2022இல் ரஷ்யா-உக்ரைன் போர் முன்அனுபவம்; 2023இல் தைவான் மீதான சீனாவின் போர் அபிலாசையை தளர்த்துமா? -ஐ.வி.மகாசேனன்-

இருபத்தொராம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் முன்னரை பகுதியின் முதலிரண்டு ஆண்டுகளும் உலகுக்கு மிகவும் சவாலான காலமாகவே கடந்து சென்றுள்ளது. தசாப்தத்தின் ஆரம்பமே கொரோனா முடக்கம் உலகிற்கு ஏற்படுத்திய அரசியல் பொருளாதார நெருக்கடிகளுடனேயே ஆரம்பமாகியது. அதன் விளைவுகளைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு முன்னரே ரஷ்யா-உக்ரைன் போர் உலகை தொடர்ச்சியாக இறுக்கமான சூழலுக்குள் நகர்த்தி வருகின்றது. யதார்த்தவாதக் கோட்பாட்டாளர்கள் சர்வதேச நாடுகளுக்கிடையிலான உறவை வரையறைக்கும் அராஜக தோற்றங்களின் வடிவமே கடந்த ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போரினூடாக வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் அனுபவத்திலிருந்து உலகின் எதிர்கால போருக்கான முன்அனுபவங்களை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வரையறுக்க ஆரம்பத்துள்ளார்கள். குறிப்பாக உலகம் எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தும் போராக சீனா-தைவான் போரையே கருதுகிறது. இக்கட்டுரை ரஷ்யா-உக்ரைன் போரின் அனுபவம் சீனா-தைவான் போரில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கக்கூடியது எனும் தேடலை மையப்படுத்தியதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

போரின் எதிர்காலம் பற்றிய முன்னறிவிப்புகள் கதைகள் மற்றும் அறிவுசார் நாகரீகங்களைப் பின்பற்றுகின்றன. மில்லினியத்தின் தொடக்கத்தில், உயர் தொழில்நுட்ப ட்ரோன்களின் தோற்றம் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் அனைத்தையும் பார்க்கும் கண்கள் ஆகியன ரோபோக்கள் மற்றும் கணினிகளால் போட்டியிட்ட போர்களின் எதிர்கால தரிசனங்களை தூண்டியது. 2010களின் நடுப்பகுதியில், ரஷ்யாவின் தகவல் நடவடிக்கைகளின் வெற்றி, தேர்தல் குறுக்கீடு மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயுதம் ஏந்திய ஊழல் ஆகியவை ஒரு பெரிய நாட்டைக் கூட வன்அதிகாரத்தை பயன்படுத்தாமல் கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. இவ்அனுபவங்களின் தொடர்ச்சியே போரின் முன்னறிவிப்புக்கள் மீதான நாட்டத்தை அதிகரித்துள்ளது. அதேவேளை உலகமயமாக்கப்பட்ட யுகத்தில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தில் பரஸ்பரம் சார்ந்திருப்பது ஒரு பெரிய போரை சாத்தியமற்றதாக ஆக்கிவிடும் அல்லது அதை உள்நாட்டில் வைத்திருக்கும் என்பதே சர்வதேச போரியல் நிபுணர்களின் கணிப்பாக இருந்தது. எனினும் ரஷ்யா-உக்ரைன் போரில் நேரடியான ஆயுத மோதலில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகள் மாத்திரமே ஈடுபடுகின்ற போதிலும் அது சர்வதேச வர்த்தகத்தையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எனவே, ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான சரியான படிப்பினைகளை அடையாளம் காணுதல், எதிர்கால உலகின் இயங்குதன்மைக்கு அவசியமானதாகின்றது.

ரஷ்யா-உக்ரைன் போர் இன்று உலகில் நடந்து கொண்டிருக்கும் ஒரே போர் அல்ல. அவ்வாறே சீனா-தைவான் மட்டுமே எதிர்காலத்தில் இருக்கக்கூடிய போரும் அல்ல. எனினும் ரஷ்யா-உக்ரைன் போர் அணு ஆயுத நாடுகளினால் நிகழ்த்தப்படும் போராகா அதன் இயல்பு ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. மேலும், நேரடியான போர்க்களத்தில் இல்லாவிடினும், பல நாடுகளின் ஆதரவுடனேயே ரஷ்யா-உக்ரைன் போர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்இயல்புகளின் பொருத்தப்பாடு சீனா-தைவானில் உள்ள போருக்கான உரசல்களிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதடிப்படையிலேயே சமகாலத்தில் ரஷ்யா-உக்ரைன் போரும் எதிர்காலத்தில் சீனா-தைவான் போரும் முதன்மையான உரையாடலை பெறுகிறது. இருப்பினும், உக்ரைனில் ரஷ்யாவின் வடிவமைப்புகளுக்கும், தைவானில் சீனாவின் வடிவமைப்புகளுக்கும் இடையே வேறுபாடுகளும் காணப்படுகிறது. தைவான் ஒரு சிறிய தீவு. அதேசமயம் உக்ரைன் ஐரோப்பிய நிலப்பரப்பில் இரண்டாவது பெரிய நாடு ஆகும். சீனா ஒரு பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன எதிரியாகும். அதேசமயம் ரஷ்ய இராணுவம் உக்ரைன் போரில் தொழில்நுட்ப ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் மற்றும் தந்திரோபாய ரீதியாகவும் நுட்பமற்ற வகையிலேயே செயற்பட்டு வருகிறது. எனவே ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து வெளிவரும் சில பாடங்கள் பொருத்தமானதாக இருக்கும். அதேவேளை மிகவும் பயனுள்ளதாக அமையும். ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு புதிய விதிமுறையாக மாறாமல் இருப்பது உக்ரைனுக்கு அப்பால் மனிதகுலத்திற்கு இன்றியமையாதது ஆகும்.

ஒன்று, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கும் தைவானுக்கான சீனாவின் அபிலாஷைகளுக்கும் இடையேயான தொடர்பு வலுவானதாக அமைகிறது. ஒரு சிறிய ஜனநாயகத்தை அச்சுறுத்தும் அணு ஆயுதம் ஏந்திய எதேச்சதிகாரம், தாய்நாட்டை மீண்டும் ஒன்றிணைப்பது பற்றிய மறுசீரமைப்பு சொல்லாட்சி, ஒரு தலைவர் உள்நாட்டில் பெருகிய முறையில் அடக்குமுறை மற்றும் வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு எனும் வகையில் ரஷ்யா மற்றும் சீனா இயல்புகள் பொதுமை அடைகின்றது. அத்துடன் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினும், சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் தமது நிலையான ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ள தலைவர்களாக காணப்படுகினறமையும் பிரதான காரணியாகிறது. மேலும், போரின் மற்றைய தரப்புகளான உக்ரைன் மற்றும் தைவான் ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் பாதுகாப்பு கூட்டான நேட்டோ போன்ற முறையான ஒப்பந்தக் கூட்டணிகளுக்கு வெளியேயே காணப்படுகின்றது. நேட்டோவின் பிரிவு 5 போன்ற பாதுகாப்பு உத்தரவாதத்திலிருந்து எந்தப் பலனும் இல்லை. ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிலிருந்து உலகம் சரியான பாடங்களைக் கற்றுக்கொள்வது இன்னும் முக்கியமானது. சீனா தைவானை பலவந்தமாக கைப்பற்றும் என்ற முன்னறிவிப்புக்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே காணப்படுகின்றது.

இரண்டு, போருக்கான முன்னறிவிப்புக்களில் ஆட்சியாளர்களின் வார்த்தைகள் பிரதான நிலை பெறுகின்றது. உக்ரைன் மீதான போரைக் கட்டியெழுப்புவதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது லட்சியங்களை வெளிப்படையாகக் கூறினார். 'உக்ரைனின் உண்மையான இறையாண்மை ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து மட்டுமே சாத்தியமாகும்' என்று ஜூலை-2021இல் புடின் குறிப்பிட்டிருந்தார். மேலும், பெப்ரவரி-2022 படையெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் உக்ரைனை 'ரஷ்யாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக இடம்' எனக்குறிப்பிட்டு உக்ரைனின் இருப்புக்கான உரிமையை புடின் மீண்டும் மீண்டும் மறுத்தார். ஆனால் மேற்கத்திய தலைவர்கள் முழு அளவிலான படையெடுப்பின் அபாயத்தை தொடர்ச்சியாக புறக்கணித்தனர். அதனாலேயே முன்னாயர்த்தமற்ற போரினால் இன்று உலக பொருளாதாரம் பெரும் நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதே தவறை சீனாவுடன் உலகம் செய்ய முடியாது. தைவானை சீனாவுடன் இணைப்பது தொடர்பான அறிவிப்புக்களை சீனா தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றது. அக்டோபர்-2022இல் 20வது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 'தைவானை மீண்டும் இணைக்க அதிகாரம் மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான விருப்பத்தை நாங்கள் வைத்திருக்கிறோம்' என கடுமையான எச்சரிக்கையை அளித்தார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கூற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஹாங்காங்கில் சீனாவின் நடவடிக்கைகள் நடைமுறையில் 'ஒரே சீனா' கொள்கை என்ன என்பதைக் காட்டுகிறது. சீனாவின் அபிலாஷைகள் அல்லது தைவான் மக்களுக்கு அவை எதைக் குறிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

மூன்று, உலக நாடுகள் இன்று சார்புநிலையிலேயே காணப்படுகின்றது. இச்சார்பு நிலையை சீனாவை போரிற்கு செல்வதை தடுக்கும் மூலோபாயமாக உலக நாடுகள் பயன்படுத்தலாம் என்ற கருத்தை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவின் திடீர் போரினால் உலகப்பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பா பொருளாதார நெருக்கடியால் அரசியல் ஸ்திரத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை பொருளாதார தடைகளால் ரஷ்யாவும் பெரும் நெருக்குவாரத்துக்குள்ளேயே போரை தொடர்கின்றது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ரஷ்யாவை விட அதிகமாக நம்பியிருக்கும் சீனா, தைவான் மீதான எந்தவொரு தாக்குதலும் சமமான ஒருங்கிணைந்த பதிலைத் தூண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனா, சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், மிகவும் மேம்பட்ட மைக்ரோசிப்கள் மற்றும் அவற்றை உருவாக்குவதற்கான இயந்திரங்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை முக்கியமாக சார்ந்துள்ளது. சீனாவை விட அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நன்மைகள் ஜனநாயக உலகிற்கு கணிசமான இராணுவ விளிம்பைக் கொடுக்கின்றன. தைவானை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்க இந்த விளிம்பைப் பராமரிப்பது இன்றியமையாததாக இருக்கும். அரசாங்க மேற்பார்வைக்கான திட்டத்தில் (Pழுபுழு) மூத்த பாதுகாப்புக் கொள்கையாளர் டான் க்ராசியர், தைவான் மீதான சீனப் படையெடுப்பு மிகவும் சாத்தியமில்லாததாகக் கருதுகிறார். இத்தகைய இராணுவ நடவடிக்கையானது, சீனப் பொருளாதாரம் அதன் உயிர்வாழ்விற்காக நம்பியிருக்கும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளை உடனடியாக சீர்குலைக்குமென சி.என்.என் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவை சவால் செய்ய, அவர்கள் இராணுவ சக்திக்கு பதிலாக தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே இதனை சாதகமாக பயன்படுத்தி சீனாவை தைவான் மீதான போரை தடுப்பதற்கு எந்தவொரு மூலோபாயமும் தொழில்நுட்ப மேன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

நான்கு, தைவான் தனது ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் சூழலில், தைவான் மீதான சீன ஆக்கிரமிப்பு முயற்சி தளர்த்தப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அமெரிக்காவினால் வழங்கப்படும் பரந்த இராணுவ உதவியே உக்ரைனில் நிலத்தடி யதார்த்தத்தை மாற்றியுள்ளது. உயர்ந்த ஆயுதங்கள் உக்ரேனியர்களை ஆரம்ப ரஷ்ய முன்னேற்றத்தை முறியடிக்கவும், பெரிய அளவிலான நிலப்பரப்பை திரும்பப் பெறவும் அனுமதித்தன. போருக்கு முன்பே உக்ரைன் இந்த திறன்களைக் கொண்டிருந்திருந்தால், முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன் புடின் யோசித்திருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கும். இதே பாடம் தைவானுக்கும் பொருந்தும். அதன் கூட்டாளிகளின் உதவியுடன், தீவை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவதற்கான எந்தவொரு சாத்தியமான முயற்சியையும் தடுக்க ஆயுதங்களுடன் கூடிய முள்ளம்பன்றியாக மாற வேண்டும். ஒரு படையெடுப்பின் விலை தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக சீனா கணக்கிட வேண்டும். சீனாவின் எச்சரிக்கைகளை மீறி ஆகஸ்ட்-2022 அப்போதைய அமெரிக்க காங்கிரஸின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் விஜயமும் தைவானுக்கான ஆதரவு பலத்தை முற்கூட்டி வெளிப்படுத்தும் அமெரிக்க சமிக்ஞையாகவே காணப்படுகின்றது.

எனவே, ரஷ்யா-உக்ரைன் போரின் படிப்பினையை ஆழமாக உணர்ந்து கொள்ளும் சீனா, தைவான் மீதான நேரடியான போருக்கான சூழலை தற்போது காலந்தாழ்த்துவதற்கே வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. உக்ரைன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை 10 மாதங்கள் கடந்தும் நிலைப்படுத்தி வைத்திருப்பது, ரஷ்யாவின் மனநிலையை ஒத்த சீனாவின் தைவான் மீதான் அபிலாசைக்கு முன்னெச்சரிக்கையாகவே அமைகின்றது. எனினும் மாறாக 2023இல் ரஷ்யா ஒரு பகுதியைப் பெற்று, பலத்தால் புதிய நிலையை ஏற்படுத்தினால், சீனாவும் மற்ற எதேச்சதிகார சக்திகளும் ஜனநாயக உலகின் தீர்மானம் பலவீனமானது என்பதை அறிந்து கொள்ளும். இந்த முடிவு முழு உலகையும் மிகவும் ஆபத்தான இடமாக மாற்றும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-