அசாத் ஆட்சிக்கவிழ்ப்பு சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருமா? -ஐ.வி.மகாசேனன்-

மேற்காசியாவில்  நவம்பர்-27அன்று திடீரென மீள் உருப்பெற்றிருந்த சிரிய உள்நாட்டுப் போர் புதிய திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர்-08அன்று சிரிய கிளர்ச்சிப்படை சிரியாவின் தலைநகர் கைப்பற்றியதை தொடர்ந்து, ஜனாதிபதி பஷார் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறியதனை அறிவித்தனர். அதேவேளை சிரிய பிரதமர் காஜி அல்-ஜலாலி சுதந்திரமான தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இடைக்கால காலத்தை நிர்வகிப்பது குறித்து விவாதிப்பதற்காக கிளர்ச்சித் தளபதி அபு முகமது அல்-கோலானியை அழைத்திருந்தார். இது சிரியாவின் 13 ஆண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், அசாத் குடும்பத்தின் ஐந்து தசாப்த ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை முதன்மைப்படுத்தியுள்ளது. சிரிய உள்நாட்டு போர் வெறுமனவே அசாத் நாட்டைவிட்டு வெளியேறுவதால் நிறைவு பெறக்கூடியதா என்பதே, சிரிய அரசியல் வரலாற்றை தொடர்பவர்களின் கேள்வியாக அமைகின்றது. இக்கட்டுரை சிரிய கிளர்ச்சிப்படையால் தலைநகர் டமஸ்காஸ் கைப்பற்றப்பட்ட பின்னதான அரசியல் நிலைமைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி பஷhர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ள கருத்து பிரதானமானதாகும். 'பஷார் அசாத்தின் கீழ் சிரிய அரசாங்கத்தின் திடீர் சரிவு பல தசாப்தங்களாக அடக்குமுறைக்கு பிறகு ஒரு அடிப்படை நீதிச் செயல்' என்று கூறினார். அதேவேளை, 'இது மத்திய கிழக்கிற்கு ஆபத்து மற்றும் நிச்சயமற்ற தருணம்' என்ற எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார். 'அசாத்தை வீழ்த்திய சில கிளர்ச்சி குழுக்கள் பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களில் அவற்றின் சொந்தமான கடுமையான பதிவுகளை கொண்டுள்ளன' என்று பைடன் வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றினார். இது அசாத்தின் கீழ் சிரிய அரசாங்கத்தின் திடீர் சரிவும் கிளர்ச்சிப்படையின் வெற்றியும், குறுகிய கால இடைவெளியில் பைடன் நிர்வாகத்தையும் எதிர்வரும் ட்ரம்ப் குழுவையும் மேற்காசியா முழுவதும் பெரிய மோதல்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய தீவிரமான கேள்விகளை எதிர்கொள்ள கட்டாயப்படுத்துகிறது. இது சர்வதேச அரசியலுக்கும் பொருத்தமானதாகவே அமைகின்றது.

முதலாவது, 2024இல் மீள் உருப்பெற்ற சிரிய உள்நாட்டு போரானது அல்கொய்தாவின் முன்னாள் துணை அமைப்பான ஹயாத் அல்-தஹ்ரிர் அல்-ஷhம் தலைமையிலான ஒரு போராளி கூட்டணியின் மின்னல் வேக முன்னேற்றமாகும். அல்கொய்தா மற்றும் அமெரிக்கா சார்ந்த உறவு பொதுமையானதாகும். புதிய உலகம் ஒழுங்கின் வடிவம் மற்றும் பயங்கரவாதத்திற்கான வரையறைகள் என்பன அல்கொய்தா அமெரிக்கா உறவின் அடிப்படையிலேயே சர்வதேச அரசியலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் அல்கொய்தாவின் முன்னாள் துணை அமைப்பின் மின்னல் வேக முன்னேற்றம்; 13 ஆண்டு கால சிரிய உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த வெற்றி; மற்றும் 50 ஆண்டுகால அசாத் குடும்ப ஆட்சியின் நிறைவு என்பன ஹயாத் அல்-தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினை மேலும் உயர் எண்ணங்களுக்கு நகர்த்தக்கூடியதாகும். மேலும் இக்குழு 2016இல் அல்கொய்தாவுடனான உறவுகளை முறித்து கொண்டுள்ள போதிலும், தற்போது வரை அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத பட்டியலுக்குள்ளேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இராச்சியத்தின் தேசிய பாதுகாப்பிற்கான பொறுப்பை உள்ளடக்கிய அமைச்சர் பாட் மெக்பேடன், 'குழுவை தடுப்பு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக' தெரிவித்துள்ளார். 'நிலைமை சீரானால், அங்கு எந்த புதிய ஆட்சி அமைந்தாலும், அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்று பிபிசி ரேடியோக்கு தெரிவித்திருந்தார். இதன் விளைவுகள் எதிர்வரும் காலங்களிலேயே கணிக்க கூடியதாகும்.

இரண்டாவது, ஹயாத் அல்-தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் தலைவரும் நிறுவுனருமான அபு முஹம்மது அல்-ஜோலனி அமெரிக்காவின் பயங்கரவாதியாய் நீண்ட வரலாற்றை பகிர்கின்றார். ஜோலனி சிரிய கிளர்ச்சிக்குழுவின் வெற்றியை தொடர்ந்து செய்திகளில் முன்னிலை பெறுகின்றார். 42 வயதுடைய ஜோலனியின் ஜிகாதி வரலாறு 21 வயதில் 2003ஆம் ஆண்டு ஈராக்கில் அல்கொய்தாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான போரில் அல்கொய்தாவின் போராளியாக ஆரம்பிக்கப்படுகின்றது. பின்னர் ஈராக் சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவருடன் ஏற்பட்ட நட்பினூடாக அல்கொய்தாவின் சிரியாப் பிரிவான ஜபத் அல்-நுஸ்ரா உருவாக்கத்துடன் ஈராக்கிலிருந்து சிரியாவிற்கு இடம் மாறுகின்றார். ஏப்ரல் 2, 2014அன்று அப்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதி, 'நாங்கள் எங்கள் வீரர்களில் ஒருவரான அல்-ஜோலானியை எங்கள் பிள்ளைகளின் குழுவுடன் பிரதிநிதித்துவப்படுத்தினோம். மேலும் அவர்களை ஈராக்கிலிருந்து சிரியாவுக்குத் அனுப்பி, சிரியாவில் உள்ள எங்கள் படைக்கலங்களை சந்தித்து அவர்களுக்குத் திட்டங்களை வகுத்து, அவர்களுக்கு வேலைக் கொள்கையை வரைந்தோம்' என அறிவித்திருந்தார். ஜோலானியின் ஜபத் அல் நுஸ்ரா குழு ஒரு மிருகத்தனமான ஜிஹாதி அமைப்பாக செயற்பட்டிருந்தது. அது தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் அதன் வருகையை அறிவித்தது. பெப்ரவரி-2012இல் ஒரு காணொளி செய்தியில் 'அல்லாஹ்வின் சக்தி மற்றும் ஆயுதங்களின் சக்தியால் ஆட்சி ஒருபோதும் நிற்காது' என்று அல்-நுஸ்ரா தமது தற்கொலை குண்டுகளை நியாயப்படுத்தினார். மேலும் தொடர்ச்சியாக அல்கொய்தாவிற்கான விசுவாசத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளார். அல்-நுஸ்ரா இஸ்லாமிய அரசில் (ஐ.எஸ்.ஐ.எஸ்) சேர வேண்டும் என்று பாக்தாதி விரும்பியபோது ஜோலானி அவருடன் பிரிந்தார். மேலும் அல்-நுஸ்ரா அல்-கொய்தாவின் உண்மையான பிரதிநிதி என்று அறிவித்தார். 2014ஆம் ஆண்டு ஒரு காணொளி செய்தியில், 'அல்-நுஸ்ராவின் பிள்ளைகள் ஷேக் அய்மான் அல்-ஜவாஹிரிக்கு (அல்கொய்தாவின் அப்போதைய தலைவர்) விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கிறார்கள்' என்று ஜோலானி குறிப்பிட்டிருந்தார். அல்-நுஸ்ராவின் உலகப் பார்வையும் பெரும்பாலும் அல்-கொய்தாவிடமிருந்து கடன் வாங்கப்பட்டது. அதன் உடனடி இலக்கு, அருகில் உள்ள எதிரியான அசாத் ஆட்சியை தூக்கி எறிந்து, ஷரியா சட்டத்தின் கீழ் சிரியாவில் இஸ்லாமிய இராச்சியம் அமைப்பதாகும். இது போன்ற இன்னும் பல அரசுகளை உருவாக்கி இறுதியில் அல்-கொய்தா கலிபாவை நிறுவுவதே நீண்ட கால இலக்காக இருந்தது. அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டையும் 'இஸ்லாத்தின் எதிரிகள்' என்று கூறியது. இன்றும் ஷரிய சட்டங்கள் தொடர்பில் ஈடுபாடு உள்ள போதிலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தொடர்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்ப்பு போக்கிலிருந்து விலகி உள்ளது. 

மூன்றாவது, சிரியாவின் பினாமி அரசியலை தந்திரோபாயமாக ஜோலானி கையாண்டுள்ளார். 2016இல் சிரியாவில் ஏற்பட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் ஜோலானியின் நிலைகளில் மாற்றத்தை உருவாக்கியது. ஜோலனி சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் புதிய அமீர் ஆனார். சுதந்திர சிரிய இராணுவம், இட்லிப்பில் அவருடன் கைகோர்த்தது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை உணர்ந்த ஜோலானி, தனது அல்-கொய்தா குறி ஒரு நன்மையை விட சுமையாக மாறிவிட்டது என்பதை உணர்ந்தார். அவர் முதலில் ஜபத் அல்-நுஸ்ரா என்ற பெயரை பதே அல்-ஷாம் என்று மாற்றினார். 2017ஆம் ஆண்டில், அவர் பதே அல்-ஷhமை கலைத்துவிட்டார் மற்றும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் உருவாக்குவதாக அறிவித்தார். மற்றும் புதிய அமைப்பு அல்-கொய்தாவுடனான அனைத்து தொடர்புகளையும் உடைத்துவிட்டது என்று கூறினார். 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷhம் மேற்கு நாடுகளுக்கு எதிராக போராடவில்லை. ஆனால் அசாத் ஆட்சிக்கு எதிராக மட்டுமே போராடுகிறது' என்றும் அவர் கூறினார். அமைதிக் காலத்தில், ஜோலானி ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்-இன் பதாகையின் கீழ் ஒரு வலுவான இராணுவத்தை உருவாக்கினார். அதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜிஹாதிகள், அரேபியர்கள், மத்திய ஆசியர்கள் மற்றும் உய்கர்கள் என பலரையும் உள்வாங்கினார். அவர் ஒரு அரசாங்கம், அதிகாரத்துவம் மற்றும் ஷரியா அடிப்படையிலான நீதி அமைப்பை நிறுவினார். அவர் தனது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நாணயமாக துருக்கிய லிராவை ஏற்றுக்கொண்டார். ஜோலானி இஸ்ரேலையும் அமெரிக்காவையும் வருத்தப்படுத்தாமல் கவனமாக இருந்தார். இஸ்ரேலும் அமெரிக்காவும் அவரை குறிவைக்கவில்லை. ஜோலானியின் இன்றைய செய்தி முகப்பு கடந்த ஏழு ஆண்டு தந்திரோபாய அணுகுமுறையின் வெற்றியாகும். இது வெறுமனவே அதிக பினாமி அரசியலுக்கு உள்ளாயிருந்த சிரிய போரை வெல்வதற்கான தந்திரோபாய அணுகுமுறையாகவும், அடிப்படையான அல்கொய்தாவின் கொள்கைள் மூலோபாயமாகவும் இருக்குமாயின், ஜோலானியின் வெற்றியும் பிரகாசமும் அமெரிக்காவிற்கு நெருக்கடியாக அமையக்கூடியதாகவே அமைகின்றது. இந்தப்பின்னணியிலே சிரிய போர் தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி, 'கிளர்ச்சியாளர்களின் சமீபத்திய அறிக்கைளை அமெரிக்க கவனித்துக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளை மட்டுமல்ல, அவர்களின் செயல்களையும் நாங்கள் மதிப்பிடுவோம்' என எச்சரித்துள்ளார்.

நான்காவது, சிரிய கிளர்ச்சிப்படையின் வெற்றியானது போராளி கூட்டணி சார்ந்ததாகும். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தவிர துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சி குழு, குர்திஷ் தலைமையிலான படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ் என்பன பிரதானமான சிரியாவின் அரசாங்க கட்டுப்பாட்டிற்கு வெளியே பல்வேறு பிரதேசங்களை வைத்திருக்கின்றன. கிளர்ச்சி படைகளின் கடந்த கால பலவீனம் என்பது அவர்களின் ஒற்றுமையின்மையே ஆகும். அதாவது அசாத் என்ற பொது எதிரி சார்ந்து ஒன்றுபட்டாலும், ஒவ்வொரு கிளர்ச்சி குழுக்களுக்கும் வேறுபட்ட சில சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கொள்கைகளை பிரதிபலிக்கின்றன. மற்றும் சர்வதேச சக்திகளின் பினாமி  அரசியலின் ஈடுபாடு, குறித்த அரசுகளின் நலன்களை பிரதிபலிப்பனவாக கிளர்ச்சிக்குழுக்கள் செயற்பட்டுள்ளன. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு சிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளமை முதன்மை செய்தியாக காணப்படும் சமகாலப்பகுதியில் சிரியாவின் வேறு பிரதேசங்களில் ஏனைய கிளர்ச்சிக்குழுக்களிடையே மோதல் இடம்பெறுகின்றது. டிசம்பர்-08அன்று, வடக்கு சிரியாவில் குர்திஷ் தலைமையிலான படைகளிடமிருந்த மன்பிஜ் நகரத்தில் சிரிய துருக்கிய ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். சிரிய கிளர்ச்சிக் குழுக்களிடையிலே பொதுமையான தலைமை இனங்காணப்படாத நிலையில், இவர்களிடையே பொது இணக்கம் சாத்தியப்பாடற்றதாகும். சிரியாவில் அசாத் அரசாங்கத்திற்கு மாற்றாக ஜோலானி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அரசாங்கம் உருவாக்கப்படலாம். எனினும் சிரியாவின் வரைபடம் கிளர்ச்சிக்குழுக்களுக்களால் கூறு போடப்பட்டுள்ளமை தொடர் அவலமாகவே காணப்படுகின்றது. சிரிய தலைநகர் டமாஸ்கஸில் அசாத்தின் வெளியேற்றம் மகிழ்ச்சியைத் தூண்டியபோதும், அசாத்தின் அரசாங்கத்தின் சரிவு தொடர்பில் மத்திய கிழக்கு நிறுவனத்தில் சிரியா திட்டத்தின் இயக்குநரான சார்லஸ் லிஸ்டரின் கூற்றுப்படி, 'இந்த நேரத்தில் வெளிப்படையாக யாருக்கும் பார்வை இல்லாத புழுக்களின் டப்பாவைத் திறந்து விட்டது' என வெளியுறவுக் கொள்கை ஊடகத்தில் (Forign Policy) எழுதியுள்ளார். இது சிரியாவின் குருதிக்களத்தை தொடரக்கூடிய பிரதிபலிப்பாகவே அமைகிறது.

எனவே, சிரியாவின் உள்நாட்டுப்போர் முடிவு என்ற வகையிலான செய்திகளை உள்ளார்ந்து அவதானிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. எளிமையாக சிரிய உள்நாட்டு போர் முடிவுற்றதாக முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது சிரிய போரில் சர்வதேச சக்திகளின் பினாமி யுத்தத்தின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. தற்போது ஊடகச்செய்திகளூடாக பினாமி போர் இடம்பெறுகின்றது. பொதுமக்களிடையே பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஊடகத்துக்கு பெரும் பங்கு காணப்படுகின்றது. எனினும் சர்வதேச அரசியல் பரப்பில் ஊடக ஆதிக்கம் மேற்கு சார்புடையதாகவே அமைகின்றது. இது மேற்கின் எண்ணங்களை சர்வதேச எண்ணமாக உருவாக்க முயலுகின்றது. ரஷ்சியா-உக்ரைன் போர் முதல் இன்றைய சிரிய உள்நாட்டு போர் வரை அஃதே பிரதிபிலிக்கப்படுகின்றது. சிரிய ஜனாதிபதி அசாத்தின் மேற்கு எதிர்ப்பு மற்றும் ரஷ்சியா நட்பின் அடிப்படையில், அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளமையை ரஷ்சியாவின் வெளியுறவுத்தோல்வியாக கட்டமைப்பதில் மேற்கு ஊடகங்கள் மும்மரமாக செயற்படுகின்றது. அதனடிப்படையிலேயே சிரிய உள்நாட்டுப்போர் முடிவுற்றதான பிரச்சாரத்தையும் முன்னெடுக்க முயல்கின்றனர். மறுமுனையில் சிரிய உள்நாட்டில் வெற்றி பெற்றது, அமெரிக்காவினால் பயங்கரவாதியாக தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதை இலாபகரமாக தவிர்த்து செல்ல முற்படுகின்றனர். ஜோலானி, மேற்கத்திய தலைநகரங்களால் 'பயங்கரவாதி' என்று தடைசெய்யப்பட்ட ஒரு நபர். அதே நேரத்தில், சிரிய புரட்சிகர நிலப்பரப்புக்கு மத்தியில் அரிய செயல்திறனைக் கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள கட்டிடக் கலைஞர். இப்போது திறந்திருக்கும் அரசியல் மாற்றக் காலத்தின் நம்பிக்கைகள் மற்றும் ஆபத்துகள் இரண்டையும் அவர் உள்ளடக்குகிறார். இதன் எதிர்காலம் நாளடைவில் சிரியாவில் அவதானிக்கக்கூடியதாக அமையும்.   

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-