மேற்காசியாவில் மீளுருப்பெற்றுள்ள சிரிய உள்நாட்டு போர் இரத்தக்களரி வரலாற்றின் நீட்சியாகும்! -ஐ.வி.மகாசேனன்-
அரசியல் தொடர்பில் இலட்சியவாத கருத்துக்கள் பல கட்டமைக்கப்பட்டாலும், அரசியல் அதிகாரத்திற்கான மையத்திலேயே சுழலுகின்றது என்பதையே நடைமுறையான எதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது. சர்வதேச அரசியலை ஏதொவொரு வகையில் யுத்தம் பற்றிய செய்தி வீச்சு ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக மேற்காசியாவில் இரத்தக்களரி நிலையானது என்பது தவிர்க்க முடியாத எதார்த்தமாகவே மாறியுள்ளது. ஓராண்டை கடந்து நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லாவின் ஈடுபாடு மற்றும் ஈரானின் உள்ளடக்கம் பிராந்தியப் போருக்கான அச்சுறுத்தலை உருவாக்கியிருந்தது. இது நிலையான முடிவற்ற சூழலில், மேற்காசிய பிராந்தியத்தில் மற்றொரு உள்நாட்டு யுத்தம் என்பது மீள உருக்கொண்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டு யுத்தம் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. மேலும், இவ்யுத்தம் அதிகளவில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தலையீட்டால் பாதிக்கப்படுகின்றது. அரசு படைகளுக்கு ரஷ;சியா மற்றும் ஈரானின் ஆதரவு கிடைப்பதுடன், கிளர்ச்சிப்படைகளுக்கு அமெரிக்க ஆதரவு வழங்கி வந்துள்ளது. இக்கட்டுரை 2024இன் இறுதியில் மீள உருக்கொண்டுள்ள சிரிய உள்நாட்டு யுத்தத்தின் அரசியல் தாக்கத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் ஒரு புதிய கிளர்ச்சிக் கூட்டணி நவம்பர்-27(2024)அன்று திடீர் தாக்குதலை நடத்தியதை அடுத்து, சிரியாவின் உள்நாட்டுப் போர் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, எதிர்ப்புப் படைகள் அலெப்போவின் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது முதல் முறையாகும். இது முறையாக முடிவடையாத போரின் முட்டுக்கட்டையைத் தகர்த்தது. கடந்த ஒரு தசாப்த கால சிரியாவின் இரத்தக்களரி வரலாறு 300,000க்கும் அதிகமானவர்களைக் கொன்றது மற்றும் கிட்டத்தட்ட 6 மில்லியன் அகதிகளை நாட்டிற்கு வெளியே அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியான புதுப்பிக்கப்பட்ட மோதலின் வடிவமாகவே நவம்பர்-27அன்று ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) மற்றும் நட்பு பிரிவுகள் தாக்குதலை ஆரம்பித்திருந்தன. விரைவாகவே நவம்பர்-30அன்று பெரும் எதிர்ப்பை சந்திக்காமல் அலெப்போவில் பெரும்பாலான நகரங்கள் மற்றும் அரசாங்க மையங்கள் மற்றும் சிறைச்சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மீளுருப்பெற்றுள்ள உள்நாட்டுப்போரில் குறைந்தது 327பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் போராளிகள். ஆனால் 44பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போர், பினாமி போர்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள், இஸ்லாமிய அரசின் (IS) படையெடுப்பு ஆகியவை சிரியாவை வெவ்வேறு கட்டுப்பாட்டு மண்டலங்களாக கட்டமைத்துள்ளது. வடமேற்கு சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களின் சில பகுதிகள் எதிர்க்கட்சி கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. தற்போது 'இராணுவ நடவடிக்கைக் கட்டளை' என்ற புதிய கூட்டணி அலெப்போ நகரைக் கைப்பற்றியுள்ளது. இது இஸ்லாமிய பிரிவுகள் முதல் மிதவாதிகள் வரை பரந்த அளவிலான எதிர்ப்பு சக்திகளால் ஆனது. இக்கூட்டணியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு வழிநடத்துகிறது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழு என்பது அல்-கொய்தாவின் முன்னாள் சிரியா கிளையின் தலைமையிலான ஒரு ஜிஹாதிஸ்ட் கூட்டணியாகும். இந்தக் குழு அல் கொய்தாவுடனான உறவை அதிகாரப்பூர்வமாக துண்டித்து, இட்லிப்பில் உண்மையான ஆட்சியாளராக இருந்து வருகிறது. துருக்கியினால் ஆதரிக்கப்பட்ட குழுக்களும், முன்னர் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட மற்றவர்களும் அவர்களுடன் இணைந்துள்ளனர். மேலும் சிக்கலாக்கும் வகையில் சிரிய ஜனநாயகப் படைகளும் (SDF) பங்களித்துள்ளது. சிரிய ஜனநாயகப் படையின் முதுகெலும்பு 'மக்கள் பாதுகாப்பு அலகுகள்' (YPG) எனப்படும் ஒரு குர்திஷ் போராளிகள் ஆகும். சிரிய ஜனநாயகப் படையில் குர்திஷ் போராளிகள் ஈடுபாட்டில் அமெரிக்காவின் வகிபாகம் முதன்மையானது. இது ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக போராடியது. அதன் பிராந்திய இருப்பை திறம்பட முடிவுக்கு கொண்டு வந்தது. கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவான அண்டை நாடான துருக்கி மக்கள் பாதுகாப்பு அலகினை பயங்கரவாத அமைப்பாகக் கருதும் குழுவின் நீட்சியாகக் கருதுகிறது. இப்பின்னணியில் கிளர்ச்சிக்குழுக்களின் புதிய கூட்டணி சிக்கலானதாகவே அமைகின்றது. எனினும் இது கடந்தகால மரபின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. அவர்களின் சித்தாந்தங்கள் வேறுபடுகின்ற போதிலும் பொதுவான எதிரியை எதிர்கொள்கின்றனர்.
எமிராட்டி ஜனாதிபதியுடன் ஒரு தொலைபேசி அழைப்பில், சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத், 'பயங்கரவாதிகள் எவ்வளவு பெரிய தாக்குதல்களை நடத்தினாலும் அவர்களை தோற்கடிப்பதாக' சபதம் செய்துள்ளார். சிரியாவின் போரிடும் கட்சிகளுக்கு இடையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கையகப்படுத்தல் பிராந்தியம் முழுவதும் அலைகளை அனுப்பியுள்ளது. இந்தப் போரானது 'விளையாட்டை மாற்றக்கூடியதாக' இருக்கலாம் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு நிறுவனத்தில் நீண்டகால சிரியா ஆய்வாளரான சார்லஸ் லிஸ்டர் தெரிவித்துள்ளார். இவ்உள்நாட்டுப் போரின் மீளுரு எதிர்ப்புக்குழுவின் நீண்ட திட்டமிடலின் பயனாகவே சர்வதேச அரசியல் நிபுணர்களால் சுட்டிக்கப்பட்டப்படுகின்றது. கிளர்ச்சிப் போராளி ஒருவர் முகமது ஹம்மாடி என்பவர் அலெப்போவின் மையத்தில் யுகுP செய்திச்சேவையிடம், 'பல ஆண்டுகளாக நாங்கள் இதற்காகக் காத்திருக்கிறோம்' எனக்குறிப்பிட்டுள்ளார். இதனை அறிவியல்பூர்வமான சான்றுகளுடன் கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்கு பல மாதங்களாகத் தயாராகிவிட்டதாக சர்வதேச நெருக்கடிக் குழுவின் சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சியாளர் டேரீன் கலீபா சுட்டிக்காட்டியுள்ளார். 'அவர்கள் ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிரான ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இதை வடிவமைத்துள்ளனர். ஆனால் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பரந்த பிராந்திய மற்றும் புவி மூலோபாய மாற்றத்தையும் பார்க்கிறார்கள்' எனத்தெரிவித்துள்ளார். குறிப்பாக அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த அதே நாளில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.
2011ஆம் ஆண்டில் அரபு உலகில் பெரிய அலையை உருவாக்கிய 'அரபு வசந்தம்' சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கும் நெருக்கடியை உருவாக்கியது. அரபு உலகில் துனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் எதேச்சதிகாரர்களை வீழ்த்தியது. மற்றும் யேமன், பஹ்ரைன் மற்றும் சிரியாவில் வெகுஜன எதிர்ப்புகள் வெடித்தது. இந்நிலையில் அசாத் வம்சத்தின் ஆட்சிக்கு பலராலும் இறுதிக்காலம் முன்னறிவிக்கப்பட்டது. 1971இல் சிரியாவில் இன்றைய சிரிய ஜனாதிபதியின் தந்தையான ஜனாதிபதி ஹபீஸ் அல்-அசாத்தின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது. அவர் 2000ஆம் ஆண்டு மரணிக்கும் வரை ஜனாதிபதியாக இருந்தார். ஹபீஸ் அல்-அசாத்தின் காலத்தில் 'எங்கள் தலைவர் என்றென்றும்' என்பது சிரியாவில் அடிக்கடி காணப்பட்ட ஒரு முழக்கமாகவே காணப்பட்டது. மரணம் ஜூன்-2000இல் ஹபீஸ் அல்-அசாத்தின் ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்தது. எனினும் அவரது ஆட்சி, அவரது மகன் பஷர் அல்-அசாத்தின் தலைமையில் சிரியாவில் நிலைபெற்றது. 2011ஆம் ஆண்டு அரபு வசந்தத்தின் தாக்கம், நாற்பதாண்டு கால அசாத் வம்ச ஆட்சியின் உயிர்வாழ்வை கேள்விக்குறியாக்கும் தருணத்தை உருவாக்கியது. ஆனால் சிரியாவின் நட்பு நாடுகளான ஈரான், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ரஷ்சியா ஆகியவை உதவிக்கு வந்தன. அதன் விளைவாக ஒரு தசாப்தத்துக்கு மேலாக சிரியாவின் உள்நாட்டு போராட்டம் அடிக்கடி தீவிர எதிர்ப்புக்கும் இடையே அந்த இடத்தில் உறைந்து கிடக்கிறது.
சமகாலத்தில் சிரியாவின் பிரதான கூட்டாளிகளான ரஷ்சியா, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. ஒன்று, 2015 செப்டம்பரில் சிரியாவிற்கு துருப்புக்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி சிரிய அரசாங்கத்தை ரஷ்சியா பாதுகாத்திருந்தது. எனினும் தற்போது ரஷ்சியாவின் முதன்மையான முன்னுரிமை உக்ரைன் போரில் அடைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்து ரஷ்சியா-உக்ரைன் போர் முடிவற்று நீள்கிறது. இரண்டு, அசாத்தை அதிகாரத்தில் வைத்திருக்கவும் மூலோபாய பிராந்திய தடம் பாதுகாக்கவும் ஒரு விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக ஈரான் சிரியாவில் இராணுவ பிரசன்னத்தை பராமரித்து வருகிறது. ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக கட்டிடத்தின் மீதான வான்வழித் தாக்குதல் உட்பட அதன் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கடந்த ஆண்டுகளில் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டது. இது ஒரு உயர்மட்ட இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தளபதியைக் கொன்றது மற்றும் இஸ்ரேல் மீது தெஹ்ரானின் முதல் நேரடித் தாக்குதலைத் தூண்டியது. இதனூடாக சிரியாவில் ஈரான் துருப்பு பலவீனப்பட்டதாகவே இனங்காணப்பட்டுள்ளது. இறுதியாக, சிரிய உள்நாட்டுப் போரின் இருண்ட நாட்களில் ஆட்சியை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஹிஸ்புல்லாஹ், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதிக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட தனது படையை பெரும்பாலும் லெபனானுக்கு நகர்த்தியிருந்தது. போராளிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் இழந்த பிரதேசத்தை மீண்டும் அசாத் பெற உதவுவதில் ஹிஸ்புல்லா உதவியாக இருந்தது. அதன் போராளிகள் சிரியாவின் ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்களுக்கும் அல்-கொய்தாவுடன் இணைந்த நுஸ்ரா முன்னணிக்கும் எதிராக அசாத்தின் சார்பாகப் போரிட்டனர். சிரியா தனது சொந்த நாடான லெபனானில் தனது ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை அமைப்பதற்கு அமைப்புக்கு முதன்மை தளவாட முதுகெலும்பாக பணியாற்றியுள்ளது. கடந்த ஓராண்டில், ஹிஸ்புல்லாவின் சண்டைப் படைகள் இஸ்ரேலை நோக்கி தங்கள் கவனத்தை மாற்றி, சிரியாவிலிருந்து லெபனானுக்கு துருப்புக்களை அழைத்துள்ளது. இஸ்ரேல் லெபனானில் குழுவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது மற்றும் குழுவின் பல உயர்மட்ட தளபதிகளை அழித்துள்ளது. இப்பின்னணியில் சிரியாவின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்சியா, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியன அழுத்தத்திற்கு உள்ளாகி தங்கள் பாதுகாப்பைக் குறைக்கின்றன என்பதே வெளிப்படையான விளக்கமாகும். இச்சந்தர்ப்பத்தை சரியாக கணித்ததனூடாகவே கிளர்ச்சிக்குழுவின் தாக்குதல் விரைவாக சிரியாவின் மூலோபாய நகரை விரைவாக கைப்பற்ற ஏதுவாகியது.
எனவே, கிளர்ச்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் அசாதாரண எழுச்சியை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இது பல மேற்கு ஊடகங்களாலும் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமான சூழலை முன்னறிவிப்பதாக அமைகின்றது. குறிப்பாக அசாத் வம்சத்தின் 1971 முதல் 53 ஆண்டுகளாக ஆட்சியின் இறுதித்தருணங்களை முன்னறிவிக்கின்றனர். எனினும் இதன் சாத்தியப்பாட்டை எதார்த்தத்தின் நடைமுறை விடயங்கள் புறக்கணிப்பதாகவே உள்ளது. ரஷ்சியா வான் பாதுகாப்பில் தொடர்ச்சியான ஈடுபாட்டை வழங்கியுள்ளது. சர்வதேச சக்திகளின் ஈடுபாடு போரின் நீட்சிக்கே வழிகோலக்கூடியதாகும். ரஷ்சிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய அதன் நிகழ்நிலை சாட்சியமாக அமைகின்றது. அதேவேளை எதிர்ப்புக் கிளர்ச்சியாளர்கள் பொதுவான எதிரியை மையப்படுத்தி ஒன்றிணைகின்ற போதிலும், அவர்களின் நிலைத்திருப்பு கேள்விக்குறியானதாகவே அமைகின்றது. அவர்கள் ஒரு பொதுவான எதிரியைப் பகிர்ந்து கொண்டாலும், பல்வேறு கிளர்ச்சிப் பிரிவுகள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டு, சிரிய இராணுவத்தை சவால் செய்யத் தேவையான ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இவ்வாறான பின்னணியில் சிரிய உள்நாட்டுப்போர் மேற்காசிய பிராந்தியத்தில் மற்றுமொரு இரத்தக்களரியின் நீட்சியை ஆரம்பித்துள்ளது.
Comments
Post a Comment