தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போலிகள் அவிழ்கின்றதா! மக்கள் விழிப்படைவார்களா! -ஐ.வி.மகாசேனன்-
அரசியல் என்பது சர்வதேச ரீதியாகவே அதிகம் போலிகளால் கட்டமைக்கப்பட்டதாகவே அமைகின்றது. அதிகார சக்திகள் தமது நலன்களுக்குள் போலிகளை வடிவமைக்கின்றது. இது சர்வதேச மட்டத்திலிருந்து உள்ளூராட்சி மட்டம் வரை தொடர்கிறது. நவீன அரசறிவியலின் தந்தை என அழைக்கப்படும் மாக்கியவல்லியின் அரசியர் தொடர்பான பொருள்கோடல் ஒன்றில், 'முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றது' எனப் பதிவாகிறது. இது அரசியல் நடைமுறையின் போலி தன்மையே வெளிப்படுத்துகின்றது. அரசியல் கோட்பாடுகள் அறம், தர்மம் தொடர்பாக பாரியளவில் குறிப்பிடுகின்ற போதிலும், அரசியல் நடைமுறை என்பது வெறுமனவே விளைவு சார்ந்ததாகவே அமைகின்றது. கோட்பாடுகள் தத்துவார்த்தங்கள் யாவும் போலியான அரசியலின் முகமூடிகளாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசியலிலும் கடந்த கால ஆட்சியாளர்கள் போலிகளில் தம்மை வடிவமைத்த போதிலும், அவர்களது விளைவுகள் போலிகளை அடையாளப்படுத்துவதாக அமைந்தது. அவற்றின் படிப்பினைகளில் இருந்து ஆட்சி அமைத்துள்ள ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போலிகளை உரையாடல்கள் மூலம் மூடி மறைக்க முற்படுகின்றார்கள். இக்கட்டுரை கடந்த மூன்று மாத காலங்களில் அவிழ்க்கப்பட்டுள்ள தேசிய மக்கள் கட்சியின் போலிகளை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர்-21 ஜனாதிபதி தேர்தல் வெற்றியூடாக இலங்கைத்தீவில் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பிரச்சாரங்களில் குறிப்பிட்டதை போன்று உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவொரு வகையில் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்காவிற்கு ஏற்பட்ட அலையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான உத்தியாகவே அமைந்தது. விமர்சனங்களுக்கு அப்பால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அத்தகைய நடவடிக்கை அவசியமானதென்பது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே அமைகின்றது. நவம்பர்-15அன்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தவிர்ந்த இலங்கை முழுவதிலும் தேசிய மக்கள் சக்தி பலமான வெற்றியை பெற்றுக் கொண்டது. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு விகிதாசார தேர்தல் வரலாற்றில் தனிக்கட்சியாக ⅔ ஆதரவைப்பெற்று 159 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. இதுவொரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக அமைகின்ற போதிலும், இன்னொரு தளத்தில் நெருக்கடியையும் வழங்கியுள்ளது. கடந்த கால அரசாங்கங்களைப் போன்று, 'பாராளுமன்றத்தில் போதிய ஆதரவை பெற முடியாமையால்' அரசியல் மாற்றத்தை மேற்கொள்ள முடியவில்லை எனும் சாட்டு போக்கு காரணங்களை ஒப்புவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அநுரகுமார திசநாயக்க நிறைவேற்று அதிகாரத்தை பெற்று மூன்று மாதங்களும், அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாராளுமன்றில் ⅔ பெரும்பான்மை ஆசனங்களோடு உறுதியான அரசாங்கத்தை உருவாக்கி ஒரு மாதங்களையும் நெருங்குகிறது. எனினும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் ஈடேற்றத்தின் அளவீட்டு வீதம் கேள்விக்குறியானதாகவே அமைகின்றது. ஓர் அரசியல் கட்சி மீதான அபிப்பிராயங்கள் அவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பி கடந்த காலங்களில் ஆளுந்தரப்பின் பிரதான அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை. 2004ஆம் ஆண்டில் ஏப்ரல் தொடக்கம் டிசம்பர் வரை ஆறு மாத கால அமைச்சரவையில் இடம்பிடித்த போதிலும், அரசாங்கத்தின் முடிவுகளை நிராகரித்து அமைச்சரவையிலிருந்து விலகினார்கள். நீண்டகாலம் எதிர்த்தரப்பாக ஆளுந்தரப்பின் செயற்பாட்டை கண்டித்து, போராட்டங்களை நெறிப்படுத்தும் தரப்பாகவே செயற்பட்டுள்ளார்கள். குறிப்பாக அரகலயவில் தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்களின் ஈடுபாடு அனுரகுமார திசநாயக்க சார்ந்த விம்பத்தை உயர்த்தியது. இந்த பின்னணியிலேயே கடந்த கால அரசாங்கங்களின் அரசியல்-பொருளாதார-சமுக செயற்பாடுகள் தொடர்பிலான தேசிய மக்கள் சக்தியின் விமர்சனங்களே அவர்கள் மீதான அபிப்பிராயத்தை அதிகரித்தது. அதனை அறுவடை செய்யும் முனைப்புடனேயே ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் 'அரசியல் மாற்றம்' என்ற கருப்பொருளில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டத்துறை என்ற முழுமையான அரசாங்கம் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், வாக்குறுதிகளில் எதை செய்யவில்லை என்பதற்கு அப்பால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் செய்யப்பட்டவற்றின் போலிகளை அடையாளங்காண்பதும் விழிப்படைவதும் அவசியமாகிறது.
முதலாவது, அண்மைக்காலத்தில் தென்னிலங்கையில் பெரும் சச்சரவை உருவாக்கிய விடயமாக அமைவது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமையின் நம்பிக்கையீனமாகும். பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரங்களில் ஒன்றாகவும் முதன்மையாகவும் 'பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவது' எனும் சுலோகம் ஆகும். சுத்தப்படுத்துவது என்பதில் கடந்த கால ஊழல்வாதிகள், இனவாதிகள் மற்றும் போதிய கல்வியறிவற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கி; புதியவர்களாயும், இளையவர்களாயும், பட்டதாரிகளூடாக பாராளுமன்றத்தை புதிதாக்குவதாக பிரச்சாரம் செய்திருந்தார்கள். காபந்து அரசாங்கத்தில் பகிரப்பட்ட அமைச்சர்களின் உயர் படிப்புகள், குறிப்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலாநிதி பட்டத்தை நிறைவு செய்தவர் என்பது உயர்வாக நோக்கப்பட்டது. பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களிலும் பட்டதாரிகள், கலாநிதிகள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் என பலதரப்பட்ட நிபுணர்களை முன்னிறுத்தியுள்ளதாகவே பிரச்சாரம் செய்தார்கள். தேர்தல் வெற்றியின் பின் உருவாக்கப்பட்ட அமைச்சரவையிலும் அது பிரதிபலிக்கப்பட்டது. அவ்வாறே சபாநாயகர் அசோக ரன்வல, மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் நிறைவு செய்ததாக குறிப்பிடப்பட்டது. எனினும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 'புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் கூறியபடி தனக்கு பட்டம் இருப்பதை நிரூபிக்குமாறு' சவால் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தென்னிலங்கையில் சபாநாயகரின் கல்வித்தகுதி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இச்சர்ச்சையை தொடர்ந்து உத்தியோகபூர்வ பாராளுமன்ற இணையத்தளமும் சபாநாயகரின் 'கலாநிதி' (Dr.) அடைமொழியை நீக்கியுள்ளது. மேலும், சபாநாயகரது ஆய்வுகளை உள்ளடக்கிய LinkedIn கணக்கும் மறைக்கப்பட்டுள்ளது. இவை சபாநாயகரின் கலாநிதி பட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகளையே எழுப்புகிறது. கலாநிதி பட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சை அவரது பொறியியல் முதுகலைமானியிலும் சிலரால் சந்தேகங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றது. மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் சபாநாயகர் M.Engineering பட்டம் பெற்று இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் M.Eng என்ற பட்டம் வழங்கப்படுவதில்லை. M.S.C Engineering என்ற பட்டமே வழங்கப்படுகிறது. இது அடிப்படையில் சபாநாயகரின் முழுமையான கல்வித் தகுதியையே சந்தேகத்திற்குள் தள்ளியுள்ளது. எனினும் தேசிய மக்கள சக்தியினர் உரிய வகையில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியையும் கேள்விக்குட்படுத்தும் சூழலையே உருவாக்கியுள்ளது. கல்வித் தகைமை சர்ச்சை தேசிய மக்கள் சக்தியின் போலித்தன்மைய பகிரங்கப்படுத்தும் செயலாக அமைந்துள்ளதாகவே அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகின்றது.
இரண்டாவது, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில் விசேடமாக ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கை அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை கடுமையாக விமர்சித்திருந்தனர். பொதுமக்களின் வரிச்சுமைக்கு சர்வதேச நாணய ஒப்பந்தத்தையே குற்றம்சாட்டியிருந்தனர். தாம் ஆட்சிக்கு வந்தால், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் மறுசீரமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடந்த அரசாங்க காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சி வரிசையில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பணியாகவும் முதன்மைப் பணியாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பாதுகாப்பதும் புதுப்பிப்பதாகவுமே அமைந்துள்ளது. இதனை மையப்படுத்தியே இடைக்கால பட்ஜெட்டையும் அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். கடந்த காலங்களில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து அரசாங்கத்திடம் ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்தக் கோரியவர்கள், தற்போது ஆளுந்தரப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை பொதுவெளிக்கு வெளியிட தயக்கம் காட்டுகின்றார்கள். இதனை மையப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, 'தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனமான வளமான நாடு, அழகான வாழ்க்கை கொள்கை ஆவணத்தின் பக்கம் 105இல் மாற்றுக்கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு உள்ளது. எனினும் அரசாங்கம் இக்கொள்கையை முழுமையாக மீறியுள்ளதாக' குற்றம்சாட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான நிலைப்பாடும் நடவடிக்கையும் எதிர்க்கட்சியாகவும் ஆளுந்தரப்பாகவும் முரணானதாகவே அமைகின்றது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.
மூன்றாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை அடையாளங்காண்பது தொடர்பில் இரு தேர்தல் காலப் பகுதிகளிலும் முதன்மையான வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள். விசேடமாக அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பின்னர், பாராளுமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட இரு மாத கால பகுதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உரையாடல்களை முதன்மைப்படுத்தி இருந்தார். பேராயருடனான சந்திப்பு, தேவாலயங்களுக்கான பயணம், பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்பு, புதிய விசாரணைக்கான ஏற்பாடுகள் என்றவாறு உரையாடல் முடக்கி விடப்பட்டது. எனினும் பொதுதேர்தலின் வெற்றிக்கு பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உரையாடல்கள் ஆழமான கவனத்தை உள்வாங்கவில்லை. அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகளை ஆரம்பித்து மூன்று மாதங்களை நெருங்குகின்றது. 90 நாட்களை அண்மித்துள்ளது. தேர்தல் காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் ஆளும் தரப்பின் மீது குற்றங்களை முன்வைக்கையில், தேசிய மக்கள் சக்தி குண்டுவெடிப்பு சூத்திரதாரர்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றவாறு விழித்திருந்தார்கள். 90 நாட்களை அண்மிக்கும் சூழலிலும் விசாரணைக்குள்ளேயே முடக்குவது, கடந்த கால அரசாங்கத்தின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகளின் இயல்பாகவே அமைகின்றது. புதிய மாற்றங்களை அடையாளங்காணக்கூடியதாக அமையவில்லை. குறைந்தபட்சம் தமது இயக்கத் தலைவர் ரோஹண விஜயவீரவின் மரணம் தொடர்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் மர்மங்களையே களையக்கூடிய விசாரணையையே ஆரம்பிக்காத சூழலே காணப்படுகின்றது. குற்றவாளிகளை இணங்காணும் விடயத்திலும் அரசாங்கம் வாக்குறுதிகள் எழுத்துக்களாக மாத்திரமே பேணுகின்றது. செயற்பாடுகள் போலித்தன்மையின் தொடர்ச்சியாகவே அமைகின்றது.
நான்காவது, ஊழல் விவகாரங்கள் தேசிய மக்கள் சக்தியின் பெரிய அலை அல்லது சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவது போன்று தேசிய மக்கள் சக்தியின் சுனாமி உருவாகுவதற்கு அடிப்படையானதாகும். தேர்தல் காலங்களில் கடந்த ஆட்சியாளர்கள் மற்றும் மரபார்ந்த அரசியல்வாதிகளை ஊழல்வாதிகளாய் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த பிரச்சாரமே அவர்களின் வெற்றியின் அடிப்படையானதாகும். அந்த கோணத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதைத் தொடர்ந்து காலிமுகத்திடல் மற்றும் சுதந்திர சதுக்கம் போன்றவற்றில் ஆட்சி மாற்றத்தில் இயல்பாய் நடைபெறும் அமைச்சுக்களின் கார் ஒப்படைப்பை பெரிய விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இது மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியுடன் அரச நிர்வாகத்தின் ஊழலின் தொடர்பு ஆழமானதாகும். ஊழலின் ஒரு பங்காளிகளாக சாதாரண பொதுமக்களும் காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் விளைந்துள்ள ஊழல் தொடர்பில் பொதுமக்களிடம் அதிக விளக்கம் காணப்படுகிறது. ஆதலாலேயே தேசிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு மக்களிடம் இலகுவாக கவரக்கூடியதாக அமைந்திருந்தது. எனினும் தேர்தல் பிரச்சாரக் காலப்பகுதியில் எதிர்க்கட்சி என்ற நிலையில் பொத்தம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த தேசிய மக்கள் சக்தி, அரசாங்க அதிகாரத்தை பெற்ற பின்னர் ஆதாரமற்ற நிலையில் ஊழல் உரையாடலை சுருக்கி விட்டார்கள். தற்போது நாமல் ராஜபக்சா போன்ற கடந்த ஆட்சியின் பிரதிநிதிகள் தமது ஊழலை நிருபிக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் செய்யும் நிலைமைகளே காணப்படுகின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் குறுகிய கால செயற்பாடுகளின் விளைவுகள் பொய்மைகளை அவிழ்ப்பதாகவே அமைகின்றது. தேர்தல் காலப்பகுதியில் விஜித ஹேரத், 'எங்கள் குறுகிய கால கொள்கை திட்டம் தோராயமாக 80 நாட்கள் ஆகும். இது பொதுத் தேர்தலை முடிப்பதற்கு எடுக்கும் இரண்டு மாதங்கள் மற்றும் புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படுவதற்கு முந்தைய காலப்பகுதியை உள்ளடக்கியது' என்று அவர் கூறினார். எனினும் 90 நாட்களை நெருங்கும் சூழலில் அவர்களின் குறுகிய கால திட்டம் யாது? அதன் செயற்பாட்டு தன்மை யாது? என்பதையும் வெளியிட திராணியற்ற நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகின்றது. ஜனரஞ்சக முகப்பில் செய்யப்பட்டவைகளிலும் போலிகள் தொடர்பான சர்ச்சைகளே நிறைந்து காணப்படுகின்றது. செயற்பாட்டின்மை மற்றும் செய்தவற்றின் போலிகளை மறைக்கவே ஜனாதிபதி மற்றும் ஏனைய அரசாங்க உறுப்பினர்களும் இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற அரசாட்சி என்ற கோசத்தை உச்சரிக்க தொடங்கியுள்ளார்கள். இது உச்சமான போலியாகும். கடந்த கால ஆட்சி மரபை பின்பற்றி அமைச்சரவையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்து புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு பேணப்பட்டுள்ளது. பல்லின சமுக கட்டமைப்பில் பௌத்தத்துக்கு தனியே அமைச்சை பேணிக்கொண்டே அரசாங்கம் இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற கோசங்களை முன்வைக்கின்றது. ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற போலியான பிரச்சாரமும், ஆட்சியதிகாரத்தை பாதுகாக்க போலியான ஜனரஞ்ச செயற்பாடுகள் என்றவாறே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 90 நாட்களை நெருங்குகின்றது.
Comments
Post a Comment