உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயமும் ரஷ்யா-உக்ரைன் போரின் பரிணாமமும்! -சேனன்-

உலக அரசியல் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள ரஷ்யா-உக்ரைன் போர் நகர்வுகளை உலகம் உன்னிப்பாக அவதானித்து கொண்டுள்ளது. சர்வதேச அரசியலில் யதார்த்தவாதத்தின் பலத்தை உறுதிப்படுத்தி கொண்டுள்ள ரஷ்யா-உக்ரைன் போரின் அண்மைய நகர்வான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயம் தனித்துவமான உலக அரசியலை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய- உக்ரைன் போர் 300 நாட்களை கடந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்கா ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் உக்ரைனுக்கான ஆதரவை வெளிப்படுத்திய போதிலும் சில வரையறைகளை பேணிவந்தது. எனினும் தற்போது உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் வரையறைகளை தாண்டும் சூழல் உருவாக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை அரசியல் ஆய்வாளர்களிடையே உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் தற்போதைய விஜயம் போரை முழு நீளப் போராக மாற்றுவதுடன், உலகளாவிய போராக மாற்றுமா என்ற சந்தேகத்தைத் தந்துள்ளது. இக்கட்டுரை உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தந்துள்ள விளைவுகளைத் தேடுவதாக அமைந்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21.12.2022 அன்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப்பட்டதுடன் அதிமுக்கிய பாதுகாப்புக்குரியதாகவும் அமைந்திருந்தது. உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க இராணுவ விமானத்தில் ஆன்ட்ரூஸ் விமானப் படைத்தளத்தில் தரையிறங்கியிருந்தார். அவரது விஜயத்துக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த அமெரிக்கா, செங்கம்பள வரவேற்பளித்தது. அது மட்டுமன்றி இரு அவைகளும் கொண்ட காங்கிரஸ் அவையில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். முன்னாள் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சேச்சிலுக்கு பின்னர் போர்க்காலத் தலைவராக ஜெலன்ஸ்கியே காங்கிரஸில் உரையாற்றியுள்ளமை  குறிப்பிடப்படுகிறது. அங்கு ஜெலன்ஸ்கி உரையாற்றும் போது, அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத தளபாடங்களுக்காகவும் நிதி உதவிக்காகவும் நன்றி தெரிவித்ததுடன், அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவிகள் வெறும் உதவிகள் மட்டுமல்ல அனைத்தும் உலக பாதுகாப்புக்கான முதலீடுகள் என்றும் தெரிவித்தார். அமெரிக்க காங்கிரஸின் இறுதி முடிவுதான் உக்ரைனைப் பாதுகாக்கும் எனவும் குறிப்பிட்டார். 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயம் எளிதாக கடந்து செல்லக்கூடிய அரசியல் தாக்கங்களை சர்வதேச அரசியலில் ஏற்படுத்தியிருக்கவில்லை. உக்ரைன்-ரஷ்யா போர் என்பதில் உக்ரைன் அமெரிக்காவின் விம்பமாகவே செயற்படுகின்றது. ஏறக்குறைய அமெரிக்க நலனுக்காக உக்ரைன் சுடுகாடாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாக மோதாது உக்ரைனை கையாண்டு போரை வெற்றிகரமாக அமெரிக்கா நகர்த்தியுள்ளது. அணுவாயுத பலமற்ற உக்ரைன் அணுவாயுத பலம் கொண்ட ரஷ்யாவுடன் 300 நாட்களை கடந்து போரை இழுத்து செல்கின்றமையே அதன் உள்ளடக்கங்களை தெளிவாக அடையாளப்படுத்தகின்றது. இந்தப் போரின் வெற்றிகள் அனைத்தும் அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்குமானதே ஆகும். எனவே அமெரிக்hவுக்கான ஜெலன்ஸ்கியின் விஜயத்தின் தாக்கங்களை உன்னிப்பாக நோக்குதல் அவசியமாகிறது.

முதலாவது, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அடுத்துவரும் வாரங்களில் காங்கிரஸின் பெரும்பான்மையை குடியரசுக்கட்சி பெற்றுக் கொள்ளும் தறுவாயில், உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதி கட்டற்றதாக உள்ளதென்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும் விதத்தில் ஜெலன்ஸ்கியின் உரையும் விஜயமும் முதன்மைப்படுத்தப்படுகிறது. மேலும் ஜெலன்ஸ்கி உரையாற்றும் போது உக்ரைன் படைகள் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன்- ரஷ்யப் போர் எவ்வளவு காலமானாலும் அமெரிக்கா உக்ரையினுக்கு உதவும் என உறுதியளித்ததுடன், மேலும் உடனடியாக 1.85 பில்லியன் அமெ.டொலர் உதவியை அறிவித்தார். அது மட்டுன்றி அமெரிக்க தயாரிப்பான பேற்றியட் வான்தடுப்பு ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அவ்வறிப்பில் பைடன் முன்வைத்தார். உக்ரைன் ஒவ்வெரு நகர்விலும் அமெரிக்கா உக்ரைனுடன் இருக்கும். உக்ரைனுக்கு எப்போதும் துணையாக அமெரிக்கா செயல்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். இரு நாட்டுக் கொடிகளையும் மாற்றிக் கொண்ட தலைவர்கள் நம்பிக்கையூட்டும் பயணத்தை தொடர்வதாகவே தமது உடல் மொழிகளை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இரண்டு, ஜெலன்ஸ்கியை பிரித்தானிய முன்னாள் பிரதமர் சேர்ச்சிலுடன் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒப்பிடுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதுவும் மிக மோசமான ஒப்பீடாகவே தெரிகிறது. வின்ஸ்டன் சேர்ச்சில் இரண்டாம் உலகப் போரை நிகழ்த்தியவர் என்றும் மேற்குலகத்தின் போரை திட்டமிட்டு வழிநடத்தியவர் என்பதுடன் ஹிட்லரின் போர் உத்திகளை தோற்கடித்தவர் என்றும் பெருமைப்படக் கூடிய தலைவராக விளங்கினார். அவர் சொந்த நாட்டு மக்களை கொல்வதற்கு ஒரு போதும் ஜெலன்ஸ்கியைப் போல் துணை போகவில்லை என்பது நினைவு கொள்ளத்தக்கது. அமெரிக்க நலனுக்காக மட்டுமல்லாது மேற்கு ஐரோப்பாவின் நலனுக்காகவும் போர்க் களத்தை கையாண்டவரே சேர்ச்சில். புவிசார் அரசியலையும் சர்வதேச அரசியலையும் ஒருங்குசேர கையாண்டவரே சேர்ச்சில். முதலாளித்துவத்திற்கும் மேற்குலகத்திற்கும் ஆபத்தான கம்யூனிஸத்தையும் நாசிசத்தையும் ஒன்றாகவே தோற்கடித்த இராஜதந்திரியே சேர்ச்சில். ஏறக்குறைய இரண்டாம் உலகப் போரை முழுமையாக செயற்படுத்தி மேற்குலகத்திற்கான வெற்றியாக்கிய தலைவராகவே பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் காணப்படுகிறார். 

மூன்று, உக்ரேனிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிற தலைவர்களுடன் சமாதானத்திற்கான தனது சூத்திரத்தை ஊக்குவித்து வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் மற்றவர்களுடன் விவாதித்து, அதன் அடிப்படையில் உலகத் தலைவர்கள் உலக அமைதி உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்க விஜயத்தில் வலியுறுத்தினார். ஜி20 நவம்பர் உச்சிமாநாட்டில் முதலில் ஜெலன்ஸ்கி தனது சமாதான சூத்திரத்தை அறிவித்தார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களிடம் முன்வைத்து ராஜதந்திர உந்துதலில் ஈடுபட்டுள்ளார். எனினும், ரஷ்யா ஜெலன்ஸ்கியின் சமாதான முன்மொழிவை நிராகரித்தது. ஆக்கிரமித்துள்ள எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இப்பின்னணியிலயே டிசம்பர்-21அன்று ஜெலன்ஸ்கி வாஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது, பைடன் பொதுக் கருத்துக்களில், தானும் ஜெலன்ஸ்கியும் அமைதிக்கான சரியான பார்வையைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றும், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார். இது ஜெலன்ஸ்கியின் சமாதானத்திற்கான திட்டத்திற்கான உலக ஆதரவை திரட்டுவதற்கான முன்னகர்வாகவே நோக்கப்படுகின்றது. 

நான்கு, ஜெலன்ஸ்கிக்கான ஆதரவை திரட்டும் வகையில் ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கான ஆதரவை ஜனநாயகத்துக்கான ஆதரவாக அமெரிக்கா தொடர்ச்சியாக பிரகடனப்படுத்துகின்றது. உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரகசியமாக பேணப்பட்ட நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி முன்னதாக டிசம்பர்-20அன்று ஒரு கடிதத்தில் புதன்கிழமை இரவு காங்கிரஸின் அமர்வு இருக்கும் என்று கூறினார். இது 'ஜனநாயகத்தின் மீது மிகவும் சிறப்பு கவனம் செலுத்தும்' எனக்குறிப்பிட்டிருந்தார். இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் காங்கிரஸ் உரையை ஜனநாயகத்துக்கான அமர்வாகவே அமெரிக்கா காட்சிப்படுத்தியுள்ளமையையே வெளிப்படுத்துகின்றது. ஜனநாயகத்தின் தார்ப்பரியம் குடிமக்களின் நலனே மையமானதாகும். எனினும் உக்ரைனில் அமெரிக்க தேசத்தின் நலனுக்காக உக்ரேனியர்களின் உயிர்கள் இழக்கப்படுகின்றது. இது ஜனநாயகத்தின் போலித்தன்மைகளையே மேலும் தோலுரிக்கின்றது. இன்னொரு தேசத்தின் நலனுக்கான தன் தேசத்து மக்களின் உயிரை அழிப்பது தான் அமெரிக்காவின் ஜனநாயக விளம்பரமாகின்றது என்பதுவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் விமர்சனமாக காணப்படுகின்றது. ஜனநாயகத்துக்கானதாக உக்ரைன் போரை ஆதரிக்கும் அமெரிக்காவே தலிபான்களிடம் ஆப்கானிஸ்தானை கைமாற்றி வெளியேறி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து, உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தில் காங்கிரஸில் இடம்பெற்ற உரையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதிலுரையும் அமெரிக்க நலனுக்காக உக்ரைனின் பலிக்கடா தொடரும் என்பதையே உறுதி செய்கிறது. இரு நாட்டுத் தலைவர்களது நகர்வுகளும் தெளிவாக போரை நீடிக்க திட்டமிடுவன என்பதை அமெரிக்க ஜனாதிபதியின் உரையிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. அதாவது உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் அமெரிக்கா உக்ரைனுடன் இருக்கும் என்பதன் மூலம் போரை நீடிக்கவே அமெரிக்கா விரும்புகிறது. காரணம் இத்தகைய போர் ரஷ்யாவுக்கான எதிர்காலத்தை தோற்கடித்துள்ளதாகவே தெரிகிறது. உலகத்தின் இருதய நிலத்தை கட்டுப்படுத்தாதுவிடின் அது எப்போதும் மேற்குக்கு ஆபத்தானதாகவே அமையும் என்பதை அமெரிக்கா நன்கு புரிந்துள்ளது. அதனாலேயே உக்ரைனுக்கான ஆயுத தளபாடங்களையும் நிதி உதவியையும் வகைதொகையின்றி வழங்கி வருகிறது. அவ்வாறே ஜனநாயக சொல்லாடலூடாக சர்வதேச திரட்சியையும் உக்ரைனுக்கு வழங்குவதற்கான எத்தனங்களை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. ரஷ்யா-உக்ரைன் போரின் ஆபத்தான விளைவுகள் அதிகமானவை ரஷ்ய உக்ரைனியர்களுக்கே அன்றி அமெரிக்கர்களுக்கல்ல. ஐரோப்பியர் பாதிக்கப்பட்ட அளவுக்குக் கூட அமெரிக்காவுக்கு உக்ரைன்-ரஷ்யப் போரால் பாதிப்பு ஏற்படவில்லை.

எனவே, உலகம் யதார்த்தவாதிகள் வலியுறுத்தும் அராஜகத்தின் கட்டமைப்புக்குள் சுழல்வதனையே உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயமும் அதன் தாக்கங்களும் உறுதி செய்கின்றது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள சர்வதேச பொருளாதார பாதிப்புகளால் வறிய நாடுகள் தொடர்ந்தும் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்பட வல்லரசுகள் ஆயுதப் போட்டியிலும் ஆதிக்க போட்டியிலும் முனைப்புச் செலுத்தியே வருகின்றது. அமெரிக்காவின் வல்லாதிக்க நலனுக்குள் அமெரிக்க முகவரான ஐரோப்பா மீளவும் ஒரு வரலாற்றுத் துயரத்திற்குள் நகர்கிறது. அமெரிக்காவுக்காக உக்ரைனின் ரஷ்யாவுக்கு எதிரான போரை தொடரப் போகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! -ஐ.வி.மகாசேனன்-