ஜனாதிபதியின் யாழ் வருகையும்; நல்லிணக்க நாடக பொங்கலும்! -ஐ.வி.மகாசேனன்-
தமிழர் திருநாளை வடக்கில் கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வருகையும், மக்கள் எதிர்ப்பு போராட்டம், தொடர் விசாரணை மற்றும் கைது என்பனவே கடந்த வாரத்தில் தமிழர் தாயகத்தின் முதன்மையான தேசிய அரசியல் செயற்பாடாக அமைகின்றது. இதனைத்தாண்டி தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தம் சார்பான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்மரமாக செயற்பாட்டார்கள். எனினும் இப்பத்தியின் கடந்த இரு வாரங்களும் உள்ளூராட்சி சபை சார்ந்து தமிழரசியல் கட்சிகள் முட்டி மோதும் சுயநல அரசியல் செயற்பாடுகளே விளக்கப்பட்டிருந்தது. எனவே இவ்வாரம் ரணில் விக்கிரமசிங்காவின் யாழ் வருகை மற்றும் அது ஏற்படுத்தியுள்ள அரசியல் தாக்கங்களை தமிழ்த்தேசிய அரசியல் பரப்பின் பார்வையில் முதன்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இப்பின்னணியில் இக்கட்டுரை ஜனாதிபதியின் யாழ் வருகை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வின் தொகுப்பில் உள்ள அரசியல் தாக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி-15(2022) அன்று பொங்கல் கொண்டாடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லூர் சிவன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து, மேளதாளங்களுடன் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டதோடு அங்கு நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் பங்கெடுத்தார். ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகையில் பிரதானமாக மூன்று அரசியல் நிகழ்வுகள் முதன்மை பெறுகின்றது.
ஓன்று, தேசிய பொங்கல் நிகழ்வில் உரையாற்றுகையில் ரணில் விக்கிரமசிங்கா 13இன் அமுலாக்கம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். அதாவது, '13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். இது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்னையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்தக் கோருகின்றனர். ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்' என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 13இன் அமுலாக்கம் தொடர்பான ஜனாதிபதியின் உரை தென்னிலங்கை பேரினவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்வினை பிரச்சாரங்களை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு குறுகிய காலத்துக்குள் பிளவடையும் எனக்குறிப்பிட்டு மகாநாயக்கர்கள், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் உத்தர லங்கா சபாகயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ. மேலும், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் மாகாண சபை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டு, ஜனவரி-15அன்று மாலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வடக்கின் காணி பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து வலி வடக்கில் 110ஏக்கர், வடமராட்சி கிழக்கில் 4 360 ஏக்கர் மற்றும் குறுந்தூர் மலையில் 354 ஏக்கர் காணியும் காலங்குறிக்காது உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அத்துடன், ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் எனக்கூறப்பட்டது. பலாலி வீதியின் கிழக்கில் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அந்த பகுதியில் இராணுவத்தின் சில முக்கிய தளங்கள் உள்ளன என்று இராவணுவத்தரப்பில் கூறப்பட்டது. அத்துடன், பலாலி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள அந்த பகுதியில் கட்டடங்கள் கட்டக்கூடாது என்றும் கூறப்பட்டது. எனினும், விவசாய தேவைக்காக அவற்றை விடும்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அது பற்றி ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், அந்த விடயம் முடிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடலிலும் திருப்தியற்ற நிலைகளையும் நம்பிக்கையீனத்தையுமே கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தி இருந்தது. காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை. இது தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
மூன்று, தேசிய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நிகழ்த்தினார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை, நல்லூர் அரசடி பகுதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் மறித்தனர். வீதித் தடைகளை அகற்றிவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறிய நிலையில், இரு தரப்பாருக்கும் இடையேபெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், ஜனநாயகரீதியிலான போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீர்த்தாரைகளையும் பிரயோகித்து அமைதியின்மையை ஏற்படுத்தினார்கள். அத்துடன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஜனவரி-18அன்று மாலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்ட ஒருங்கிணைப்பாளர் மதகுரு வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துகையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் வருகையின் நிகழ்ச்சி தொகுப்புக்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு சில செய்திகளை வழங்குவதுடன், தமிழ்த்தேசிய அரசியலின் நிலையை மீண்டுமொரு முறை சுயபரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகிறது.
முதலாவது, ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது 13க்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பது தேசிய பொங்கல் நிகழ்வின் உரை தெளிவாக அடையாளப்படுத்தி உள்ளது. கடந்த வருட இறுதியில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடலை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த போதிலும், தீர்வு முறைமை பற்றி எண்ணங்களை வெளிப்படுத்தாது இருந்தார். அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு இசைவான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த போதிலும், தேசிய இனப்பிரச்சினை தீர்வு பொதியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறுவதை தவிர்த்தே வந்துள்ளார். இந்நிலையிலேயே பொங்கல் தின உரையில் ரணில் விக்கிரமசிங்க 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலாக பிரச்சாரம் செய்துள்ளமை அரசாங்கத்தின் தீர்வுப்பொதி உள்ளடக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. எனினும் தமிழ் அரசியல் பரப்பிலேயே 13ஆம் திருத்தம் தொடர்பான நேர் மற்றும் எதிர் விமர்சனங்கள் பல காணப்படுகின்றது. அத்துடன் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தும் எந்தவொரு கட்சியும் 13ஐ அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி 13ஆம் திருத்தம் nhடர்பில் தென்னிலங்கையிலும் பேரினவாத தரப்பினரால் எதிரான விமர்சனங்களே உயரளவில் முன்வைக்கப்படுகின்றது. 13ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 1987ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் ஐந்து ஜனாதிபதிகள் நாட்டை ஆண்டனர். அதிகாரங்களை வழங்க யாராலும் முடியாமல் போனது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்காவின் உரை கடந்த காலங்களில் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு வழங்கிய பண்டிகை கால வாழ்த்து செய்திக்கு ஒத்ததாகவே அமைகின்றது.
இரண்டாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் இடம்பெற்ற காணிப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நல்லிணக்க நாடகத்தின் ஒரு அங்கமாகவே அமைகின்றது. நல்லிணக்க நடைமுறையாக்கம் என்பது சர்வதேசத்திடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பயன்படுத்திவரும் செயலூக்கமற்ற சொல்லாடலாகவே தொடர்ச்சியாக காணப்படுகின்றது. அதனோர் அங்கமாகவே இக்கலந்துரையாடலும் அமைகின்றது. இலங்கையின் நிறைவேற்றுத்துறை அதிகாரம் கடந்த 40ஆண்டுகால வரலாற்றில் ஜனாதிபதிகளின் சுயநல அரசியலுக்கான பல எதேச்சதிகாரமான முடிவுகனை மேற்கொண்டுள்ளது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நீக்கியது முதல் அண்மையில் கோத்தபாய ராஜபக்ஷா தமிழ் மாணவர்களை கொலை செய்ய இராணுவ வீரரை பொது மன்னிப்பில் விடுதலை செய்தது வரை பல வரலாறுகள் காணப்படுகின்றது. இத்தகைய நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை கொண்டுள்ள ஜனாதிபதி அரசாங்க முறையின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து குறித்தொதுக்கப்பட்ட காணிகளையே விடுவிக்க பணிப்புரை விடுத்த போதிலும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி செயல்வடிவத்தை காட்ட தவறியுள்ளார். இது சர்வதேசத்துக்கு காட்சிப்படுத்தலுக்கான அரசாங்கத்தின் நாடகத்தின் ஓர் அங்கம் என்பதையே வெளிப்படுத்துகிறது.
மூன்றாவது, தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்தேசிய அரசியல் கரிசணையற்ற சுயநல அரசியலின் வெளிப்பாடு மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமையினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொள்ளாமை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், தனக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடவில்லையெனவும், அழைப்பு விட்டிருந்தாலும் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் தெரிவு தொடர்பான வேலைப்பளுக்கள் இருந்தமையால் கலந்து கொள்ள இயலாத சூழலே காணப்பட்டது எனக்குறிப்பிட்டிருந்தார். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் காணப்படும் தமிழ் அரசியல்வாதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காமையால் செல்லவில்லை எனக்கூறுவது தமிழினத்தின் சாபக்கேடேயாகும். அத்துடன் 2016ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் தேசிய பொங்கல் நிகழ்வு வடக்கில் ஏற்பாடு செய்த போதும் அரசாங்க தலைவர்களுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றது. அன்று பாராளுமன்ற பிரதிநிநித்துவம் அற்ற நிலையில் அப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கலந்து முன்னிலையில் செயற்பட்டிருந்தார். எனினும் தற்போது பாராளுமன்ற பிரதிநிதியாக மக்கள் போராட்டத்துக்கு வலுவான ஆதரவை செலுத்த தவறியுள்ளார்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் யாழ்ப்பாண வருகையும் தேசிய பொங்கல் நிகழ்வு முன்னெடுப்பும் தமிழ் மக்களுக்கானதன்றி சர்வதேசத்துக்கான அரங்கேற்றமேயாகும். ஆதற்கான வெற்றியையும் அடுத்தடுத்த நாட்களில் ஜனாதிபதி பெற்றுள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெறுவதற்காக நடத்தப்பட்ட பேச்சுகளில் வெற்றி பெற்றுள்ளதாக ஜனவரி-17அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனினும், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் உடனடி பணிப்புரைகள் நாட்கள் கடந்தும் செயலற்ற சொல்லாடலாகவே தொடர்கின்றது. தமிழ் அரசியல்வாதிகள் வலுவான தேசிய அரசியல் பார்வையை கொண்டவர்களாயின் சர்வதேசத்திற்கு முன்னால் அரசாங்கத்தின் நாடகத்தை தோலுரிக்கும் முதிர்ச்சியான அரசியலை மேற்கொள்வதே இன்றைய தேவையாகும். கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கான நேர்காணலில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதோ அல்லது முழுமையாக நிராகரித்து விட்டு கட்சி அலுவலகங்களுக்குள் முடங்கி கிடப்பதோ பயனற்ற அரசியலாகவே காணப்படுகின்றது. கலந்துரையாடலில் பங்குபற்றி அரசாங்கம் செயற்பாட்டுக்கான வெளிப்படுத்தலை மேற்கொள்ளாத போது இடைநடுவில் வெளிநடப்பு செய்வது போன்ற வேறுபட்ட ஜனநாயக அரசியலில் ஏற்கப்பட்ட எதிர்ப்பு போராட்டங்களை தமிழ்அரசியல் தரப்பு கற்கவேண்டி உள்ளது.
Comments
Post a Comment