போல்சனாரோவின் விவேகம் அற்ற அரசியலால் பிணக்குவியலை சுமக்கிறது பிரேசில்! -ஐ.வி.மகாசேனன்-
கொரோனா அபத்தம் பல நாடுகளிலும் தனது இரண்டாம் அலையை ஆரம்பித்துள்ள சூழலில் ஆரம்பம் முதல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நாடுகள் வரிசையில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாம் நிலை பெற்றுள்ள தேசமாக பிரேசில் காணப்படுகிறது. பிரேசிலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியமைக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ மீது உலகளவில் கடும் விசனம் காணப்படுகிறது. இந்நிலையிலே இக்கட்டுரையும் பொல்சனாரோவின் அசண்டையால் பிணநாடகா மாறும் பிரேசிலின் கொரோனா நிலைமையை ஆராய்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூலை-01ஆம் திகதி வரையான தரவுகளின்படி பிரேசிலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தினசரி முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றாளராய் அடையாளம் காணப்படுவதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா பலியெடுக்கிறது. உலகளவில் கொரோனாவினால் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளான நாடுகள் வரிசையில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ள தேசமாக பிரேசில் காணப்படுகிறது.
ஒரு தேசம் நெருக்கடியான சமயத்தில் இருக்கும்போது, பொறுப்புள்ள தலைவர்கள் அந்த நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க கடுமையாக உழைப்பார்கள். இன்றைக்கு கொரோனா வைரஸ் என்ற பெரும் அபாயத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றிய தலைவர்களாக யாரும் எதிர்பாராத வகையில் பல பெண் தலைமைத்துவ நாடுகள் உலகளவில் பிரபல்யமடைந்து வருகின்றன. மாறாக தலைமை பொறுப்பால் நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியவர்களாய் தீவிர வலதுசாரிபோக்கினை கடைப்பிடித்த சில தலைவர்களின் செயல்பாடுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அப்படிப்பட்ட தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்குத்தான் முதலிடம். அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவராய் அவருடைய நண்பர், பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்ஸனாரோ காணப்படுகிறார். ஜூலை இறுதிக்குள் மூன்றாம் நிலையை ட்ரம்பின் மற்றொரு நெருங்கிய நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெறவும் அதீத வாய்ப்பே காணப்படுகிறது. இந்நிலை ஜனநாயக போர்வையில் இடம்பெறும் தீவிர வலதுசாரிபோக்கின் பலவீனத்தை அடையாளப்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பில் பிணக்குவியலை பிரேசில் சுமக்க, முக்கிய காரணம் அதிபர் போல்ஸனாரோதான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்விடயத்தில் ஆரம்பம் முதலே அவர் காட்டிய அலட்சியமும், ஆணவமும் ட்ரம்ப்பைவிட ஒருபடி அதிகம் என்றே சொல்லலாம். ஜனநாயகத்துக்கும் அறிவியலுக்கும் எதிரானவராகவே கொரோனா அபத்தத்தை கையாள்வதிலும் தொடர்ச்சியாக செயற்பட்டடமையே பிரேசிலின் அழிவுப்பாதைக்கு காரணமாகியது. தீவிர வலதுசாரித் தலைவரான இவர், இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். துப்பாக்கித் தடைச் சட்டங்களைத் தளர்த்துவது, போலீஸுக்குக் கட்டற்ற அதிகாரங்களை வழங்குவது என்பன போன்ற கருத்துகளைக் கொண்டவர்.
கொரோனா விடயத்தில் அவர் மேற்கொண்ட அணுகுமுறைகள், அறிவியல், மருத்துவம் போன்றவற்றில் அடிப்படை அறிவைக் கொண்ட யாரையும் திகைக்கச் செய்பவை. இந்த வைரஸ் தொற்றை 'சிறிய' காய்ச்சல் என்றே ஆரம்பித்திலிருந்து குறிப்பிட்டு வருகிறார். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'அதனால் என்ன?' என்ற அசண்டையான பதிலை கூறியிருந்தார். அத்துடன் 'நான் சவக்குழி தோண்டுபவன் அல்ல' எனவும் கூறியிருந்தார். கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்த அமுலாக்கப்பட்ட ஊரடங்குக்கு எதிராகவும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் மற்றும் வெளியே செல்லும் போதெல்லாம் முகக்கவசம் அணியுமாறும் உள்ளூர் விதிகளை பின்பற்றுமாறும் பிரேசில் நாட்டு பெடரல் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (wall Street Journel) செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிர வலதுசாரப்போக்குடைய போல்சனாரோ அமெரிக்க அதிபர் ட்ரமப் போன்றே கொரோனா பரவுகையை கட்டுப்படுத்த அமுலாக்கப்படும் செய்யப்பட்ட ஊடரங்கை பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிணாகவே நோக்கியிருந்தார். மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் தனிமனித இடைவெளியை அமுல்படுத்தவே செய்தன. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே அவர் பேசிவந்தார். ஊரடங்கை அமுல்படுத்திய ஆளுநர்களை கடுமையாக விமர்சித்திருந்தார். நாட்டின் ஜனாதிபதி ஊரடங்கை விமர்சித்த நிலையில் அவருடைய ஆதரவாளர்ளும் ஊரடங்கு நடைமுறைகளை உதாசீனம் செய்தே செயற்பட்டார்கள். அதனாலேயே இன்று அதிகரிக்கும் பிணக்குவியல்களையும் மக்கள் உதாசீனம் செய்தே செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தைப் பழிசொல்வதிலும் ட்ரம்ப்புக்கு நிகரானவராக இருக்கிறார். போல்ஸனாரோவும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். அமெரிக்காவில் ட்ரம்பின் அசண்டையால் கொரோனா பரவுகை அதிகரிக்கப்பட்டதன் பின்பு ட்ரம்ப் தன்னை சுதாகரித்துக்கொள்ள சீனா மீதும் உலக சுகாதார நிறுவனம் மீதும் குற்றம் சாட்டியது போன்றே போல்சனாரோவும் தனது அலட்சியத்தால் சுகாதார விதிமுறைகளை உதாசீனம் செய்தமையால் கொரோனா பரவல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் மீது குற்றம் சாட்டி, 'உலக சுகாதார நிறுவனம் ஒருதலைபட்சத்தில் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளாமல இருந்தால் பிரேசில் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகநேரிடும்.' எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா அபத்த காலத்தில் போல்சனாரோ சுகாதாரத் துறையை கையாளும் விதம் இன்னும் கொடுமையானது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைளை மேற்கொள்ள பிரேசில் சனாதிபதி ஒத்துழைக்காத சூழலில் கொரோனா காலப்பகுதியினில் மத்திய அரசில் இரு சுகாதார அமைச்சர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். ஆரம்பத்திலிருந்தே கொரோனா நடவடிக்கை தொடர்பாக பிரேசில் ஜனாதிபதிக்கும் சுகாதாரத்துறை நிபுணர்களுக்குமிடையில் தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகளே காணப்பட்டு வருகிறது. போல்சனாரோ இன் முடிவுக்கு மாற்று கருத்து தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனிமனித இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் லூயிஸ் காட்டிய தீவிர முனைப்புதான் அவரது பதவி பறிக்கப்பட காரணம் என்று செய்திகள் வெளியாகின. அவரைத்தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் திகதி பதவிக்கு வந்த நெல்சன் டீச் உம் போல்சனரோ இன் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து உடற்பயிற்சி மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அதிபர் போல்சனாரோ அளித்த ஆணையை பகிரங்கமாக விமர்சித்த பின்னர் பதவியேற்று ஒரு மாத காலப்பகுதியினுள்ளேயே மே மாதம் 15ஆம் திகதி பதவி விலகியுள்ளார். இதனைவிட பிரேசிலில் கொரோனா தொற்று அதிகம் அடையாளம் காணப்படும் ரியோ மாநிலத்தின் சுகாதார அமைச்சரும் பொறுப்பேற்று ஒரு மாத காலப்பகுதியில் பதவி விலகியுள்ளார. 'நான் முயற்சி செய்தேன். அதை மட்டுமே என்னால் கூற முடியும்.' எனத்தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் பக்கவிளைவு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பிரேசிலில் எச்சரித்து வருகின்றனர். எனிலும் போல்சனாரோ பிரேசிலின் மருத்துவ நிபுணர்களின் கருத்தை நிராகரித்து தனது நண்பர் ட்ரம்பின் கருத்தை ஏற்று கொரோனாவிற்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினையே சிபார்சு செய்கின்றார். ஐரோப்பிய நாடுகள் பலதுமே கொரோனாவிற்கு மருந்தாக ட்ரம்ப் சிபார்;சு செய்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை எதிர்த்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் டீச் இன் பதவி விலகலில் இவ்விடயத்தில் அதிபரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமையும் ஒரு காரணமாகும். அறிவியலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட போல்ஸனாரோவிடம் குப்பை கொட்ட முடியாது என்பதாலேயே அந்த முடிவை நெல்ஸன் எடுத்ததாகச் சொல்கிறார்கள்.
நாடுமுழுவதும் போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததால், நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகாரபூர்வ தரவை விட அதிகமாகவே இருக்குமென்று சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 'பிரேசிலில் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.' என சா பாலோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுசார் கல்விப்புலமையாளர் டொமிங்கோ ஆல்வ்ஸ் ஏ.எப்.பி (AFP) செய்தி தளத்திற்கு தெரிவித்தார். 'இருக்கும் தரவுகளை வைத்து, இங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வது கடினம். இத்தொற்று பரவலை கட்டுப்படுத்த எங்களிடம் எந்தக் கொள்கையும் இல்லை' எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தரவுகளைவிட 15 மடங்கு அதிகம் இருக்கும் என்று கணித்தவர்களில் டொமிங்கோவும் ஒருவர்.
கொரோனா செய்தியிடல் தொடர்பில் ஊடகங்கள் மீது எதிர்மறையான பல விமர்சனங்கள் காணப்படுகிற போதிலும், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உலக மக்களுக்கு பெரும் நன்மையளித்துள்ளது ஊடகஙடகள். ஊடகங்கள் மீதும் கடுமையான எதிர்ப்பை கொரோனா அபத்த காலத்தில் போல்சனாரோ வௌளிப்படுத்தியுள்ளார். 'கொரோனா விடயத்தில் அறிவியல் சமூகமும், ஊடகங்களும் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன.' என்று குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என்பது அவரது வாதம். தனது அசண்டையை மூடி மறைக்கவே ஊடகங்கள் மீது கடுமையான எதிர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஒருமுறை தன்னைப் பேட்டியெடுக்க வந்த செய்தியாளர்களைப் பார்த்து, 'என்னவோ நான்தான் தவறு செய்வதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள். உங்களுக்குக் கொரோனா குறித்த அச்சம் இல்லையா? வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று விரட்டினார். இதனைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களின் மைக்குகளைப் பிடுங்கி, கேமராக்களைத் தட்டிவிட்டு அக்கிரமம் செய்துவருகிறார்கள். இது தொடர்பாக, 'அல் ஜஸீரா' (Aljazzera) போன்ற சர்வதேச ஊடகங்கள் விரிவாகப் பதிவிட்டுள்ளன.
இவ்விடயத்தில் தன்னை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது வெளிப்படையாகவே வெறுப்பை உமிழ்கிறார். மறுபுறம், ஜனாதிபதிக்கு ஆதரவான ஊடகங்கள் கொரோனா வைரஸ் குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருகின்றன. தனக்கு ஆதரவான ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்களை அதிகம் தருவது, விமர்சிக்கும் ஊடகங்களுக்கு விளம்பரங்களை நிறுத்திவைப்பது என்பன போன்ற வழிமுறைகளையும் போல்ஸனாரோ பயன்படுத்துகிறார்.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்பான தரவுகளை மறைக்கும் முயற்சியிலும் பிரேசில் அரசு செயற்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கப்பட்ட ஜூன் மாத ஆரம்ப நாட்களில் 'கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது எனும் தகவல் மட்டும் இனி வெளியிடப்படும். மொத்த எண்ணிக்கை வெளியிடப்படாது' என்று பிரேசில் சுகாதாரத் துறை அறிவித்தது. அதுமட்டுமல்ல, இதுவரையிலான தரவுகள் அரசு இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸுக்குப் பலியாகின்றவர்களின் சராசரி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த நிலையில் இப்படி ஒரு பித்தலாட்டத்தில் பிரேசில் அரசு இறங்கியது. அந்நாட்டின் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, கொரோனா பாதிப்பு குறித்த தரவுகள் மீண்டும் வெளியிடப்படுகின்றன.
பிரேசிலில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகள் ஏராளம். அங்கு வசிக்கும் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மூலம் பெருந்தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாட்டின் சரி பாதி மக்கள், முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். பலரும் நடைபாதைக் கடை வியாபாரிகள், உழைக்கும் மக்கள் என்பதால் தனிமனித இடைவெளி என்பது முழுமையாக அமல்படுத்தப்பட முடியாத விடயமாகிவிட்டது. கொரோனா பெருந்தொற்றையே அலட்சியம் செய்யும் போல்சனாரோ அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் தவறிவிட்டது. இதனை எதிர்த்து போராடும் மக்கள் மீது போல்சனாரோவின் ஆதரவாளர்கள் கடுமையான வன்முறைகளை நிகழ்த்துகிறார்கள். அரசு மௌனித்து செல்கிறது.
1964 முதல் 1985 வரை இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் சிக்கித் தவித்த பிரேசில், கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போல்ஸனாரோவின் ஜனநாயக போர்வையில் தீவிர வலதுசார செயல்பாடுகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த காலச்செயற்பாடுகளிலும் பார்க்க கொரோனா அபத்த காலத்தில் போல்சனாரோவின் அசண்டையும் செயற்பாடும் மக்களை மேலும் அச்சத்துக்குள் கொண்டு செல்கிறது.
Comments
Post a Comment