ஈழத்தமிழரசியல் தரப்பு இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழரசியல் பரப்பில் அண்மைக்கால உரையாடல்களில் ஈழத்தமிழர்களுக்கான கட்டமைக்கப்பட்ட வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பொதுவெளியில் பல உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வினைத்திறனான செயற்பாடுகளில் பல ஆரோக்கியமான விடயங்கள் உரையாடப்படுகிறது. எனினும் வெளியுறவுக்கொள்கையை செயற்படுத்த வேண்டிய தமிழரசியல் தரப்பு அவ்ஆரோக்கியமான கருத்தாடல்களை உதாசீனம் செய்யும் நிலைமைகளே அதிகமாக காணப்படுகிறது. வெளியுறவுக்கொள்கை பற்றிய சிந்தனைகளுக்கு பெரிய அறிவு தேவையில்லையென ஆரோக்கியமான கருத்தாடல்களை உதறிதள்ளும் போக்கையே அரசியல் தலைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இக்கட்டுரையும் சீனா தொடர்பில் ஈழத்தமிழரசியல் தரப்பின் வெளியுறவுக்கொள்கையின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்கொங் மூன்று நாள் பயணமாக டிசம்பர்15-17 வடக்கிற்கு வருகை தந்திருந்தார். அவ்வருகையில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் வரலாற்று மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற போதிலும், வடக்கில் சீனாவின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்பட்டது. சில அபிவிருத்தி திட்டங்களூடாக அல்லது பொருளாதார முதலீடுகளூடாக சீனாவின் பிரசன்னம் வடக்கில் புலப்படுகின்ற போதெல்லம் வடக்கில் சீனா எதிர்ப்பு மனநிலை சார்ந்து பல எதிர்வினை கருத்துகள் மேலோங்கின. தற்போது சீன தூதுவரின் வருகை தொடர்பிலும் பல விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன. குறிப்பாக தமிழரசியலில் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியில் முக்கிய இரு அரசியல் தலைவர்கள் இருவேறுபட்ட முரண்நகையான கருத்துக்ககளை தெரிவித்துள்ளனர்.
ஒன்று, தமிழரசுக்கட்சியின் இணைச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சீனாவின் வடக்கு விஜயம் தொடர்பில் கடுமையான எதிர்வினையாற்றியிருந்தார். அதாவது, சீனர்களின் செல்வாக்கை வடக்கு, கிழக்கில் தாம் விரும்பவில்லை எனக்குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் இரு காரணங்களையும் முன்வைத்தார். அதில் ஒன்று, அரசியல் விடிவிற்காக ஈழத்தமிழர் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவிற்கு தெரியாது என்பதாகும். இரண்டு, இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசணையை தாம் உள்வாங்கியிருக்கின்றோம். அதுவும் இந்தியாவிற்கு மிக அண்மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தாம் விரும்பவில்லை. ஏனெனில் சீனா இந்தியாவின் நட்பு நாடு அல்ல எனவும் குப்பிட்டிருந்தார். எனவே சுமந்திரனின் கருத்து முழுமையான சீனா எதிர்ப்பு நிலையாகவே காணப்படுகிறது.
இரண்டு, தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் சீனத்தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் கருத்துரைக்கையில், சீனா ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுடன் பயணம் செய்யுமாயின் ஏற்கலாம் என்ற சாரப்பட கருத்துரைத்துள்ளார். அதாவது, 'இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் சமத்துவத்தின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது குறித்து சீனத் தரப்பினர் எதனையும் கூறவில்லை. வடக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்த சீனத் தூதுவரும் அங்கும் அவ்வாறான கருத்துக்களைக் கூறவில்லை. போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர். சீனத் தூதுவரின் வடக்குக்கான வருகையை நாம் எதிர்க்கவில்லை.' எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே சம்பந்தன் தீர்வு விடயத்தில் சீனா ஆரோக்கியமான பார்வை செலுத்தாலாமெனில் அனுசரிக்கலாம் என்பதையே வெளிப்படுத்துகின்றார்.
சீனத்தூதுவரின் வடக்கு விஜயம் தொடர்பில் ஒரு கட்சிக்குள்ளேயே இருவகையான வேறுபட்ட உரையாடல்கள் பொதுவெளியில் உலாவுவது ஈழத்தமிழர்களிடம் காணப்படும் வெளியுறவுக்கொள்கை தொடர்பிலான வறுமையையே தெளிவாக அடையாளப்படுத்துகிறது. வெளியுறவுக்கொள்கை என்பது தேசிய நலனை மையப்படுத்தி வடிவமைப்பதாகும். எனிலும் தமிழ்த்தரப்பில் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமது சுயநலன்களுக்கூடாக வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்க முற்படுவதன் சூழலே இவ்வகையான முரண்நகையான கருத்துக்களுக்கு வழிகோலுகிறது.
சீனத்தூதுவரின் வடக்குக்கான விஜயம் இலங்கையில் சீனாவின் இருப்பை பலப்படுத்துவதற்கு ஈழத்தமிழர்களின் ஆதரவுத்தளம் தேவை என்பதை சீனா உணர்ந்துள்ளதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சீனத்தூதுவர் வேட்டி அணிந்து சென்றதுடன் அர்ச்சனை பொருட்களை அங்கிருந்த மக்களுடன் பரிமாறி அவர்களுடன் உரையாடியமை சீனா ஈழத்தமிழர் சார்ந்து பார்வையை செலுத்த ஆரம்பித்துள்ளது என்ற செய்தியை வழங்குகின்றது. இவ்வாறான சூழலில் ஈழத்தமிழர் சீனா தொடர்பிலான வெளியுறவுக்கொள்கையை நுணுக்கமாக கையாள வேண்டி உள்ளது.
முதலாவது, இந்தியா ஈழத்தமிழர்களுகான அரசியல் பொருளாதார கலாசார ரீதியிலான தொடர்புடைய பிராந்திய அரசு ஆகும். அதுமட்டுமன்றி இந்து சமுத்திர பிராந்தியத்தில் பலமான அரசாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் அதனுடன் புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபடும் சீனாவுடன் உறவை திட்டமிடுவது சரியானதா என்ற வாதம் காணப்படுகிறது. மறுமுனையில் உலக ஆதிக்கத்தை தனதாக்கக்கூடிய நிலையில் சீனா வளர்ச்சியுறுகின்றது என்ற அடிப்படையில் சீனாவுடன் சீரான வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென்ற கருத்து நிலையும் பொதுவெளியில் விவாதப்பொருளாகி உள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர்களின் இரு முரண்நகையான உரையாடல்களும் இவ்இரு தளத்திலேயே காணப்படுகிறது. எனினும் தமிழரசியல் தரப்பு நீண்டகாலமாகவே அடிமை அல்லது பகைமை எனும் வெளியுறவுகளை நகர்த்தி வருவதனாலேயே இரு முரண்நகையான கருத்துக்கள் உலா வருகின்றது. தற்போது தமிழரசியல் தரப்பு விவேகமாக தமது பொறிமுறையை கையாள வேண்டி உள்ளது. அதுமட்டுமன்றி உலகளாவிய அரசியலும் தற்போது ஒரு ஸ்திரமற்ற சூழலியே காணப்படுகிறது. எனவே இச்சூழலில் ஒரு பக்கம் சாருவது எதிர்காலத்தில் ஸ்திரமான அரசியல் ஒழுங்கு உருவாகுகையில் ஆபத்தான விளைவுகளையும் உருவாக்கக்கூடியதாக காணப்படும். எனவே, பலமான சக்திகளிடையே சமநிலையை பேணுவதே ஈழத்தமிழரசியலுக்கு ஆரோக்கியமான ஓட்டமாக காணப்படும்.
வெளியுறவுக்கொள்கையில் சமநிலை பேணல் என்பதுவும் ஆரோக்கியமான விவேகமான நுட்பமாகவே காணப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் வெளியுறவுக்கொள்கையில் சமநிலையின் முக்கியத்துவத்தை பற்றி உரையாடுகையில், 'உலக ஒழுங்கில் அதிகாரம் மற்றும் சட்டபூர்வமான இரண்டு அம்சங்களுக்கிடையில் சமநிலையை ஏற்படுத்துவது அரசாட்சியின் சாராம்சம். தார்மீக பரிமாணம் இல்லாமல் அதிகாரத்தின் கணக்கீடுகள் ஒவ்வொரு கருத்து வேறுபாட்டையும் வலிமையின் சோதனையாக மாற்றும். சமநிலையைப் பற்றிய அக்கறையில்லாத தார்மீக பரிந்துரைகள் மறுபுறம் சிலுவைப் போர்களையோ அல்லது ஒரு இயலாமைக் கொள்கையைத் தூண்டும் சவால்களையோ நோக்கிச் செல்கின்றன. சர்வதேச ஒழுங்கின் ஒருங்கிணைப்புக்கே ஆபத்தை விளைவிக்கும் தீவிர அபாயங்கள்' எனக்குறிப்பிட்டுள்ளர். அரசற்ற உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைப்போராட்டம் இரு வலுவான சக்திகளின் நலன்களின் இடையே சிக்குப்படுகையில் இரு சக்திகளிடையே சமநிலையை பேணுவதே உரிமைக்கோஷத்தை உயிர்ப்புடன் பேண வழிவகுக்கும்.
இரண்டாவது, சீனா ஈழத்தமிழர்கள் மீதான பார்வையை தொடர்ச்சியாகவே ஒரே நிலையில் பேணுமென்று கருவதை ஏற்றுகட் கொள்ள முடியாது. கடந்த பல தசாப்தங்களாக தென்னிலங்கையுடன் இறுக்கமான பிணைப்பிலுள்ள சீனா 2021இல் வடக்கு தமிழர்கள் மீது பார்வையை செலுத்தவதே சீனாவின் நிலைப்பாட்டின் மாற்றத்தையே வெளிப்படுத்துகிறது. சீன தூதுவர் தனது வடக்கு பயணத்தின் இறுதி விஜயமாக மன்னாரில் இராமர் பால திட்டுக்களுக்கு சென்று திரும்புகையில் வடக்குக்கான விஜயம் தொடர்பிலான ஊடகவியலாளரின் கேள்விக்கு கருத்துரைக்கையில், 'இதுவே முடிவு, ஆனால் ஆரம்பமும் கூட' ( This is the End, but also the Beginning) என தெரிவித்திருந்தார். இராஜதந்திரிகளின் உரையாடல்கள் மற்றும் செயல்களை எளிதாக கடந்து செல்ல முடியாது. கனதியான செய்திகளை அவை வெளிப்படுத்துவதாகவே அமையக்கூடியது.
மூன்றாவது, சீனா தூதர் விஜயமும் செய்திக்குறிப்பும் ஈழத்தமிழர் மீதான சீனாவின் பார்வை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. எனவே இவற்றிலிருந்து சீனாவின் நலனுக்குள் ஈழத்தமிழர்களின் நலனை ஒருங்கிணைத்து ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது ஈழத்தமிழரசியலின் சீனா தொடர்பான வெளியுறவுக்கொள்கையிலும் அரசியல் தலைவர்களின் தந்திரோபாய நகர்வுகளிலுமேயே தங்கியுள்ளது. ஒரு அதிநவீன மற்றும் நுட்பமான சுவிஸ் அமெரிக்க யதார்த்தவாதியான அர்னால்ட் வுல் பர்ஸ் தேசிய நலனை ஈடேற்றும் வகையிலான அரசியல் தலைவரின் வெளியுறவுக்கொள்கையினை பற்றி குறிப்பிடுகையில், 'இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு முக்கிய தேசிய நலன் மற்றும் அதற்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான விளக்கம் ஒரு தார்மீக கேள்வியாகக் காணப்படுகிறது. சர்வதேச அரசியலில் உள்ளார்ந்ததாகக் கூறப்படும் அறநெறித் தேவைகளைக் குறிப்பிடுவதன் மூலம் இதற்கு பதிலளிக்க முடியாது. அதே நேரத்தில், தலைவர்கள் எப்போதும் ஒரு எளிய சூத்திரத்தைப் பின்பற்ற முடியாது. வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களின் நெறிமுறைகளைத் தீர்மானிப்பதில் சிறந்தவராக காணப்படுபவர் சூழல் அனுமதிக்கும் சிறந்த தார்மீகத் தெரிவுகளை செய்தார்களா என்பதே தீர்மானிப்பதாக அமையுமென' குறிப்பிடுகிறார்.
எனவே, ஈழத்தமிழர்களின் அரசியல்போராட்டம் சீராக பயணிப்பதில் அரசியல்தலைவர்களின் வகிபாகமும் வெளியுறவுக்கொள்கை வடிவமைப்பும் செயற்பாடுகளும் பிரதான நிலை பெறுகிறது. இதனை உதாசீனப்படுத்தி ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் தத்தமது சுயநல தேவைகளுக்காகவும் தத்தமது கட்சி நலனுக்காவும் செயற்படுவார்களாயின் ஈழத்தமிழர் அநாதரவானவர்களாக செல்வதுடன் பிறசக்திகள் தத்தமது நலனுக்கேற்ப ஈழத்தமிழரை பயன்படுத்தி செல்லும் துயரமே தொடரக்கூடியதாக காணப்படும். எனவே, சிவில் சமூக தரப்பினரிடையே உரையாடப்படும் ஈழத்தமிழருக்கான வெளியுறவுக்கொள்கை பற்றிய கருத்தாடல்களை கிரகித்து ஈழத்தமிழருக்கான விவேகமான வெளியுறவுக்கொள்கையை கட்டமைத்து ஈழத்தமிழரசியல் தரப்பு பயணிப்பதுவே சமகாலத்தின் உடனடி தேவையாக காணப்படுகிறது.
சிறப்பு
ReplyDelete