இந்தியாவுடனான பகைமைப் போக்கு ஈழத் தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு ஆரோக்கியமானதா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்களின் சிவில் சமூகப்பரப்பில் தமிழ்த்தேசிய இனத்தின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் விரிவான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மறுபுறத்தில் குறித்த வெளியுறவுக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய ஈழத்தமிழரசியல் தரப்பின் செயற்பாடுகள் சிவில் சமூகத்தரப்பின முயற்சியையும், வெளியுறவுக்கொள்கை உருவாக்கத்தையும் மலினப்படுத்தும் வகையில் காணப்படுகிறது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் அண்மைக்கால இந்திய எதிர்ப்பு போக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் பாதையை முடக்கக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுகிறது. இது ஈழத்தமிழரசியல் தரப்பின் ஈழத்தமிழர் நலன் மீது கரிசணையற்ற நிலைப்பாடுகளையே உறுதி செய்கிறது. இக்கட்டுரையும் இதனை மையப்படுத்தியே தேசிய இனங்களின் உரிமை போராட்டங்களில் பிராந்திய, பூகோள வல்லரசுகளின் வகிபாக வரலாற்றை சர்வதேச அனுபவத்தில் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்(2021) முன்னரைப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்திப்பதற்கான அழைப்பை இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் முயற்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் விடுக்கப்பட்டது. குறித்த அழைப்பை  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மலினமான கதைகளை கூறி ஒத்தி வைக்க கோரியிருந்தார். சம்பந்தன் வெளிப்படுத்திய காரணங்கள் குறித்த சந்திப்பை அவர் உதாசீனம் செய்கின்றார் என்பதையே உறுதி செய்கிறது. மேலும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் யாழ்ப்பாணத்தில் டிசம்பர-11(2021)அன்று தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில், 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தினூடாக இலங்கைத்தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்ட 13ஆம் சீர்திருத்தத்தை முழுமையாக நிராகரித்ததுடன் இந்தியாவுடன் இணைந்து பயணிப்பது பயனற்றது என்று சாரப்பட கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் இந்தியாவை உதாசீனம் செய்யும் நிலைப்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை மேற்கின் மீது அதீத ஈடுபாட்டை காட்டி வருகின்றமையையும் அவதானிக்க முடிகிறது. மறுபுறமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளும் மற்றும் தமிழ்க்கட்சிகள் ஒன்றினைந்து இந்தியாவிடம், 13ஆம் சீர்திருத்தத்தை முழுமையான தீர்வாக கருதாத போதும் ஆரம்பப்புள்ளியாக அதனை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் முன்வைக்க இந்தியாவினை கோரும் முயற்சிகளில் இறங்கியுள்ளளர். மேலும், இன்னொருமுனையில் தமிழ்த்தேசிய இனத்திற்கான வெளியுறவுக்கொள்கை உருவாக்கத்தை முதன்மைப்படுத்தும் சிவில் சமூகத்தரப்பிலும் இந்தியாவுடனான ஈழத்தமிழர் உறவை அரசியல் தரப்பிடையே பிணைக்கும் முயற்சிகளை முன்னகர்த்தி வருகின்றார்.

இந்நிலையில், ஈழத்தமிழர் உரிமைக்காக போராடும் தேசிய இனமாக தம் நலனை நிறைவேற்றி கொள்ள எவ்வகையிலான வெளியுறவுக்கொள்கையை திட்டமிடுவது ஆரோக்கியமானது என்பதில் குழப்ப நிலையில் உள்ளார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழரசுக்கட்சியின் ஒரு சில உறுப்பினர்ளின் எண்ணங்களை போன்று பிராந்திய வல்லராகிய இந்தியாவை தவிர்த்து பூகோள வல்லரசாகிய அமெரிக்கா சார்ந்து வெளியுறவுக்கொள்கையை திட்டமிடுவதா? அல்லது தமிழ்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக தரப்பினர் முன்னெடுக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவை கையாளும் வகையில் வெளியுறவுக்கொள்கையை உருவாக்குவதா? என்பதை சர்வதேசரீதியிலான தேசிய இனங்களின் உரிமைப்போராட்டங்களுடன் நுணுக்கமாக அவதானிப்பது சிறப்பானதாகும்.

முதலாவது, சர்வதேசரீதியில் கடந்த காலங்களில் சுதந்திரம் பெற்ற பல தேசிய இனங்களின் உரிமைப்போராட்டங்களில் பிராந்திய அரசுகளின் தலையீடுகளே கனதியான இடத்தை பெற்றுள்ளது.

ஒன்று, கிழக்கு தீமோர். கிழக்குதீமோரின் விடுலைப்போராட்டத்தில் பங்குபற்றிய விடுதலை வீரர்களின் எண்ணிக்கையும் அதற்கான காலப்பகுதியும் மிகக்குறைவானது. எனினும் அங்கு இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான ஆதரவை முதன்மையாக, பிராந்திய அரசான அவுஸ்ரேலியாவே வழங்கி இருந்தது. பொதுவாக்கெடுப்பில் கிழக்கு தீமோர் சுதந்திரத்தை கோரியிருந்தபோதிலும் இந்தோனேசியா அதனை வழங்க மறுக்கையில், அவுஸ்ரேலியா தனது படைவீரர்களை களமிறக்கி கிழக்கு தீமோரின் வெற்றியை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய அரசின் நலன் தேசிய இனங்களின் விடுதலை போராட்டத்தில் ஒருங்கிணைவதை வெளிப்படுத்துகிறது.

இரண்டு, பங்களாதேஷ் பிரிவினை. 1970களில் பாகிஸ்தானின் நிலப்பரப்புக்குள் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களதேஷ் பிரிவினை கோரிக்கையை முன்வைத்ததது. பங்களாதேஷின் பிரிவினை கோரிக்கைக்கு பிராந்திய அரசாகிய இந்தியா தனது ஆதரவை வழங்கி 1971இல் பங்களாதேஷிற்கான விடுதலையை பெற்று கொடுத்தது. குறித்த காலப்பகுதி பனிப்போர்க்காலமாகவும் உலகம் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் இருதுருவ உலக ஒழுங்கிற்குள் காணப்பட்டது. இந்தியா சோவியத் ஒன்றியசார் அரசாகவும்; பாகிஸ்தானிற்கான ஆதரவை அமெரிக்கா வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் பிராந்திய அரசின் அதிகாத்தோடு பூகோள அரசால் வலுவான போட்டியை வழங்க முடியவில்லை என்பதையே பங்களாமேஷ் பிரிவினை உறுதி செய்கிறது.

மூன்று, பின்லாந்து அரசியல் இருப்பும் பிராந்திய அரசாகிய ரஷ்சியாவின் கரிசணையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. பின்ஷ் மக்கள் தம் இருப்பு சார்ந்து பிராந்திய அரசுடனான உறவில் தெளிவான பார்வையை கொண்டுள்ளார்கள். ரஷ்சியாவிலிருந்து 1917ஆம் ஆண்டு பின்லாந்து விடுதலை பெற்றது. நூற்றாண்டு கடந்துள்ள சுதந்திர பயணத்தில், 1939 மற்றும் 1944க்கு இடையில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக இரண்டு போர்களை நடத்தி இருந்தது. அதன் விளைவாக பிரதேசத்தையும் இழந்தது. இவ்அனுபவங்களை கொண்டு பிராந்திய அரசுடனான உறவுகளை சுமுகமாக கட்டமைப்பதினை மையப்படுத்தியே பின்லாந்து தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கி செயற்பட்டு வருகிறது. பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட நேட்டோவில் பின்லாந்து இணைவது தொடர்பாக உரையாடல்கள் வந்தாலும் தொடர்ச்சியாக பின்ஷ் மக்கள் அதனை புறக்கணித்து வருகின்றார்கள். 2017ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பில் 21மூ பின்ஸ் மட்டுமே நேட்டோவில் இணைவதை ஆதரிப்பதாகவும், 51மூ பேர் எதிர்க்கிறார்கள் என்றும்  கண்டறியப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமாக அதன் சக்திவாய்ந்த பிராந்திய அரசிடமிருந்து சுதந்திரத்தை பராமரித்து வருகின்றமை என்பது பின்லாந்தின் நேர்த்தியான சமநிலை பிராந்திய புவி அரசியல் வெளியுறவுக்கொள்கையின் பயனாகவே  அமைகிறது.

இரண்டாவது, பிராந்திய வல்லரசு சக்தியின் பகைமையால் விடுதலையில் கடும் நெருக்கடிகளை இன்று வரை அனுபவிக்கும் அரசுகளுக்கும் சர்வதேச அரசியல் வெளியில் நிறைந்து காணப்படுகிறது.

ஒன்று, தைவான் விவகாரம். தைவான் நிலப்பரப்புக்கான உரிமைக்கோரிக்கையை பிராந்திய வல்லரசான சீனா கோரி வரும் நிலையில் அதன் சுதந்திரம் இழுபறிக்குள்ளேயே காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தைவானுக்கு ஆதரவான கருத்துக்களையும், இராணுவ ஆயுத உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும் பிராந்திய அரசின் அதிகாரத்தை மிஞ்ச இயலாத நிலையே காணப்படுகின்றது. தைவானில் சமகாலத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை பற்றி கருத்து வெளியிட்ட தைவான் வெளிவிவகார அமைச்சரும் 2025ஆம் ஆண்டுக்குள் தைவானை சீனா தனதாக்கிடும் எனும் ஆருடத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டு, திபெத் விவகாரம். திபெத் அமைந்துள்ள ஆசியப்பரப்பில் பிராந்திய வல்லரசாக சீனா தனது நிலையை உறுதிப்படுத்தி வருகிறது. எனவே திபெத்திற்கு இந்தியாவின் ஆதரவு காணப்படுகின்ற போதிலும் சீனாவின் பிராந்திய பகைமை அதன் சுதந்திரத்திற்கு சவாலானதாகவே காணப்படுகின்றது. அண்மையில் தமித்தேசியத்தின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது மெய்நிகர் வழியிலான கருத்தரங்கொன்றிலும் பிராந்திய வல்லரசாகிய சீனாவின் பகைமை திபெத்தின் விடுதலையை முழுமையாக நீக்கியுள்ளதென குறிப்பிட்டிருந்தார்.

மூன்று, பிராந்திய அரசுடனான பகைமையுடன் தனது போராட்டத்தில் வெற்றி பெற்ற அரசாக கியூபா புரட்சி சிலாகிக்கப்படுவதுண்டு. அது மறுக்க முடியாத வெற்றியாகவே காணப்படுகிறது. எனினும் சமகாத்தில் அதன் இருப்புசார் கேள்வி பிராந்திய பகைமை ஆரோக்கியமற்றது என்ற எண்ணத்திற்கான முன்னுதாரணமாகவே அமைகின்றது. பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா போன்ற உன்னத ஆளுமைமைகளின் திறனே பிராந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி கியூபா அரசின் வெற்றி இருப்பை உறுதி செய்தது. எனினும் பிடல் காஸ்ட்ரோவின் முதுமையின் பின் ஆட்சியிலேறிய பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூப புரட்சியில் முக்கிய இடம் வகித்த ராவுல் காஸ்ட்ரோ காலத்திலேயே அமெரிக்காவுடன் கைகுலுக்க வேண்டிய சூழல் கியூபாவிற்கு ஏற்பட்டது. இன்று அந்நிலை வேகமாக அதிகரித்து செல்வதை அவதானிக்கக்கூடிதாகவும் உள்ளது. புரட்சியில் பங்குபெற்றாத புதிய தலைமுறையின் ஆட்சி கியூபாவில் ஏற்பட்ட பின்னர், கியூபா பிராந்திய அரசுடன் தொடர்ச்சியான பகைமைக்குள் பயணிப்பது கடினமென்ற உரையாடல் முன்வைக்கப்படுகிறது.

மூன்றாவது, விடுதலை பெற்ற தேசிய இனங்களின் போராட்டங்கள் சில பூகோள வல்லரசின் நேரடியான தலையீட்டிலும் விடுதலை பெற்றுள்ளன. இதன் சூழமைவு அறிதலும் அவசியமாகிறது.

ஒன்று, இஸ்ரேலின் உருவாக்கம் மேற்காசிய பிராந்தியம் முழுமையாக பகைமையாக காணப்பட்ட போதிலும் பூகோள வல்லசு சக்தியான பிரித்தானியாவின் தலையீட்டால் நிறைவேற்றப்பட்டது. எனினும் இங்கு இஸ்ரேல் உருவாக்கம் இடம்பெற்ற 1948ஆம் ஆண்டு சூழலில் மேற்காசியாவில் பலமான பிராந்திய அரசு காணப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  மேற்காசிய அரசுகள் தமக்குள் மோதிக்கொள்ளும் நிலையே காணப்பட்டது. மேலும், யூதர்கள் பலமான புலம்பெயர் கட்டமைப்பை கொண்டிருந்தார்கள். மேற்கின் அதிகாரபீடங்களில் யூதர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இவ்வாறான சூழமைவே பகைமை பிராந்தியத்துக்குள் பூகோள வல்லரசின் ஆதரவுடன் யூதர்களால் இஸ்ரேலை உருவாக்க முடிந்தது. 

இரண்டாவது, ஐரீஸ் விடுதலை போராட்டம். இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தின் விடுதலை போராட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு காணப்பட்டது. அயர்லாந்தின் விடுதலைக்கு பிராந்திய அரசை தாண்டி அமெரிக்காவின் ஆதரவு காணப்பட்டதென்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், தென்னாசிய மரபிலிருந்து இங்கிலாந்தின் அரசியல் கலாசாரம் மாறுபட்டது.  இங்கிலாந்து தன்னை வெளிக்காட்டும் ஜென்டில்மான் தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ள அயர்லாந்து விடுதலையை உறுதி செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. மேலும், ஐரீஸின் புலம்பெயர்கட்டமைப்பும் சர்வதேச தளத்தில் உறுதியானதாக காணப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் 46 அமெரிக்க அதிபர்களில் 23 பேர் ஐரீஸ் பாரம்பரியத்தை உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, சர்வதேசரீதியாக காணப்படும் தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டங்களின் வெற்றி தோல்வி அனுபவங்கள் பிராந்திய வல்லரசு சக்தியின் அவசியத்தையே வலியுறுத்துகிறது. அதிலும் ஈழத்தமிழர்களின் பிராந்திய சக்திவாய்ந்த அரசாகிய இந்தியா சமகாலத்தில் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தினடிப்படையில் தனது பலத்தை அதிகரித்துள்ளது. அதாவது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா, பூகோள அரசியல் போட்டி களத்தில் பிராந்திய சக்தியாக தன்நிலையை பலப்படுத்தியுள்ளது. 21ஆம் நூற்றாண்டு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம்பெறும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய உலக ஒழுங்கிற்கு, உலக அதிகாரத்தை பேணமுயலும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் பங்களிப்பும் பங்காளித்துவமும் அவசியமாகிறது. அதேநேரம் இந்து சமுத்திரத்தில் குறிப்பாக தீவுகளில் அதிகரித்துவரும் சீனாவின் தலையீட்டை சீர்செய்யவும் இந்தியா கடுமையாக போராடி வருகின்றது. இலங்கை விடயத்தில் இலங்கை தேசிய இனப்பிரச்சினையூடாகவே தனது தேசிய நலனை அடைந்துகொள்ள இந்தியா முயற்சிக்கும். எனவே இந்தியாவின் ஈடுபாட்டை மிஞ்சி இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் மேற்கின் தலையீட்டை எதிர்பார்க்க இயலாத சூழலே காணப்படுகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் தமக்கான வெளியுறவுக்கொள்கைகளை வகுத்து கையாள தவறிவிட்டு இந்தியா பயன்படுத்தி சென்றுவிட்டுவதென புலம்புவதும் ஈழத்தமிழரசியலுக்கு ஆரோக்கியமான அரசியலாக அமையாது. ஈழத்தமிழரசியல் தரப்பு தமக்கான சீரான வெளியுறவுக்கொள்கையை வகுத்து பிராந்திய சர்வதேச அரசுகளை கையாள்வதே ஈழத்தமிழரசியலுக்கு ஆரோக்கியமான முன்னேற்றங்களை தரக்கூடியதாகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-