சிதைந்துள்ள தமிழ் அரசியலின் கூட்டணிகளும் தென்னிலங்கையின் படிப்பினையும்! -ஐ.வி.மகாசேனன்-

அரசியல் கட்சிகளின் நடத்தைகளின் உண்மையான வெளிப்பாடுகள் தேர்தல் காலங்களிலேயே புலப்படுகிறது. குறிப்பாக தமது தேர்தல் அரசியல் நலனுக்குள் அரசியல் கட்சிகள் சுருங்குவது அரசியல் கட்சிகளின் தேர்தல் கால நடத்தைகளில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை 2023ஆம் ஆண்டு தேர்தல் வருடமாகவே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக 2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. இலங்கையின் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் கூட்டுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் களமிறங்கியுள்ளன. ஒட்டுமொத்த இலங்கையிலும் பல புதிய கூட்டுக்கள் துளிர் விடுவதுடன், முன்னைய கூட்டுக்கள் பிளவுபடுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய கட்சிகளின் கூட்டு மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் கூட்டின் இயல்புகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமித்தேசிய பரப்பில் 2000களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் திரளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலை கூட்டமைப்பாக சந்திக்காது தமிழரசு கட்சி மற்றும் ஏனைய பங்காளி கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் சுயாதீனமாக செயற்படுமென்ற அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முடிவில் ஜனவரி-10அன்று தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜனவரி-11அன்று செய்தியாளர்களை சந்தித்த ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், 'கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகள் எல்லோரும் அணிதிரண்டுள்ளோம்' எனத்தெரிவித்துள்ளார். இப்புதிய கூட்டு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறுவதற்கான எதிர்வுகூறல்களே தமிழ் அரசியல் பரப்பில் காணப்படுகின்றது. எனவே, தமிழரசியலில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதைவுற்று புதிய கூட்டணியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டின் உருவாக்கமே 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசியிலின் நகர்வாக காணப்படுகின்றது.

தென்னிலங்கையிலும் உள்ளூராட்சி சபை தேர்தலை மையப்படுத்தி புதிய கூட்டணிகள் துளிர்விட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவும் (SLPP) இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. முன்னைய பரம எதிரிகளின் வரலாற்று கூட்டணியில், கடந்த ஆண்டு அசாதாரண அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இரண்டு கட்சிகளும் சில மாவட்டங்களில் ஐ.தே.கவின் யானை சின்னத்திலும், சில மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலும், ஏனைய இடங்களில் பொது சின்னத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, டலஸ் அழகப் பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, விமல் வீரவன்ஸ தலைமையிலான உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளடங்கலாக 13 கட்சிகள் இணைந்து 'சுதந்திர மக்கள் கூட்டணி' என்ற புதிய கூட்டணியினை உருவாகியுள்ளனர். இக்கூட்டணி ஹெலிகொப்டர் சின்னத்தை பொது சின்னமாக கொண்டு உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். 

தமிழ் அரசியல் தரப்பில் புதியதொரு கூட்டணிக்கான உரையாடல் மேலெழுந்துள்ள சூழலில், தென்னிலங்கையிலும் ஆளும் அரசாங்கத்தில் நெருக்கடி காலத்தில் இணைந்த ஜனாதிபதியின் கட்சியுடன் புதியதொரு தேர்தல் கூட்டணி உதயமாகியுள்ளது. எனினும் தமிழரசியல் மரபினதும் தென்னிலங்கை அரசியல் மரபினதும் கூட்டணி இயல்புகள் வேறுபட்ட தளங்களில் காணப்படுகின்றது.

தமிழரசியல் பரப்பில் உருவாக்கப்படும் கூட்டணிகள் யாவும் தத்தமது சுயநல அரசியல் நலன்களுக்குள் பிணைக்கப்பட்டு சிதைக்கப்படுவதே வரலாறாகிறது. 

ஓன்று, இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும். 1970களில் அரசாங்கத்தின் பேரினவாத எதேச்சாதிகார அடக்குமுறை, தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமைக்கான தேவையினை தமிழ் அரசியல் தலைமைகளிடம் உருவாக்கியது. அதன் விளைவாக, 1972 மே-14ஆம் திகதி, ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், 'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கத்தின் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி உட்பட சில தமிழ் அமைப்புகள் இணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணியை (வுருகு) உருவாக்கினர். வடக்கு, கிழக்கு, மலையக மக்கள், இதுவரை காலமும் முதலும் கடைசியுமாக ஏற்படுத்திய அரசியல் கூட்டணி இதுமட்டுமேயாகும். எனினும் 1976இல், தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (தமிழர் விடுதலைக் கூட்டணி) தனித் தமிழீழக் கொள்கையை முன்னெடுத்தபோது, சௌமியமூர்த்தி தொண்டமான் இந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். மேலும் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு குறுங்காலத்திலேயே ஸ்தாக உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடமும் எம்.சிவசிதம்பரத்திடமும் வந்தது. எனினும் இத்தலைமைகளிடம் சா.ஜே.வே.செல்வநாயகத்திடம் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சி இன்மை  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அஸ்தமனத்துக்கு வழிசமைத்தது. 1977 தேர்தலில், குமார் பொன்னம்பலத்தை, அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் சுயநல அரசியல் போட்டியில் ஓரங்கட்டினார்கள். இதனால் தமிழ்க் காங்கிரஸ், விடுதலைக் கூட்டணி என்ற இரண்டு பாசறைகள் தோன்றின. தமிழ் மக்களின், தமிழ்த் தேசியத்தின் நலன் நோக்கில், இணைந்த தலைமைகள், அதிகாரப் போட்டியாலும், உள்ளார்ந்த பனிப்போராலும், சுயநல விருப்பு வெறுப்புகளாலும் பிரிந்தன.

இரண்டு, 2001ஆம் ஆண்டில் மீளவும் தமிழ் அரசியல் கட்சிகளின் திரட்சி தமிழ் அரசியலில் தேவைப்பட்டது. தமிழ்த் தேசியத்தின் வழிநிற்கும் தமிழ்க் கட்சிகள், ஒன்றுபட வேண்டும் என்ற குரல், தமிழ் சிவில் தரப்பிலிருந்தும் செயற்பாட்டு வீரியம் பெற்றது. இந்த முன்னகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறப்புக்கு அத்திபாரமாகிறது. விடுதலைப்புலிகளின் ஏற்பாட்டில் சில ஊடகவியலாளர்களின் முயற்சியல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் தேர்தல் அரசியல் ஏகபிரதிநிதித்துவம் கூட்டமைப்பினருக்கே வழங்கப்பட்டது. 2009இல் யுத்தம் முடிவுற்ற பின்னரும் ஏதோவொரு வகையில் தமிழ்த் தேசிய அரசியலை நகர்த்தும் பிரதான அரசியல் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இருந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டுக்குள் தமிழ் அரசியல் கலாசாரமாகிய சுயநல அரசியல் மோகத்தால் தமிழ் மக்களின் திரட்சியை பேணுவதில் தொடர்ச்சியாக வலுக்குறைந்து வந்தது. கூட்டமைப்பிலிருந்து 2010இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இறுதியாக விக்னேஸ்வரன் ஆகியோர் வெளியேறி தனியான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தனர். 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு காலத்தில் தமிழரசுக்கட்சியின் சுயாதீன அறிவிப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முழுமையாக சிதைத்துள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு பின்னர்தான் கூட்டமைப்பு உடையும் என்னும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், சம்பந்தன் இருக்கின்றபோதே, கூட்டமைப்பு உடைவுற்றுள்ளது. இது கூட்டமைப்பை கூட பேணிப்பாதுகாக்க முடியாதவொரு தலைவராக சம்பந்தர் தோல்வியுற்றிருக்கின்றார்.

மூன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இயங்கிய ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருக்கும் கட்சிகளுடன் இணைந்து இயங்கும் முடிவை எடுத்திருக்கின்றன. 2020 பொதுத்தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் ஆரூடம் கூறப்படுகின்றது. எனினும் மக்களை ஓரிடத்தில் திரட்டக் கூடிய வல்லமையை அரசியல்வாதியாக சி.வி.விக்னேஸ்வரன் நிரூபிக்க தவறியுள்ளார். அத்துடன் கடந்த காலங்களில் கூட்டிணைந்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளுடனோ அல்லது தனது கட்சியுடனோ கலந்தாலோசிக்காது சுயாதீனமாக தீர்மானங்களை மேற்கொள்பவராக சி.வி.விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. எனவே இவர் தலைமையில் கட்டமைக்கப்படும் புதிய கூட்டணியின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியதாகவே காணப்படுகின்றது. எனினும் ஜனவரி-11அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டது போன்று சுழற்சி முறையில் தலைமை, பொதுச் சின்னத்தில் போட்டி மற்றும் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமாயின் புதியதொரு கூட்டணியை தமிழரசியலில் அடையாளங்காணக்கூடியதாக காணப்படும்.

தமிழ் அரசியல் வரலாற்றின் சாபக்கேடாக தமிழரசியல் கூட்டணி காணப்படுகின்ற அதேவேளை தென்னிலங்கை அரசியல் தமது தேசிய அரசியலுக்கான உத்தியாக கூட்டணி அரசியலை கையாண்டு வெற்றி பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைக்கால இரண்டு சாட்சியங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஓன்று, 2015இல் ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்க கூட்டணி என்பது முரணான அரசியல் கொள்கையில் பயணிக்கும் இரு முகாம்களின் அரசியல் பிணைப்பாகும். குறிப்பாக 2015ஆம் ஆண்டு தென்னிலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தினை பாதுகாத்து கொள்ள ஆட்சி மாற்றமொன்று தேவைப்பட்டது. மகிந்த ராஜபக்ஷh அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நெருக்கடியானது சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கான நேரடி சவாலாகவே அமைகின்றது. அதிலிருந்து மீட்சி பெற இரு முரணான கொள்கையுடைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரு கூட்டணியாக பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு, 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணியும் தென்னிலங்கையின் கூட்டணி உத்தி அரசியலையே வெளிப்படுத்தி நிற்கிறது. கோத்தபாய ராஜபக்ச அரசியல் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் மூலமும், மகிந்த ராஜபக்ஷh பிரதமராக இருந்து வெளியேற்றப்பட்டதன் மூலமும் பொதுஜன பெரமுன தனது ஆணையை தெளிவாக இழந்துவிட்டது. ஆனால் புத்தர் கூறியது போல் அனைத்தும் நிரந்தரமற்றவை. பசில் ராஜபக்ஷh, பொதுஜன பெரமுன கட்சியின் விவகாரங்களை திரைமறைவில் நடத்துவதில் மிகவும் மும்முரமாக உள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் நடந்து வரும் ஏற்பாடுகளுடன் இது தொடர்புடையது. சுpங்கள பௌத்த தேசியவாதத்தை பாதுகாப்பதில் பொதுஜன பெரமுனவின் இருப்பு அவசியமாகிறது. அந்தபின்புலத்திலேயே பொதுஜன பெரமுன-ஐக்கிய தேசிய கட்சி கூட்டும் உருவாக்கம் பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரகலயாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவியாக இருந்தார் என்று பிரதியமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் ராஜபக்ச கூட்டாளியான பாடகர் இராஜ் வீரரத்னவுடன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளனர். மங்கள சமரவீர முதல் விமல் வீரவன்சா வரையிலான மனிதக் கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் அப்புறப்படுத்தியதற்கும் ராஜபக்சக்களுக்கு நீண்ட காலமாக வரலாறு உண்டு.

எனவே, தமிழரசியல் தரப்பினர் தென்னிலங்கை அரசியல் தரப்பினரிடமிருந்து கூட்டணிகளை தேசிய நலனுக்காக பயன்படுத்தும் உத்திகளை கற்றறிய வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்;. தேர்தல் அரசியலில் இலாப நட்டக் கணக்குகளைப் பார்த்து, கூட்டணிகள் அமைவது சாதாரணமானவை. இந்தக் கூட்டணிகளுக்குள் கொள்கை, கோட்பாடு என்ற எதுவும் இருப்பதில்லை. தேர்தல் வெற்றி மாத்திரமே இலக்காக இருக்கும். துமிழரசியல் தரப்பினரினது கூட்டுக்களும் அம்மரபிலேயே தொடர்கின்றன. இவ்வாறான கூட்டணிகளால் மக்களுக்கான நன்மைகள் ஏதும் பெரியளவில் நிகழ்ந்ததாக வரலாறுகள் இல்லை. கொள்கை, கோட்பாடுகள், செயலாற்றுவதற்கான திறன், அரசியல் ஒழுக்கம் என்று ஏதுமற்று, சுய இலாபங்களுக்காக 'பரந்துபட்ட கூட்டணி' என்று அறிவித்தல் தொடருமாயின், நிச்சயம் தமிழ் மக்கள் தம்செல்நெறியை மாற்ற வேண்டிய வரலாறுகள் திருப்பப்படுவதே தீர்வாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-