சீனா - இந்தியா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆசிய நூற்றாண்டுக் கனவை நிர்மூலமாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

2020ஆரம்பத்திலிருந்தே உலகம் ஓர் பதட்டத்துடனேயே அரையாண்டை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகை மரண ஓலங்களில் நிலைநிறுத்;தியது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத சூழலில் மரண ஓலங்களின் நடுவே உலகம் கொரோனாவோடு வாழப்பழகிக் கொண்டது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அரசியல், பொருளாதார தாக்கங்களை உலகம் தற்போது அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளது. கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கு ஆசியாவின் நூற்றாண்டு என்பது உறுதி செய்துவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவை சூழ்ந்துள்ளது. அந்த அச்சத்தின் விளைவாய் தான் இந்தியா - சீனா எல்லை முரண்பாட்டில் இந்தியாவிற்கு உதவி என்ற பேரில் நுழைந்து இந்தியாவையும் சீனாவையும் போர் வலயமாக்கி இருநாடுகளையும் அமெரிக்க முடக்க நினைக்கிறதா என்ற ஐயப்பாடு சர்வதேச ஆய்வாளர்களிடையே உருவாகியுள்ளது. அதனை தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.

உலக ஆதிக்கம் என்பது நிலையான சொத்து இல்லை. அது நூற்றாண்டுகளில் மாறி மாறி நிலை பெற்றுள்ளது. நாடுகாண் பயணங்கள் வரையில் நாடுகளுக்கு இடையில் ஆதிக்க உணர்வுகள் பரவலாக காணப்படாமையால் உலக ஆதிக்க சிந்தனை எழுச்சியுறவில்லை. நாடுகாண் பயணங்களின் வளர்ச்சி 16ஆம் நூற்றாண்டின் உலக ஆதிக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தி பிரித்தானியர் வசம் சென்றது. 20ஆம் நூற்றாண்டில் உலகப்போர்கள் உலக ஒழுங்கை மாற்றி அமைத்தது. உலக ஆதிக்க சக்தியும் அமெரிக்க கண்டத்திற்கு நிலைமாறி அதன் ஆற்றலை அமெரிக்க தன்வசப்படுத்தியது. அந்த தொடரிலேயே இன்றைய 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் வசமாகும் என்றும் அதன் ஆதிக்க சக்தியாக சீனா அல்லது இந்தியா காணப்படும் என்ற சிந்தனை முன்னரே அரசியல் ஆய்வாளர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனை ஒடுக்கி ஆதிக்கத்தை 21ஆம் நூற்றாண்டிலும் தொடரவே அமெரிக்க பெருமுயற்சி எடுக்கிறது.

21ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் வகிபாகம் தொடர்பான உரையாடலில் பிரதானமாக சீனா மற்றும் இந்தியா பற்றிய வளர்ச்சியே முதன்மை பெறுகின்றது. 1950களிலே உலகின் அரைப்பங்கிற்கும் அதிகமான மக்கள்தொகை ஆசியாவில் காணப்பட்ட போதிலும் மொத்த உற்பத்தியில் 20மூ மாத்திரமே ஆசியாவிடம் காணப்பட்டது. எனிலும் 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்நிலை மாற்றமடைந்துள்ளது. 1988ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைவர் டெங் சியாவோப்பிங் மற்றும் இந்தியாவின் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியும் சந்தித்த போதும் 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்ற உரையாடல் முதன்மைபெறலாயிற்று. எனிலும் அதற்கு முன்னரே 1985ஆம் ஆண்டில் அமெரிக்க செனட்டின் வெளியுறவுக்குழு 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டு என்ற உரையாடலை ஆரம்பித்து விட்டார்கள். 

கொரோனா அபத்தத்திலிருந்து சீனாவின் விரைவான மீள்ச்சி, கொரோனா அபத்தத்தில் உலகு முடங்கியிருக்க சீனாவின் பொருளாதார ஆதிக்கம் என்பன சீனா, கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் வல்லாதிக்க நிலைபெறும் என்பதே பல ஆய்வாளர்களின் முடிவாகவும் காணப்பட்டது. அதனை முடக்கவே அமெரிக்க சீனா மீது கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்கியவர்கள் என்ற கடுமையான சாடலை முன்வைப்பதுடன் அதற்கு ஆதரவாக ஓர் அணியையும் திரட்டியுள்ளது. தொடர்ந்து தென்சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பையும் காட்டியிருந்தது. போருக்கான ஆயத்தமாக தனது போர்க்கப்பல்களையும் அமெரிக்க தென்சீனக்கடலிற்கு அனுப்பி இருந்தது. சகல விதத்திலும் சீனாவிற்கு எதிரான ஒரு அணையை கட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக உள்ளது.

சீனா ஒரு சோசலிச சர்வதிகாரத்தை கொண்ட நாடு என்பதால் அதனை அரசியல் சித்தாந்த ரீதியாக தாக்குவதன் மூலம் ஓர் பலமான அணியை திரட்டி சீனாவிற்கு எதிராக போரிடுவது என்பது அமெரிக்காவிற்கு ஒப்பீட்டடிப்படையில் இலகுவான காரியமாகிறது. ஆயினும் இந்திய தாராள சனநாயக நாடு என்ற ரீதியில் அதற்கெதிராக கூட்டு உருவாக்கம் என்பது எளிதாக அமைய போவதில்லை. தாராள சனநாயக பாசறையே இரண்டாக பிளவுற வேண்டிய தேவை காணப்படும். இதனடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியாவே அமெரிக்காவிற்கு அல்லது மேற்கிற்கு ஆபத்தான அரசாக இருக்கும் என்பதை அமெரிக்க மற்றும் மேற்குலகு முன்கூட்டியே உணர்ந்தே அதற்கு எதிராக செயற்பட விளைகிறது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை விவாரமும் அவ்வாறனதொரு முற்கூட்டிய பாதுகாப்பு கொலையாக நோக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையிலேயே, சீனாவுடன் நேரடியாக மோதும் அமெரிக்கா, இந்தியாவுடன் கைகோர்த்து இந்தியாவை விழுத்துவதற்கான வியூகங்களை நகர்த்தி வருகிறது. சீனாவினை எதிர்த்து வெளியேறிய மேற்குலகு நாடுகளின் பொருளாதார நிறுவனங்கள், சந்தைக்குரிய நிலமாக இந்தியாவினையே தேர்வு செய்துள்ளனர். சீனா வீழ்த்தப்படின் ஆசியாவின் ஆதிக்க சக்தியாக இந்தியா உருப்பெறும் என்பதையே சீனாவிலிருந்து இந்தியாவிற்கு நிறுவனங்கள் மாற்றம் பெற்ற நிகழ்வு வெளிப்படுத்துகிறது. இதனை கருத்திற்கொண்டே இந்தியாவினை கூட இருந்து குழிபறிக்கும் செயற்பாடுகளை அமெரிக்க முன்னெடுத்து வருகிறது. இந்தோ - பசுபிக் மூலோபாயத்தின் பூகோள முக்கியத்துவத்தினடிப்படையில் உண்மையான எஜமானாக இருக்க வேண்டிய இந்தியாவை அதன் பாதுகாவலான அமெரிக்க பேணுவது அமெரிக்க இராஜதந்திரத்தின் உச்சகட்ட வெற்றியாகும்.

இன்று இந்திய – சீனா எல்லை முரண்பாட்டை அணையவிடாது பாதுகாப்பதிலும் அமெரிக்க வெற்றியையே பெற்று வருகிறது. இது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளினதும் இராஜதந்திர தோல்வியாகும். புவிசார் அரசியல்ரீதியிலான இணக்கப்பாட்டை காணவேண்டிய இந்திய மற்றும் சீனா ஆகிய இரு அரசுகளும் மோதுவதென்பது 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பதை சிதைக்கும் நிகழ்வாகும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் பிரிவின் இயக்குநரும், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சர்வதேச விவகாரங்களுக்குமான பங்களிப்பு ஆசிரியருமான சி.ராஜமோகன், 'இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தால் இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாகவோ, சீனா நூற்றாண்டாகவோ மாறும் வாய்ப்புக்கள் மேலும் சிக்கலாக்கும்' என்று நினைவுபடுத்தியுள்ளார்.

21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாகவோ, சீனா நூற்றாண்டாகவோ மாறும் வாய்ப்புக்கள் மேலும் சிக்கலாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அமெரிக்காவின் செயற்பாடுகள் அமைகிறது. இந்திய – சீன முரண்பாட்டை தவிர்க்க சமாதான பேச்சுவார்த்தையே சாதகமான முடிவு என்பதே பல ஆய்வாளர்களதும் கருத்தாக அமைகிறது. சீனா தொடர்பான விவகாரங்களில் நிபுணரான ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்வரண் சிங், எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இரு நாடுகளும் போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது அண்மைச் சம்பவத்திலிருந்து தெளிவாகிவிட்டதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்றும் நம்புவதாக தெரிவித்;துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக, இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட முயற்சித்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 2018 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து சீனாவின் வுஹான் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரண்டாவது முறையாக இருவரும் மீண்டும் சென்னை அருகே மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், இரு நாடுகளின் தலைவர்களும் தங்கள் படைகளை சமாதானத்தை நிலைநாட்டும் வழியில் வழிநடத்துவதாக ஒப்புக் கொண்டனர். தற்போது சீனா மீது உலகமே மிகுந்த மனக்கசப்பு கொண்டிருப்பதாக கூறும் ஸ்வர்ன் சிங், எனவே தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு போரையும் சீனா விரும்பாது என்று கூறுகிறார். எனவே, இந்தியாவுடனான உறவை சுமூகமாக்குவதைத் தவிர சீனாவுக்கு வேறு வழியில்லை என்று அவர் கருதுகிறார்.

எல்லையில் மோதலுக்கு தயராகும் இராணுவத்தளபதிகள், வெளிவிவகார அமைச்சகங்கள் என பலதரப்பட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு விட்டது. ஆயினும் சுமூகமான நிலை உருவாக முடியாது காணப்படுகிறது. இதன்பின்னணியில் அமெரிக்காவின் செல்வாக்கு காணப்படுகிறமை தவிர்க்க முடியாத வாதமாகும். காரணம் இந்தியா மற்றும் சீனா எல்லைப்பிரச்சினையை பேச்சு பேச்சுவார்த்தையூடாக தீர்ப்பதற்கான மத்தியஸ்தத்தை ஆரம்பத்தில் அமெரிக்க வழங்குவதாக முன்வந்த போதிலும் சீனா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுமே நிராகரித்திருந்தன. எனினும் ரஷ்சியா வெளிவிவகார அமைச்சரின் மத்தியஸ்தத்தில் ஜூன்-23 இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீனா வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவு சாதகமாக அமையாத போதிலும் அமெரிக்காவை புறக்கணித்து ரஷ்சியாவுடன் இணங்கி செல்வது நிச்சயமாக அமெரிக்காவிற்கு சீற்றத்தையே ஏற்படுத்தும்.

ஜூன்-02ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடி இருந்தனர். இரு தலைவர்களும் சீன-இந்திய எல்லை பதட்டங்கள் குறித்து விரிவாக பேசியிருந்தார். இதன் பின்னர் இந்தியா – சீனா விவகாரத்தில் இந்தியாவுக்கான ஆதரவு தளத்தில் அதிக ஈடுபாட்டுடன் அமெரிக்க பயணிக்க தொடங்கியது. இருவரும் கூட்டு இராணுவப்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளும் இந்தியாவிற்கான ஆயுத உதவிகளை வழங்க முன்வந்தன. பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இருநாடுகளுக்குமிடையிலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்விமானத்தின் தொழில்நுட்பம் தென்னாசியாவுக்கு புதியதாகும். குறிப்பாக இதிலேயே அமெரிக்க தெளிவான இராஜதந்திர நகர்வை நகர்த்தி வருகிறது. இந்தியாவுக்கான ஆயுத உதவிகளூடாக சீனா - இந்தியாவிடையே ஓர் போர் பதட்டத்தை நிலவ செய்து இரு நாடுகளதும் பொருளாதார வளர்ச்சியையும் அமெரிக்க மற்றும் மேற்குலகு நாடுகள் தடுக்க முற்படுகிறது.

கொரோனவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் சீனா மற்றும் இந்தியா அரசுகளின் பொருளாதார வளர்ச்சியும், அதனை தடுக்கும் விதத்தில் இந்தியா – சீனா முரண்பாட்டை சீர்செய்ய முயலாது முரண்பாட்டை பெரிதாக்கும் அமெரிக்க செயற்பாட்டை இந்தியா நிதானத்துடன் ஆராய வேண்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா புவிசார் அரசியல்ரீதியில் ஆசியாவின் பிரதான சக்திகளாகும். இத்தேசங்களின் முரண்பாடு புவிசார் அரசியல்ரீதியாகவே அணுக வேண்டும். அமெரிக்காவின் மூலோபாய உறவை இதனுள் இந்திய அநுமதிப்பது என்பது சீனாவை முடக்குவது மாத்திரமின்றி இந்தியா அரசு தன்னையும் முடக்கும் செயலாக அமைகிறது.



Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-