தமிழ் அரசியல்வாதிகள் உள்ளூராட்சி கட்டமைப்பை சுயலாப அரசியலுக்கா பயன்படுத்துகிறார்கள்? -ஐ.வி.மகாசேனன்-
2023ஆம் ஆண்டு ,லங்கையில் தேர்தல் ஆண்டாக அமைய உள்ளது என்பதே பரவலான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கு வாய்ப்பளிக்குமா என்பது தொடர்பிலும் பரவலான விமர்சனங்கள் பொதுவெளியில் காணப்பட்டது. இந்நிலையிலேயே இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிப்புக்களை தேர்தல் ஆணைக்குழு 2023இன் முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முழு இலங்கையளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு இது முதல் தீர்மானிக்கும் பரிசோதனை (Litmus Test) ஆகும். அதேவேளை தமிழரசியல் பரப்பிலும் தமிழரசு கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலை பரிசோதனை களமாக பயன்படுத்த முனைகிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற திரட்சியை நீக்கி தமிழரசு கட்சி தனித்து உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலாக உரையாடலை ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபையின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் தமிழரசியல் போக்கினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு நீண்ட சலசலப்பை நிறுத்தி, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் 2023 ஜனவரி 18 முதல் 21 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தவறான நிர்வாகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்ததை அடுத்து பொதுஜன பெரமுனவின் பிரபல்யம் புதிய வீழ்ச்சியை எட்டியது. இதனால் அரசாங்கம் இயலுமானவரை தேர்தல்களை தவிர்க்கவே பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. அதேவேளை எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கான கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தன. இவ்நெருக்கடிக்குள்ளேயே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களை அறிவித்துள்ளது. எனினும் அரச இயந்திரத்தை கொண்டு இயக்கும் அரசாங்கம் தேர்தலை இழுத்தடிப்பு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவே தென்னிலங்கை அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து, உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்பதனை வலுவாக ஆதரிக்கிறார்கள்.இவ்வாறாக தீர்க்கமான முடிவற்ற தேர்தல் தொடர்பான உரையாடலுக்குள்ளேயே தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் இன்று தங்கள் அரசியலை புகுத்தியுள்ளார்கள். 2023ஆம் ஆண்டு பெப்ரவரி-04ஆம் திகதிக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்போவதாக ஜனாதிபதி ஒரு திசையில் உரையாடலை ஆரம்பித்துள்ள சமதளத்தில், தேர்தல் உரையாடல்கள் ஆரம்பித்ததும் தேர்தலை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் தேசிய இனப்பிரச்சினை தீர்வுசார்ந்த உரையாடலை இரண்டாம் நிலையில் தளர்த்தி தேர்தலுக்கான நகர்வுகளையே முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். தேர்தலுக்கான முன்னாயர்த்த அறிவிப்புகளுக்கு முன்னதாகவே தமிழத்தேசிய கூட்டமைப்பின் திரட்சி இழுபறிக்குள் செல்ல ஆரம்பித்து விட்டது. குறிப்பாக தமிழரசு கட்சியின் உயர்மட்ட உரையாடல்களில் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலை தனித்து எதிர்கொள்வது தொடர்பான பேச்சுக்கள் ஆழமான நிலையை பெறத்தொடங்கியுள்ளது. மறுதளத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமித்தேசிய மக்கள் முன்னணியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். உள்ளூராட்சி சபையை தமிழ் அரசியல் தரப்பினர் அணுகும் முறை தொடர்பில் ஆழமாக நோக்குதல் அவசியமாகிறது.
ஓன்று, உள்ளூராட்சி கட்டமைப்பானது மக்கள் ஐக்கியத்தை நிலைநிறுத்தும் அடிப்படை நிறுவனமாகும். தேசிய இனமானது திரட்சியை ஐக்கியத்தை பேணுவதனூடாகவே தேசிய விடுதலையை அடைய முடியும். மக்களுடன் அரசியல் தலைமைகள் நெருக்கமாக பிணைப்பை உருவாக்கும் ஆதாரமாக உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றது. உள்ளூராட்சி சபை களத்தில் ஐக்கியத்தையும் திரட்சியையும் உருவாக்குவதனூடாகவே தேசிய இன உரிமைப்போராட்டத்திலும் மக்கள் திரட்சியை மற்றும் ஐக்கியத்தை பலப்படுத்த முடியும். ஜனநாயகமயமாக்கல் மற்றும் முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெகுஜன பங்கேற்பை தீவிரப்படுத்துவதற்கான செயல்முறையின் ஒரு முக்கிய அம்சம் என்பதன் அடிப்படையில் உள்ளூராட்சி அரசாங்கத்தின் இருப்பு எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்பு இல்லாத எந்த அரசியல் அமைப்பும் முழுமையானதாகவும் ஜனநாயகமாகவும் கருதப்படுவதில்லை. ஜனநாயகம் பலவீனப்படும் சூழலில் தேசியமும் வலுவிழக்கப்படுகின்றது. இவ்வாறாக தேசிய இருப்பியலுக்கு வலுவான உள்ளூராட்சி களத்தை தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாப அரசியல் இருப்புக்காக தேர்தல் அரசியலை முன்னெடுப்பது தமிழ்த்தேசியத்திற்கு விரோதமான செயற்பாடாகவே அமைகின்றது.
இரண்டு, இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சிங்கள தேசிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவதற்கும் உள்ளூராட்சி சபை கட்டமைப்பின் தார்ப்பரியத்தை தமிழ் அரசியல் தலைமைகள் உணர்ந்து செயற்படாமையே காரணமாகிறது. உள்ளூராட்சி அமைப்பு இரண்டு பிரதான நோக்கத்திற்காக செயல்படுகிறது. முதல் நோக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான நிர்வாக நோக்கமாகும். குறிப்பிட்ட உள்ளூர் பொதுத் தேவைகளை தீர்மானிப்பதில் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஈடுபடுத்துவதும், இந்த உள்ளூர் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதும் இரண்டாவது நோக்கமாகும். உள்ளூர் பிரதிநிதி அரசாங்கம் என்பது உள்ளூர் அரசாங்க கட்டமைப்புகளுக்குள் உள்ளூர் மட்டங்களில் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத்தை விரிவுபடுத்தும் மற்றும் இணைக்கும் ஒரு செயல்முறையாகும். உள்ளூர் அரசாங்கத்தின் ,ந்த அம்சங்களை மனதில் கொண்டு, உள்ளூர் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது உள்ளூர் பொதுக் கொள்கையில் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதால், உள்ளூர் அரசாங்கத்தின் பொதுவான கட்டமைப்பை நோக்கி கவனம் செலுத்தப்படும். எனினும் தமிழ் அரசியல் பரப்பில் உள்ளூர் அரசாங்க கட்டமைப்புக்கள் தேர்தலில் தேசிய இனப்பிரச்சினையை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை நிரப்புவதுடன் அவர்களின் அரசியல் பூர்த்தியடைவதாகவே செயற்பட்டு வந்துள்ளார்கள். உள்ளூர் அபிவிருத்தி தொடர்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை. உயர்ந்தபட்ச அபிவிருத்தி திட்டமாக தெருக்களை புனரமைத்தலையே காலங்காலமாக மேற்கொண்டு வருகின்றார்கள். தமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பிலோ, தமது பிரதேசத்தினுள் வாழும் மக்களிற்கு புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பிலோ போதிய கரிசணைகளை கொள்கை உருவாக்கங்களை மேற்கொள்ளவில்லை. இதன் விளைவுகளே தேசிய கட்சிகள் சார்ந்த நாட்டத்திற்கு காரணமாகின்றது.
மூன்று, உரிமைக்காக போராடும் தேசிய இனமொன்றை நெறிப்படுத்தும் அரசியல் தலைமைகள் தேர்தல் அரசியலை தவிர்த்து தேசிய அரசியலையே அனைத்து தேர்தல் களங்களிலும் அவ்இயல்புகளுக்குள் நகர்த்திட வேண்டும். உள்ளூராட்சி சபை தேர்தல் களமானது இனப்படுகொலைக்கு நீதியையோ அல்லது சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வையோ கோரும் களம் இல்லை. எனினும் தேசியத்தை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை அலகாக அமைகின்றது. உள்ளூர் அரசாங்கங்கள் சில வரையறுக்கும் குணாதிசயங்களால் அடையாளம் காணப்படுவது மிகவும் கவனமாக உள்ளது. இந்த குணாதிசயங்கள் பொதுவாக பின்வரும் ஐந்து பண்புக்கூறுகளில் கவனம் செலுத்துகின்றன. சட்ட ஆளுமை, பல்வேறு செயற்பாடுகளைச் செய்வதற்கான குறிப்பிட்ட அதிகாரங்கள், வரையறுக்கப்பட்ட மத்திய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கணிசமான வரவு-செலவுத்திட்டம் மற்றும் பணியாளர் சுயாட்சி, பயனுள்ள குடிமக்கள் பங்கேற்பு மற்றும் உள்ளூர்த்தன்மை போன்றனவே உள்ளூராட்சி அரசாங்கத்தின் பண்புகளாக அமைகின்றது. ,வை உள்ளூராட்சி கட்டமைப்பின் நிறுவன செயல்திறனை உறுதி செய்வதற்கும் ,வை அவசியமானதாகக் கருதப்படுகிறது. இப்பண்புகள் உள்ளூராட்சி கட்டமைப்புக்களூடாக வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியத்தை பாதுகாப்பதற்கு வலுவான தளமாகும். எனினும் தமிழ் கட்சிகள் உள்ளூராட்சி கட்டமைப்புக்களின் முழுமையான பண்புகளை பயன்படுத்துவதில்லை என்பதுவே பொதுமக்களினதும் அரசியல் ஆய்வாளர்களினதும் விமர்சனமாக காணப்படுகின்றது.
நான்கு, இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் ஈழத்தமிழர்கள் குறைந்தளவாயினும் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்பாக உள்ளூராட்சி அரசாங்கங்களே காணப்படுகின்றது. குறிப்பிட்ட உள்ளூர் சேவைகளை வழங்குவதற்கும், புவியியல், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் மற்றும் வருமான ஆதாரங்களைக் கொண்ட அரசாங்கத்தின் துணை உறுப்பினர்களாக ஒற்றையாட்சி ஜனநாயக அமைப்பிற்குள் உள்ள உள்ளூராட்சி கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. ,தில் வினைத்திறனான ஆட்சியை கட்டமைப்பதனூடாகவே இலங்கையில் தமிழ்த்தேசத்தினை வளப்படுத்த ,யலும். எனினும் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை தேசத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முனையும் அர்ப்பணிப்பு திறனுடன் செயற்படாமையில் உள்ளூராட்சி கட்டமைப்பினை பயன்பாட்டையும் உதாசீனப்படுத்தி கொண்டே செல்கின்றார்கள். அதனோர் வெளிப்பாடே தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலை தமது எதிர்கால தனிக்கட்சி பயணத்திற்கான பரிசோதனைக்களமாக பயன்படுத்த முனைவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழரசுக்கட்சியின் இப்பரிசோதனையின் வெற்றியும் தோல்வியும் தமிழ்த்தேசிய அரசியலுக்கே ஆபத்தானதாகும்.
ஐந்து, உள்ளூராட்சி கட்டமைப்பானது தேசிய அரசியலுக்கான பயிற்சிக்களமாக அமைகின்றது. அரசியலில் முதிர்ச்சியான அனுபத்தை பெறவும் எதிர்கார அரசியலில் வெற்றி பெறவும் உள்ளூராட்சி கட்டமைப்புக்கள் பயனுடையதாக அமைகின்றது. குறிப்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் வெற்றிக்கு பின்னால் உள்ளூராட்சி கட்டமைப்பின் பயிற்சியே அடிப்படையாகிறது. எனினும் தமிழ்த்தேசிய அரசியலில் அவ்வாறான அரசியல் நாகரீகம் வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழ்த்தேசிய அரசியலில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவர்களாகவும் பிரபல்ய தன்மையையுமே நோக்கப்படுகின்றதே அன்றி, அடிப்படை அலகிலிருந்து வளர்த்தெடுக்கின்ற மரபு பேணப்படுவதில்லை. தேசிய அரசியலில் களமிறங்க விரும்புவோருக்கு, உள்ளூர் அரசாங்கம் மிகவும் அவசியமானதாகும். ,து தொடர்பாக கருத்துரைத்துள்ள அரசியல் ஆய்வாளர் லஸ்கி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேட்புமனுவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்பு, ஒரு உள்ளூராட்சி அமைப்பில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். ஏனென்றால், அவர்கள் வெற்றிக்கு தேவையான நிறுவனங்களின் உணர்வைப் பெறுவார்கள்.' எனக்குறிப்பிடுகின்றார். அவ்வானதொரு பயிற்றுவிப்பை தமிழ் அரசியல் தரப்பினர் ஊக்குவிப்பதில்லை. இது மக்களிடமிருந்து தொலைவில் உள்ள அரசியல் தலைமைகளையே தமிழ் அரசியல் தரப்பில் உருவாக்கி வருகின்றது.
எனவே, தமிழ் அரசியல் தலைமைகள் தமது சுயலாய அரசியல் நலன்களுக்குள் தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்தும் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே உள்ளூராட்சி கட்டமைப்பை அணுகும் முறையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இது தமிழ்த்தேசிய அரசியலின் ஆபத்தான எதிர்காலத்தையே வெளிப்படுத்துகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் ஆழமாக வேரூன்ற வேண்டிய அடிப்படை அலகான உள்ளூர் கட்டமைப்பிலேயே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் வேலையினையே தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மௌனமாக கடந்து செல்லும் வரை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதை தவிர்க்க முடியாது. தென்னிலங்கை ஊழல் அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பட்ட அரகல்யா போன்றதொரு பெரும் எதிர்ப்பலை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுக்கையிலேயே தமிழ் அரசியல்வாதிகளை தமிழர்களுக்கான அரசியல் பிரதிநிதிகளாய் கட்டுப்படுத்த கூடியதாக அமையும்.
Comments
Post a Comment