்' எனும் கருப்பொருளில் RSISச சிங்கப்பூர், இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூலோபாய ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான எமிரேட்ஸ் மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டிற்கு 18 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களும், 30 நாடுகளில் இருந்து சுமார் 200 பிரதிநிதிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். ஆரம்ப உரையை இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா நிகழ்த்தியிருந்ததுடன், இந்திய சார்பில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொண்டிருந்தார். இந்து சமுத்திர மாநாடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தைப் பயன்படுத்தும் பிற நாடுகளுக்கு பொதுவான நலன்கள் மற்றும் கவலைகளைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்துடன் முதல் இந்து சமுத்திர மாநாடு 2016இல் தொடங்கியது.
இந்து சமுத்திர நலன் சார்ந்த உரையாடல் இலங்கை அரசியல் வரலாற்றோடு இறுக்கமான பிணைப்பை கொண்டுள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், 1971 இல், அப்போதைய பிரதமர் ஸ்ரீpமாவோ பண்டாரநாயக்க, ஐ.நா பொதுச் சபையில், இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக மாற்ற வேண்டும் என்று முன்மொழிந்தார். சீனாவைத் தவிர, பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அதிகாரங்களின் எதிர்ப்பையும் மீறி உலக அமைப்பு அவரது முன்மொழிவை மிகவும் தீவிரமாக பரிசீலித்தது. அன்றைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் தலையீடு இந்து சமுத்திரப்பரப்பில் அதிகமாக காணப்பட்டமையால் சோவியத் ஒன்றியம் சார்பான நிலைப்பாட்டிலிருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா குறித்த முன்மொழிவை நகர்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது 1971ஆம் ஆண்டிலிருந்து 2021இல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல மாறுதல்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஜிபூட்டியில் படைத்தளத்தை உருவாக்கியதன் மூலம் சீனாவும் இந்து சமத்திரத்தில் தனது இராணுவ அக்கறையை உறுதி செய்யதுள்ளது. மேலும், பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் சார்பான சோசலிச முகாமுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவிற்கு எதிராகவும் நின்ற பிராந்திய பெரிய சக்தியாகிய இந்தியா தற்போது அமெரிக்கா சார்பான நிலைப்பாட்டிலும், இந்து சமுத்திரத்தின் புதிய வீரராக நுழைந்துள்ள சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டிலும் உள்ளது.
இம்மாறல்களை இந்து சமுத்திர 5வது மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் உரையிலிருந்து தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவரது உரை, மாறிவரும் அமெரிக்க மூலோபாய நிலைப்பாடு மற்றும் சீனாவின் எழுச்சி ஆகிய இரண்டு அபிவிருத்திகள் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலின் பரிணாம வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை மையப்படுத்தியதாகவே காணப்பட்டது. ஜெய்சங்கர் முன்வைக்கும் தாக்கங்களை நுணுக்கமாக அவதானிப்பதனூடாகவே இந்து சமுத்திர மாநாட்டின் அரசியல் தாக்கங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக காணப்படும்.
ஓன்று, இந்தியா அமெரிக்காவை இந்து சமுத்திரத்தின் பாதுகாவலராக பிரகடனப்படுத்த முயலுகின்றது. அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயம் மற்றும் குவாட் கட்டமைப்புக்களில் அமெரிக்காவுடன் இணைந்து இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமெரிக்காவின் முகமாக செயற்படும் இந்தியா தனது பங்காளியான அமெரிக்காவை இந்து சமுத்திரத்தின் பாதுகாவலனாய் பிரகடனப்படுத்துவதில் அதிக கரிசனை கொண்டு செயற்படுவதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவை அதிக சுறுசுறுப்பான கூட்டாளியாகப் பாராட்டியுள்ள ஜெய்சங்கர் தனது உரையில் பெரும்பகுதியை அமெரிக்காவிற்கான நற்சான்றிதழை வழங்குவதற்காக ஒதுக்கி உள்ளார். அதாவது, 'அமெரிக்கா தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் அதிக யதார்த்தத்தை நோக்கி நகர்கிறது. இது பன்முகத்தன்மையுடன் சரிசெய்தல், மறுசீரமைத்தல், அதன் உள்நாட்டு மறுமலர்ச்சி மற்றும் வெளிநாடுகளில் உள்ள கடமைகளுக்கு இடையிலான சமநிலையை மறுபரிசீலனை செய்கிறது. இது இந்து சமுத்திரத்தில் அதன் செல்வாக்கு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, மரபுவழி கட்டுமானங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு செயலில் பங்குதாரர் ஆக்குகிறது. இது தாக்கங்களை ஏற்படுத்த முடியாது. அமெரிக்க அரசியலின் தனித்துவம் மற்றும் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடிக்கும் திறனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.' எனக் குறிப்பிட்டுள்ளார். இது இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் இருப்பை ஆதரிக்கும் இந்தியாவின் உறுதியான எண்ணங்களையே உறுதி செய்கின்றது. இந்து சமுத்திரத்தில் டியாகோ கார்சியாவில் காணப்படும் அமெரிக்காவின் இராணுவத்தளத்தின் உரிமம் தொடர்பில் சச்சரவு எழுந்துள்ளது. இது மொரிஷியஸிற்கு சொந்தமான நிலப்பரப்பாக ஐ.நா.வும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்து சமுத்திரத்தில் காணப்படும் அமெரிக்காவின் பெரிய இராணுவத்தளம் நிலைத்து நிற்குமா என்பதில் சந்தேகங்கள் காணப்படுகிறது. இவ்வாறானதொரு சூழலியே இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் இருப்பை அவசியமானதாக பிரச்சாரப்படுத்துவதற்கான களமாகவே இந்து சமுத்திர மாநாட்டை இந்தியா பயன்படுத்தியுள்ளது என்பதையே உணர்ந்து கொள்ள முடிகிறது.
இரண்டு, இந்து சமுத்திரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை கடுமையாக இந்தியா விமர்சித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் பிராந்திய பாதுகாப்பிற்கும் உறுதிப்பாட்டுக்கும் கடுமையான நெருக்கடியாக சீனாவின் பிரசன்னத்தை சாடியுள்ளது. உலக அளவில் சீனா உருவானது குறித்து பேசிய ஜெய்சங்கர் அதன் வளர்ச்சியின் விளைவுகளை வலியுறுத்தினார். அதாவது சீனா தனது உள்நாட்டு தடையற்ற தன்மையை வெளி உலகிற்கு விரிவுபடுத்துகின்றமையால், அதன் வளர்ந்து வரும் திறன்களின் விளைவுகள் ஆழமானவை எனச்சுட்டிக்காட்டியிருந்தார். அதாவது ஜெய்சங்கர் தனது உரையில், 'இரண்டாவது முக்கிய போக்கு சீனாவின் எழுச்சி. உலக அளவில் ஒரு சக்தி உருவாவது ஒரு அசாதாரண நிகழ்வு. இது ஒரு வேறுபட்ட வகையான அரசியல் என்பது மாற்ற உணர்வை அதிகரிக்கிறது. சில ஒற்றுமைகள் சோவியத் ஒன்றியத்தை சார்ந்திருக்கலாம். ஆனால் இன்று சீனா கொண்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தின் மையத்தை அது ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. தனித்தனியாக ஆசியா முழுவதிலும் உள்ள பிராந்தியப் பிரச்சினைகளில் பதட்டங்கள் கூர்மையாகி வருவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். கடந்த கால ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல்கள் இப்போது சில கேள்விக்குறிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. காலம் நிச்சயமாக பதில்களை வழங்கும்.' என்ற எச்சரிக்கையுடன சீனா தொடர்பான எழுச்சியின் தாக்கத்தை விபரித்துள்ளார்.
மூன்று, குவாட் அமைப்பை இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு கூட்டாக முன்னகர்த்துவதற்கான முன்முயற்சிகளையும் ஜெய்சங்கர் இந்து சமுத்திர மாநாட்டில் எடுத்துள்ளமையை உணரக்கூடிதாக உள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ பிரசன்னத்தின் பின்னணியில் சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பகுதியை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசி, கடினமான காலங்களில் வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னுதாரணமாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பு இந்து சமுத்திரத்தின் ஒரு முனையில் சிறந்த உதாரணம் என ஜெய்சங்கர் தனது உரையில் அடையாளப்படுத்தியுள்ளார். மேலும், அதன் செயற்பாடுகளையும் ஆழமாக தனது உரையில் விபரித்தார். அதாவது, 'ஒரு வருட இடைவெளியில் கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, தடுப்பூசி ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உயர்கல்வி, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகள், தவறான தகவல், பலதரப்பு நிறுவனங்கள், அரைக்கடத்திகள் மற்றும் எதிர்-கடல் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வலுவான நிகழ்ச்சி நிரலை உருவாக்கியுள்ளது. பயங்கரவாதம், மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு விருப்பம் உள்ள இடத்தில் ஒரு வழி இருக்கும் என்ற பழைய பழமொழி, அதில் நிறைய உள்ளது.' எனச்சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்து சமுத்திர மாநாட்டு உரை அதிகம் அமெரிக்க முகவர் செயற்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் பிராந்திய நலனுக்கு அப்பால் அதிகம் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாய உரையாடல்களையே முன்னிலைப்படுத்தியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது இந்து சமுத்திரத்தின் சுயாதீனத்திற்கு அபத்தமானதாகும். 21ஆம் நூற்றாண்டு இந்து சமுத்திரத்திரத்தின் முக்கியத்துவத்தினடிப்படையில் ஆசிய நூற்றாண்டாக அடையாளப்படுத்தப்படுகையில், இந்து சமுத்திர பிராந்திய சக்திவாய்ந்த அரசு வேறொரு அரசின் முகவராக செயற்படுவது இந்து சமுத்திரத்தின் சுயாதீனத்தை சவாலுக்குட்படுத்தக்கூடியது என்பது மறுக்க இயலாத நிலைமையாகும்.
Comments
Post a Comment