வியட்நாமின் முக்கியத்துவம் கொடுக்கப்போவது அமெரிக்கா மூலோபாயத்துக்கா? சீனாவின் புவிசார் தந்திரோபாயத்துக்கா? -ஐ.வி.மகாசேனன்-

கொரானாவின் முதலாவது அலையையே பல நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர திணறும் சூழலில், இரண்டாம் அலை தொடர்பான உரையாடல் மேலெழுந்தமையால் உலக மக்கள் பலரும் மரண பயத்தில் உறைந்துள்ளனர். இச்சூழ்நிலையிலும் வல்லரசுகள் தங்கள் வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்தலில் மூலோபாய கூட்டு உருவாக்கங்களில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது அமெரிக்க - வியட்நாம் மூலோபாய உறவில் உறுதியாகிறது. தென்சீனக்கடலை மையங்கொண்டுள்ள சீன ஆதிக்கத்திலிருந்து தனது ஆள்புலத்தை காக்க வியட்நாம் அமெரிக்காவுடன் ஓர் மூலோபாய உறவுக்குள் பயணிக்கிறது.  அதனடிப்படையிலேயே இக்கட்டுரை தென்சீனக்கடல் விவகாரத்தை அடிப்படையாய் கொண்டு உருவாகியுள்ள அமெரிக்க – வியட்நாம் மூலோபாய உறவை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவிற்கு பின்னரான அரசியலில் தென்சீனக்கடல்பரப்பே கொதி நிலையில் உள்ளது. அந்த எல்லையில் பெரும் பகுதி தங்களுக்குச்சொந்தம் என்றும், பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அந்த உரிமை இருப்பதாகவும் கூறி தென்சீனக்கடலினை சீனா உரிமை கோருகிறது. குறிப்பாக மக்கள் வசிக்காத தீவுக்கூட்டங்களில் பாரசெல்ஸ் மற்றும் ஸ்பிராட்லி என்ற இரண்டு தீவுகளின் மீது உரிமை கோருவதில் சீனாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையில் சமீப காலமாக பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

2016இற்கு பின்னர், தென்சீனக்கடல் பகுதி எல்லை சர்ச்சைகளில் அமெரிக்கா எந்தத் தரப்பிற்கும் ஆதரவு தெரிவித்தது கிடையாது. அந்தப் பிராந்தியத்தில் சீனா உரிமை கோருவதற்கு சட்டபூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2016) ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச டிரிபியூனலில் தீர்ப்பு கூறிய பிறகு, முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தற்போது தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து பகிரங்கமாக ஆதரவளிக்கிறது. தென்சீனக்கடல் பகுதியில் உள்ள வளங்கள் மீது சீனா உரிமை கொண்டாடி வருவது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும், சீனாவின் இந்த உரிமைகளையும், கோரிக்கைகளையும் அமெரிக்கா முற்றிலும் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 'சர்வதேசச் சட்டத்தின் கீழான உரிமைகள் மற்றும் கடமைகளின்படி' இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய 2 போர்க் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

வர்த்தக போர் மற்றும் அண்மையில் அமெரிக்காவை உலுக்கும் கொரோனா பரவுகைக்கு சீனாவே காரணம் என்ற அமெரிக்காவின் சீற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான உறவில் பெருவிரிசல் ஏற்பட்டுள்ள சூழலில் தற்போது தென் சீனக்கடல் விவகாரத்தை அமெரிக்க இரு நாடுகளுக்குமிடையிலான மோதலின் களமாக மாற்றி வருகிறது. இம்மோதலை அமெரிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைந்து நடாத்த தென்கிழக்கு நாடுகள் சார்பாக ஆழமாக கருத்துரைக்கின்றது. தென்சீனக்கடல் பிராந்திய மோதுகைக்குள் நுழைவதற்கான காரணமாக, 'எங்களுடைய தென் கிழக்காசிய தோழமை நாடுகளுடன் துணை நிற்கிறோம். கடலோரப் பகுதி வளங்களில் இறையாண்மையுடன் கூடிய அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவுகிறோம்' என பாம்பியோ கூறியுள்ளார்.

தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவினை எதிர்க்கும் தென்கொரிய, ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பிரிப்பற்ற ஒட்டுண்ணி தேசங்கள் என்ற நிலையிலேயே நீண்டகால உறவு காணப்படுகிறது. எனிலும் அமெரிக்காவுடன் வியட்நாம் உறவு அந்தளவு நெருக்கமானதில்லை. அமெரிக்க வரலாற்றிலும் கறுப்பு புள்ளிகளில் ஒன்றாக 1950ஆம் ஆண்டு தொடக்கம் 1975ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அரங்கேறிய வியட்நாம் - அமெரிக்க போர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு 1995ஆம் ஆண்டு ஜூலை 11இலே தான் வியட்நாம் - அமெரிக்க உறவு புதுப்பிக்கப்பட்டிருந்தது. எனிலும் உரசல்கள் வடுக்கள் நெருங்கிய பிணைப்பை உருவாக்க இடமளிக்கவில்லை. இருப்பினும் இன்றும் உராய்வுகள் காணப்படினும் சீனாவைப் பற்றிய பொதுவான கவலைகள் அமெரிக்காவையும் வியட்நாமையும் அமெரிக்க - வியட்நாம் மூலோபாய பங்காளித்துவத்தினுள் ஒன்றாக இணைத்துள்ளன.

தென்சீனக்கடலில் சீனாவின் ஆத்திரமூட்டும் மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் குறித்த பொதுவான கவலைகள் அமெரிக்காவையும் வியட்நாமையும் குறுகிய காலத்தில் ஒன்றிணைத்துள்ளன. சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களுக்கும் வெளியுறவுக்கொள்கை அபிலாஷைகளுக்கும் சவால் விடும் நாடுகளைத்தண்டிக்க சீனா பலமுறை பொருளாதார காரணியை பயன்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா சீனாவுடன் போட்டியிடுவதற்கான சிறந்த வழியாக, அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் கூட்டாளர்களுக்கும் சீன சந்தையில் பொருளாதார சார்புகளை குறைக்க உதவுவதன் மூலம் சீனாவின் பொருளாதார சக்தியைக் குறைப்பதாகும். இதனடிப்படையிலே வியட்நாமுடனும் அமெரிக்கா பொருளாதார உறவை வளர்த்து கொண்டது.

அமெரிக்க - வியட்நாம் விரிவான கூட்டாண்மை 2013ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினுடைய காலத்தில் இறுக்கமாக நிறுவப்பட்டதிலிருந்து, இரு தரப்பினரும் இராஜதந்திர மற்றும் அரசியல் உறவுகளை உயர்த்துவதில் உறுதியாக உள்ளனர். வெள்ளை மாளிகைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த வியட்நாமிய தலைவர்களில் ஜனாதிபதி ட்ஷரூங் டான் சாங் (2013), பொதுச் செயலாளர் நுயேன் பு ட்ராங் (2015), மற்றும் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் (2017) ஆகியோர் அடங்குவர். அமெரிக்க தரப்பில் இருந்து, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முறையே 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வியட்நாமிற்கு விஜயம் செய்தனர். பெப்ரவரி 2019இல் இரண்டாவது வட கொரியா – அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தபோது, வியட்நாம் அரசாங்க பொதுச்செயலாளர் மற்றும் ஜனாதிபதி ட்ராங் ஆகியோரையும் அதிகாரப்பூர்வமாக சந்தித்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இருதரப்பு வர்த்தகம் 2013 மற்றும் 2019க்கு இடையில் 261 சதவீதம் அதிகரித்து 29.7 பில்லியன் டாலரிலிருந்து 77.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா இப்போது வியட்நாமின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் உள்ளது.

குறிப்பிடத்தக்க உறவு அமெரிக்க – வியட்நாம் இடையே பொருளாதார ரீதியாய் வளர்ந்தாலும் வியட்நாம் மற்றும் அமெரிக்காவின் அரசியல் கொள்கைகள் அமெரிக்க - வியட்நாம் உறவுகளில் சவால்களை ஏற்படுத்தியே வருகிறது. வியட்நாம் இன்றும் முதலாளித்துவ பொருளாதாரத்தோடு கம்யூனிச ஆட்சி நடைபெறும் தேசமாகவே காணப்படுகிறது. இவ்அரசியல் கொள்கையானது, முழு உலகையும் தாரள சனநாயகத்துக்குள் கொண்டு வந்து ஆளத்துடிக்கும் அமெரிக்காவுடனான உறவில் சவால்களை உட்படுத்துவது தானே யதார்த்தமாகும். வியட்நாம் அதன் மனித உரிமை பதிவை மேம்படுத்தியிருந்தாலும், கருத்து சுதந்திரம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் உட்பட பல பகுதிகளில் கவலைகள் உள்ளன என அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்கள் வியட்நாமை விமர்சிக்க அமெரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இது அமெரிக்க - வியட்நாம் உறவின் அமைதியான பரிணாமம் பற்றி வியட்நாமிற்கு சந்தேகத்திற்கு வழிவகுத்தது. இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் வியட்நாமை உலக வர்த்தக அமைப்பின் கீழ் முன்னுரிமை வர்த்தக சலுகைகளைப் பெறும் வளரும் நாடுகளின் சுய அறிவிப்பு பட்டியலில் இருந்து நீக்கியது முதலான சில அமெரிக்க செயற்பாடுகள் அமெரிக்க - வியட்நாம் இடையேயான வர்த்தக உறவுகளின் முக்கிய திட்டத்தை அகற்றியது. 

பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி இருந்தபோதிலும் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளைப் போல வேகமாக முதிர்ச்சியடையவில்லை. ஆபத்தான ஆயுதத் தடை நீக்கப்பட்டதிலிருந்து, வியட்நாம் அமெரிக்க தயாரித்த ஆயுதங்களை வாங்கவில்லை. மாறாக வியட்நாமின் 80 சதவீதத்திற்கும் அதிகமான இராணுவ உபகரணங்கள் ரஷ்யாவிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க வியட்நாம் உறவில் இவ்உரசல்களுக்கு மத்தியில், தென்சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை வியட்நாமுக்கு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளமையும், கொரோனா விவகாரத்தை தொடர்ந்து அதிகரிக்கும் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் வல்லாதிக்கத்துக்கு சவால்களை ஏற்படுத்துகின்றமையும் என்ற சீனா எதிர்ப்பு பொது புள்ளியில் அமெரிக்க – வியட்நாம் உறவு மீண்டும் மூலோபாய ரீதியாக வலுப்பெறும் சூழல் உருவாகியுள்ளது.

இறுதியாக, நவம்பரில் வெளியிடப்பட்ட வியட்நாமின் சமீபத்திய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையின் உள்ளடக்கங்கள் சமகாலத்தில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கதவைத் திறக்கிறது. வியட்நாமின் 'மூன்று இல்லை' பாதுகாப்புக் கொள்கையானது, ('வுhசநந ழே'ள' னநகநளெந pழடiஉல) 'கூட்டணிகள் இல்லை; வியட்நாமிய பிரதேசத்தில் வெளிநாட்டு தளங்கள் இல்லை; மூன்றாம் நாட்டிற்கு எதிராக ஒரு நொடியுடன் ஒத்துப்போவதில்லை. ஆனால் சூழ்நிலைகள் மற்றும் குறிப்பிட்ட நிலைமைகளைப் பொறுத்து, வியட்நாம் மற்ற நாடுகளுடன் தேவையான பொருத்தமான பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளை வளர்ப்பது குறித்து பரிசீலிக்கும்' என வலியுறுத்துகிறது.

வியட்நாமின் இறுதியான பாதுகாப்பு கொள்கை உள்ளடக்கங்களும், தென்சீனக்கடலில் தென்கிழக்காசிய நாடுகளின் இணக்கத்துடன் சீனாவுடன் மோத தயாராகும் அமெரிக்காவின் விருப்பும் ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கிறது.  தென்சீனக்கடலில் சீனாவின் நடத்தை கட்டுக்குள் வராவிட்டால், அமெரிக்காவும் வியாட்நாமும் ஓர் புள்ளியில் இணையும் சூழலே அதீதமாக காணப்படுகிறது. மார்ச் 11 அன்று அமெரிக்க தியோடர் ஷரூஸ்வெல்ட் விமானம் தாங்கி கப்பல் டா நாங்க் துறைமுகத்திற்கு அழைக்கப்பட்டது.  மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக விமானம் தாங்கி போர் கப்பல் வியட்நாமிற்கு விஜயம் செய்துள்ளது. 

ஏப்ரல் 18 அன்று (2020), சீனா சர்ச்சைக்குரிய பாரசெல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள் மீது நிர்வாக கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதாக அறிவித்ததிலிருந்தே, தென்சீனக் கடலில் வியட்நாமுக்கு எதிரான சீன உறுதிப்பாடு மீண்டும் அதிகரித்திருந்தது. இந்த புதிய சுற்று இருதரப்பு பதட்டங்களைத் தொடர்ந்து, வியட்நாம் ஒவ்வொரு சீன நடவடிக்கையையும் பகிரங்கமாக எதிர்த்தது. ஆனால் இந்த அறிக்கைகள் சீனாவின் மோசமான நடத்தையை மாற்றத சூழலிலே சீன உறுதிப்பாட்டைக் குறைக்க வியட்நாம் சர்வதேச ரீதியிலான அமெரிக்காவுடனான மூலோபாய உறவினுடாக சீனாவை கட்டுப்படுத்த முயற்சியை எடுத்து வருகிறது. அதேநேரம் புவிசார் அரசியல்ரீதியில் வியட்நாமின் அரசியல் பொருளாதார இராணுவ உத்திகளை கையாளும் வல்லமையுடன் சீனா விளங்குகிறது. வுpயட்நாமோ அமெரிக்காவுடனான உறவே பொருளாதார முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துவதே அள்றி அரசியல் இராணுவ உபாயங்களில் ரஷ்சிய, சீன உபாயங்களில் கட்டுப்பட முயலுகிறது. இதனை அவதானித்தால் 1978இல் சீனா அமெரிக்காவை அணுகியது போன்று 2020இல் வியட்நாம் அமெரிக்காவை அணுகுவது போல் தெரிகிறது. எனவே தான் மூலோபாயத்தை விட புவிசார் அரசியல் தந்திரோபாயம் முக்கியமானதாக உள்ளது என வியட்நாம் கருதுவது போன்று தெரிகிறது.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-