2024ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்றமும்! இறக்கமும்! -ஐ.வி.மகாசேனன்-
வரலாற்றை சரியாக புரிந்து கொள்வதனூடாகவே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீராக கட்டமைக்க முடியும். எனினும் ஈழத்தமிழரசியலில் கடந்த காலத்திலிருந்து படிப்பினையை பெறுவதும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சீர்செய்வதும் பலவீனமான பக்கங்களாகவே அமைகின்றது. 'வேட்டையாடும் சிங்கக்கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடையும் போது தனது வியூகத்தை மூன்றாவது தடவை மாற்றி அமைத்திடும்' என பிராணிகளின் நடத்தையியல் விஞ்ஞானக்கூற்று காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியல் கடந்த ஒரு நூற்றாண்டு கால விடுதலைப் போராட்ட அரசியலில் வினைத்திறனான அணுகுமுறையை கண்டுபிடிக்காது, வெறுமனவே கடந்த கால மாஜஜாலங்களுக்கு அரசியலை நிரப்பும் நிலைமைகளே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்தகையதொரு ஆண்டாகவே 2024ஐயும் நிறைவு செய்துள்ளார்கள். கடந்த காலங்களை போலல்லாது 2024 ஈழத்தமிழரசியலில் நிறைவான படிப்பினையை வழங்கியுள்ளது. இக்கட்டுரை 2024ஆம் ஆண்டு ஈழத்தமிழரசியலின் வெற்றி-தோல்விகளை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கையில் மாற்றம் என்பது முதன்மையான உரையாடலாக காணப்பட்டது. இம்மாற்றம் பற்றிய உரையாடலுக்குள் ஈழத்தமிழர்களின் அரசியலும் வெகுவாகவே கரைக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்றம் என்பது வெறுமனமே ரணில் மாறி அநுர வருவதனால் ஏற்படுத்தக்கூடியதா என்ற உள்ளார்ந்த அரசியலை இலங்கை மக்கள் சிந்திக்க தவறியுள்ளார்கள். ஆயினும் நீண்ட ஏமாற்றங்களின் தொடர்ச்சியாய் தமிழ் மக்கள் மாற்றம் பற்றிய அலையில் வெகுவாக கவரப்பட்டுள்ளார்கள் என்பதே எதார்த்தமானதாகும். இது 2024இல் சடுதியாக ஏற்பட்டது ஒன்றில்லை. தமிழ் மக்களிடம் மாற்றம் பற்றிய அலையை 2018ஆம் ஆண்டிலிருந்தே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் மாற்றம் பற்றிய அலையின் விளைவுகளும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியலுக்குள்ளேயே காணப்பட்டமையால், யாரும் அதனை பொருட்படுத்த தவறியிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் தேவை தொடர்பில் சரியாக உள்வாங்க தவறியிருந்தனர். அதன் விளைவாகவே 2024ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தென்னிலங்கையின் மாற்றம் பற்றிய அலைகளுக்குள் தமது கவனத்தை திசைதிருப்ப காரணமாகியது. இது தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆபத்தான திசையாக பொதுவான கருத்து மேலெழுகின்றது. இவ்இறக்கம் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் செயற்பாட்டின் விளைவு என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
ஓன்று, 2024ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அரசியலில் ஆக்கப்பூர்வமான செயற்படாக, 'ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய பொதுக்கருத்தியலை அணிதிரட்டியமை' காணப்படுகின்றது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது, இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சார்ந்ததாகும். தனிநபர் மாற்றங்கள் தேசிய இனப்பிரச்சினையில் ஆக்கபூர்வமான விளைவுகளை தரப்போவதில்லை. இவ்அடிப்படையிலேயே கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ;கரிக்கப்பட்டுள்ளது. 2009க்கு பின்னர் களநிலைமைகள் வேறுபட்டது. தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. எனவே ஈழத்தமிழர்கள் தமது அபிலாசையை மீளவும் தெளிவாக அடையாளப்படுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்கான களமாக இலங்கை ஜனாபதித் தேர்தல் ஆராயப்பட்டது. தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது பிரேரிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே இலங்கை அரச கட்டமைப்பை நிராகரிப்பதுடன், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தக் கூடிய வகையில், ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற கருத்தியல் 2010ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய அரசியலில் கருத்தியலாளர் மட்டத்தில் காணப்படுகின்றது. எனினும் 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிகதித் தேர்தல்களில் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடக்கு-கிழக்கு தழுவிய சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த முயற்சியில், தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலுடன் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஊடாக தமிழ்ப் பொதுவேட்பாளர் நடைமுறைக்கு வந்திருந்தது. இது கணிசமான வாக்கினையும் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான அரசியல் கட்சிகளான தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பின் மத்தியிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் நகத்தப்பட்டிருந்தது. பின்னணியிலேயே அதன் கணிசமான வெற்றியையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இரண்டு, இலங்கை ஜனாதிபதித் தேர்தலை தந்திரோபாயமாக இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தில் கையாண்டுள்ளனர். கடந்த கால தவறான அணுகுமுறையிலிருந்து மாற்றம் வந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்களின் அணுகுமுறையில், ராஜபக்ச எதிர்ப்புவாதம் மாத்திரமே காணப்பட்டது. ராஜபக்ச எதிர்ப்புவாதம் என்ற ஒற்றை புள்ளியில் இனப்படுகொலை இராணுவ தளபதி, இனப்படுகொலை பாதுகாப்பு அமைச்சர், இனப்படுகொலை இராணுவ ஓய்வு நிலையின் பின்னரான முகாம் பாதுகாவலன் என தொடர்ச்சியாக இனப்படுகொலையாளிகளையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்தார்கள். இது ஒரு வகையில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை தனிநபர் அரசியலாக ராஜபக்சாக்கள் மீது சுருக்குவதாக அமைகின்றது. இதனையே தென்னிலங்கையும் எதிர்பார்க்கின்றது. இனப்படுகொலை என்பது இலங்கை அரசு இயந்திரத்தின் மீது சர்வதேச ரீதியாக காணப்படும் கலங்கமாக காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் என தனிநபர்கள் மீது இனப்படுகொலை சுருங்குவதனால், ராஜபக்சாக்களை அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒதுக்குவதன் மூலம் இனப்படுகொலை சார்ந்த கலங்கத்தை துடைத்து விடலாம் என இலங்கை அரசு திட்டமிடுகின்றது. ஈழத்தமிழர்களின் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அணுகுமுறையும் அதற்கு துணை போவதாகவே அமைந்திருந்தது. 'எந்த ஒரு தத்துவமும் நடைமுறையால் மெய்ப்பிக்கப்படாது விட்டால் அது வறண்ட வாதமே; எந்த ஒரு இலட்சியமும் நடைமுறைக்கு பொருந்தாவிட்டால் அது கற்பனைவாதமே. கற்பனாவாதமும் வறண்ட வாதமும் எதிரியின் கையில் கொடுக்கப்படும் கூரிய வாள்களாகும்'. ஈழத்தமிழர்களின் கடந்தகால அணுகுமுறைகள் எதிரிக்கு சேவகம் செய்வதாக அமைகின்றது. அதிலிருந்தான மாற்றத்தை 2024இல் இனங்காட்டியுள்ளமை ஆரோக்கியமான ஏற்றமாகும்.
மூன்று, ஈழத்தமிழர் அரசியில் பொதுக்கட்டமைப்பு தொடர்ச்சியாக தோல்வியானதொரு முயற்சி என்பதையே 2024உம் உறுதி செய்துள்ளது. கடந்த கால தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியிருந்தும் தமிழ் மக்கள் அனுபவத்தை பெற தவறியுள்ளார்கள். விடுதலைக்காக போராடும் தேசிய இனத்திற்கு, தேசிய இயக்கமே உகந்ததாகும். மாறாக கட்சி நலன், தேர்தல் அரசியல் நலன் என்பவற்றோடு இயங்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது பலவீனமான களத்தையே உருவாக்கக்கூடியதாகும். தமிழ்த் தேசிய அரசியலையும் ஜனநாயக போராட்ட உத்தியாக கையாளக்கூடிய தேசிய இயக்கமே தமிழரிசியலின் தேவைப்பாடாகும். பொதுக் கட்டமைப்பு மற்றும் பொது வேட்பாளர் என்பன ஈழத் தமிழர் அரசியலுக்கு புதியதோர் தளத்தை திறந்து விட்டது. குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான ஒரு சக்தியாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு அடையாளம் காணப்பட்டது. எனினும் பொதுக்கட்டமைப்புக்குள் தேர்தல் அரசியல் நலனை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் உள்வாங்கப்பட்ட நிலையில், பொதுக் கட்டமைப்பு ஈழத்தமிழரசியலில் சாத்தியம் இல்லை என்ற தொடர்ச்சியான அனுபவத்தையே 2024ஆம் ஆண்டு பொதுக் கட்டமைப்பு முயற்சியும் வெளிப்படுத்தியிருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த குறுகிய கால இடைவெளியில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், பொதுக் கட்டமைப்பின் தொடர்ச்சி தன்மை கேள்விக்குறியாகியது. அத்துடன் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒரு பங்காளராகியம் வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் பொதுத்தேர்தல் சார்ந்த முரண்பாட்டால் தொடர்ச்சியாக செயற்பாடற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது வேட்பாளர் பெற்றுக் கொண்ட இரண்டு லட்சம் வாக்கிற்கும் பொது வேட்பாளரால் முன்னிறுத்தப்பட்ட தமிழ் தேசிய அரசியலுக்கும் பொறுப்பு கூற யாரும் இல்லாத நிலையில், இரண்டு லட்சம் வாக்குகளும் தமிழ் மக்களும் தொடர்ச்சியாக மீளவொரு தடவை அனாதரவாக்கப்பட்டுள்ள நிலைமை காணப்படுகின்றது.
நான்கு, தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தோற்றுப் போய் உள்ளது என்ற செய்தியையும் 2024ஆம் ஆண்டு விட்டு செல்கிறது. தமிழரசு கட்சியின் 2024ஆம் ஆண்டில் தனது 75வது ஆண்டை நிறைவு செய்கின்றது. எனினும் அக்கட்சியினால் குறைந்தபட்சம் கட்சியின் மத்திய குழு, பொதுக் குழு என்ற என்ற மட்டத்தில் கூட தமது பவளவிழாவை கொண்டாட முடியவில்லை. தனியன்களாக ஒரு சில அரசியல்வாதிகள் தமது கட்சி அலுவலகங்களுக்குள் தமிழரசு கட்சியின் பவள விழாவை சுருக்கியமையை பேஸ்புக் தளங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. இதன் பின்னனியில் தமிழரசு கட்சியின் உள்ளக மோதல்களும், தனிநபர் நலன்களின் மேலேதிக்கமுமே அவதானிக்க கூடியதாக உள்ளது. பவள விழாவின் சிறப்பாக தமிழரசு கட்சி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை புதிய புதிய வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளும் கணிசமாக வீழ்ச்சியையே வெளிப்படுத்தி உள்ளது. தமிழரசு கட்சியின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக 2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களை பெற்றிருந்தது. 2024ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி வெறுமனவே 8 ஆசனங்களையே பெற்றுள்ளது. இதனை தமது கட்சியின் வெற்றியாக தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் புலகாங்கிதம் அடைவது கட்சியின் பலவீனமான எதிர்பாலத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஐந்து, 2018க்கு பிறகு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சி தமிழ் தேசிய அரசியலை ஒரு போட்டி அரசியலுக்குள் நகத்தி இருந்தது. பொதுவாக நமது ஊர்களில் கூறுவது போல், 'கீரை கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்' என்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சி வரவேற்கப்பட்டது. குறிப்பாக அன்றைய காலப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவும் தனியான ஆதிக்கம், அசண்டை மற்றும் எதேச்ச அதிகாரத்தையும் உருவாக்கியது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறியது. துமிழ் மக்கள் தமிழ்த் தேசிய முலாமுக்குள் மாற்றத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய விளக்கங்களில் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சி மாற்றி அரசியலாகவும், தமிழ் தேசியத்தை சரியான பாதையில் நெறிப்படுத்தக்கூடிய ஒரு எதிர்த்தளமாகவும் அவதானிக்கப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் கணிசமான வாக்குகளை பெற்று தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக இரண்டு ஆசனங்களை பெற்றிருந்தார்கள். எனினும் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய அல்லது பாராளுமன்ற வெற்றிக்கு முன்னர் தமிழ் மக்களிடம் விதைக்கப்பட்ட நம்பிக்கையை பாதுகாக்க கூடிய வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு அமைந்திருக்கவில்லை என்பது 2024 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம், 'தாங்கள் மக்களுடன் கணிசமான தொடர்பை பேணவில்லை. அவ்வடிப்படையிலேயே தங்களுடைய வீழ்ச்சி காணப்படுகின்றது' என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தார். இது ஆரோக்கியமானதாகும். எனினும் தோல்விக்கு பின்னர் படிப்பினை பெற்று மக்கள் அரசியலுக்கான களம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளதா என்பதை நோக்குமிடத்து தெளிவான முன்னேற்றங்களை அவதானிக்க முடியவில்லை.
ஆறு, தமிழ் தேசிய முலாம்பூசப்பட்ட கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து உள்ள தமிழ் மக்கள் கவர்ச்சிகரமான விம்பங்களுக்கு பின்னால் இழுத்தடிக்கப்படும் ஒரு களச் சூழலை 2024 வெளிப்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றியும், தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களை பெற்றுள்ளமையும் அத்தகைய பிம்பத்தின் பின்னால் தமிழ் மக்கள் இழுத்து அடிக்கப்பட்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தேசிய அரசியல் என்ற விம்பத்தில் தமது சுயநல பொருளாதாரங்களை இயக்கிக் கொண்டு, பொதுவெளியில் தனியே தேசிய இனப் பிரச்சினையை மாத்திரமே விவாதித்து வந்துள்ளார்கள். தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினை தொடர்பில் சரியான கரிசனையை வெளிப்படுத்த தவறி இருந்தார்கள். 2009க்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனிநாட்டு அரசியல் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தை நடாத்திய போதிலும், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான பொருளாதாரங்கள் தொடர்பில் கவனத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். எனினும் 2009க்கு பின்னர் தனித்தனியே புலம்பெயர் சமூகத்தின் பொருளாதார ஒத்துழைப்புகள் வடக்கு-கிழக்கில் நிறைந்து காணப்படுகின்றது. இதனை ஒருங்கிணைத்து சகலரும் பயனடைய கூடிய வகையிலான ஓர் பொறிமுறையை தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் செய்ய தவறியது. தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் தமிழ் மக்களுடன் மக்களின் எண்ணங்களுடன் பயணிக்க தவறியுள்ளார்கள்.
எனவே, 2024ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய அரசியலின் ஏற்ற இறக்கம் என்பது அரசியல் கட்சிகளின் பலவீனத்திலேயே கட்டமைக்கப்பட்டது. இதனை சீர்செய்யக்கூடிய உத்தியை கண்டறிவதனூடாகவே எதிர்காலத்தை கட்டமைத்து தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாக்க முடியும். இதில் வெற்றி என்பது வடக்கு-கிழக்கு சிவில் சமுக கூட்டிணைவின் மீதான தமிழ் மக்கள் நம்பிக்கையே ஆகும். ஆதனை ஆதாரமாக கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் எதிர்காலத்தை கட்டமைக்க ஒன்;றிணைய வேண்டும்.
Comments
Post a Comment