இலங்கையின் தேர்தலுக்கான ஜனநாயக சூழல் பலவீனப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
பல அரசுகளில் நீதித்துறை என்பது நிர்வாகத்துறையின் சேவகத்துறையாகக் காணப்படுகின்ற சூழலில், மலாவி என்கிற தென்கிழக்கு ஆபிரிக்க நாடொன்றில் ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி ஜனாதிபதி தேர்தலை மீள நடாத்துமாறு பணித்து ஜூன்-23ஆம் திகதி ஒரு வருட காலப்பகுதிக்குள் இரண்டாவது தேர்தல் நடைபெற்றுள்ளது. நிர்வாகத்துறைக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. இலங்கையிலும் சனநாயகத் திருவிழாவாகிய தேர்தல் ஒன்று நடைபெறத் தயாராகின்ற சூழலில், குறித்த தேர்தல் ஜனநாயகத்துடன் இடம்பெறுமா? என்பது பலதரப்பின் கேள்வியாகக் காணப்படுகிறது.
இந்நிலையிலேயே மலாவி என்கிற தென்கிழக்கு ஆபிரிக்க நாட்டில் ஜனநாயகத்தைப் பேண, நிர்வாகத்துறையை எதிர்த்து நீதித்துறை வழங்கியுள்ள மறு தேர்தல் தீர்ப்பின் சர்வதேச அனுபவத்தோடு, இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் இடம்பெறக்கூடும் என எதிர்வுகூறப்படும் ஜனநாயக மீறல்களையும் இலங்கையின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சீர்செய்யுமா? என்பதைத் தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, தேசிய சட்டமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 21 மே 2019அன்று மலாவியில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. நாட்டின் தேர்தல் ஆணையம், ஆரம்பத்தில் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பீட்டர் முத்தரிக்காவை மே 2019 தேர்தலில் 38.57 சதவீத வாக்குகளுடன் குறுகிய வெற்றியாளராக அறிவித்து அவரைத் தொடர்ந்தும் ஜனாதிபதியாக ஆட்சிபீடமேற அனுமதித்தது. இந்த முடிவுகள் அங்குள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தன. மக்கள் வீதியிலிறங்கிப் போராடினார்கள். அந்தப்போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 35.41 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த லாசரஸ் சக்வேராவும், 20.24 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த சவுலோஸ் சிலிமாவும் இணைந்து தேர்தல் முடிவுகளுக்கு எதிராக நீதிகேட்டு நீதிமன்றம் சென்றனர். வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பீட்டர் முத்தரிக்காவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் பல மோசடி ஆவணங்களில் முறைகேடு செய்ததாக அவர்கள்; சுட்டிக்காட்டி, அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
2020ஆம் ஆண்டு பெப்ரவரியில், ஒருமனதாக வழங்கப்பட்ட தீர்ப்பில், ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு பரவலான, முறையான மற்றும் கடுமையான முறைகேடுகள் தேர்தலில் நடைபெற்றதை மேற்கோள் காட்டி அவ்வகையான முறைகேடுகளை உறுதிப்படுத்தியதுயதுடன் 150 நாட்களுக்குள் புதிய தேர்தல்கள் நடைபெறவேண்டும் எனவும் அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியமாக, ஒரு ஜனாதிபதி வேட்பாளர் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் விதித்தது. 1994ஆம் ஆண்டில் மலாவி பலதரப்பட்ட போட்டிக்குத் திரும்பியதிலிருந்து, தேர்தல் பிரதேசவாரி பிரதிநிதித்துவ (First - Past - The Post System) முறையால் தீர்மானிக்கப்பட்டது. இதில் அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் அவர்கள் பெரும்பான்மையைப் பெறுகிறார்களா என்பதைப்பொருட்படுத்தாமல் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்கள். இம்முறையிலேயே பீட்டர் முத்தாரிகாவையும் மலாவி தேர்தல் ஆணையம் ஜனாதிபதியாக அறிவித்திருந்தது.
தீர்ப்பைத் தொடர்ந்து பீட்டர் முத்தாரிகா கோபமடைந்து அதனைக் கண்டித்ததுடன், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்த போதிலும் நீதிமன்றம் அவரது மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தது. நாட்டின் ஜனநாயக உறுதிப்படுத்தலில் புதிய தேர்தலின் அவசியத்தையும் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே கடந்த ஆண்டு வாக்களித்ததை அரசியலமைப்பு நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் 2020 ஜூன் 23 அன்று மலாவி புதிய தேர்தலுக்குத் திரும்பியது. மலாவியில் கடந்த தேர்தலில் சனநாயகத்தை உறுதிப்படுத்த தவறியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட மலாவி தேர்தல் ஆணையத்தின் தலைவரும் மக்களின் கடும் எதிர்ப்பால் பதவி விலகியுள்ளார்.
தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழாவாக அமைகின்ற போதிலும் ஜனநாயகம் என்ற போர்வையில் ஜனநாயகமற்ற முறையில் மலாவி இல் நடைபெற்ற தேர்தலுக்கு எதிராக நடைபெற்ற வலுவான மக்கள் போராட்டத்தினூடகவும் நீதித்துறையின் சுயாதீன தன்மையாலும் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ள சர்வதேச அனுபவத்திலிருந்து இலங்கையர்கள் பலவிடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாய் காணப்படுகின்றார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அபத்தத்தினால் பல இழுபறிக்கு பின்னால் ஆகஸ்ட்- 05 தேர்தல் நடைபெறுமென திகதியிடப்பட்டு சுகாதார விதிகளுக்கமைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களின் உண்மையான விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்குமா? என்பது தேர்தல் நடைபெற முதலே பெரும் சர்ச்சையாக மேலெழுந்துள்ளது.
ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் சமூக இடைவெளி பேணப்படாது கூடிய திரளை அனுமதித்த அரசாங்கம், பின்னர் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் கறுப்பின இளைஞனின் கொலைக்கு நீதி வேண்டி இடம்பெற்ற போராட்டத்தில் சமூக இடைவெளியின்மையை கூறி அடக்குமுறை மூலம் போராட்டத்தை முடக்கி இருந்தது. அரசாங்கம் இரு நிகழ்விலும் கையாண்ட இரு வேறுபட்ட வழிமுறை கொரோனா அபத்தத்தை சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலையே முதன்மைப்படுத்தி வருகின்றமை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிரச்சார செயற்பாடுகளிலும் இராணுவ, பொலிஸாரின் உதவியுடன் கொரோனா அபத்தத்தை சாட்டாகக் கூறி எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களை இடையூறு செய்யக்கூடிய நிலைமையே அதீதமாகத் தென்படுகிறது. இவ்வாறான சூழலில் மக்களின் ஜனநாயகம் பாதிக்கப்படுவதுடன் மக்களின் உண்மையான கருத்துநிலை தேர்தலில் வெளிப்படப்போவதில்லை என்பது உறுதியாகிறது.
மேலும், இலங்கையில் சிவில் சேவைகளில் இராணுவ ஓய்வுநிலை உத்தியோகத்தர்களின் உள்வாங்கல், இலங்கையின் நிர்வாகத்தில் இராணுவமயமாக்கத்தின் செறிவை அதிகரித்துச் செல்கிறது என்பதை இலங்கை வாழ்மக்களும், சர்வதேசமும் தெளிவாக அறிந்துள்ளது. அதேநேரம் வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களின் அதிகரிப்பு மற்றும் சிறு கிராமங்களுக்கூடாவும் இராணுவ மோட்டார் வாகனங்களின் அதிவேகப் பயணம், இராணுவத்தின் திடீர் சோதனை நடவடிக்கைகள் என்பன வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களிடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் இந்நிலை இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே மக்கள் மிகவும் நெருக்கடிமிக்க ஒரு வித பய உணர்வுடனேயே வாழ்கிறார்கள். இந்நிலைமை தொடரின் வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு வீதம் குறைவாகவே காணப்படும். இராணுவ பிரசன்னமும் அதன் அதிகரிப்பும் தமிழ் மக்களின் ஜனநாயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
மிகவும் அபத்தமான செய்தி என்னவெனில் சமகாலத்தில் காணப்படும் கொரோனா அபத்த குறுகிய காலப்பகுதியினுள்ளேயே பத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளையோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்விடயங்கள் தொடர்பில் எத்தமிழ் அரசியல் தலைமையும் காத்திரமான எதிர்வினையாற்றியிருக்கவில்லை. யாவரும் தேர்தல் பிரச்சார போட்டியில் ஒருவரை ஒருவர் பழிபோடுவதிலேயே மும்மரமாக நிற்கின்றனர். அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் இவ்அபத்தமான சூழல் நெருக்கடியில்; மக்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி விடக்கூடக்கூடிய நிலைமை காணப்படுகிறது. தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடையின் இவர்கள் யாரிடம் வாக்கினைப்பெற இது போன்ற பழிபோடும் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் என்று புரியவில்லை! தமிழ் மக்களுக்காக அரசியல் சேவை செய்யின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே அரசியல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மக்கள் பிரச்சினைகள் பிரச்சார மேடைகளில் மேலோங்கி அவைகள் இயல்பாய் பூர்த்தி செய்யக்கூடிய சூழ்நிலை அமையவேண்டும்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திலிருந்தே மஹிந்த தேசப்பிரிய மற்றும் அவரது தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை பல தரப்புக்களினால் பராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது ஏற்பட இருந்த அரசியல் குழப்பத்தை தீர்த்து ஜனநாயக வெற்றியை உறுதிப்படுத்தியதாகப் பாராட்டப்பட்டதுடன் பலரின் பார்வை அவர் பக்கம் திரும்பியிருக்கிறது. எனிலும் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு தொடர்பில் பல தரப்பும் விசனப்போக்கை கொண்டுள்ளன. அரசாங்கம் இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மாற்றி தேர்தலை நடாத்திவிடும் என்ற அச்சத்திலேயே மஹிந்த தேசப்பிரிய கொரோனோ அபத்தத்திலும் தேர்தலை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்வதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அரசியலமைப்பு ரீதியாக சுயாதீன தன்மை வலியுறுத்தப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவானது இத்தேர்தலிலும் ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறானதொரு சூழலில், ஜனநாயகத்திற்கான மையவிடயமாகக் கருதப்படும் தேர்தலானது இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையாய் அமைதல் வேண்டும். இன்றேல் தேர்தலூடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்க தென்கிழக்கு ஆபிரிக்கா நாடானா மலாவி போன்ற நாடுகளில் நடைபெற்ற தேர்தல் அனுபவங்களை மக்களும் நீதித்துறையும் கைக்கொள்ள வேண்டும். பொதுவாகத் தேர்தல் என்ற விடயம் ஜனநாயம் இன்றி நடத்தப்பட்டால், அனைத்து இனங்களினதும் ஜனநாயக சுதந்திர வெளி என்பது காணாமல் போக வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment