மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துக்கான தமிழரசியல் கட்சிகளின் கோரிக்கை செயலூக்கம் பெறுமா? -ஐ.வி.மகாசேனன்-
சமகாலத்தில் இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுசார் உரையாடல் முதன்மையை பெற்றுள்ளது. அதன் செயற்பாட்டு விளைவுகள் தொடர்பில் சந்தேகங்கள் காணப்படினும், தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தரப்பிடையேயான பிரச்சாரங்கள் ஊடகப்பரப்பில் வியாபித்தே காணப்படுகின்றது. குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தொடர்பான கருத்துநிலை தமிழ் அரசியல் தரப்பினரிடையே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பான தமிழரசியல் தரப்பின் நிலைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் முயற்சிகள் தொடர்பில் தமிழ்த்தரப்பில் மாத்திரமின்றி தென்னிலங்கை சிங்கள கட்சிகளிடையும் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்க ஸ்திரத்தன்மை தொடர்பிலான கேள்விகளே தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நம்பிக்கையீனத்துக்கு காரணமாகின்றது. எனினும் தமிழரசியல் தரப்பினரிடையே தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கடந்த கால முயற்சிகளின் விளைவுகளின் அனுபவங்கள் நம்பிக்கையீனத்தை உருவாக்குகின்றது. அதனை மையப்படுத்தியதாகவே மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துக்கான உரையாடல்கள் உயர் வீச்சினை பெறுகின்றது. இப்பின்னணியில் தமிழ் அரசியல் தரப்பினரிடையே மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தொடர்பில் உள்ள உரையாடல்களை அறிதல் அவசியமாகிறது.ஒன்று, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ இந்தியாவின் மத்தியஸ்தத்தை முதன்மையாக ஊடக பிரச்சாரங்களில் வலியுறுத்தி வருகின்றது. ரொலோவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், 'ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டியது அவசியமாகும்' எனத்தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாட்டுக்கு முன்னரும் இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்திருந்தார். மேலும், 'எங்களுடைய செயற்பாடுகளின்படி, பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.' எனத்தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு பங்காளி கட்சியான புளொட் மேற்பார்வை அவசியம் எனும் கருத்தை வலியுறுத்தி உள்ளது. புளொட் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், 'அரசாங்கத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். இந்தப் பேச்சுக்களில் சாதகமான நிலைமைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எதிர்வரும் காலத்திலும், அவ்விதமான நிலைமைகள் நீடிப்பது பொருத்தமற்றதாகும். ஆகவே, பேச்சுவார்த்தைகள் உரிய இலக்கினை அடைவதற்கும், அவை வெற்றி பெறுவதற்கும் அரசாங்க மற்றும் தமிழ்த் தரப்பினை வழிநடத்திச் செல்வதற்கும் மேற்பார்வை அமைந்திருத்தல் மேலும் நன்மைகளையே ஏற்படுத்தும்' எனக்குறிப்பிட்டுள்ளார்.
மூன்று, தமிழரசு கட்சியை சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னாரில் டிசம்பர்-25அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தேசிய இனப்பிரச்சிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் தேவைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ' வெறுமனே இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சர்வதேச நாடுகளுடைய மத்தியஸ்தம் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, அல்லது பிரித்தானியா இந்த மூன்று நாடுகளைச் சார்ந்த ஏதோ ஒரு நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை செய்வது என்பது காலத்தை கடத்துகின்ற செயலாகத்தான் இருக்கும். அந்தப் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கு உரிய இறைமையுடன் வாழக்கூடிய தீர்வு வரும் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை' எனக்குறிப்பிட்டுள்ளார்.
நான்கு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இந்தியாவின் மத்தியஸ்தத்தையே கோரி நிற்கின்றது. இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் இப்பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில், ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் எனக்குறிப்பிட்டு, அதில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவின் மத்தியஸ்தம் கோரவேண்டியதில்லை தொடரும் எனும் கருத்தை வெளியிட்டுள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடர்பில் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், 'தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது. இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை விடயங்களையும் இந்தியா நன்கு அறிந்துள்ளது. குறிப்பாக, 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விவகாரம் சம்பந்தமாக இந்தியா விசேடமாக கரிசனை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னரான காலத்திலும், தமிழ் மக்களின் விவகாரங்களில் இந்தியா முழுமையான பங்களிப்பினை செய்தே வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் பங்களிப்பினை புதிதாக கோரவேண்டியதில்லை. தற்போது தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின் போதும் இந்தியாவின் வகிபாகம் நிச்சயமாக இருக்கும்.' எனக்குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பல கோணங்களில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தமிழ் அரசியல் பரப்பில் உரையாடல் வெளியில் காணப்படுகின்றது. எனினும் அதன் செயலாக்கம் பல கோணங்களில் கேள்வியை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழரசியல் தரப்பின் உரையாடல்களுக்கு அப்பால் தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் மத்தியஸ்தத்தின் நிலைப்பாட்டை ஆழமாக அவதானித்தல் அவசியமாகிறது.
முதலாவது, தமிழரசியல் தரப்பிடையே மத்தியஸ்தத்துக்கான எண்ணங்கள் உரையாடல் தளத்தில் மாத்திரமே காணப்படுகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், யாவும் ஊடகப்பிரச்சார பொறிமுறையாக மாத்திரமே காணப்படுகின்றது. செயற்பாட்டு பரப்பில் எவ்விதமான நகர்வுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. தமிழரசியல் தரப்பு வரலாறு தோறும் பேச்சுப்போட்டியையே தமிழரசியலில் நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் தமிழரசியலில் பேச்சு போட்டி மட்டுமே காணப்படுகின்றது. செயற்பாட்டு தன்மை பூச்சிய நிலையிலேயே காணப்படுகின்றது. தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் கூட மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துக்கான கோரிக்கையை தமிழரசியல் தரப்பினர் முன்வைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வகட்சி மாநாட்டுக்க முன்னரான ஊடக அறிக்கையில் சி.வி. விக்னேஸ்வரன், 'தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்க வேண்டும். இதனை நான் 13ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு' எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும் சர்வ கட்சி மாநாட்டில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தொடர்பில் எவ்வித கருத்தையும் முன்வைத்திருக்கவில்லை.
இரண்டாவது, தமிழரசியல் தரப்பினர் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை திரட்சியுடன் வெளிப்படுத்த தவறுகின்றனர். தமிழ் அரசியல் கட்சிகளிடையே தனிப்பட்ட வகையில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் தொடர்பான எண்ணங்களை பொதுவெளியில் வெளிப்படுத்துகின்ற போதிலும் தமிழ் கட்சிகளின் திரட்சியாக இந்தியாவின் மத்தியஸ்தத்தை கோருவதனை புறக்கணித்து வருகின்றனர். இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 2015-2019 தேசிய அரசாங்க கால மனநிலையின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது. முக்கியமாக இந்திய மத்தியஸ்தத்தை கோருவதை சம்பந்தன் விரும்பவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை பொறுத்தவரையில் இந்தியாவின் மத்தியஸ்தத்தை கோருவதனால் சிங்களவர்கள் கோபிப்பார்கள். அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு உள்ளூர் பொறிமுறையூடாக தீர்வு காண இயலாது என்பதாகவே சம்பந்தனின் மனநிலை அமைகின்றது. ரணில் – மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியிலும் இந்தியத் தலையீட்டை தவிர்ப்பதிலேயே சம்பந்தன் ஆர்வம் காண்பித்திருந்தார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில்கூட புதுடில்லி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, 200களில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் நோர்வே அரசாங்கத்தின் பிரதிநிதியாக மத்தியஸ்தத்தை வகித்தவரும் தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம், இலங்கை இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்தியஸ்தம் தேவையற்றது என்ற கருத்தையும் எரிக் சொல்ஹெய்ம் முன்வைத்துள்ளார். இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை. மேலும் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் பிரதான வகிபாகம் ஏற்றிருந்தவரின் கருத்து மத்தியஸ்தம் தொடர்பாக முரணாக அமைகையில் தமிழரசியல் தரப்பு செயற்பாடற்கு உரைகளுக்குள் மாத்திரம் கடந்து செல்வது ஆபத்தான அரசியல் எதிர்காலத்தையே குறித்து நிற்கின்றது.
எனவே, தமிழரசியல் தரப்பு பொதுவெளியில் ஊடகங்களில் மாத்திரம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை பிரச்சாரப்படுத்துவதால் செயலூக்கமாக முடிவுகள் கிடைக்க போவதில்லை. மீளவும் ஓர் தோல்வியுற்ற அல்லது ஏமாற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடலாகவே இதுவும் அமையவே வாய்ப்புள்ளது. அரசாங்கம் இதயசுத்தியுடன் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க கோரும் தமிழரசியல் தரப்பினர் முதலில் தமது இதயசுத்தியை பரிசீலிக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றார்கள். இதய சுத்தியுடன் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை தமிழரசியல் தரப்பினர் எதிர்பார்ப்பார்களாயின், பேச்சுப்போட்டிகளை கடந்து செலலூக்கத்துடன் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை உள்வாங்குவதற்கான செயற்பாட்டை தமிழரசியல் தரப்பு திரட்சியுடன் ஆரம்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment