இனப்படுகொலையை உறுதி செய்வதே தமிழினத்தின் உரிமையைப்பெற வலுவான காரணி! -ஐ.வி.மகாசேனன்-
இம்முறை பொதுத்தேர்தல் வடக்கு, கிழக்கில் பிரதானமாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையிலான மும்முனை போட்டியாகவே காணப்படுகிறது. அத்துடன் தேசிய கட்சியின் வேட்பாளர்களும் வடக்கு, கிழக்கில் தங்களை தமிழ்த்தேசியத்தின் காவலர்களாக காட்சிப்படுத்த முயலுகிறார்கள். மேலும் வடக்கு, கிழக்கில் சுயேட்சை குழுக்களும் பெருமளவில் போட்டியிடுகின்றன. இந்நிலை தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்வது தொடர்பிலே மக்களை ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது.
அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரையானது தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகள் தெரிவு தொடர்பில் எமது இனப்பிரச்சினை தீர்வுக்கு சரியான பொறிமுறையை கொண்டு நகர்த்தும் பிரதிநிதிகளை அடையாளம் காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிங்கள - பௌத்த பேரினவாத அரசியல் கட்டமைப்புக்குள், உள்ளக பொறிமுறையினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெறுவதென்பது சாத்தியப்பாடு அற்றதாகும். கடந்த கால வரலாறுகளும் அதனையே உறுதி செய்கிறது. இலங்கையின் அரசியல் தீர்வுக்காய் எழுத்து மூலம் ஆவனப்படுத்தப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தம் முதல் மைத்திரி - ரணில் அரசாங்கத்துடன் சம்பந்தன் செய்து கொண்ட இதயபூர்வ ஒப்பந்தங்கள் வரை யாவுமே சிங்கள பௌத்த பேரினவாத சக்தியால் தீர்வினை பெற முடியாது குழப்பத்திலேயே முடிவுற்றதாகும். மீளவும் அரசியல் தீர்வினைப்பெற அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவோம், அரசாங்கத்திற்கு 2ஃ3 ஆதரவை வழங்குவோம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கூறுவதும் சிங்கள அரசியல் தரப்புடன் இணைந்து தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் வேலையாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு தீர்வு முயற்சிகளிலும் அரசாங்கத்தின் பதவி காலம் முடிகையில் சிங்கள அரசியல் தரப்பு எம்மை ஏமாற்றி விட்டதாக கூறும் தமிழ் தலைமைகள், உண்மையில் சிங்கள அரசியல் தரப்புடன் இணைந்தே தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்விடயத்தில் தமிழ் மக்கள் இம்முறை விழித்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு உள்ள பிரதான வலு 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை ஆகும். இனப்படுகொலையை உறுதி செய்வதன் மூலமே தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடும் தாயகம், தேசியம் மற்றும் சுயநிர்ணயஉரிமை என்பவற்றுக்கு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற முடியும். சர்வதேசரீதியாக பல தேசங்களில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் உறுதிப்படுத்ததை தொடர்ந்தே குறித்த தேசங்களிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.
எனிலும் 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பிற்பட தமிழர்களின் அரசியலுக்கு தலைமை தாங்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை போர்க்குற்றம் என்ற ஒரு குறுகிய வட்டத்திலேயே சுருக்க பார்க்கின்றனர். பெரிய போர்க்குற்றங்களுக்கான முன்னாள் அமெரிக்க அம்பாஸ்டர் ஸ்ரீபன் றப் (Stephen Rapp, Former US Ambassador at Large for war Crimes), இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வதாயின் இலங்கை இராணுவத்தினரை போன்றே, விடுதலைப்புலிகளினையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் எனக்கூறும் நிலையில் போர்க்குற்றம் என்று விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுமாயின் புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளே மீள விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலை உருவாகும். அதனை குறித்தே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்காவும் ஒருமுறை கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டத்தில் 'மறப்போம் மன்னிப்போம்' என்பதாக இனப்படுகொலையை போர்க்குற்றமாக குறைத்து மறப்போம் என அறைகூவல் விடுத்தார். ரணில் விக்கிரசிங்கா கிளிநொச்சியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவது இந்நாள் வேட்பாளர்கள் மேடையில் இருக்கையிலேயே மறப்போம் மன்னிப்போம் எனக்குறிப்பிட்டிருந்தார். எனிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எவ்வித மறுதலிப்புமின்றி அமைதியாக இருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் இனப்படுகொலையை போர்க்குற்றமாக குறைத்து தமிழ் மக்களை மறைக்க வைக்கவே முயலுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இனக்குழுவின் உறுப்பினர்களை கொல்வது, குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உளரீதியாக மோசமான தீங்குகளை ஏற்படுத்துவது, அந்த இனக்குழுவில் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது, ஒரு தேசிய இனத்தை அல்லது சமயத்தை முழுமையாக அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும செயற்பாடுகள் இனப்படுகொலை என ஜ.நா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை எனப்படுவது 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினத்தை கொத்தாக கொன்றதில் மட்டுமன்றி அதற்கு முன்னரும் பின்னரும் கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படும் தமிழின இருப்பை சிதைக்கும் செயற்பாடுகளாயும் நோக்கப்படுகிறது. பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் நியூமன் 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற 37வது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் பக்க அமர்வில் கலந்து கொண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை அரசாங்கத்தால் 70 ஆண்டு காலமாக திட்டமிட்டு ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இதனை இனப்படுகொலை என்று கூறாமல் என்னவென்று கூறுவது' எனத்தெரிவித்திருந்தார். அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் பொய்லி (Francis Boile) எனும் எழுத்தாளர் 2009ஆம் ஆண்டிலேயே 'இலங்கையின் தமிழ் இனப்படுகொலை' (The Tamil Genocide By SriLanka) எனும் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். இவர்களை தாண்டி சில சர்வதேச அமைப்புக்களும் இலங்கையில் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதை ஏற்றுள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தலைமை என்பது சர்வதேச ரீதியாக தமிழர்களுக்கு உள்ள ஆதரவை திரட்டி இன்னும் அதனை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடான கடந்த 10 ஆண்டுகள் தமிழர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களுக்கான அரசியல் தலைமையாக தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் காத்திரமான முன்னெடுப்பை மேற்கொள்ள தவறிவிட்டார்கள். இலங்கையில் நடந்தது மற்றும் நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை தான் என்;பதற்கான ஆதாரங்களை திரட்ட தவறியதுடன், சர்வதேச ரீதியாக இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இனப்படுகொலை நடைபெற்றதை உறுதிப்படுத்துவோரோடு உறவை பேணி வலுவான சர்வதேச ஆதரவு கட்டமைப்பை உருவாக்கவும் தவறிவிட்டனர். மாறாக இலங்கையில் நடந்த இனப்படுகொலையை யுத்தக்குற்றமாக சுருக்கி மறப்போம் மன்னிப்போம் செயற்பாட்டினூடாக தமிழ் மக்களின் உரிமை கோரிக்கையை நீர்த்து போகும் செயற்பாட்டையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரங்கேற்றி வந்துள்ளனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிறைக்குள் இருந்து கொண்டே முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை, பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கையில் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்கள் தமிழருக்கு எதிராக இனப்படுகொலை நடாத்தி வருகிறது. என்பதை நிலைநிறுத்தியும் சுதந்திரமான அனைத்துலக விசாரணையையும் நீதியையும் வேண்டியும் பெப்ரவரி 10, 2015 அன்று வடமாகாணசபையில் 'இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானம்' என்ற ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி இருந்தார். இதன் பிற்பாடே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தாம் மறுத்து வரும் இனப்படுகொலை என்பதை என்பதை தமது ஆட்சிக்குள் உள்ள வடமாகாண சபைக்குள்ளேயே நிறைவேற்றி விட்டார் என்ற சீற்றத்தில் தாம் அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களையே ஓரங்கட்டும செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அதனடிப்படையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்றதொரு புதிய கூட்டணியுடன் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் களமிறங்கியுள்ளார்.
மேலும் 2010ஆம் ஆண்டிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்கை பிறள்வை விமர்சித்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியினரும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை உறுதி செய்வதிலும் சர்வதேச ரீதியிலான ஒரு வலைப்பின்னலை உருவாக்குவதிலும் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத போதிலும் மாற்று அணியாக கடந்த 10 ஆண்டுகளும் உறுதியான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர். ரொஹின்யா மக்கள் மீது மியான்மார் அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்த நாடாக மேற்கு ஆபிரிக்காவை சேர்ந்த கம்பியா என்ற நாடே காணப்படுகிறது. அவ்வாறான முயற்சியை தமிழ் சமூகமும் மேற்கொண்டுள்ளது. பெரிய நாடுகளோடு மாத்திரமின்றி சிறிய நாடுகளிடம் உறவினை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 2013ஆம் ஐ.நா. சபை கட்டத்தில் ஆபிரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் ஒரு சந்திப்பை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்கொண்ட போதும் அதனை குழப்பியவர்களாயும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே காணப்படுகின்றனர். எனிலும் தொடர்ச்சியாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெறுகின்றது என வருடந்தோறும் ஜெனீவா சென்று உரக்க சொல்லும் குரல்களில் ஒன்றாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காணப்படுகிறார்.
2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் மக்களிடையே மாற்று அணிகள் மாற்றுத்தலைமைகளாக வலுவடைந்துள்ள போதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற கனவிலே தேர்தல் மேடைகளில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைக்கு நீதி பெற வலுவான ஆதரவு வேண்டும் என்ற கோசத்தை முன்வைப்பதுடன், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் முரணாக இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான கருத்துக்களையே இன்றும் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், 'நாம் இலங்கையிலேயே வாழ்கிறோம். ஆதலால் என்றுமே ஜெனீவா மனித உரிமைகள் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம்' எனத்தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு இன்றுள்ள ஒரே வலுவான காரணி இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடும் இனப்படுகொலைகளை திரட்டி சர்வதேசத்தில் ஆதரவு தளத்தை உருவாக்கி நீதிகோருவதேயாகும். இதனூடகாவே இலங்கையின் இனப்பிரச்சினை வெளியக தலையீட்டுடன் தீர்க்க முடியும். மாறாக இனப்படுகொலையை மறைப்பது தமிழினத்தின் உரிமைக்கோரிக்கையை நசுக்குவதாகவே அமையும். அதனை தெளிவாக உணர்ந்து தமிழ் மக்கள் ஆகஸ்ட்-5ஆம் திகதி ஒரு விரல் புரட்சியை நிகழ்த்த வேண்டும்.
Comments
Post a Comment