தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் வருகை; இஸ்ரேலின் ஜனநாயகத்தை சிதைக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
சர்வதேச அரசியலின் இயக்கத்தில் யூதர்களினதும் யூத அரசினதும் வகிபாகம் பிரதான நிலையை பெறுகின்றது. எனினும் யூத அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை சமீபகாலமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. 2019 ஏப்ரல் தொடக்கம் 2022 நவம்பர் வரையில் ஏறத்தாழ நான்கு ஆண்டு காலப்பகுதியில் ஐந்து பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டு நவம்பர் இறுதியாக இடம்பெற்ற தேர்தலிலும் அரசியல் கட்சிகள் எவையும் பெரும்பான்மையை பெறாத நிலையில் ஆட்சியமைப்பது தொடர்பதில் பெரும் இழுபறி நிலவியது. புதிய அரசை அமைப்பதற்கு இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக் ஹர்சொக் டிசம்பர்-25 வரை காலக்கெடு விதித்திருந்தார். காலக்கெடு விதிக்கப்பட்ட இறுதி தினத்தின் நள்ளிரவு முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போதே இஸ்ரேலிய முன்னளாள் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தலைமையில் புதிய அரசாங்கத்துக்கான உடன்படிக்கை எட்டப்பட்டது. உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை காணாத தீவிர வலதுசாரி மற்றும் மதச்சார்புடைய அரசாங்கமாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கட்டுரை இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் தேர்தல் முடிவடைந்த நிலையில், டிசம்பர்-29அன்று, இஸ்ரேலின் புதிய அரசாங்கம் பதவியேற்றது. ஏற்கனவே நாட்டின் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு-ஆறாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். புதிய அரசாங்கத்தில் நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் தீவிர தேசியவாத மற்றும் தீவிர பழைமைவாத யூதக் கட்சிகளும் இணைந்துள்ளன. அரபு எதிர்ப்பு இனவாத செயலில் ஈடுபட்டதற்காக குற்றங்காணப்பட்ட தீவிர வலதுசாரி கட்சிகளும் உள்ளடங்கியுள்ளன. மேலும், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீவிர தேசபக்தர்களுக்கு குறிப்பிடத்தக்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்குக் கரையில் குடியேறிய மத சியோனிசத் தலைவர் பெசலெல் ஸ்மோட்ரிச் நிதி அமைச்சராகவும், மேற்குக் கரையில் குடியேற்றம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கும் மற்றும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைக் கட்டுப்படுத்தும் சிவில் நிர்வாகத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரத்தை பெற்றுள்ளார். அவ்வாறே மற்றொரு குடியேற்றவாசி மற்றும் தீவிர தேசியவாத அரசியல்வாதியான சியோனிச அதிகார கட்சித் தலைவர் இதாமர் பென்-க்விர், காவல்துறைக்கு பொறுப்பான தேசிய பாதுகாப்பு அமைச்சராகி உள்ளார். இவர் இனவெறி மற்றும் பயங்கரவாத அமைப்பை ஆதரித்த குற்றத்திற்காக முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது வழிகாட்டும் கொள்கை அறிவிப்புக்களும் புதிய அரசாங்கத்தின் கடும்போக்கை மேலும் பிரதிபலிப்பனவாக அமைகின்றது. குடியேற்றங்களை விரிவுபடுத்துவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதாகவும் புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும் யார் யூதர்களாக தகுதி பெறுகிறார்கள் என்பதற்கு கடுமையான வரையறைகள் தேவை என்பதையும் புதிய அரசாங்கம் பதவியேற்ற சிறப்பு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது. அதன் பெரிய பார்வையை தெளிவுபடுத்தும் வகையில், யூத மக்களின் இஸ்ரேல் தேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பிரத்தியேகமான மற்றும் பிரிக்க முடியாத உரிமையை அறிவிக்கும் கொள்கை வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது. அது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையையும் உள்ளடக்கியுள்ளதுடன், அங்கு குடியேற்றங்களை முன்னேறி அபிவிருத்தி செய்வதற்கும் உறுதியளிக்கிறது. இது இஸ்ரேல்-பலஸ்தீன் நெருக்கடியில் புதிய பரிணாமத்தை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலிய புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனங்களும், அரசாங்கத்தின் நீதித்துறை மீதான சீர்திருத்த நடவடிக்கைகளும் தீவிர வலதுசாரி கடும்போக்கை ஆழமாக வெளிப்படுத்துகின்றது. இதனால் இஸ்ரேலிய உள்ளூர் மிதவாதிகள் மட்டுமன்றி சர்வதேச அரசியல் ஆய்வாளர்களும் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பாலஸ்தீனியர்களுடனான மோதலைத் தூண்டிவிடும், நீதித்துறையை சேதப்படுத்தும் மற்றும் சிறுபான்மை உரிமைகளை கட்டுப்படுத்தும் எனும் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கும் பேரிடியாகவே அமையக்கூடியதாகும். இந்நிலையில் இஸ்ரேலின் புதிய அரசாங்கத்தின் போக்கினை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, நெதன்யாகு தலைமையிலான புதிய அரசாங்கம் குற்றவாளிகளின் கூடாரமாக உள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமர் நெதன்யாகு, ஊழல் மற்றும் பண மோசடிக் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார். இக்குற்றச்hட்டினடிப்படையிலேயே 18 மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சியினர், நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றி இருந்தனர். நிச்சயமாக, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி மற்றும் பழமைவாத மதக் கட்சிகளின் கூட்டணி பன்மைத்துவம், சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை ஆதரிப்பவர்கள் அல்ல. புதிய உள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் கஹானிஸ்ட் இடாமர் பென்-க்விர், ஒரு தீவிர வலதுசாரி ஆத்திரமூட்டல் என்று அறியப்படுகிறார். அவர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அறிக்கைகளுக்காகவும், 1994ஆம் ஆண்டு படுகொலையில் 29 பாலஸ்தீனியர்களைக் கொன்ற யூத மனிதருக்கு ஆதரவாகவும் பிரபலமடைந்தார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கடந்த மாதம் பென்-க்விர் இஸ்ரேலிய அரசாங்கத்தில் சேருவதைப் பற்றி உலகம் கவலைப்படுவதாக கூறினார். மற்றும் நிதி அமைச்சை பொறுப்பேற்றுள்ள எடுத்துக் கொண்ட பெசலெல் ஸ்மோட்ரிச், தான் பெருமைமிக்க ஓரினச்சேர்க்கையாளராக சுயபிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் நெதன்யாகுவும் சட்டத்தின் ஆட்சிக்கு ஆதரவளிப்பவர் அல்ல. அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு ஊழல் நடைமுறைகளுக்குப் பொறுப்பேற்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக எல்லாவற்றையும் செய்துள்ளார். இதன்பின்னணியிலேயே சமகாலத்தில் இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சில முழக்கங்களில் 'குற்ற அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தின் முடிவு' என்று பிரகடனப்படுகின்றது.
இரண்டாவது, இஸ்ரேலின் கடுமையான புதிய அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு நாட்டின் நீதித்துறையின் மீது பெரும் அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாட்டை வகுக்கிறது. நீதியமைச்சர் யாரிவ் லெவின் முன்வைத்துள்ள முன்மொழிவுகள், சட்டங்களைத் தாக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு எளிய பெரும்பான்மையை அனுமதிக்கிறது. மேலும் நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்குமே கட்டுப்பாட்டைக் கொடுக்கும். நீதித்துறை நியமன நடைமுறையில் மாற்றம், இது அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க வசதியாக அனுமதிக்கக் கூடியதாகவே அமைகிறது. இஸ்ரேலின் வலதுசாரிக் கட்சிகள் நீண்ட காலமாக நீதித்துறையின் மறுசீரமைப்பைக் கோரி வருகின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக உச்ச நீதிமன்றம் பெருகிய முறையில் செயற்பாட்டாளராக மாறியுள்ளது என்றும், பரந்த இடதுசாரி நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதற்கு முறையாக வழங்கப்படாத அதிகாரங்களைப் பயன்படுத்தியது என்றும் வாதிடுகின்றனர். இவ்அடிப்படையிலேயே புதிய தீவிர வலதுசாரி அரசாங்கம் நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட மூலத்தை முன்மொழிந்துள்ளது. எனினும் பிரதமர் நெதன்யாகுவை சிறையில் இருந்து காப்பாற்றுவதற்காக நீதித்துறையை அடக்கி வைப்பதற்கான இரக்கமற்ற உறுதியுடன், மேலும் அவர் வளர்ப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நீதித்துறை அமைப்பின் மீதான நீதி அமைச்சரின் ஆழ்ந்த வெறுப்புடனும் அவர்கள் அனைத்தையும் கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டே பரவலாக முன்வைக்கப்படுகின்றது. நீதித்துறை சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க நீதித்துறையில் சாத்தியமான மாற்றங்களுடன் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், இஸ்ரேலில் அதிகாரப் பிரிவினையை அவர்கள் அடிப்படையில் மாற்றி, அதன் ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
மூன்றாவது, இஸ்ரேலின் நீதித்துறை கட்டமைப்பு மீதான சீர்திருத்தத்தை கண்டிக்கும் இஸ்ரேலிய சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இஸ்ரேல் ஜனநாயகத்தின் இறுதிக்கணங்களையே சுட்டிக்காட்டுகின்றார்கள். உச்ச நீதிமன்றத் தலைவர் எஸ்தர் ஹயூட் அவர்கள், 'இஸ்ரேலின் சட்ட அமைப்பை நசுக்க, துண்டாக்க மற்றும் அடக்க முயற்சி. இது இஸ்ரேலின் ஜனநாயக அடையாளத்திற்கு ஒரு மரண அடி' என்று முத்திரை குத்தினார். முன்னாள் நீதிமன்றத் தலைவர் அஹரோன் பராக் அவர்கள், 'மூன்றாம் கோவிலின் முடிவின் ஆரம்பம். மற்றும் இஸ்ரேலிய ஜனநாயகத்திற்கு தற்போதைய ஆபத்து தெளிவானது' என்று கூறினார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மெனகேம் மசூஸ், 'இஸ்ரேல் நெசட் மற்றும் சட்ட அமைப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரே ஒரு கிளை இருக்கும் ஒரு நாடாக மாறும் என்றும், இதை ஜனநாயகமாக கருத முடியாது' என்றும் எச்சரித்தார். 11 முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசு வழக்கறிஞர்களும் கூட்டாக இஸ்ரேலின் ஜனநாயகம் அழிவை எதிர்கொள்கிறது என்ற எச்சரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நான்காவது, புதிய அரசாங்கம் சர்வதேச விதிமுறைகளை மீறி பலஸ்தீனிய சமூகத்தின் இருப்பினை நேரடியாக அச்சுறுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. பதவியேற்பில், 'இஸ்ரேலிய மக்களுக்குத் தமது நிர்வாகம் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டுத்தரும்' என்று புதிய பிரதமர் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளார். இது அதிகம் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஒத்த பிரச்சாரமாகவே அமைகின்றது. முரண்பாடுடைய இரு சமுகங்கள் வாழும் சூழலில் ஒரு சமுகத்தினை அச்சமூட்டி நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு மற்றைய சமுகத்திற்கு அமைதியையோ அல்லது பாதுகாப்பையோ உறுதிப்படுத்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும். நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் உயர் பதவிகளை பெற்றுள்ள பலரும் பலஸ்தீனம் மீது வன்மத்தை வெளிப்படுத்தி பலஸ்தீனியர்களின் இருப்பு சார்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவர்களாகவே காணப்படுகின்றார்கள். 1967இல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140 குடியேற்றங்களில் 600,000 வரையான யூதர்கள் வாழ்கின்றனர். இந்தக் குடியேற்றங்களை பெரும்பாலான சர்வதேச சமூகம் சட்டவிரோதமானது எனக் கருதுகின்றனர். தவிர, மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசின் அனுமதி இன்றியும் சுமார் 100 சிறு சிறு குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சட்டவிரோத குடியேற்றங்களை சட்டபூர்வமாக்குவதற்கு புதிய அரசாங்க கூட்டணி உருவாக்கத்தில் தீவிர தேசியவாத மதச்சார்பு சியோனிச கட்சியுடன் நெதன்யாகு இணங்கியுள்ளார். தவிர மேற்குக் கரையை இஸ்ரேலிய ஆட்புலத்திற்குள் இணைப்பதற்கும் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். இது இஸ்ரேல்-பலஸ்தீன நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதாகவே அமையக்கூடியது. இதனூடாக பலஸ்தீனியர்களினது மாத்திரமின்றி யூதர்களின் அமைதியும் பாதுகாப்புமே நெருக்கடிக்குள் நகர்வதாக அமைகின்றது.
எனவே, தொடர்ச்சியாக ஸ்திரமற்ற இஸ்ரேலிய அரசாங்கத்தின் உருவாக்கங்கள் தற்போது ஜனநாயகத்தை முறித்து பயணிப்பதற்கான நகர்வுகளையே வெளிப்படுத்தி வருகின்றது. எனினும் நெதன்யாகு மாத்திரமே இஸ்ரேலிய வரலாற்றில் ஒரு குற்ற மந்திரி என்றும் அவரது அரசாங்கமே இஸ்ரேலிய ஜனநாயகத்தை அழிக்கும் அரசாங்கம் என்றும் தனிமைப்படுத்துவதும் யதார்த்தத்துக்கு புறம்பானதாகும். பலஸ்தீனியர்களின் இரத்தத்தால் கறை படிந்த கைகளைக் கொண்ட குற்றவாளியாக இல்லாத இஸ்ரேலிய பிரதம மந்திரியை இஸ்ரேலின் 75வருட வரலாற்றில் அடையாளப்படுத்த இயலாது என்பதே நிதர்சனமாகும். உண்மையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்திய இஸ்ரேலிய அரசாங்கமும் இல்லை. இஸ்ரேலிய ஜனநாயக அரசு என்பது எப்போதும் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வந்துள்ளது. பலஸ்தீனிய மக்களின் ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்கும் அவர்களின் அபகரிப்பைத் தொடரவும் கட்டமைக்கப்பட்ட ஒரு மாயையாகவே ஜனநாயக உருவமும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பலஸ்தீனியர்களின் ஜனநாயகம் சிதைக்கப்படுகையில் இஸ்ரேலை கொண்டடிய சமூகம் இன்று தம் இருப்புக்கு சவாலாக வருகையில் ஜனநாயகம் அழிவதாக வீதியில் இறங்கியுள்ளார்கள். இது உலகுக்கு பொதுவான எடுத்துக்காட்டாகும். பேரினவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றோ ஒருநாள் அப்பேரினவாதத்தின் எதேச்சதிகாரத்தால் அழிக்கப்படுவது நிதர்சனமாகும்.
Comments
Post a Comment