அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான உரையாடல் உலக அதிகாரத்தை தக்கவைக்க உதவுமா? -ஐ.வி.மகாசேனன்-

பனிப்போருக்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவால் பேணப்பட்டு வந்த ஒற்றைமைய அரசியலின் முடி கொரோனா பெருந்தொற்றின் அரசியல் தாக்கங்களுக்கு பின் தளம்பல்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் வர்த்தக போரை நிகழ்த்திய சீனா பைடனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் உலக அதிகாரத்திற்கு எதிராகவே நேரடியாக சவால் விடும் நிலைக்கு பரிணாமம் அடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் உலக அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக வேறுபட்ட புதிய இராஜதந்திர பொறிமுறைகளை பரீட்சித்து வருகின்றது. அவ்வாறானதொரு பரீட்சார்த்த இராஜதந்திர முயற்சியாகவே ஜனநாயக நாடுகளுக்கான மாநாட்டு அழைப்பும் அமைகிறது. எனினும் இம்முயற்சி அமெரிக்காவின் வல்லரசு அரசியலிலும், சர்வதேச வெளியிலும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான மகாநாடு தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்(2021) 9-10ஆம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் அழைப்புடன் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாடு ஒன்றை மெய்நிகர் வழியில் ஒழுங்கமைத்துள்ளனர். இம்மாநாடு 'ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தும் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனிநபர் மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் ஆகிய இரண்டையும் தலைவர்களுக்கு அறிவிக்க ஒரு தளத்தை வழங்கும்' என்று பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுதலையாய் உலக அரசியல் செயற்பாடுகளிலும் ஜனநாயகம் பற்றிய விழிப்புணர்வு சமகாலத்தில் அவசியப்படுவதாகவே அரசியல் ஆய்வாளர்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது. சமகாலத்தில் ஜனநாயகம் கடுமையான சவாலுக்குட்பட்டே பயணிக்கிறத. உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ்(White House) உலக சுதந்திர நிலை குறித்த இந்த ஆண்டு அறிக்கையை 'முற்றுகையின் கீழ் ஜனநாயகம்' என்று குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய சமநிலை சர்வாதிகாரத்திற்கு ஆதரவாக மாறியுள்ளதெனப்பதிவு செய்கிறது. குறிப்பாக, பனிப்போரின் அழிந்துபோன நினைவுச்சின்னங்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட இராணுவப் புரட்சிகள் பல இந்த ஆண்டு மியான்மர், சூடான் மற்றும் கினியா போன்ற நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்புகளுடன் மீண்டும் வலுக்கின்றன. 

ஜனநாயகம் அழிவுப்பாதையில் செல்லும் சூழலில் ஜனநாயகம்சார் விழிப்புநிலை காலத்தின் தேவையாகவே அமைகிறது. எனினும் தற்போதைய குழப்பகரமான உலக ஒழுங்கில் அமெரிக்க ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தி மகாநாட்டை ஒழுங்கமைப்பது இதய சுத்தியுடன் ஜனநாயக பாதுகாப்பை உறுதி செய்யுமா என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்துள்ளது. அதற்கான காரணங்களை அவதானித்தல் அவசியமாகிறது.

ஒன்று, அமெரிக்கா நீண்ட காலமாக தனது உலக அதிகாரத்தை உறுதிப்படுத்த தனக்கு இசைவாக ஜனநாயகத்தை கையாண்டு வந்துள்ளது. பனிப்போர் மற்றும் பனிப்போருக்கு பின்னரான காலப்பகுதிகளிலும் அமெரிக்கா தனது அதிகாரத்தை நிலைநாட்ட அதிகம் ஜனநாயகம் என்பதையே முன்னிறுத்தி செயற்பட்டு வந்துள்ளது. அதாவது தனது எதிர் நாடுகளை வீழ்த்துவதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் அதிகம் ஜனநாயகத்தையே ஆயுதமாக கொண்டிருந்தது. மாறாக தனது பங்காளி நாடுகள் ஜனநாயகத்தை மறுதலிக்கின்ற போதிலும் அவர்களை ஆதரித்து செயற்பட்டு வந்தனர். இந்நிலையிலேயே, தற்போது குழப்பமடைந்துள்ள உலக ஒழுங்கில் அமெரிக்காவின் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு சீனா மறுதலிக்கும் ஜனநாயகத்தை கொண்டு அமெரிக்கா பலமான கூட்டொன்றை உருவாக்கும் வியூகத்தில் களமிறங்கியுள்ளது என்ற அவதானிப்பும் அரசியல் வெளியில் காணப்படுகிறது. ஜனநாயக ஆட்சியற்ற சவுதி அரேபியா போன்ற தனது பங்காளி நாடுகளுக்கு அழைப்பு விட்டிருக்கவில்லை என்பது முன்னேற்றகரமாக அமைகின்ற போதிலும் இஸ்ரேலை அழைத்துள்ளமை அதன் ஜனநாயக மறுதலிப்பு செயற்பாடுகளுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை எவ்வித விமர்சனங்களையும் வெளிப்படுத்தியதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். எனவே அமெரிக்கா தனது பங்காளிகளின் ஜனநாயக மறுதலிப்புக்களை தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ஜனநாயகம் சார்நத விழிப்புணர்வை எவ்வகையில் அமெரிக்கா வழிநடத்தும் என்பது எதிர்மறை விமர்சன பார்வையாகவே காணப்படுகிறது.

இரண்டு, உலக ஒழுங்கில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் கூட்டிணைவினூடாகவே உலக அரசியலில் ஜனநாயகம் போன்ற சித்தாந்தங்களை பாதுகாக்க முடியும். ஒரு சக்தி மாத்திரம் தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான உத்தியாக ஜனநாயத்தை பயன்படுத்த முற்படுமாயின் மறு சக்தி நிச்சமாக ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகாரத்தை பலப்படுத்துவதற்கான முயற்சியே மேற்கொள்ளும். அமெரிக்கா ஒழுங்கமைத்துள்ள ஜனநாயக உச்சி மகாநாட்டில் தைவானிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு சீனாவின் விரோதத்தை அதிகரிக்கும் செயலாகவே காணப்படுகிறது. சீனா தொடர்ச்சியாக தைவானை தனது நிலப்பரப்பாகவே பிரகடனப்படுத்தி வருகிறது. அத்துடன் அண்மைய நாட்களில் தென்சீனக்கடலின் தைவான் நீரிணையில் சீனாவின் கடற்படை பிரசன்ன அதிகரிப்பும், அதற்கு எதிராக தைவான் சார்பான அமெரிக்காவின் கருத்துக்களும் சர்வதேச அரசியல் பரப்பில் பெரும் போருக்கான முன்னாயர்த்தங்களை வெளிப்படுத்தியது. இத்தகைய கொதிநிலையிலேயே நவம்பர்-16 அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்குமிடையே முதல்முறையாக மெய்நிகர்வழியே சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தைவான் விவாகரமே முதன்மை நிலை பெற்றிருந்தது. எனினும் ஜின்பிங் கடுமையான எச்சரிக்கை தொனியில் அவ்விடயத்தை கையாண்டிருந்தார். அதாவது, 'தைவான் சுதந்திரம் தொடர்பில் பிரிவினைவாத சக்திகள் எங்களைத் தூண்டினால், எங்களை வற்புறுத்தினால் அல்லது சிவப்புக் கோட்டைத் தாண்டினால் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை' என்று மோதலின் மறைக்கப்படாத அச்சுறுத்தலில் கூறினார். இந்நிலையில் குறுகிய கால இடைவெளியில் சீனாவின் அறிவிப்புக்கு நேர்மாறாய் தைவானை தனியொரு அரசாக கையாண்டு ஜனநாயக மாநாட்டுக்கு அமெரிக்கா அழைப்பு விட்டுள்ளமை சீனா-அமெரிக்கா போட்டியையும் சீனாவின் கோபத்தையும் அதிகரிக்கும் செயலாகவே காணப்படுகிறது. இது வெளிப்படையாக ஜனநாயக மகாநாடு சீனாவின் அதிகாரப்போட்டிக்கு எதிரானது என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே அதிகாரப்போட்டியுடன் ஒருங்கிணைத்து ஜனநாயக பாதுகாப்பு என்பது சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது. 

மூன்று, சர்வதேச அரசியல் பார்வையில் விமர்சனங்களை தாண்டி, அமெரிக்க மாநிலங்களில் ஜனநாயகத்தை பேண முடியாத சூழலில் சர்வதேச பரப்பில் ஜனநாயகத்தை பேண அமெரிக்காவிற்கு இருக்கும் தகுதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பபப்படுகிறது. மார்ச் மாதத்தில், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது காலத்திற்குப் பிறகு, ஜனநாயக கண்காணிப்புக் குழுவான ஃப்ரீடம் ஹவுஸ் மேற்கொண்ட ஆய்வில் சிலி, கோஸ்டாரிகா மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள ஜனநாயகத்தை விட அமெரிக்காவின் ஜனநாயக நிலையை மிகவும் கீழே தரவரிசைப்படுத்தியது. அதற்கு காரணங்களாக, ஒரு கட்சி அல்லது வர்க்கத்திற்கு சாதகமான தேர்தல் தொகுதிகள்; அரசியலில் பணத்தின் செல்வாக்கு; மற்றும் நிற வேறுபாட்டின் அடிப்படையில் உரிமை மறுப்பு ஆகியன தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும் அவ்வாய்வு முடிவுகள் தொடர்பில் கருத்துரைத்த ஜனநாயக கண்காணிப்புக் குழுவின்  ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான துணைத் தலைவரான சாரா ரெபுசி 'ஜனாதிபதியை மாற்றுவதால் இந்த சிக்கல் போகப்போவதில்லை' என்றும் தெரிவித்திருந்தார். எனவே ஜனநாயக புறக்கணிப்பு அமெரிக்க அரசியல் இயந்திரத்தில் உறைந்துள்ளதாகவே அவரது காணப்படுகிறது. பைடன் பதவியேற்ற சில மாதங்களிலும் கூட அமெரிக்க ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கணிசமாக மங்கிவிட்டன. குடிமக்கள் வாக்களிப்பதை மிகவும் கடினமாக்கும் முப்பத்து மூன்று சட்டங்களை பத்தொன்பது மாநிலங்கள் இயற்றியுள்ளன. பல மாநிலங்கள் கட்சி சார்பற்ற தேர்தல் நிர்வாகிகளை பாகுபாடற்ற சித்தாந்தங்களுடன் மாற்றியுள்ளன. மற்றும் வட கரோலினா மற்றும் டெக்சாஸ் போன்ற ஜனநாயகக் கட்சியினரை நோக்கி நகரத் தொடங்கிய மாநிலங்களில் உள்ள குடியரசுக் கட்சி சட்டமன்றங்கள், குடியரசுக் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் வரைபடங்களை மறுவடிவமைத்து நிறவேறுபாட்டு உரிமைகள் திறம்பட மறுக்கப்பட்டு விட்டன. உள்ளூர் அரசியலில் இந்த இருண்ட பின்னணியில், பைடன் நிர்வாகம் டிசம்பர் தொடக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அழைப்பாளர்களுடன் ஜனநாயகத்திற்கான மெய்நிகர் உச்சிமகாநாட்டை நடத்துகின்றமை அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிகளில் விமர்சனத்தை உருவாக்குகிறது.

எனவே, பைடன் நிர்வாகத்தின் ஜனநாயகத்திற்கான மகாநாட்டு அழைப்பு முற்று முழுதாக சர்வதேச அரசியலில் மாறிவரும் உலக ஒழுங்கை தக்கவைப்பதற்கான கூட்டு உருவாக்க ஏற்பாடாகவே அமைகின்றது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேற்றம் மற்றும் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய புறக்கணிப்பு என்பன அமெரிக்காவுடனான கூட்டு தொடர்பில் உலக நாடுகளுக்கு சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பனிப்போர் மற்றும் பனிப்போருக்கு பின்னான ஒற்றை மைய உலக ஒழுங்கு காலப்பகுதியில் கொமன்வெல்த் நாடுகளின் மீது தனது ஆக்கிரமிப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்ள பயன்படுத்திய ஜனநாயக சித்தாந்தத்தை ஜனநாயகம் காலவதியாகி செல்லும் சூழலில் மீள அமெரிக்கா மென்அதிகாரமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. எனினும் இதன் வெற்றி என்பதும் கேள்விக்குரியதாகவே காணப்படுகிறது. சீனாவின் மென்அதிகாரம் என்பது நாடுகளின் உள்ளக விடயங்களில் நேரடி தலையீடற்ற அபிவிருத்தி செயற்பாடு என்ற அடிப்படையிலேயே அதன் வெற்றி சாத்தியமாகியது. எனினும் அமெரிக்கா மென் அதிகார பாணியிலும் சித்தாந்தங்களூடாக நாடுகளின் உள்ளக விடயங்களில் நேரடியாக தலையிட முயல்வது அமெரிக்காவின் மாறாக்கொள்கையே வெளிப்படுத்துகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-