இலங்கையின் கொரோனா இரண்டாம் அலையும்; தேர்தல் அரசியலும் -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் தேர்தலும் கொரோனா பரவுகையும் ஒன்றோடொன்று முட்டிமோதுவதாகவே காணப்படுகின்றது. கடந்த மார்ச்-2ஆம் திகதி பராளுமன்றம் கலைக்கப்பட்ட நாள்முதலாகவே இலங்கையில் கொரோனா பரவுகையின் தாக்கமும் ஆரம்பித்துவிட்டது. மார்ச்-13ஆம் திகதி இலங்கையை சேர்ந்த முதல் கொரோனா தொற்று நோயாளி இனங்காணப்பட்டார். அதன் பின்னரான பரவுகை அதிகரிப்பை தொடர்ந்து ஏப்ரல்-25 திகதியிடப்பட்ட தேர்தல் மறுதிகதி அறிவிக்காது பிற்போடப்பட்டது. ஆயினும் அரசாங்கத்தின் அழுத்தத்தில் தேர்தல் ஆணைக்குழு ஜூன்-20ஆம் திகதியை மீள தேர்தலுக்கான திகதியாக அறிவித்தது. எனிலும் அதிலும் உறுதிப்பாடு காணப்படவில்லை. இறுதியில் நீதிமன்ற தீரப்பூடாக தேர்தல் நடைபெறக்கூடிய சுகாதார சூழல் இருப்பதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து தேர்தல் திணைக்களம் ஆகஸ்ட்-5 இனை தேர்தல் திகதியாக அறிவித்தது.

தேர்தல் ஆணைக்குழுவும் சுகாதார திணைக்களமும் இணைந்து தேர்தல் காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சில சுகாதார நடைமுறைகளையும் அறிவித்திருந்தார்கள். எனிலும் பிரச்சார களங்களில் அந்நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதே பெரிய கேள்விக்குறியாக காணப்படுகிறது. இந்நிலையிலே, இலங்கையின் பொதுத்தேர்தலுக்கு இறுதியாக இடப்பட்ட திகதிக்கு இன்னமும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் பெருந்திரளான எண்ணிக்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த முகாமுக்கு சென்று வரும் ஆலோசகர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளது. ஆலோசகர்கள், அதிகாரிகள் முகாமுக்கு வெளியே பல இடங்களுக்கு சென்றுள்ளமையால் சமூக பரவலை நோக்கி கொரோனா தொற்று நகர்வதாகவே சுகாதார அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையாகவும் இதனை பலரும் நோக்குகின்றனர். எனிலும் இலங்கையின் சுகாதார திணைக்களம் தொடர்ச்சியாக இதனை முதலாவது அலையின் விளைவே என்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பானது, மக்களிடையே கொரோனா பற்றி குறைந்து கொண்டு சென்ற பயத்தை மீள அதிகரித்துள்ளது. மீண்டும் கொரோனா தொற்று பீதி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பிற்போடப்படுமா என்ற உரையாடலும் அரசியல் பரப்பில் சமூக அக்கறையாளர்களாலும் எதிர்க்கட்சிகளாலும் உரையாடப்படுகிறது. எனிலும் அரசாங்கம் தேர்தலை ஆகஸ்ட்-5ஆம் திகதிக்குள் நடாத்தி முடிப்பதிலேயே குறியாக உள்ளது. தேர்தல் ஆணைக்குழு சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பின் பரிசீலணையிலே தேர்தல் நடைபெறும் எனக்கூறுகிறது. சுகாதார திணைக்களம் அரசாங்கத்தின் இறுக்கமான கட்டுக்குள்ளேயே செயற்பட்டு வருகிறது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் தேர்தல் ஏற்பாடுகளையும் கொரோனாவின் இரண்டாம் அலைக்கான சமிக்ஞைகளையும் மையப்படுத்தி உரையாடுகிறது.

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றுபவர்களின் மூலம் ராஜாங்கனை, ஹபராதுவ, வெலிக்கந்த, லங்காபுர உள்ளிட்ட இடங்களிலும் புதிய தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 16 மாவட்டங்களில் 3000இற்கு மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனூடாக, இதுவரையில் தனிமைப்படுத்தல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த கொரோனா தொற்று, சமூகத்துக்குள் பரவ ஆரம்பித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூக பரவல் கடுமையாக வீரியமடைந்து வருகின்ற சூழலிலும் தேர்தல் நடைபெறவேண்டும் என்ற நோக்கில் அதனை மூடி மறைப்பதற்கான ஏற்படுகளையே கொரோனா தடுப்பு செயலணி, சுகாதார திணைக்களம் மற்றும் அரசாங்க தரப்பினரின் செயற்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது. 
கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கான மத்திய செயற்பாட்டு நிலையத்தின் பொறுப்பாளரும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, 'நாட்டில் அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியத்துவமுடையவை தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்' என எச்சரிக்கையை விடுகின்றார். அதேநேரம், நாட்டில் தற்பொழுது இரண்டாம் இதுவரையில் பிரகடனப்படுத்தக்கூடிய நிலை இல்லை என்றும் தொடர்ச்சியாக கொரோனா வீரியத்தை மறுத்தே வருகின்றார். சவேந்திர சில்வாவின் இரட்டை நிலைப்பாடு அரசாங்கத்தின் சார்பான தேர்தலை நடாத்த வேண்டும் என்ற விருப்புடன் செயற்படுவதையே புலப்படுத்துகிறது. 

பரந்தளவில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதால், சுகாதார அதிகாரிகள் நிலைமையைக் கையாளுவதில் திணறிக்கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. நாட்டில் மீண்டும் பெரியளவிலான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கு சுகாதார அமைச்சின் பொறுப்பற்றதனமே காரணம் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இன்றைய நிலையில் சுகாதார அதிகாரிகள் சமூக முடக்கத்தை மீள கட்டாயமாக்குவதே அவசியம் என பரிசீலித்து வருகின்றனர். எனிலும் தொடர்ச்சியாக சுகாதார திணைக்களம் சமூக பரவல் ஏற்படவில்லையெனவும் இரண்டாம் அலை உருவாகவில்லை எனவும் கூறி கொரோனா பற்றி வெளிப்படை தன்மையின்றி செயற்படுகின்றது. ஆயினும் மறுபுறம், சுகாதார திணைக்கள தலைவர் அனில் ஜயசிங்க, சமூகத்தில் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுகின்றார். இது கொரோனா தொற்று சமூகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு பரவல் ஏற்பட்டுள்ளதால் உண்மையை மூடி மறைக்க முடியாது இரட்டை நிலைப்பாட்டில் திணறுகின்றமையே புலப்படுத்துகிறது. 

தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை மையப்படுத்தி அரசாங்கத்தால் வரும் கடும் அழுத்தத்தால் சுகாதார திணைக்களம் அமைதி காக்கின்றதோ என்ற ஒரு செய்தியும் அதிகளவில் பேசுபொருளாக காணப்படுகிறது. கொரோனா பரவல் சமூக முடக்கம் பற்றிய செய்திகள் அதிகரிக்கப்பட்ட போது ஜனாதிபதி செயலகம் கொரோனாவை கட்டுப்படுத்த நள்ளிரவு 12.00 மணி முதல் காலை 4.00 மணி அமுலாக்கப்பட்ட ஊரடங்கு என்பது அரசாங்கமும் சுகாதார திணைக்களமும் இணைந்து மக்களை ஏமாற்றும் நாடகம் என்பது வெளிப்படையாகிறது.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் யாவரும் வீரியம் பெறும் கொரோனா பரவல் செய்திகளை தேர்தல் நலனுக்காக அசண்டையாகவே கடந்து செல்கின்றனர். இது இலங்கை மக்களுக்கே ஆபத்தானது. பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ உம் ஆரம்பத்தில் பொருளாதார நலன் சார்ந்து கொரோனாவை அசண்டை செய்த நிலையிலேயே பிரேசில் கொரோனா தொற்றுக்கு அதிகம் உள்ளான நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை தேர்தல் நலனுக்காக அரசாங்கம் மூடி மறைப்பது கொரோனா தொற்றின் முதல் அலையை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட நன்மைகளை சிதைப்பதாகவே காணப்படும்.

தேர்தல் ஆணைக்குழு கொரோனா தொற்று பரவல் காலத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் அரம்பத்திலிருந்து இறுக்கமான முடிவினை எடுக்காது நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக சுகாதார திணைக்களம் மீது பழியை சுமத்தி நழுவும் நிலையிலேயே காணப்படுகிறது. கொரோனா அபத்தத்தில் தேர்தலை நடாத்துவதால் ஜனநாயகம் உறுதி செய்யப்படுமா? என்பது தொடர்பில் இறுக்கமான முடிவுகளை எடுக்க தவறுகிறது. குறிப்பாக இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தும் நிலையில், கொரோனா அபத்த காலத்தில் நடைபெறும் தேர்தலின் ஜனநாயகம் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியாவும் அரசாங்க அழுத்தத்தின் மத்தியிலேயே தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதையே சுயாதீன தன்மை கேள்விக்குறியாவது புலப்படுத்துகிறது. 2015ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது பாராட்டுப்பெற்ற சுயாதீனதன்மையை 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை நடாத்துவதில் தேர்தல் ஆணைக்குழு இழந்து வருகிறதோ என்ற ஐயப்பாடே பரவலாக ஏற்பட்டுள்ளது. 

கொரோனா அபத்தம் மீள ஓர் அலையாக அதிகரிக்கப்பட்டு வரும் சூழலிலும் இதுவரை தேர்தலுக்கான வழிகாட்டு முறைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாமல் சுகாதார அமைச்சு இழுத்தடித்து வருவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கடும் விசனமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்களும், வாக்காளர்களும் மாத்திரமன்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் சஜித் பிரேமதாச போன்றவர்களும் கூட, சுகாதார வழிமுறைகள் பின்பற்றாமல் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரவாளர்களுடன் நெருக்கமாக சுயபடம் எடுத்துக் கொள்வதுடன், கைகுலுக்குவதும், கொரோனா தொற்று ஆபத்தை அவர் அலட்சியம் செய்வதாக சுகாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் சமீபத்திய கொரோனா பரவுகை அதிகரிப்பை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை குறைந்தது ஒரு வாரங்களுக்கேனும் தவிர்த்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார். அத்துடன் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலமாய் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் முறையாவது சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையால் பொதுத் தேர்தலுக்கு ஆபத்து ஏற்படலாம் என பலர் ஆரூடம் கூறிவரினும் சுயாதீன ஆணைக்குழுக்களையே கட்டுப்படுத்தும் தற்போதைய அரசாங்கம் திகதியிடப்பட்ட நாளில் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளையே முழுவீச்சில் செயற்படுத்தும் என்பதே யதார்தமான உண்மையாகும். கொரோனா வைரஸ் பரவுகையின் தன்மையை மூடிமறைக்கவும் அரசாங்கம் முழு அதிகார கட்டமைப்பையும் பயன்படுத்தலாம். எனிலும் இச்சூழ்நிலையில் கொரோனா பரவுகையின் உண்மை தன்மையை அறிந்து மக்களை விழிப்பூட்டுவதுடன், மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களையே சாருகிறது. ஊடகங்கள் விழிப்புடன் உண்மை செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். 

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-