பயங்கரவாத தடைச்சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் அதிகாரத்திற்கான தந்திரோபாயமாக பயன்படுத்துகிறது! -ஐ.வி.மகாசேனன்-
கேலிச்சித்திரம் ஒன்றில் ‘PTA’ (பயங்கரவாத தடைச் சட்டம் - Prevention Terrorist Act) என்பதை குறிக்கும் வகையில் ‘Power To Anura’ (அனுராவுக்கு அதிகாரம்) என்ற விரிவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு ஆட்சியாளரும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள உயர்ந்தபட்ச பிரயோகங்களை பயன்படுத்த பின்னின்றதில்லை என்ற நடைமுறையுடனேயே அனுரகுமார திசநாயக்கவும் இசைந்து போக ஆரம்பித்துள்ளார். அதன் ஓர் அங்கமாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகம் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள் ஆட்சிக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கைதுகள் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினூடாக நெருக்கீடுகளை எதிர்கொண்டிருந்த தரப்பினர், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்களையும் கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்த ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி இன்று தமது அரசாங்க நடவடிக்கைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து வருகின்றமையே அதிக கவனத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த ஒரு வார காலப்பகுதியில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்ட பிரயோக அரசியல் தேவைப்பாடுகளை அடையாளங்காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு
வாரங்களில் ஐந்து பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
மாவீரர் நாளுக்கு அடுத்தடுத்த நாட்களில் இக்கைதுகள் ஆரம்பமாகியது. பரவலாக கைது
இடம்பெற்றுள்ளது. முதலாமவர், யாழ்ப்பாணத்தில் இணுவிலைச் சேர்ந்த குடும்பஸ்தன்
ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது பிறந்தநாளை குறிக்கும் வகையில் அவரது
புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்தமை குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார்.
டிசம்பர்-04 பிணையில் விடுதலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டு மற்றும்
மூன்றாவது நபர்கள் மருதானை மற்றும் பத்தேகமவை சேர்ந்த இளைஞர்களாகும். இவர்கள்
வன்முறையைத் தூண்டியமை மற்றும்தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை
ஊக்குவிக்கும் வகையில் பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பிய
குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது
நபராக கடந்த கால நீதிமன்ற பிடியாணையை சுட்டிக்காட்டி 2006-2009 காலப்பகுதியில்
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியவராக புலம்பெயர் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க
விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்தாவது நபர், கெலும் ஜெயசுமண
எனும் தென்னிலங்கை சமுக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பகின்றார். தமிழ்
மக்களின் மாவீரர் தின நினைவேந்தலுக்கு எதிராக பதிவிட்டுள்ளார். இப்பதிவு
இனமுரண்பாட்டை உருவாக்கக்கூடிய வகையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது என்ற
குற்றச்சாட்டில் கைது இடம்பெற்றிருந்தது. இவரும் டிசம்பர்-04அன்று பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனைத்தவிர விடுதலைப்புலிகளின் தலைவரது
பிறந்தநாள் கொண்டாட்டத்தை மையப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற எம்.கே.சிவாஜிலிங்கம்
மற்றும் இளைஞர்கள் சிலர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் மாவீரர் தின நினைவேந்தலுக்கு
எவ்வித தடை விதிக்கப்படாத போதிலும், நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றஞ்சாட்டி சில
சிவில் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
இதில் 61 வயதுடைய அம்மா ஒருவரையும் ஒருவரையும் இவ்விசானையில் அழைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
முதலாவது, தேசிய மக்காள் சக்தி தேர்தல் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதன் மூலம் மக்கள் அபிப்பிராயத்தோடு ஒன்றினைவதாக வெளிப்படுத்தி கொண்டது. தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இன்றைய ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் செயற்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒடுக்குமுறை கருவியாக அரசாங்கம் பயன்படுத்துவதாக அரசாங்கத்தின் மீது கண்டனங்களை எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக அரகலயவிற்கு பின்னரான சூழலில் ரணில்-பெரமுன அரசாங்கப் அரகலய போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்திருந்தது. இதனை கண்டித்து ஜே.வி.பி-யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு அழைப்பு விடுத்தனர். அத்துடன் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் 2023ஆம் ஆண்டு ஊடக சந்திப்பு ஒன்றில், “ஐரோப்பிய ஒன்றியம், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புக்கொண்டார். இந்த அடக்குமுறை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதுதான் உண்மையில் செய்ய வேண்டியது” எனத்தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம், 'பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் செயல்களையும் ஒழித்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாக' வெளிப்படையாக உறுதியளித்தது. இவ்வாறாக தேர்தலுக்கு முன்னர் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன், அதற்கான தந்திரோபாயமாக மக்கள் மீது அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறை சட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
இரண்டாவது, ஆட்சி அதிகாரத்தை பெற்ற பின்னர் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டது. ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட காபந்து அரசாங்க காலப்பகுதியிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் இருப்பை பாதுகாப்பது தொடர்பிலேயே அரசாங்கம் கருத்துரைத்திருந்தது. ஜே.வி.பி-யின் அரசியல் குழு உறுப்பினரும் காபந்து அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருமான விஜித ஹேரத், “இந்த நேரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ முடியாது. இந்த கொடூரமான சட்டம் புதிய ஆட்சியால் துஷ்பிரயோகம் செய்யப்படமாட்டாது” என அறிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டம் 'துஷ்பிரயோகம் செய்யப்படமாட்டாது' என்ற ஹேரத்தின் கூற்று, இந்த கொடூரமான சட்டத்தின் வரலாற்றையும் ஜே.வி.பி-யின் அரசியல் அவப்பேறையும் மூடிமறைக்க முயற்சிக்கும் இரட்டைப் பேச்சாகவே அமைந்திருந்தது. பயங்கரவாத தடைச் சட்டம் 'துஷ்பிரயோகம்' செய்யப்படவில்லை. அதன் நோக்கத்தின்படி, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும் அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகளை அபகரிப்பதற்கும் அது திட்டமிட்டபடி அடுத்தடுத்த அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டது என்பதே நிதர்சனமான கடந்த கால பதிவாகும். அத்துடன் ஜே.வி.பி இலங்கை ஆட்சியில் பங்களிப்பை வழங்கும் போதெல்லாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பாதுகாத்த மரபையே கொண்டுள்ளார்கள். 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தின் போது இந்த கொடூரமான சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. 2006ஆம் ஆண்டில் ஜே.வி.பி. மற்றும் ஏனைய சிங்கள பேரினவாத அமைப்புக்களும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று கோரி கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய வரலாறுகளும் உண்டு. அன்று ஆட்சியின் பங்காளராக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு புத்துயிர் அளித்தவர்கள், இன்று ஆட்சியாளர்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பாதுகாக்கின்றார்கள் என்பதே தெளிவாகிறது.
மூன்றாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பரவலாக தமது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயல்முறைக்கும் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் பொதுவில் எழுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி என்பதில் சமூக வலைத்தள தாக்கமும் உயர் அளவில் காணப்படுகின்றது. தேர்தல் காலப்பகுதிகளில் ஊடகப் பரப்பில் பெரிய வெளிச்சத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் இளையோர்களினை கவரும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. அதுசார்ந்த எழுச்சியே அவர்கள் வெற்றிக்கும் காரணமாகியது. தற்போது ஆட்சியதிகரத்தை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி, தமக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் வெளிப்படும் கருத்துக்களை முடக்குவதற்கான ஆயுதமாக பயங்கரவாதத்தை தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றார்களா என்பதே கைதுகளின் நுணுக்கமான அரசியல் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த தென்னிலங்கையின் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்படும் கெலும் ஜெயசுமணவின் பதிவுகள் பெருமளவுக்கு தேசிய மக்கள் சக்திக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வார காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் முகநூல் பதிவுகளை மையப்படுத்தியே கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது பொதுமக்களிடையே அரச இயந்திரம் பேஸ்புக் பதிவுகளை கண்காணிக்கின்றது என்ற செய்தியை வழங்குவதாகவும் அமைகின்றது. இது ஒரு வகையில் பொதுமக்களை எச்சரிக்கும் செயற்பாடாகவும் அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.
நான்காவது, பயங்கரவாத தடைச் சட்டம் கைதுகள் மற்றும் விசாரணைக்கான அழைப்பு நினைவேந்தல் சார்ந்த தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சியை தடை செய்யக் கூடியதாக உள்ளது. ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் கடத்தொழில் அமைச்சர் என அரசாங்கத்தின் பல உறுப்பினர்களும் ஊடகங்களில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை ஆதரித்து கருத்துரைத்துள்ளார்கள். ‘நினைவேந்தல் உரிமையை தடை செய்ய போவதில்லை; அரச இயந்திரமான காவல்துறை எத்தகைய அழுத்தத்தையும் வழங்கப் போவதில்லை’ என உறுதி அளித்து இருந்தார்கள். இது ஒருவகையில் தமிழ் மக்களை கவரும் செய்தியாக அமைந்திருந்தது. அது மட்டுமின்றி சர்வதேசத்திற்கு தங்களை நியாயவான்களாக அரசாங்கம் காட்ட முனையும் செய்தியாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ளக விசாரணை பொறிமுறையை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் அரசாங்கம், சர்வதேசத்துக்கு தங்களை தமிழ் மக்கள் சார்பாக காட்ட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. அத்தகைய பின்புலத்திலேயே தடையற்ற நினைவேந்தல் அறிவிப்புகளும் காணப்பட்டது. எனினும் மறுதளத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக நினைவேந்தல் மேற்கொண்ட பொதுமக்களை கைது செய்வதும், விசாரணைக்கு உட்படுத்துவதும் தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சியை தடை செய்யக்கூடியதாகவே அமைகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தினூடான எச்சரிக்கைகள் மற்றும் நெருக்கடிகள் எதிர்காலங்களில் பொது மக்கள் நினைவேந்தலுக்கு ஒன்று கூடுவதை தடுக்கக்கூடிய அபாயத்தை வெளிப்படுத்துகின்றது. இது ஓர் வகையில் தமிழ் மக்களுக்கு அழுத்தத்தை கொடுப்பதனூடாக தமிழ் மக்களை சுயமாக நினைவேந்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள செய்யும் செயற்பாடாகவே அமைகின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும் பாதுகாப்பதற்குமான தந்திரோபாயமாகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வந்துள்ளது. அதற்கான சான்றுகளையே அண்மைய கைதுகள் உறுதி செய்கின்றது. குறிப்பாக தென்னிலங்கையில் தமது எதிரிகளுக்கு எதிராகவும், தமிழ்ப்பரப்பில் தமிழ் மக்களின் தேசிய திரட்சியை கட்டுப்படுத்துவதற்கும் நுட்பமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றது. இதனை ‘வன்முறையைத் தூண்டியமை மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில்’ என பொதுப்பலகையினூடாக மூடிமறைத்துள்ளார்கள். ஜே.வி.பி-யின் நுட்பமான அரசியலே 2024இல் வரலாறு காணாத வெற்றியுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தபின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை நுணுக்கமாக ஆராய தவறின், தமிழ் மக்கள் தம் இருப்பை இழப்பது தவிர்க்க முடியாத எதிர்காலமாகவே அமையக்கூடியதாகும்.
Comments
Post a Comment