இந்திய-ரஷ்சிய மூலோபாய நட்புறவை மீள உறுதி செய்கிறதா புடின்-மோடி சந்திப்பு? -ஐ.வி.மகாசேனன்-
கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளுக்குள் பழகி உலகம் ஓரளவு வழமையான இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. சர்வதேச அரசியல் பரப்பிலும் இயல்பு நிலை உருவாக்கங்களை அவதானிக்க முடிகிறது. கடந்த ஒரு வருட காலமாக காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டு அல்லது நேரலையாக மெய்நிகர் வழியில் சந்திப்புக்களை மேற்கொண்டு வந்த அரசியல் தலைவர்கள் மீளவும் நேரடியான சந்திப்புக்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். எனிலும் நேரடியான சந்திப்புக்கள் அதிகம் நெருக்கமான உறவுகளை பகிரும் நாடுகளிடையேயே முன்னிலைப்படுகின்றது. மாறாக, பதட்டமான உறவு தொடரும் நாடுகளிடையே தொடர்ச்சியாக மெய்நிகர் வழியிலான சந்திப்புக்களிற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் சந்திப்பை அடுத்து டிசம்பர்-8ஆம் திகதிகளில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸையும் நேரடியாக சந்தித்த ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர்-07ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை மெய்நிகர் முறையில் சந்தித்துள்ளார். இக்கட்டுரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரிடையிலான நேரடி சந்திப்பின் பின்னாலான உலக அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ரஷ்சியா உறவானது சித்தாந்தங்களை கடந்த நீண்ட வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்டதும் தந்திரோபாயமான உறவாவும் காணப்படுகிறது. சித்தாந்த ரீதியில் ரஷ்சியா மற்றும் சீனா நெருக்கமான உறவை பகிரும் நாடுகளாகும். அதேவேளை பனிப்போருக்கு பின்பான ஒற்றைமைய அரசியலிலும் குறிப்பாக சமீபத்திய பூகோள அரசியலில் அமெரிக்கா மற்றும் இந்தியா நெருங்கிய மூலோபாய பங்காளிகளாக உள்ளனர். மாறாக சீனா-இந்தியா உறவும், அமெரிக்கா-ரஷ்சியா உறவும் அதிகம் பகைமைகளை பகிருகின்றன. இவ்குழப்பமான தொடரிலேயே இந்தியா மற்றும் ரஷ்சியா நாட்டின் தலைவர்களுக்கிடையிலான 21வது மாநாடு கடந்த டிசம்பர்-06ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது. உலக நாடுகளின்; தலைவர்கள் பரந்துபட்ட அளவில் கலந்து கொண்ட ஜி-20 மாநாடு மற்றும் கிளாஸ்கோ மாநாடுகளில் நேரடி பிரசன்னத்தை தவிர்த்துக்கொண்ட புடின், கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னரான தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவை வகுத்துள்ளமை இந்திய-ரஷ்சியா உறவின் மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையே உறுதி செய்கிறது. மேலும் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு முதல் நாள் டிசம்பர்-05ஆம் திகதி இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான சந்திப்பும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷ்சியா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்யும் '2102' பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னராக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அபரிவித எழுச்சி மற்றும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி எழுந்துள்ள பூகோள அரசியல் போட்டியில் உலகம் பல அடிப்படை மாற்றங்களைக் கண்டு வருகின்றது மற்றும் பல்வேறு வகையான புவிசார் அரசியல் சமன்பாடுகள் தோன்றுகின்றது. இத்தகு மாற்றத்துக்கான சூழலில் நீண்டகால மூலோபாய கூட்டாண்மை கொண்டுள்ள இந்தியா-ரஷ்சியா நாடுகளுக்கிடையிலான மாநாட்டில் உரையாடப்பட்ட விடயங்களை அவதானித்தல் அவசியமாகும்.
ஒன்று, அமெரிக்க-இந்திய நெருக்கம் இந்தியா-ரஷ்சியா உறவின் அச்சுறுத்தல் என்ற எண்ணங்களை சிதைத்துள்ளது. இரு நாட்டு தலைவர்களும் தங்களது கூட்டாண்மை முக்கியத்துவம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள். புடின்-மோடி சந்திப்பில் மோடி தமது நாடுகளுக்கிடையிலான உறவை விளிக்கையில், 'எங்கள் இரு நாடுகளும் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. நாங்கள் ஒத்துழைப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் உணர்திறனையும் மனதில் வைத்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார். அவ்வாறே புடின், 'இந்தியாவை ஒரு பெரிய சக்தியாகவும், நட்பு தேசமாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் நாங்கள் உணர்கிறோம். நமது நாடுகளுக்கிடையேயான உறவுகள் வளர்ந்து வருகின்றன. நான் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்.' என நட்புப்பாராட்டியுள்ளார்.
இரண்டு, ரஷ்சியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள எஸ்-400 ஏவுகணைகள் கொள்முதல் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலுக்கு இந்தியா தனது எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளது. எஸ்-400 குறித்து, இந்திய வெளியுறவுச் செயலாளர், 'எஸ்-400 என்பது 2018ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு மரபு ஒப்பந்தமாகும். அது தொடர்பான விநியோகங்கள் தொடங்கியுள்ளன. தொடர்ந்து நடக்கும். நாங்கள் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம், மற்றவர்களின் வெளிச்சத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.' எனத்தெரிவித்துள்ளார். அவ்வாறே ரஷ்சிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர் சந்திப்பில், 'எஸ்-400 வெறும் குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை. இது இந்திய பாதுகாப்புத் திறனுக்கு முக்கியமான நடைமுறை அர்த்தத்தைக் கொண்டுள்ளது. நிலைமை அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.' எனக்குறிப்பிட்டுள்ளார். ரஷ்சியா, எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் மீதான அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா நலனை சுட்டிக்காட்டி கண்டனம் செய்துள்ளமையானது இராஜதந்திர வெளிப்பாடாக அமைகிறது.
மூன்று, சீனா-ரஷ்சியா உறவு தொடர்பில் அமெரிக்க தரப்பால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட எச்சரிக்கை பிரச்சாரங்களை இருநாட்டுக்குமிடையில மேற்கொள்ளப்பட்ட இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் தகர்த்துள்ளது. இது தொடர்ச்சியாக இந்தியாவின் பாதுகாப்பு துறையின் ஆக்கபூர்வமான பங்காளி நாடு ரஷ்சியா என்பது மீளவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு சமாந்தரமாக இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான சந்திப்பும் (டிசம்பர்-06) நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில், உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஒரு தயாரிப்பு ஆலையில் 6 இலட்சத்துக்கும் அதிகமான ஏகே-47 ரக துப்பாக்கிகளை கூட்டு தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். சுமார் 5,000கோடி ரூபாய் செலவில் இந்திய இராணுவத்தினருக்காக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். இராணுவம் மற்றும் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்சியா இடையேயான அரசு ஆணையத்தின் (ஐசுஐபுஊ-ஆரூஆவுஊ) 20வது கூட்டத்தில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
நான்கு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேறியதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் எழுச்சியுற்றுள்ள தலிபான்களின் ஆட்சியை முதலில் அங்கீகரித்த தேசங்களில் ஒன்றாக ரஷ்சியா காணப்படுகின்றது. எனினும் இஸ்லாமிய அடிப்படைவாத தலிபான்களின் ஆட்சி தொடர்பில் இந்துத்துவ அடிப்படைவாத ஆட்சி புரியும் இந்தியாவின் பாரதீய ஜனதா அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவ்விடயம் புடின்-மோடி சந்திப்பில் முதன்மை பெற்றுக்காணப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் சூழ்நிலை, குறிப்பாக பாதுகாப்பு நிலைமை மற்றும் பிராந்தியத்தில் அதன் தாக்கங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களிடையேயும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் கூட்டறிக்கையில் சுமுகமாக, தலைவர்கள் அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானுக்கு வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர். அதே நேரத்தில் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மரியாதை மற்றும் அதன் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது. தற்போதைய மனிதாபிமான நிலைமை குறித்தும் அவர்கள் விவாதித்து, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்தனர்.
கானா நாட்டு இராஜதந்திரியான கோஜோ டெப்ரா மாநாட்டு இராஜதந்திரம் பற்றி குறிப்பிடுகையில், 'வானொலி மக்கள் எல்லா தீமைகளையும் கேட்க உதவுகிறது. தொலைக்காட்சி அவர்கள் எல்லா தீமைகளையும் பார்க்க உதவுகிறது. மேலும் ஜெட் விமானம் அவர்கள் வெளியேறி எல்லா தீமைகளையும் செய்ய உதவுகிறது' எனச்சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு தீமை என்பது பிறரையே சாருகிறது. குறித்த தேசத்துக்கு தேசிய நலனாகவே அமைகிறது. அவ்வாறான இராஜதந்திரத்தில் தனது தேர்ச்சியை மீளவுமொரு தடவை ரஷ்சிய-இந்தியா 2021ஆம் ஆண்டு உச்சி மாநாட்டில் புடின் உறுதி செய்துள்ளார். குறித்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்புடன் ரஷ்சியாவின் எதிர்பார்ப்புக்களே அதிகம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய-அமெரிக்கா பங்காளித்துவத்தை தாண்டிய நெருக்கம் இந்திய-ரஷ்சிய உறவில் காணப்படுகின்றது என்ற செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. இது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் சி.ராஜா மோகன் குறிப்பிடுவதைப் போன்று, 'வாஷிங்டனுடன் நட்பாக இருப்பது புதுடில்லி மாஸ்கோவுடன் முக்கியமான உறவுகளைப் பேண முடியாது என்று அர்த்தமல்ல. இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் உறவை உறுதியாக நிலைநிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளன. மற்ற உலகங்கள் விரும்பாத சமயங்களில் ஒருவருக்கொருவர் நிலைத்து நிற்கின்றன. தலைமைகளை மாற்றினாலும், பெரும்பாலும் நிலையான வெளியுறவுக் கொள்கைகளைப் பேணுகின்றன.' என்பதுவே மீளவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment