பூகோள போட்டிக்குள் நியூ கலிடோனியாவை பிரான்ஸ் நகர்த்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
அமெரிக்கா-பிரித்தானியா-அவுஸ்ரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமாகிய ஆக்கஸ் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிராகரிககப்பட்டதை தொடர்ந்து இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பிரான்ஸின் இருப்பு தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, 2022-ஏப்ரல் பிரான்ஸ் பொதுத்தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் பிரான்ஸின் ஆதிக்கம் நிறைந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் குறித்த பிராந்திய அரசுடனான முரண்பாடு அதிக நெருக்கடிகளை ஆளும் மக்ரோன் தரப்பினருக்கு ஏற்படுத்தியிருந்தது. எனினும் கடந்த வாரம் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட நியூ கலிடோனியாவில் நடைபெற்ற சுயாட்சிக்கான வாக்கெடுப்பின் முடிவுகள் பிரான்ஸிற்கு சாதகமாக கிடைக்கப்பெற்றுள்ளமையானது, பிரான்ஸின் இந்தோ-பசுபிக் பிராந்தியம் மீதான இருப்பு அதிகமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் நியூ கலிடோனியா சுயநிர்ணய உரிமை வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பான அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
பசிபிக் தீவு பிரெஞ்சு பிரதேசமான நியூ கலிடோனியாவின் 30 ஆண்டுகால சமாதான முன்னெடுப்பின் உச்சக்கட்டமாக, பிரான்சிலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமா என்பது குறித்த மூன்றாவது மற்றும் இறுதி வாக்கெடுப்பை கடந்த வார இறுதியில் நடைபெற்றது. ஆனால் ஒரு தரப்பு பங்கேற்கவில்லை. நியூ கலிடோனியாவில் சுயாட்சிக்கான பல வருட மோதல்களுக்கு பிறகு, 1980ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு மூன்று முறை இடம்பெறும் என்ற வாக்குறுதியை பிரான்ஸ் நியூ கலிடோனியா மக்களுக்கு வழங்கி இருந்தது. அதன் பிரகாரமான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பே டிசம்பர்-12(2021) அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த வாக்கெடுப்பில் வாக்காளித்தோர் சுதந்திரத்தை பெருமளவில் நிராகரித்துள்ளனர். 97சதவீதம் பேர் பிரான்சின் ஒரு பகுதியாக இருக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனரென நியூ கலிடோனியாவில் உள்ள பிரெஞ்சு உயர் ஸ்தானிகராலயம் டிசம்பர்-13 அன்று இறுதி முடிவுகளில் தெரிவித்திருந்தது. 2018இல் இடம்பெற்ற முதல் வாக்கெடுப்பில் 43சதவீதமானோரும், 2020இல் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில், 47 சதவீதமானோரும் சுதந்திரத்தினை கோரி வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டிசம்பர்-11 நடைபெற்ற சுயாட்சிக்கான வாக்கெடுப்பில் தகுதியான வாக்காளர்களில் 44 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நியு கலிடோனியா சுயாட்சி வாக்கெடுப்பு தொடர்பான செய்திக்குறிப்பில், 'ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சு விசுவாசமான பகுதிகளான நொவ்மியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்காளர்கள் வரிசையாக வெளியேறியபோது, சுதந்திரத்திற்கு ஆதரவான கோட்டைகளில் அவை கிட்டத்தட்ட காலியாக இருந்தன.' எனக் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் சுதந்திர ஆதரவு சோசலிஸ்ட் கனக் விடுதலை முன்னணி (FLNKS) அதன் ஆதரவாளர்களிடம் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியது.
நியூ கலிடோனியாவில் சுதந்திரத்தை வலியுறுத்தும் கனாக் தலைவர்கள் டிசம்பர்-11 வாக்கெடுப்பை அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்குமாறு பிரெஞ்சு அரசாங்கத்தை வலியுறுத்தினர். கொரோனா வைரஸின் பேரனர்த்தத்தினால் தமது சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆதலால் குறித்த காலப்பகுதியில் அரசியல் பிரச்சாரங்கள் சாத்தியமற்றது என்ற கரத்தை முன்வைத்தனர். சோசலிஸ்ட் கனக் விடுதலை முன்னணி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'சுகாதார நிலைமை சீராகவில்லை, இரண்டாவது அலையின் ஆபத்து இன்னும் உள்ளது. மற்றும் இன்று, கோவிட் நோயால் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பசிபிக் தீவுவாசிகள், அவர்களில் பெரும்பாலோர் கனக்ஸ்.' எனக்குறிப்பிட்டிருந்தது. மேலும், பிரதேசத்தின் 276 கோவிட் இறப்புகளில் பெரும்பாலானவை பழங்குடியினரான கனக் மற்றும் பிற பசிஃபிகா சமூகங்களிடையேயே உள்ளனர். கனக் மக்களைப் பொறுத்தவரை, துக்க சடங்குகள் விரிவானவை மற்றும் 12 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே செப்டம்பர் வெடிப்பின் போது சமூகத்திலிருந்து பலரை இழந்தது வாக்கெடுப்புக்குத் தயாராவதைத் தடுத்தது. எனினும் பிரான்ஸில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு தமக்கு சாதகமான சூழலை வெளிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க மறுத்துவிட்டது. ஆதலாலேயே சுதந்திரத்திற்கு அதரவான வாக்குகள் சடுதியாக குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் முடிவுபெற்றுள்ள நியூ கலிடோனியாவின் சுயநிர்ணயக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள அரசியல் தாக்கங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, இந்தோ-பசுபிக்கில் பிரான்சின் இருப்பு சார்ந்து ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இராணுவக் கண்ணோட்டத்தில், மற்ற ஐரோப்பிய சக்திகளைக் காட்டிலும் இந்தோ-பசிபிக் பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகமாக செயலில் உள்ளனர். பிரெஞ்சு பாலினேசியா, பசிபிக் பெருங்கடலில் உள்ள வாலிஸ் மற்றும் ஃபுடுனா போன்ற தொலைதூர தீவு புறக்காவல் நிலையங்களுடன், இந்தியப் பெருங்கடலில் உள்ள மயோட் மற்றும் ரீயூனியன் என உலகின் மிகப்பெரிய கடல்சார் பிரதேசங்களை பிரான்ஸ் கொண்டுள்ளது. மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்திற்கான Pநைசசந ஆயசஉழளஇன் ஏப்ரல்-1(2021) அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 1.6 மில்லியன் பிரெஞ்சு குடிமக்கள் வசிக்கின்றனர். ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் சரிந்தது. அதற்குப் பதிலாக அமெரிக்காவும் பிரிட்டனும் நுழைந்ததன் விளைவாக, பாரிஸ் நெருக்கடியை எதிர்கொண்டது. இந்தோ-பசுபிக்கில் பிரான்ஸின் தொடர்ச்சியான இருப்பு தொடர்பில் அதிக கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் நியூ கலிடோனியாவின் வெற்றி இந்தோ-பசிபிக் பகுதியில் தனது செல்வாக்கை பிரான்ஸ் மீள வெளிப்படுத்த நல்ல வாய்;ப்பாக அமையப்பெற்றுள்ளது. இதனை சுட்டிக்காட்டும் வகையிலேயே நியூ கலிடோனியா வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்தான தொலைக்காட்சி அறிக்கையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், 'பிரான்ஸ் மிகவும் அழகாக இருக்கிறது. ஏனென்றால் நியூ கலிடோனியா தங்குவதைத் தேர்ந்தெடுத்தது,' என்று பெருமிதமான செய்திக்குறிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இரண்டாவது, சர்வதேச அரசியலில் அமெரிக்க மற்றும் மேற்கு ஏகாதிபத்திய அரசுகளின் இந்தோ-பசுபிக் பிராந்தியம் மீதான ஏகாதிபத்தியம் சமீப காலங்களில் அதிக நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்து சமுத்திரத்திரத்தில் அமெரிக்காவால் பெரும் கட்டுமானங்களுடன் நிர்மானிக்கப்பட்டள்ள டியாகோ கார்சியா படைத்தளம் மொரிஷியசின் எதிர்ப்புக்களின் மத்தியிலேயே நிலைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கத. எனினும் சீனாவின் ஆதிக்கம் படைத்தள விஷ்தரிப்பு, செயற்கை தீவு உருவாக்கம் என இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் வெகுவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நியூ கலிடோனியாவின் சுயாட்சிக்கான வாக்கெடுப்பில் சுயாட்சி கோரிக்கை வெற்றி பெற்றிருக்குமாயின் அங்கும் சீனாவின் ஆதிக்கமே உருவாகி இருக்கும் என்பதே பரவலான கருத்தாக காணப்படுகிறது. நியூ கலிடோனியாத் தீவுக் கூட்டங்கள் அவற்றின் நிக்கல் உலோக வளம் காரணமாக உலக சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. உலகின் மொத்த நிக்கல் தாது வளத்தில் பத்து வீதமானவை குறித்த தீவுக் கூட்டங்களில் செறிந்துள்ளன. பிரான்ஸின் சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றில் கரத்து தெரிவிக்ககையில், 'அங்கு பிரான்ஸின் பிடி தளருமானால் சீனா தன்னை அங்கு வலுவாக நிலை நிறுத்தக் கூடிய சகல ஏது நிலைகளும் காணப்படுகின்றன' எனத்தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பிராந்தியத்தின் ஏனைய தீவுகளான பிஜி, வனாட்டு, சொலமன் தீவு, பப்புவா நியூ ஹினியா போன்றன ஏற்கனவே சீனாவின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், 'சீனா தனது முத்து மாலையை ஆஸ்திரேலியாவின் வாசல் அருகே நியூ கலிடோனியாவில் கொண்டுவந்து முடிச்சுப்போட ஆயத்தமாகிறது' என்று கூறியிருக்கிறார். இவ்வாறான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் மேற்கு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழலில் பிரான்ஸின் நியூ கலிடோனியா வெற்றி பசுபிக் கடலில் பிரான்ஸின் உரிமைகள் மற்றும் இராணுவப் பிரசன்னத்துக்கான நியாயாதிக்கத்தை வழங்குகிறது. இந்தோ-பசுபிக்கில் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு எதிராக பிரான்ஸை ஒரு அரணாக மக்ரோன் நிலைநிறுத்தியுள்ளார்.
மூன்றாவது, வாக்குறுதியளிக்கப்பட்ட மூன்று பொது வாக்கெடுப்புக்கள் நிறைவுபெற்ற போதிலும், பிரான்ஸின் நியூ கலிடோனியா வெற்றியின் நிலைத்திருப்பில் சில விமர்சனப்பார்வைகளும் காணப்படுகின்றன. 2018 மற்றும் 2020இல் நடைபெற்ற முதல் இரண்டு வாக்கெடுப்புகள் பிரான்சுடன் நீடிப்பதற்கு ஒரு சிறிய பெரும்பான்மையை வழங்கியது. எவ்வாறாயினும், சுதந்திரத்திற்கான வளர்ந்து வரும் கனக் ஆதரவு தளம் கடந்த வாக்கெடுப்பு முடிவுகளில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 2018இல் 43.3 சதவீதத்திலிருந்து 2020இல் 46.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நியூ கலிடோனியாவின் மக்கள்தொகையில் கனக்ஸ் 40 சதவீதமாக உள்ளனர். மூன்றாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும் என்று கனக் தலைவர்கள் முன்பு கூறியிருந்தனர். எனினும் கனக் தலைவர்களின் ஒத்திவைப்பு கோரிக்கையை பிரான்ஸ் நிராகரித்தமையால், தேர்தல் முடிவகளை அவர்கள் ஏற்க தயாரில்லை என்பதையெ வெளிப்படுத்தியுள்ளார்கள். சுதந்திர ஆதரவு அரசியல் கட்சியின் தலைவர் டேனியல் கோவா, 'காலனியாக்கப்பட வேண்டிய மக்களை மதிக்காமல் காலனித்துவமயமாக்கல் செயல்முறை முன்னோக்கி செல்கிறது.' என பிரான்சின் எதேச்சதிகார காலனித்துவ செயலை கடுமையாக சாடியுள்ளார்.
நான்காவது, நியூ கலிடோனியாவில் தொடர்ச்சியாக சுயாட்சிக்கோரிக்கைள் இறுக்கமாக காணப்படுவது வாக்கெடுப்பு முடிவுகளுக்கு பின்னரான நிகழ்வுகள் உறுதி செய்கிறது. வாக்கெடுப்பு முடிவுகளின் பின்னரான நேர்காணலொன்றில் நியூ கலிடோனியாவின் ஜனாதிபதி லூயிஸ் மாபூ, 'நாங்கள் எங்கள் விடுதலைப் பாதையைத் தொடர்கிறோம், அதுதான் இன்றியமையாதது.' எனக்கூறி வாக்கெடுப்பின் எந்த முடிவுகளையும் ஒதுக்கித் தள்ளியுள்ளார். லூயிஸ் மாபூ நியூ கலிடோனியாவில் அதிகாரபூர்வ ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் சுதந்திர சார்புத் தலைவர் ஆவார். மேலும் 40சதவீத மக்கள்தொகையைக் கொண்ட பழங்குடி கனக் சமூகத்தினைச் சேர்ந்தவராவார். அவர் பிரதேசத்தை ஒரு நாடு என்றே தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார். மேலும், வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், சுதந்திரத்தை கோரி வாக்களித்தவர்களை தலைநகரான நௌமியாவில் பிரெஞ்சு மூவர்ணக் கொடியை பறக்கத் தூண்டிய பிரெஞ்சு ஆதரவாளர்களின் செயற்பாடு, நியூ கலிடோனியவின் இறையாண்மை பற்றிய கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதையே உறுதி செய்கிறது.
எனவே, நியூ கலிடோனியாவின் சுதந்திரக்கோரிக்கைக்கான வாக்கெடுப்பின் தோல்வி குறுகிய கால இடைவௌளியில் பிரான்சிற்கு சாதகமான அரசியல் சூழலையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக 2022-ஏப்ரலில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு மக்ரோன் தரப்பினருக்கு அதிக நல்வாய்ப்புக்களை உருவாக்கி உள்ளது. மக்ரோன் தனது பிரச்சாரத்திற்கான உத்தியாக நியூ கலிடோனியாவின் சுதந்திர வாக்கெடுப்பு களத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதுவே நிதர்சனமான பார்வையாகும். எனினும் நீண்ட காலப்போக்கில் மீளவும் நியூ கலிடோனியா தன் அமைதியை இழந்து போராட்டக்களமாக உருவாகும் நிலைமையையே வாக்கெடுப்பு முடிவுகளுக்கு பின்னரான நிகழ்வுகள் உறுதி செய்கிறது. அதிலும் சமகாலத்தில் சீனாவின் கரிசனையும் நியூ கலிடோனியா மீது விழுந்துள்ளமை அதிக எச்சரிக்கயை ஏற்படுத்துகிறது. அவுஸ்ரேலியாவின் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிரான தளமாக நியூ கலிடோனியாவை சீனா தேர்வு செய்யவும் அதிக வாய்ப்புக்கள் காணப்படுகிறது. இத்தகு சூழலில் நியூ கலிடோனியா பிரான்ஸிலிருந்தான சுதந்திர கோரிக்கைகளை சீன ஆதரவுடன் மூர்க்கத்தனமாக முன்வைப்பதற்கான சூழல்களும் அவதானிக்கப்படுகிறது.
Comments
Post a Comment