சிரிய உள்நாட்டு யுத்தம் அரபு-குர்துகள் போராக தொடர்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

பஷர் அல்-சதாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, புதியதொரு அமைதியான சிரியா உருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கு ஊடகங்கள் செய்தி தலைப்பு இட்டன. அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் அரசியல் தலைவர்கள் கிளர்ச்சிக் குழுவையும், ஆட்சி மாற்றத்தையும் புரட்சியாக வெகுவாக பாராட்டினார்கள். யாவரும் சிரியா உள்நாட்டு யுத்தத்தின் முடிவை சுட்டிக்காட்டினார்கள். அசாத்தை வில்லனாக காட்ட வேண்டும் என்ற முனைப்பிலும், ரஷ்யா சார்பு அசாத்தின் தோல்வி ரஷ்யாவின் வெளியுறவுத்தோல்வி என்ற முனைப்பிலோலுமே மேற்கின் சிரியா தொடர்பான பார்வைகளும் எண்ணங்களும் காணப்பட்டது. எனினும் அசாத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வடகிழக்கு சிரியாவில் குர்துகள் மீதான துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சி படையின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இக்கட்டுரை சிரிய உள்நாட்டு யுத்த தொடர்ச்சியை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-சதாத்தின் வீழ்ச்சியுடன், கவனத்தை ஈரான், துருக்கி மற்றும் ஈராக் எல்லைக்குட்பட்ட வடகிழக்கு சிரியாவிற்கு மாற்றியுள்ளது. அமெரிக்க ஆதரவு, குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிகள் இப்போது புவிசார் அரசியல் பதட்டங்களின் மையமாக மாறத் தயாராக உள்ளன. வன்முறையின் மிக உடனடி ஆபத்து வடகிழக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலும் அதைச் சுற்றியும் உள்ளது. ஜேர்மனியில் வசிக்கும், குர்திஸ்தான் தேசிய காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் நிலுபர் கோஸ் சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை பற்றி குறிப்பிடுகையில், 'துரதிர்ஷ்டவசமாக, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS), முன்னர் அல்-கொய்தாவின் சிரிய துணை அமைப்பு இருப்பது குர்திஷ் முயற்சிகளை அச்சுறுத்துகிறது. குர்திஷ் காட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகத்தின் (AANES) ஜனநாயகக் கொள்கைகளை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்  எதிர்க்கிறது' என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

நடைமுறையிலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு சிரிய குர்துகள் மீது நேரடியான தலையீட்டை ஏற்படுத்தாத போதிலும், அக்குழுவின் கூட்டு குழவான துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சிப் படைகள் குர்து மக்களின் நிலப்பகுதிகளில் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சி குழுக்கள் உண்மையில் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, குர்துகளுக்கு எதிராகவும் அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்துள்ளன. அலெப்போவில், குர்துகள் சரணடைய வேண்டும் அல்லது இறக்க வேண்டும் என்று கூறப்பட்டனர். அவர்கள் சரணடைய முடிவு செய்தனர். குர்திஷ் படைகளுடன் நேரடி மோதல்களைத் தவிர்க்க ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு முயற்சிப்பதாகத் தோன்றினாலும், துருக்கி ஆதரவு சிரிய குழுக்களால் தங்கள் வீடுகளைக் கைப்பற்றியதாக குர்திஷ் குடிமக்கள் அறிவித்துள்ளனர். சுமார் அரை மில்லியன் குர்துகள் அலெப்போ மற்றும் யூப்ரடீஸுக்கு மேற்கே சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது. துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் யூப்ரடீஸ் நதியைச் சுற்றியுள்ள பகுதியில் குர்திஷ் படைகளுடன் சண்டையிடுகின்றனர். இம்மோதல், பெரும்பான்மை குர்திஷ் நகரமான கோபானி மீது படையெடுப்பதற்கான இராணுவத் தயாரிப்புகளாக இருக்கலாம் என மேற்காசிய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். துருக்கிய எல்லைக்கு தெற்கே உள்ள சிரியாவின கோபானி நகரம், 2015இன் பிற்பகுதியில் தொடங்கிய நான்கு மாத இஸ்லாமிய அரசு (IS/ISIS) முற்றுகைக்குப் பிறகு அதை மீட்டெடுக்க அமெரிக்க துருப்புக்களுடன் போராடிய குர்திஷ் படைகளுக்கு ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது .

சிரிய மோதல், பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கும், சிரிய தேசிய இராணுவம் (SNA) போன்ற அரபு எதிர்ப்புப் படைகளுக்கும் இடையேயான இருமைப் போட்டியாக இல்லாமல், போட்டியிடும் பிராந்திய நலன்களுக்கு மத்தியில் தன்னாட்சி கோரும் குர்திஷ் குழுக்களையும் உள்ளடக்கியுள்ளது. சதாத்தின் வீழ்ச்சி சிரிய மோதலின் அட்டைகளை மாற்றியமைக்கிறது. 'அங்கு குர்துகள் துருக்கிய ஆக்கிரமிப்பு, சிரிய அரசாங்க விரோதம் மற்றும் மங்கலான மேற்கத்திய ஆதரவிற்கு இடையில் சிக்கித் தவிக்கும் அபாயகரமான நிலையில் உள்ளனர். குர்திஷ் மக்கள், 30 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில், ஒரு அரசு இல்லாத மிகப்பெரிய இனக்குழுக்களில் ஒன்றாகும். துருக்கி, ஈராக், ஈரான் மற்றும் சிரியா முழுவதும் பரவி, அவர்கள் ஒரு பொதுவான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் முதலாம் உலகப் போருக்குப் பிறகு வரையப்பட்ட எல்லைகளால் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வரலாறு எழுச்சிகள், துரோகங்கள் மற்றும் விரைவான வெற்றிகளால் குறிக்கப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள குர்திஷ் போராளிகளின் அரசியல் பிரிவின் தலைவரான சினம் ஷெர்கனி முகமட் ஒரு அறிக்கையில், 'துருக்கி, சிரியாவில் நிலவும் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, பிராந்தியத்தை சீர்குலைத்து, எங்கள் நிலத்தை கைப்பற்றி வருகிறது. ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல, நாங்கள் ஜனநாயக அமெரிக்க நட்பு நாடுகள்' எனத்தெரிவித்துள்ளார். சிரிய குர்திஷ் தன்னாட்சி நிர்வாக பகுதிக்குள் சுமார் 900 அமெரிக்க துருப்புக்கள் குர்திஷ் தலைமையிலான படையுடன் இணைந்து இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போரிட ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ளன. உள்நாட்டில் பல தசாப்தங்களாக குர்திஷ் கிளர்ச்சியை எதிர்த்துப் போராடிய துருக்கி, சிரியாவில் உள்ள குர்திஷ் தன்னாட்சி அலகையும் நீண்டகாலமாக எதிர்க்கிறது. துருக்கிய ஆதரவு சுன்னி கிளர்ச்சியாளர்களின் எழுச்சியானது அரேபியர்களுக்கும் குர்துகளுக்கும் இடையே ஒரு புதிய சுற்று மோதலுக்கு களம் அமைக்கிறது. 

துருக்கியை சிரியாவிற்குள் ஆழமாக இழுப்பது அமெரிக்க படைகளை பின்வாங்கச்செய்யக்கூடியதாகும். கடந்த காலங்களிலும் அமெரிக்காவின் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது பருவ காலத்தில், சிரியாவில் குர்துகள் மீது துருக்கியின் தலையீடு அதிகரிக்கையில், குர்திஷ் ஆதரவு அமெரிக்க படை வெளியேறியிருந்தது. எனினும் மீள எழுச்சியடையக்கூடிய இஸ்லாமிய அரசின் பதட்டங்கள் மற்றும் ஈரான் கண்காணிப்பை காரணங்காட்டி பகுதியளவு அமெரிக்க படைகள் சிரியாவில் நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் பின்வாங்கல் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளே காணப்படுகிறது. இவ்வாறான பின்னணியிலேயே ஜனவரி மாதம் (2025) நிறைவடைய போகின்ற பைடன் நிர்வாக காலப்பகுதிக்கு முன்னர் துருக்கி மற்றும் சிரிய குர்துக்களிடையே சமாதானத்தை அமெரிக்க மத்தியஸ்தத்தின் கீழ் உறுதிப்படுத்திய சிரிய குர்துகள் ஆர்வம் காட்டுகின்றனர். குர்துகளுக்கு ஒரு சிறந்த சூழ்நிலையில், வடகிழக்கு சிரியாவில் அவர்கள் வைத்திருக்கும் பிரதேசத்தை பாதுகாக்க அவர்கள் அமெரிக்காவிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறுவதைக் காணலாம் என்று அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். வாஷிங்டனில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் சிரியா நிபுணர் நடாஷா ஹால் கூறுகையில், 'துருக்கியர்களுக்கும் குர்திஷ்களுக்கும் இடையே ஒருவிதமான போர்நிறுத்தம்/ சமாதான ஒப்பந்தம் இரு தரப்பினரும் உடன்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

பைடன் நிர்வாகம் அடுத்த மாதம் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் இடம்பெறுகின்றது. கடந்த வாரம் துருக்கியில் நடந்த கூட்டங்களைத் தொடர்ந்து, நவம்பர்-14அன்று, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ஜே. பிளிங்கன், 'ஐ.எஸ்.ஐ.எஸ் ஒரு பெட்டியில் இருப்பதை உறுதிசெய்வது சிரியாவில் அவசர முன்னுரிமையாக உள்ளது. குர்திஷ் போராளிகள் அந்தப் பணியைத் தொடர்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்' என்றார். அதேவேளை துருக்கியில் அவரது சந்திப்புகள் வெளியுறவு மந்திரி ஹக்கன் பிடானுடன் பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியது. அச்சந்திப்பில், 'சிரியாவில் எந்த பி.கே.கே (குர்திஷ் தொழிலாளர் கட்சி) நீட்டிப்பும் முறையான பங்காளியாக கருதப்பட முடியாது' என்று கூறினார். இது துருக்கி மற்றும் குர்துகளிடையேயான அமெரிக்க இராஜதந்திர சமநிலையை அடையாளப்படுத்தப்படுகின்றது. துருக்கியில் காணப்படும் குர்திஷ் தொழிலாளர் கட்சியை துருக்கி அரசாங்கம் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டுள்ளது. அவ்அமைப்புடன் சிரிய குர்துகள் தொடர்பு கொள்கின்றார்கள் என்ற அடிப்படையிலேயே, சிரிய குர்துகள் மீது துருக்கி அரசாங்கத்தின் தாக்குதலும் இடம்பெறுகின்றது. 

அமெரிக்க இராஜதந்திர நகர்வின் முன்னேற்றமாய் பகுதியளவில் சிரிய குர்துகளின் பகுதியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. கடந்த வாரம் அமெரிக்க தளபதி ஜெனரல் மைக்கேல் ஈ. குரில்லா, 900 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள வடகிழக்கு சிரியாவிற்கு விஜயம் செய்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, குர்திஷ் படைகளுக்கும் சிரிய தேசிய இராணுவம் எனப்படும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. வடக்கு நகரமான மன்பிஜில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். குர்திஷ் தளபதியான ஜெனரல் அப்டி, 'அமெரிக்க உதவியுடன் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும் இவ் சமாதானம் நிலையற்றது என்பது குறுகிய கால இடைவெளியில் வெளிப்படுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகளுக்கு நேரத்தை வாங்கும் நோக்கில் ஒரு நடுங்கும் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும், குடியிருப்பாளர்கள் ஆயிரக்கணக்கில் போர் அச்சத்தில் கோபானி நகரத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். 

இம்முறை குர்துகள் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளின் பினாமி யுத்தத்திலிருந்து தமது ஆர்வத்தை விலக்கும் செய்தியையும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளார்கள். நாட்டின் வடக்கில் உள்ள அவர்களின் இதயப் பகுதிக்கு கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டால், அவர்கள் தற்போது கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான அரபு பகுதிகளிலிருந்து அவர்களின் படைகள் பின்வாங்கக்கூடும் என்று வடகிழக்கு சிரியாவை தளமாகக் கொண்ட குர்திஷ் பத்திரிகையாளர் பர்ஸான் ஐசோ தெரிவித்துள்ளார். 'எச்.டி.எஸ்ஸை விட துருக்கியை நாங்கள் அதிகம் பயப்படுகிறோம்' என்று அவர் கூறினார். இது ஒருவகையில் இஸ்லாமிய அரசு மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சிக்கும் முக்கிய பகுதியை வழங்கி செல்கிறது. இஸ்லாமிய அரசின் எழுச்சி அமெரிக்காவிற்கு சவால் செய்யக்கூடியதாகும். இம்முறை அமெரிக்காவின் பின்வாங்கலுக்கு குர்துகள் அணைபோடுவதாகவே அமைகின்றது. எந்தவொரு குர்திஷ் திரும்பப் பெறுதலும் அமெரிக்கத் துருப்புக்களை அவர்களின் தளங்களில் சிலவற்றில் பாதிப்படையச் செய்து, அமெரிக்காவின் இஸ்லாமிய அரசு எதிர்ப்புப் பணியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பும். இஸ்லாமிய அரசின் எழுச்சி அமெரிக்காவின் இருப்பை நீடிக்க முடியாததாக ஆக்கக்கூடும் என்று மத்திய கிழக்கு நிறுவனத்தில் மூத்த ஆய்வாளர் சார்லஸ் லிஸ்டர் தெரிவித்துள்ளார்.

எனவே, சிரிய உள்நாட்டு போர் என்ற விம்பத்தில் இடம்பெற்ற பினாமி யுத்தத்தின் எச்சங்கள் தொடர்ச்சியாகவே உள்ளது. 1923இல் லொசேன் உடன்படிக்கையின் ஒரு பகுதியான சிரியா தேசக்கட்டுமானம் பிரெஞ்சு மாதிரி கொள்கைகளை ஏற்றுக்கொண்டன. பிரெஞ்சு மாதிரியில் அவர்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் சித்தாந்தத்திற்கு இணங்க ஒரு நாகரீக செயல்முறை தேவைப்பட்டது. ஜேர்மன் சமூகவியலாளர் நார்பர்ட் எலியாஸ் (Norbert Elias), 'நாகரீக செயல்முறை' (Civilizing Process) என்ற கருத்தை முன்வைத்தார். இது அரசின் சட்டப்பூர்வ மற்றும் சமூகத்தின் பல கூறுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை உருவாக்குவதற்கான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. குறைந்த அளவு வன்முறையை உள்ளடக்கியது. எலியாஸின் கூற்றுப்படி, இந்த செயல்முறை முன்னோக்கி அல்லது பின்தங்கிய இரு வழிகளிலும் செல்லலாம். நாகரீக செயல்முறை நாகரீகமற்ற செயல்முறையுடன் இணைந்துள்ளது. எந்த ஒரு இன அடையாளத்தையும் அரசுக்கு வழங்காமல், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் போன்ற உறுதியான அடிப்படையில் ஒரு அரசை நிர்மாணிப்பதையே இது சார்ந்துள்ளது. இருப்பினும் சிரியாவில் அத்தகைய அரசினை கடந்த ஒரு நூற்றாண்டில் அடையாளங் காணமுடியவில்லை. மாறாக நாகரீகமற்ற செயல்முறையுடனேயே தொகுக்கப்பட்டுள்ளது. இது இனங்களையும், மதங்களையும், எதேசச்திகாரத்தையுமே அரசின் இயல்பாக அரசியல் கலாசாரமான வகுத்துள்ளது. அதுவே பிராந்திய சர்வதேச அரசியல் தலையீட்டுக்கும் பினாமி யுத்தங்களுக்கும் காரணமாகியது. நாகரீகமற்ற செயல்முறையுடன் தொடர்புடைய அரசியல் கலாசாரத்தை சீர்செய்யாது, சிரியாவின் அமைதியை பாதுகாக்க முடியாது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-