ரணிலின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடல் காலத்தை வீணடிப்பதற்கானதா? -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகள் காலங்களில் சர்வதேச பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வை கடந்த காலங்களில் கையாண்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் உடன்பாடு, 1995களில் சந்திரிக்கா அரசாங்கத்தின் தீர்வு திட்ட பொதி, 2002இல் ரணில் விக்கிரமசிங்காவின் நோர்வே மத்தியஸ்த சமாதான உரையாடல், 2015 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்க நகர்வுகள் என அனைத்தினதும் பின்புலத்திலும் இலங்கையில் அன்றைய கால நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் சர்வதேச ஆதரவை திரட்டுவதற்குமான உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வு உரையாடல்கள் கையாளப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உரையாடல்களும் அதிக சந்தேகங்களையே தமிழ்த்தரப்பினரிடையே ஆரம்பம் முதலே உருவாக்கி உள்ளது. அதனை உறுதிப்படுத்துவதாகவே ரணில் விக்கிரமசிங்காவின் சமகால நிகழ்வுகளும் அமையப்பெறுகிறது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்காவின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடலின் நடைமுறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியர்களிடம் இருந்து தீவு இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள்(பெப்ரவரி-04, 2023) நிறைவடைவதற்கு முன்னர் இலங்கையின் பல தசாப்த கால தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். அதனை மையப்படுத்தியே டிசம்பர்-13(2022)அன்று, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது பற்றி விவாதிக்க முதலாவது அனைத்துக் கட்சி மாநாட்டினை ஜனாதிபதி ஒழுங்கமைத்திருந்தார். தொடர்ச்சியாக தமிழ்க்கட்சிகளுடன் தனியாகவும் கூட்டாகவும் ஜனாதிபதி சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர். மேலும் ஜனவரி-10முதல் தமிழ் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைக்கான அறிவித்தல்களும் வந்திருந்தது. எனினும் உடனடியாக நிறைவேற்றக்கூடிய அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் காணி விவகாரங்களில் ஜனாதிபதி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளினடிப்படையில் செயற்படவில்லையெனக்கூறி தமிழ்க்கட்சிகள் ஜனாதிபதியுடனான தொடர் பேச்சுவார்த்தையை நிராகரித்திருந்தனர். அதேவேளை தேசிய பொங்கல் நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி அபகரிப்பு விவகாரம் தொடர்பான கலந்துரையாடலில் தமிழ்க்கட்சிகள் கலந்து கொண்டிருந்தனர். எனினும் சந்திப்புக்கள் யாவும் உரையாடலுடனேயே நிறைவுறுகின்றதே தவிர ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான எவ்வித முன்சமிக்ஞைகளையும் இக்கட்டுரை எழுதும் வரை வெளிப்படுத்தியிருக்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியிலேயே ஜனவரி-26ஆம் திகதி இரண்டாவது சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு முலாம்பூசி தொடர்ச்சியாக பிரச்சாரங்களையும், சந்திப்புக்களையும், மாநாடுகளையும் நிகழ்த்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா செயற்பாட்டு தளத்தில் எவ்வித முன்னேற்றங்களையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இது தமிழ் மக்களிடையே ஆரம்பத்திலிருந்து காணப்பட்ட அவநம்பிக்கைகளை மேலும் பலப்படுத்துவதாகவே அமைகின்றது. சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்ட நல்லிணக்கத்தை வெளிப்படுத்த இயலாத சூழலில் அதற்கான முயற்சிகளை வெளிக்காட்டுவதற்கான மற்றொரு அவநம்பிக்கையான சூழ்ச்சியாகவே ரணிலின் செயற்பாடுகள் அவதானிக்கப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, 2022 டிசம்பர்-13அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற முதலாவது அனைத்துக் கட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய தற்காலிக மூன்று அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது. ஒன்று, அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதப்படையினரால் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான கேள்விகளுக்கான உறுதியான பதில்கள் போன்ற விடயங்கள் காணப்படுகின்றது. இரண்டு, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல். மூன்று பயனுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வழங்குவதற்காக திட்டமிடப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான உடன்பாட்டை எட்டுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது திட்டங்கள் ஒப்பந்த வரையறைகளை கொண்ட நீண்ட பொறிமுறைகளை உடையதாயினும், முதலாவது திட்டம் உடனடி முடிவுகளின் தேவையை விதித்தது. எனினும் முதலாவது சர்வகட்சி மாநாட்டு நிறைவுற்று ஒரு மாதங்களை கடந்து இரண்டாவது சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு விடுத்துள்ள போதிலும், உடனடி முடிவுகளுக்கான எவ்வித முன்னேற்றங்களையும் அரசாங்க தரப்பு ஆக்கபூர்வமாக வெளிப்படுத்த தவறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதப்படையினரால் கைப்பற்றப்பட்ட தனியார் காணி விவகாரத்தில் கிழக்கினை தவிர்த்து வடக்கு பற்றிய உரையாடலை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். அதிலும் உறுதியான செயற்பாடுகளை தவிர்த்து தொடர்ச்சியாக உரையாடலுக்கான களத்தையே நகர்த்தி சென்றுள்ளார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியிடம் நீதிகேட்டு போராடிய காணமலாக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளை பொலிஸாரை கொண்டு தாக்கியமையே ஜனாதிபதியின் உடனடி தீர்வாக அமைந்தது.

இரண்டாவது, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்து, ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்டதனை தொடர்ந்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்புக்களும் செயற்பாடுகளும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சி என்பது சர்வதேச பிரச்சாரத்துக்கானது தான் என்பது திடமாக உறுதியாகிறது. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாணசபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானவை ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடன் இணைந்து ஜனாதிபதி சந்திப்பு தொடர்பான ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை ஜெய்சங்கருடனான சந்திப்பை தொடர்ந்து ஜனவரி-20அன்று மாலை திடீரென தமிழ்த் தரப்பினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக, மாகாணங்களுக்கான  காணி, பொலிஸ் அதிகாரங்களை கையளிப்பதற்குரிய நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது பற்றிய அமைச்சரவைப் பத்திரத்தினை ஜனவரி-23அன்று விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பிப்பார் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் இவ்திடீர் சந்திப்பு மற்றும் உடனடி அறிவிப்புகள் இந்திய வெளிவிவகார அமைச்சரின் சந்திப்பை தொடர்ந்து மாலையில் இடம்பெறுவது தேசிய இனப்பிரச்சினை தீர்வு ஈழத்தமிழருக்கு அவசியமானதாகினும், சமகாலத்தில் அதுசார்ந்த உரையாடல் தென்னிலங்கை அரசாங்கத்துக்கு அவசியமானது என்பது உறுதியாகிறது.

மூன்றாவது, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த உரையாலில் செயற்பாட்டு வடிவத்தில் ஒரு சிறுபகுதியை கடந்த வாரம் அமைச்சரவை பத்திரத்தினூடாக வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த அமைச்சரவை பத்திரமும் முழுமையான திட்டத்தை கொண்டிருக்காது தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசாங்கத்தின் பிரச்சார உத்தியே கையாளப்பட்டுள்ளது. அதாவது, வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில்ஃவரம்பிற்குட்பட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் அல்லது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதை ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும்; யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப கட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய விடயங்கள் ஒத்ததாகவும் இணக்கமாகவும் உள்ளன என்றவாறே அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. திகதி குறிப்பிடப்பட்டு தீர்க்கமான முடிவுகளை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தவிர்த்தே வருகின்றது.

நான்காவது, தென்னிலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை உரையாடலாக தமது நலனுக்குள் நகர்த்தி செல்ல தமிழரசியல் கட்சிகளும் தமது அரசியல் நலனுக்குள் செயற்படவே விளைகின்றார்கள். ஈழத்தமிழர்களின் தேசிய அரசியலுக்கு தேவையான எதிர்வினைவுகளை தவிர்த்து வருகின்றனர். தமிழ் மிதவாத அரசியல் கட்சிகள் தன்னிச்சையாக பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளாது. ஆனால், தமிழ் மக்களை அதிகம் எதிர்பார்க்காமல், மோசமானதை எதிர்பார்க்கத் தயாராக இருப்பதற்கு தயார்படுத்துகிறது. அத்துடன், பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தால், தமிழ்த் தேசிய தீவிரவாதப் போட்டியாளர்களிடமிருந்து வரும் விமர்சனங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மிதவாத அரசியல் கட்சிகள் விரும்புகிறது. இது தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் நலனுக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. மாறாக இலங்கை அரசாங்கத்தின் போலி அரசியல் தீர்வு நாடகத்தை சர்வதேச சமுகத்துக்கு தோலுருத்தி காட்டும் அரசியல் நகர்வுகளை தமிழ் மிதவாத அரசியல் கட்சிகளும், தமிழ் தேசிய தீவிரவாத அரசியல் கட்சிகளாயினும் எத்தரப்பும் செய்ய தயாராகவில்லை.

ஐந்தாவது, அனைத்து தெற்காசிய நாடுகளிலும் சுதந்திரத்திற்குப் பிறகு அரச அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்ட சில சலுகை பெற்ற சிறப்பு வகுப்புகளை காலனித்துவ மரபு உருவாக்கியுள்ளது. சந்தீப் வாஸ்லேகர் எனும் அரசறிவியலாளர் தெற்காசியாவில் பல்வேறு இன மோதல்களில் இந்த பொதுவான காரணிகளை அடையாளம் காட்டுகிறார். குறிப்பாக பாகிஸ்தானில் நிலப்பிரபுக்கள், இலங்கையில் தோட்ட உரிமையாளர்கள், நேபாளத்தில் அரச குடும்பம் மற்றும் பிரபுத்துவம், நகர்ப்புற இந்தியாவில் மேற்கத்திய உயர் நடுத்தர வர்க்கங்களை அங்கு நிலவும் இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக அடையாளப்படுகின்றார். அதாவது ஆட்சியதிகாரத்தில் உள்ள சலுகை பெற்ற சிறப்பு வகுப்புகளால் பின்பற்றப்பட்ட கொள்கைகள் அடிப்படையில் சில சலுகைகள் பெற்ற குழுக்களை நோக்கியவையே தவிர நிலமற்ற விவசாயிகளையோ அல்லது பெருந்திரளான மக்களையோ நோக்கி அல்ல. இந்த சிறப்பு சலுகை பெற்ற வகுப்பினரின் செல்வாக்கு அரசியல் கட்சிகளில் தேசிய கட்சிகள் யாவற்றிலும் புலப்படுகிறது. வளர்ச்சிக் கொள்கைகளில் இத்தகைய சிதைவுகள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை விளைவித்து, வன்முறை மோதல்களை ஏற்படுத்துகின்றன. இதன் பிரதிபலிப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையிலும் அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. தென்னிலங்கை அரசாங்கம் தனது சமூக நலனை முன்னிறுத்துவது போன்று, தமிழ் தேசிய முலாம் பூசப்பட்டுள்ள கட்சிகளிலும் தமது வர்க்க நலனே சமகாலத்தில் முதன்மைப்படுகின்றது. ஆதலாலேயே தமிழ் கட்சிகளும் மக்களின் தேசிய அரசியலுக்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தவிர்த்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

எனவே, ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல் என்பது முழுமையாக தென்னிலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான சர்வதேச நாட்டத்தை மையப்படுத்தியதே ஆகும். அவ்நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு உரையாடலும் இடம்பெற்றுவருகின்றது. அதேவேளை தமிழரசியல் கட்சிகளும் தமது அரசியல் நலனை மையப்படுத்தியே தேசிய இனப்பிரச்சினைக்கான உரையாடலை கையாள்கிறது. மாறாக தமிழ்த்தேசிய அரசியலுக்கான ஆக்கபூர்வ செயற்பாடுகள் எவற்றையும் செயற்படுத்த தயாரில்லாத நிலைமையையே வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது தமிழினத்தின் சாபமாகவே தொடர்கின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-