உக்ரைனை மையப்படுத்தி மீள யுரேசிய அரசவியலில் ரஷ்சியா ஆதிக்கம் எழுச்சியடைகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

உக்ரைனை மையப்படுத்திய அரசியல் கொதிநிலை சமகாலத்தில் சர்வதேச அரசியலில் தலைப்பு செய்தியாக தொடர்கிறது. பனிப்போர்க்கால இருதுருவ உலக ஒழுங்கின் வல்லாதிக்க அரசுகளாகிய அமெரிக்கா மற்றும் ரஷ்சியா இடையே உக்ரைனை மையப்படுத்தி மீளவும் பனிப்போருக்கான களம் உருவாகியுள்ளது. எனினும் இப்பனிப்போர் சூழலில் முன்னர் அமெரிக்காவுக்கான படைத்தள ஆதரவை வழங்கிய நேட்டோ அதே வீச்சோடு ஆதரவு வழங்குமா என்பது சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. ரஷ்சியா மீதான பொருளாதார தடைகள் தொடர்பான அமெரிக்காவின் உரையாடல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவு சமிக்ஞைகளை அரைகுறையாக வெளிப்படுத்துகின்ற போதிலும், படைக்குவிப்பு தொடர்பான உரையாடல்களிலிருந்து பின்வாங்கும் நிலையினையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் ரஷ்சியா-உக்ரைன் போர்ப்பதட்டம் சர்வதேச அரசியல் பரப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையின் ரஷ்சிய நிலப்பரப்பில் இவ்வருட ஆரம்பத்திலிருந்தே ரஷ்சியா இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடர் நடவடிக்கை 2022இன் தொடக்கத்தில் முழு அளவிலான படையெடுப்புக்கான தயாரிப்பு என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மேற்கத்திய சக்திகள் ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்புத் தடைகளை விதிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக மேற்கு நாடுகளிடம் கோரி வருகிறார். மேலும், 'எந்தவொரு பிராந்தியத்திலும் ரஷ்சியாவின ஆக்கிரமிப்பு சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு சக்திவாய்ந்த தீவிரமான தடுப்புத் தடைகள் இருக்க வேண்டும். ஏனெனில் இது உக்ரைனைப் பற்றியது மட்டுமல்ல' என்று அவர் கூறியுள்ளார். இதனடிப்படையில், உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்சியாவின் தொடர்ச்சியான இராணுவக் கட்டமைப்பிற்கு மத்தியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்சியாவை மேலும் பகைமையின் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளன. இவ்வருடத்தில் தலா ஒருமுறை நேரடியாகவும், மெய்நிகர்வழியிலும், தொலைபேசி ஊடாகவும் கலந்துரையாடியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையில் உக்ரைன் விவகாரமே முதன்மை பெறலாயிற்று. எனினும் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எச்சரிக்கைகளை ரஷ்சியா உதாசீனம் செய்தே வருகிறது.

டிசம்பர் முதல் வாரங்களில் இடம்பெற்ற மெய்நிகர் வழியிலான இரு நாட்டு தலைவர்களிடையிலான சந்திப்பில் ரஷ்சியா உக்ரேனை ஆக்கிரமித்தால் 'பயங்கரமான விலை' கொடுக்கப்படும் என்று பைடன், புடினை எச்சரித்தார். எனிலும், நூற்றுக்கணக்கான ரஷ்சிய டாங்கிகள், ஹோவிட்சர்கள், சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை முன்னோக்கி அனுப்புவது திரும்பப் பெறப்படவில்லை. ஜனாதிபதிகள் பேசிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மோட்டார் பொருத்தப்பட்ட காலாட்படை பிரிவுகள் உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குர்ஸ்கிற்கு கிழக்கே உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டன என்று பிரிட்டனில் உள்ள  உலகளாவிய திறந்த மூல உளவுத்துறை நிறுவனமான ஜேன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும்,  உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்சியாவிற்கு அமெரிக்காவும் நேட்டோவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், 'நட்பற்ற நடவடிக்கைகளுக்கு கடுமையாக நடந்துகொள்ள' தனது நாட்டிற்கு 'எல்லா உரிமையும்' இருப்பதாக புடின் கூறியுள்ளார். அத்துடன் டிசம்பர்-17அன்று ரஷ்சியாவின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு முன்மொழிவின்படி, நேட்டோ மேலும் கிழக்கே விரிவடையாது மற்றும் உக்ரைனை இராணுவக் கூட்டணியில் சேர அனுமதிக்காது என்ற உறுதிமொழிகள் உட்பட அமெரிக்கா மற்றும் நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை புடின் கோரியுள்ளார். ரஷ்சியா ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக பொதுவெளியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் முதன்மையான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது. இந்நிலையில், ரஷ்சியாவின் இராஜதந்திர நகர்வாய் தேசிய நலனை மையப்படுத்திய பாதுகாப்பு உத்தரவாத கோரிக்கை அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளை ஆக்கிரமிப்பு சக்தியாக அடையாளப்படுத்தும் களத்தை திறந்துள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேட்டோவின் விரிவாக்கம் காரணமான ஐரோப்பாவின் தற்போதைய பதட்டங்களை புடின் குற்றம் சாட்டியுள்ளதுடன், ரஷ்சியா பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே, ரஷ்சியாவின் இவ்இராஜதந்திர நடவடிக்கை தொடர்;பில் நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.

ஒன்று, ரஷ்சியா ஐரோப்பிய நாடுகளை தனித்து கையாள ஆரம்பித்துள்ளது. உக்ரைன் விவகாரம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாத வரைபு தொடர்பில், டிசம்பர்-21(2021) அன்று ஜேர்மன் சான்சிலர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் புடின் நிலைமையை விவாதித்தார் என்று கிரெம்ளின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின் படி புடின் ரஷ்சியா, 'யூரேசிய விண்வெளி முழுவதும் சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்பை' எதிர்பார்க்கிறது என்று புடின் கூறினார். மேலும், தொடர்ச்சியாக அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தி ஐரோப்பாவை நம்பிக்கைக்குரியவர்களாய் குறிப்பிட்டிருந்தார். அதாவது 'அமெரிக்காவுடன் நீண்ட கால சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உத்தரவாதங்களை கூட நம்ப முடியாது. ஏனென்றால், அமெரிக்கா அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்தும் எளிதாக விலகுகிறது.  மற்றொன்று அவர்களுக்கு ஆர்வமற்றதாகிவிடும்.' என அமெரிக்காவின் போக்கை கடுமையாக சாடி யூரேசியா உறவின் தேவையை குறிப்பிட்டார். இது ஐரோப்பிய நாடுகளினை அமெரிக்கா கூட்டிலிருந்து பிளவுபடுத்தி தனித்து கையாள முனையும் உத்தியாகவே அவதானிக்கப்படுகிறது.

இரண்டு, அமெரிக்கா மற்றும் அதன் பாதுகாப்பு கூட்டாகிய நேட்டோ ரஷ்சியாவிற்கு எதிராக மத்திய ஆசியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதனூடாக மத்திய ஆசியா ரஷ்சியாவின் தேசிய நலன்சார்ந்த பிராந்தியமாகவும், அமெரிக்காவின் உலக ஆதிக்கம் சவாலுக்கு உட்படுவதையும் ரஷ்யா சுட்டிக்காட்டுகிறது. அதாவது மத்திய ஆசியாவில் ரஷ்சியாவின் அனுமதியின்றி அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னகர்த்த முடியாது என்ற எச்சரிக்கையை முன்னகர்த்தியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான உலக ஒழுங்கில் ரஷ்சியா முதன்முறையாக நேட்டோவின் மத்திய ஆசியாவில் இராணுவ குவிப்புக்களை தடுக்கும் வகையிலான முழுமையான கோரிக்கைகளை இந்த வாரம் அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. அதில், 1997க்குப் பிறகு அமெரிக்க கூட்டணிக்குள் நுழைந்த போலந்து, முன்னாள் சோவியத் நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, லாட்வியா மற்றும் பால்கன் நாடுகள் உட்பட கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய நாடுகளுக்கு நேட்டோ அனுப்பிய துருப்புக்கள் அல்லது ஆயுதங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன், கிழக்கு ஐரோப்பா, ஜார்ஜியா போன்ற காகசஸ் நாடுகளில் அல்லது மத்திய ஆசியாவில் ரஷ்சியாவின் முந்தைய ஒப்பந்தம் இல்லாமல் பயிற்சிகளை நடத்தக் கூடாது என்றும் ரஷ்சியா கோரியுள்ளது. இது அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கான நேரடி சவாலாகவே அமைகிறது.

மூன்று, உக்ரைனின் எல்லையில் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துக்கொண்டு ரஷ்சியா முன்னகர்த்தியுள்ள கோரிக்கை பனிப்போர்க்கால இராஜதந்திரங்களையே மீள காட்சிப்படுத்துகிறது. ரஷ்சியாவின் கருத்துக்களும் அதனையே உறுதி செய்கிறது. எட்டு அம்ச ஒப்பந்த வரைவு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட போது, 'அதன் நலன்களைப் புறக்கணிப்பது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்ற ஒரு இராணுவ பதிலுக்கு வழிவகுக்கும்' என்ற எச்சரிக்கையை ரஷ்சியா விடுத்துள்ளது. மேலும், மாஸ்கோவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் மெக்பால் நேட்டோ விரிவாக்கத்தால் வலிமைமிக்க ரஷ்சியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை.  நேட்டோ ரஷ்சியாவை ஒருபோதும் தாக்கவில்லை. புடின் தனது சமீபத்திய கட்டாய இராஜதந்திரத்தை நியாயப்படுத்த இந்த அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவதை மீண்டும் கண்டுபிடித்துள்ளார். தொடர்சியாக உக்ரைனில் இராணுவத் தலையீட்டை அதிகரிக்கலாம்' என்று ட்வீட் செய்துள்ளார்.

எனவே, உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி ரஷ்சியா மீள தனது ஆதிக்கத்தை மத்திய ஆசியாவில் யுரேசியா பகுதியில் உறுதிப்படுத்துவதற்கான இராஜதந்திர நகர்வுகளையே முதன்மைப்படுத்தி வருகின்றது. அமெரிக்கா சீனாவிற்கு எதிரான வல்லாதிக்க போட்டியை முதன்மைப்படுத்தி சமீபத்திய இராஜதந்திர நகர்வுகளை இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலே அதிகரித்து வருகிறது. அத்துடன் குவாட்-01,02 எனும் வடிவங்களில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய புதிய பாதுகாப்பு கூட்டுக்குள்ளையும் உருவாக்கி வருகிறது. இதனால் ஐரோப்பியநாடுகள் மற்றும் நேட்டோ கூட்டு தொடர்பான கரிசனைகள் ஒப்பீட்டளவில் குறைவடைந்து வருகிறது. ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தமும் அதனோர் சாட்சியமாகவே அமைகிறது. இவ்வாறான சூழ்நிலையை நுணுக்கமாக ஆராய்ந்துள்ள ரஷ்சியா ஐரோப்பாவுடன் நெருக்கத்தை பேணி ஐரோப்பாவை அமெரிக்கா கூட்டிலிருந்து தனித்துகையாளுவதுடன் யுரேசியாவில் மீள ரஷ்சியாவின் முதன்மையை உருவாக்குவதில் உக்ரைன் விவகாரத்தை தளமாக கொண்டு நுணுக்கமான இராஜதந்திர நகர்வுகளை நகர்த்தி வருகின்றது. சீனா மற்றும் ரஷ்சியாவின் நெருக்கடிக்குள் அமெரிக்கா தனது உலக வல்லரசு சக்தியை பாதுகாத்துக்கொள்ளுமா என்பது அதிக சந்தேகங்களையே உருவாக்கியுள்ளது. எனினும் அமெரிக்கா கடந்த கால வரலாற்று அனுபவங்களைகொண்டு அமெரிக்காவை எளிதில் இடைபோடுவதும் ஆரோக்கியமான மதிப்பாய்வாக அமையாது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-