இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணமும் குறியீட்டு அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கடந்த வாரம் மூன்று நாள் விஜயமாக இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பி உள்ளார். ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது. இந்தியா-இலங்கையின் மரபார்ந்த உறவுகளின் அடிப்படையிலும், ஜே.வி.பி-யின் ஸ்தாபக கால இந்திய எதிர்ப்புவாத வரலாற்று பின்புலத்திலும் இவ்விஜயம் அதிக எதிர்பார்க்கைகளை உருவாக்கியிருந்தது. அதேவேளை இலங்கையின் இனபிரச்சினை தீர்வு சார்ந்த இந்தியாவின் கடந்த கால ஈடுபாடுகளின் தொடர்ச்சியாய், ஈழத்தமிழர்கள் அரசியலிலும் அதிக கவனக்குவிப்பு காணப்பட்டது. குறிப்பாக அநுரகுமார திசநாயக்காவின் இந்திய பயணத்திற்கு முன்னர், தமிழ் மக்களின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான நியாயத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கடிதம் மூலம் இந்திய பிரதமரிற்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் கூட்டறிக்கை தமிழர்களின் எதிர்பார்ப்பை எதிர்நிலைக்கு தள்ளியுள்ளது. இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அதன் முக்கியத்துவத்தை இழந்துள்ளதை இனங்காணக் கூடியதாக உள்ளது. இக்கட்டுரை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள உள்ளடக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-17ஆம் திகதிகளில் மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். குறித்த பயணத்தில் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்திய முதலீட்டளார்களுடனான சந்திப்பும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக புத்த பகவான் ஞானம் பெற்ற இடமாக நம்பப்படும் போத் கயாவிற்கு விஜயும் செய்து மத வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார். இந்தியா பயணம் முழுவதும் அனுரகுமார திசநாயக்கவிற்காக வரவேற்பு உயர்வாகவே அமைந்துள்ளது. முதல் நாள் இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று வரவேற்பளித்திருந்தார். இரண்டாம் நாள் இந்திய குடியரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முப்படைகளின் அணிவகுப்புடன் இலங்கை ஜனாதிபதி வரவேற்கப்பட்டிருந்தார். மறுநாள் போத் கயாவில் பௌத்த பிக்குகளால் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கு பின்னர் இலங்கை ஜனாதிபதியின் முதலாவது பயணமாக இந்தியப் பயணம் அமைந்திருந்தது. அனுரகுமார திசநாயக்க செப்டெம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், இந்திய வெளியுறவு அமைச்சர் நேரில் வந்து வாழ்த்தி அழைப்பை மேற்கொண்டிருந்தார். அநுரகுமர திசநாயக்கவின் வெற்றியினை தொடர்ந்து, இலங்கைக்கு முதலாவதாக வந்திருந்த அரச உயரதிகரியின் பயணமாகவும் இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளின் தொகுப்பு இந்திய அரசு இலங்கை ஜனாதிபதியின் மீது அதிக ஈடுபாட்டை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. அநுரகுமார திசநாயக்கவின் பதிலீடு அதிகம் நம்பிக்கையீனமானதாகவே அமைகின்றது. எனினும் முழுமையான நிராகரிக்க முடியாத குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்தியாவிற்கான விஜயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் முழுமையாக இந்தியாவிடமிருந்தான பொருளாதார விடயங்களை மையப்படுத்தியே இணைக்கப்பட்டுள்ளது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருடனான சந்திப்புக்கள் தொடர்பில் அநுரகுமார திசநாயக்க, 'இந்தோ-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளை முன்னேற்றுதல் ஆகியவற்றில் எங்கள் உரையாடல் கவனம் செலுத்தியது. இந்த ஈடுபாடுகள் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன' என எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதேவேளை இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் கூட்டறிக்கையிலும், இலங்கை ஜனாதிபதி இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பிலேயே கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில், இந்திய நிகழ்ச்சி நிரலும் கடந்த கால அரசியல் தலையீடுகளிலிருந்து பின்னடிக்கும் இராஜதந்திர உரையாடல்களையும் அரசியல் அவதானிகள் மதிப்பீடுகள் செய்கின்றனர். இந்தியாவின் முன்னனிப்பத்திரிகையான 'தி ஹிந்து' (The Hindu) நாளிதளின் டிசம்பர்-18அன்று ஆசிரியர் தலையங்கத்தில், 'கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியின் அறிக்கையின் ஆங்கிலப் பதிப்பைப் பின்பற்றி, ஒரு நுணுக்கமான மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நல்லிணக்கம், இலங்கை தனது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்களை மோடி உள்ளடக்கிய போதிலும், மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றி எந்த குறிப்பும் இல்லை' என்றவாறு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பத்திரிகையின் ஆதங்கம் இந்தியாவின் நிலைப்பாட்டை சொல்லும் செய்தியாகவும் அமையலாம்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு அதிகம் குறியீட்டு அரசியலையே இராஜதந்திர நிலையில் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிப்பார்வையிலான கைலாகுகளையும் அரவணைப்புக்களையும் எளிமையான கண்ணோட்டத்தில் கடந்து விடமுடியாது. 'இலங்கை அரசாங்கம் இணங்கியதுக்கமைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என நம்புவதாக' இந்தியப்பிரதமர் குறிப்பிட்டதை, ஈழத்தமிழர் அரசியல் தரப்புக்கள் கண்மூடித்தனமாக இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான அழுத்தமாக பாராட்டு பத்திரங்கள் வாசிப்பது, ஈழத்தமிழரசியலின் பலவீனங்களை மீள உறுதி செய்வதாகவே அமைகின்றது. இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின போதான குறியீட்டு அரசியலை ஆழமாக அவதானித்தல் அவசியமாகிறது.
முதலாவது, இந்தியாவுக்கான இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முதற் பயணம் என்பது இலங்கை வெளியுறவு மரபின் தொடர்ச்சியையே உறுதிசெய்கின்றது. இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் இத்தகைய மரபையே பேணியுள்ளார்கள். குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு 'இந்தியாவின் சதி' என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். தோல்வியின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் அவரது இல்லத்தில் சந்திக்க வந்த மக்களிடம் இக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் மகிந்த ராஜபக்சவின் இளையவருமான கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு பின்னரான முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவே அமைந்திருந்தது. கோத்தபாய ராஜபக்சாவையும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடியே வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிராந்திய அரசாக இலங்கை அரசின் வெளியுறவுக்கொள்கையில் இந்திய தவிர்க்க முடியாத முதன்மையை பெறுவது இயல்பானதாகும். ஆதன் தொடர்ச்சியையே சமகால இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பேணியுள்ளார்.
இரண்டாவது, இலங்கை ஜனாதிபதிகள் இந்திய பயணங்களில் தமது இலக்கினை தெளிவாக உறுதி செய்து உரையாடி வந்துள்ளார்கள். அவ்தொடர்ச்சியையும் அனுரகுமார திசநாயக்கவும் பாதுகாத்துள்ளார். குறிப்பாக இந்திய செய்திகளில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்த, 'இலங்கை தனது பிரதேசத்தை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான முறையில் எதிலும் பயன்படுத்த அனுமதிக்காது' என்ற அனுரகுமார திசநாயக்காவின் உறுதிமொழி பழமையானதாகும். 2023இல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இத்தகைய உறுதிமொழியையே வழங்கியிருந்தார். அதற்கு முந்தைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உள்ளடக்கமும் இக்கருத்தையே பிரதிபலித்திருந்தது. எனினும் நடைமுறையில் இதனை முழுமையாக பார்க்க முடியவில்லை. அநுரகுமார திசநாயக்க இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், சீன விஜயத்திற்கான அழைப்பை பெற்றிருந்தார். இது ஒருவகையில் அனுரகுமார திசநாயக்கவுடனான இந்திய நிகழ்ச்சி நிரலை வரையறை செய்யும் காரணியாகவே அமைந்துள்ளது. இதில் பகுதியளவு இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மூன்றாவது, இந்திய அரசாங்கம் இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை அனுசரித்து போகும் நிலைமைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையில், புதுடில்லி இப்போது இணக்கமான தலைவரையே எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளில் மோடி அரசாங்கத்தில் வெளியுறவு கொள்கை சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்த பின்னணியில் இலங்கையின் அரசாங்கத்தை சாதகமாக்குவதில் தேர்தலுக்கு முன்னரே இந்திய அரசாங்கம் விழிப்புடன் செயற்பட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் அழைப்பில் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழு தேர்தலுக்கு முன்னர் (பெப்ரவரி) இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே சமகாலத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதார சவால் மற்றும் அதுசார்ந்த பிரச்சாரங்களை அங்கீகரித்து, அதனுடன் இணங்கிப் போகும் நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகிய இருவருக்குமிடையிலான சந்;திப்பின் பின்னரான கூட்டறிக்கை இரு தரப்பிலும் முழுமையாக பொருளாதார ஒத்துழைப்புக்களையே பெருமளவு நிரப்பியிருந்தது. குறிப்பாக இந்திய-இலங்கை உயர்மட்ட சந்திப்பு பல்வேறு துறைகளில் முக்கிய கூட்டு முயற்சிகளை முன்னிலைப்படுத்தியது. புpரதானமாக இருதரப்பு இணைப்பை வலுப்படுத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முன்னேற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான மின்சாரக் கட்டம் மற்றும் பல உற்பத்தி பெட்ரோலியக் குழாய்களின் முன்னேற்றம் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தை துரிதமாக செயல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
நான்காவது, இந்தியாவின் பொருளாதார இணக்கத்துடன், இலங்கை அரசாங்கமும் இணக்கமான நிலையையே உறுதி செய்துள்ளது. இதனை இலங்கைக்கு திரும்பிய பின்னர் அதானி விவகாரம் குறித்து அனுரகுமார திசநாயக்க 'Ecnomics Times' ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கூறிய கருத்து உறுதி செய்கின்றது. 'தனது அரசாங்கம் அதானி குழுமத்தின் மற்ற நாடுகளுடனான பரிவர்த்தனைகளைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாக இலங்கையில் அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும், 'தனது நிலையான அரசாங்கம் மேலும் இந்திய முதலீடுகளுக்கு வழி வகுக்க விரும்புகிறது. அடிப்படையில் எங்கள் முதலீடுகள், எங்கள் வளர்ச்சி குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் எங்கள் நாட்டில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை நாங்கள் பார்ப்போம். அவர்கள் எங்களுக்கு ஏற்றவாறு, எங்கள் முன்முயற்சிகளுக்கு ஏற்றவாறு செயல்பட்டிருந்தால், அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' எனக்குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அதானியின் முதலீடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அதிக விமர்சனங்களை முன்வைத்திருந்தது. இந்நிலையில் இந்திய முதலீடுகள் தொடர்பான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இணக்கமானது இலங்கையின் பொருளாதார சவால்கள் பற்றிய யதார்த்தமான புரிதலின் காரணமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையின் போக்குகளே எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாகும்.
ஐந்தாவது, இலங்கை-இந்திய உரையாடல்களில் கடந்த காலங்களில் ஒரு பங்கினை வகித்திருந்த ஈழத்தமிழர் அரசியல் இம்முறை தன்னிலை இழந்துள்ள போக்கினையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் கூட்டு அறிக்கையில், இந்திய பிரதமர் ஈழத்தமிழர் விவகாரங்களை தொட்டிருந்தார். இது குறிப்பாக இலங்கை மீதான நம்பிக்கை வெளிப்பாடாகவே தெரிவித்திருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சிக்காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச முதல் அனுரகுமார திசநாயக்க வரை ஐந்து இலங்கை ஆட்சியாளர்களை சந்தித்துள்ளார். முன்னையவர்களிடம் உரையாடப்பட்ட மரபான நல்லிணக்க உரையாடல்களும், அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மகாணசபைத் தேர்தல் என்ற வகையறா கருத்தையே தற்போதும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு முழுமையான அமுலாக்கம் மற்றும் மாகாணசபை தேர்தல் இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான 13ஆம் திருத்தத்தை குறித்து நின்றாலும், 13ஆம் திருத்தத்தை முதன்மைப்படுத்துவது இந்தியாவின் அரசியல் கனதியை வெளிப்படுத்துவதாகும். எனினும் அனுரகுமார திசநாயக்கவுடனான சந்திப்பில் '13ஆம் திருத்தம்' என்பதை தவிர்த்துள்ளமை, 'Ambiguity Dipolomacy' (பல பொருள் தெரிவிக்கும் நிலை) பங்கை வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகம் பொதுவெளியில் காணப்படுகின்றது. தமிழகத்தை கையாள தமிழர் விவகாரத்தை பயன்படுத்த வேண்டிய தேவையும், அதேவேளை இலங்கை அரசாங்கத்துடனான இணக்கமான உறவிற்கு 13ஆம் திருத்தத்தை தவிர்க்க வேண்டிய நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் விவகாரத்தை உறுதியற்ற நிலையில் நகர்த்தியுள்ளதா என்ற சந்தேகம் மேலெழுகிறது.
ஐந்தாவது, இலங்கை-இந்திய உறவை கலாசாரத்தின் பிணைப்பாக இலங்கை இந்திய வெளியுறவுக்கொள்கை உரையாடர்களில் கூறிவருவதுண்டு. குறிப்பாக இந்தியாவின் இலங்கை சார்ந்த வெளியுறவுக்கொள்கையில் 'கலாசார இரட்டையர்கள்' என்பது தொடர்ச்சியாக பதிவு செய்யப்படுவதுண்டு. இக்கலாசார பிணைப்பு வடஇந்திய-தென்னிலங்கை மற்றும் தமிழகம்-ஈழத்தமிழர் என இரட்டை நிலையில் அமைவதனை அனுரகுமார திசநாயக்கவின் இந்திய விஜய உரையாடலும், அனுரகுமர திசநாயக்கவின் இந்திய விஜயத்தின் நிகழ்ச்சி நிரலும் உறுதி செய்துள்ளது. கூட்டு அறிக்கையில் நரேந்திர மோடி, 'இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரீக உறவுகளைப் பகிர்ந்துகொள்கிறது. பாலிக்கு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது, அந்த விழா இலங்கையிலும் கொண்டாடப்பட்டது. படகு சேவை மற்றும் சென்னை-யாழ்ப்பாணம் விமான இணைப்பு ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்தி நமது கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தியுள்ளன. நாகப்பட்டினம்-காங்கேசன்துறை படகுச் சேவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, இராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே படகுச் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். பௌத்த சர்க்யூட் மற்றும் இலங்கையின் இராமாயண பாதையின் அபரிமிதமான சுற்றுலா திறனை உணரவும் நாங்கள் பணியாற்றுவோம்' எனத் தெரிவித்திருந்தார். இது நாகரீக பிளவுபட்ட தொடர்பை அடையாளப்படுத்துகின்றது. இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஆர்வத்தில் மேற்கொள்ளப்படும் பௌத்தம் மற்றும் இராமாயணம் சார்ந்த நாகரீக பிணைப்புகள் வடஇந்தியா மற்றும் தென்னிலங்கை தொடர்பையே பிரதிபலிக்கிறது. மாறாக தமிழக-ஈழத்தமிழர் தொடர்பு வேறுபட்டதாகவும் கையாளப்படுகிறது.
எனவே, இந்தியாவிற்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயம் ஈழத்தமிழர்களின் அரசியல் சரிவையே அடையாளப்படுப்படுத்துகின்றது. சகட்டுமேனிக்கு போலியான வெளித்தோற்றங்களில் இந்திய அரசாங்கம் ஈழத்தமிழர்களின் அரசியலில் பூரண கரிசணையுடன் செயற்படுவதாக ஈழத்தமிழரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்வது தமது அரசியல் தோல்வியை மறைப்பதற்கான வியூகமாகவே அமைகின்றது. கடந்த 15ஆண்டுகளில் இலங்கை அரச இயந்திரத்தை இந்திய எதிர்ப்பு சீன சார்பு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இந்திய உறவை கையாண்டு வருகின்றார்கள். எனினும் இலங்கையில் அதிகரிக்கும் சீன தலையீடு மற்றும் பாக்குநீரிணை அரசியலில் இந்திய மற்றும் ஈழத்தமிழர் பகிரும் நலன்களின் அடிப்படையில், இந்திய அரசியலை ஈழத்தமிழர்களின் நண்பனாக்காமை ஈழத்தமிழரசியலின் தோல்வியாகவே அமைகின்றது. மேற்காசியாவில் விடுதலைக்காக போராடும் குர்து என்ற தேசிய இனத்திற்கு மலைகளாவது அரணாக நட்பாக இருந்தது. ஈழத்தமிழர்கள் நண்பர்களற்றவர்களாய் கடலில் விழும் சூழலே காணப்படுகின்றது.
Comments
Post a Comment