தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைமையாவது தமிழ்த்தேசியத்துடன் பயணிக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
தமிழ்த்தேசியம் தனது உரிமைக்காக போராடிய செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் ஒழுங்கில், கட்சிகளுக்கிடையிலான போட்டிகள் முதன்மைப்படுத்தப்பட்டு, இன்று கட்சிக்குள்ளே இடம்பெறும் அதிகாரப் போட்டி முதன்மைப்படும் நிலைக்கு பரிணமிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியே இன்று ஈழத்தமிழரசியலில் முதன்மையான செய்தியாக காணப்படுகின்றது. ஜனநாயக அரசியலில் தேர்தலூடாக தலைமையின் தெரிவு சாதாரணமாயினும், தேசிய அரசியலில் கட்சித்தலைமையின் தெரிவுக்கு தேர்தலை நாடுவது ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணமாகிவிடுமென்பதுவே பலரதும் அச்சமாக காணப்படுகின்றது. தமிழ் சிவில் சமுகத்தினரால் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தலை தவிர்த்து புதிய தலைமையை தெரிவு செய்ய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சிக்குள்ளும் அத்தகைய கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தேசியம் என்பது மக்கள் திரட்சியால் கட்டமைக்கப்படும் ஓர் உணர்வுசார்ந்த விடயமாக காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக...