தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்குள் செயற்படுவோரிடமிருந்து தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினரிடம் உள்ளது. -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியல் பரப்பில் தேர்தலுக்கான நாட்களும் நெருங்கிக்கொண்டு இருக்கையிலே தேர்தலுக்கான களமும் பரபரப்படைந்து கொண்டு செல்கிறது. வெற்றி மமதையில் இருந்த கட்சிகளெல்லாம் சறுக்கலை ஊகித்து அச்சம் கொள்வதை அவர்களுடைய தேர்தல் பரப்புரை பிதற்றல்களில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தென்னிலங்கையிலும் சரி, வடக்கிலும் சரி தேசியவாத கருத்தியல்களுக்கு பதிலாக இனவாத கருத்தியல்களே மேலோங்கி காணப்படுகிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை தேசியவாத போர்வையில் மேலோங்கும் இனவாத கருத்தியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்ற தேர்தல் தேர்தல் களமானது, 1956ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்ற தேர்தல் களத்தை பிரதிபலிப்பதாகவே காணப்படுகிறது. இலங்கையில் தேசிய இயக்கமாக இருந்து சுதந்திரத்தின் பின் ஐக்கிய தேசிய கட்சியாய் பரிணமித்த இலங்கை தேசிய கட்சியில் பிளவை ஏற்படுத்தி 1951ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது அரசியல் வெற்றியை உறுதிப்படுத்த 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பௌத்த தேசியவாதம் என்ற பெயரில் பௌத்த இனவாத மேலாதிக்க கருத்தியலை ஆயுதமாக பயன்படுத்தினார். அவ்ஆயுதம் அவருக்கு வெற்றியையும் உறுதிப்படுத்தியது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சிக்குள் அமர்த்தியது. தற்போதைய அரசாங்கமும் பண்டாரநாயக்கவின் மாதிரியிலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலை சந்தித்து பெருவெற்றியை உறுதி செய்திருந்தது. அதனையே தொடர்ச்சியாக பொதுத்தேர்தலிலும் பயன்படுத்தி வருகின்றனர். 1956ஆம் ஆண்டு சுதந்திரகட்சியின் இனவாத அலையின் வெற்றியிலிருந்து தனது ஐக்கிய தேசிய கட்சியின் இருப்பை உறுதிப்படுத்த சேனநாயக்காக்களும் இனவாதத்தை தேசியவாதமாக பரப்புரையை ஆரம்பித்தனர். அவ்வாறே இன்றும் பிரதான எதிர்க்கூட்டணியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டும், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் ஆதரவுகள் காணப்படுகின்ற போதிலும் பொதுஜன பெரமுண கூட்டின் தேசியவாத போர்வையில் உட்பொதிந்துள்ள பௌத்த இனவாத அலையை ஈடுசெய்ய பௌத்தத்துக்கான முன்னுரிமை கருத்துக்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உட்புகுத்தி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
தென்னிலங்கையின் பௌத்த தேசியவாத மேலாதிக்க சிந்தனைகளே வரலாறுதோறும் தமிழ் அரசியல் பரப்பிலும் தமிழ்த்தேசிய சிந்தனையை வளர்த்துவிட காரணமாகிறது. பண்டாரநாயக்காவின் சிங்கள, பௌத்த மேலாதிக்க சிந்தனையால் தமிழர் உரிமைகள் நசுக்கப்படவே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் தமிழ் சமூகத்திடையே தமிழ்த்தேசிய சிந்தனை வளர்க்கப்பட்டது. இன்றும் தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கையில் தங்களது அரசியல் இருப்புக்காக கட்டவிழ்த்து விடும் சிங்கள பௌத்த தேசியவாத மேலாதிக்க சிந்தனையானது, தமிழ் சமூகத்திடையே தமிழ்த்தேசிய எண்ணத்தை இயல்பாய் உருவாக்கியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பொதுஜன பெரமுணவின் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியலால் தமிழ் சமூகத்திடையே எவ்வித தேசியவாத பிரச்சாரமுமின்றியே தமிழ்த்தேசியம் இயல்பாய் தூண்டப்பட்டதன் பிரதிபலிப்பே ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனnhரமுணவுக்கு எதிரான வாக்காக காணப்படுகிறது. இது தமிழ் மக்களிடம் ஆழப்பொதிந்துள்ள தமிழ்த்தேசிய சிந்தனையை அடையாளப்படுத்துவதாக உள்ளது.
பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ என தென்னிலங்கை அரசியலில் காலத்துக்கு காலம் சிங்கள - பௌத்த தேசியவாத சிந்தனையை மக்களிடம் பலப்படுத்தி திரட்டக்கூடிய மிதவாத அரசியல் தலைமைகள் உருவாகி கொண்டே வருகின்றனர். எனிலும் தமிழ் சமூகத்தின் மிதவாத அரசியல் தலைமைகளில் எஸ்.ஜே.வி.செல்வநாயகமே தமிழ்த்தேசிய அலையை உருவாக்கிய மற்றும் திரட்டிய ஒரேயொரு மிதவாத அரசியல் தலைமையாக காணப்படுகிறார்.
1980களிலிருந்து 2009ஆயுதப்போராட்ட மௌனிப்பு வரை ஆயுதப்போராட்ட குழு தமிழ்தேசிய அலையை திரட்டி வைத்திருந்தது. எனிலும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னரான மிதவாத தமிழர் அரசியல் பரப்பில் தமிழ்த்தேசியவாத அலையை திரட்ட கூடிய தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளின் செயற்பாடு போதாமையாக காணப்படுகிறது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின்னரும் தமிழ் மக்களிடம் சுயமாக தேசியவாதம் ஆழமாக பொதிந்துள்ளமைக்கான சான்றே ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுணாவின் நிராகரிப்பு ஆகும். அதனை ஒருங்கே சேர்க்கக்கூடிய தலைமை காணப்படாமையே தமிழ்சமூகத்தின் பலவீனமாகும்.
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌணிப்பிற்கு பின்னரான மிதவாத அரசியல் சூழலில், தமிழ்த்தேசிய கூடாரத்தினுள்ளிருந்து தமிழ்த்தேசிய நீக்க அரசியலை முதன்மைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் கட்மைப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு காணப்படுகிறது. இந்நிலையியே சிங்கள - பௌத்த தேசியவாத பிரச்சாரத்திற்காக தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தமிழ்த்தேசியவாதிகளாக அடையாளப்படுத்துவது நகைப்புக்குரியதாகும். அது செய்ந்நன்றி கடனாக இருக்குமோ என்ற தேடலை தமிழ் சமூகம் விழிப்புடன் செய்ய வேண்டி உள்ளது. இன்று சிங்கள - பௌத்த தேசியவாதத்தை முதன்மைப்படுத்தி செயற்படும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் கூட்டமைப்பை தமிழ்த்தேசியவாதத்தை முதன்மைப்படுத்தும் கட்சியாக காட்ட முனைவது சிங்கள பௌத்த தேசியவாதம் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கான சதி என்பதே யதார்த்தமாகும். சிங்கள - பௌத்த தேசியவாதம் போலியான தமிழ்த்தேசியவாதிகளிடம் தமிழ்த்தேசிய திரட்சியை கையகப்படுத்தி தமிழ்த்தேசியத்தை முற்றாக ஒழிக்க முனையும் சதியே இதுவாகும்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், அரசியல் ஆய்வாளருமான மு.திருநாவுக்கரசு அவர்கள் அரசியல் ஆய்வு தொடர்பாக கூறுகையில் அரசியலை என்றுமே உட்கிடக்கையாக பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் தற்போதைய அரசாங்கத்தினருக்கும் இடையேயான உறவை முழுமையாக அறிய வேண்டுமாயின் உள்வலமாக அதனை தேட வேண்டியோராயே தமிழ் சமூகம் உள்ளனர். வடக்கு, கிழக்கில் இயங்கும் பல கட்சிகள் வெளிப்படையாகவே தற்போதைய அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பை பேணுகின்றனர். அதில் முக்கியமான நெருக்கமான உறவை வெளிப்படையில் கொண்டுள்ள கட்சித்தலைவர் அரசியல் கைதி விவகாரம் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவினுடைய அலுவலகத்தில் வைத்தே கதைத்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவினுடைய வீட்டிற்கு சென்று உரையாடியுள்ளார். இதிலிருந்து எவர் இன்றைய அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளார் என்பதனை மக்கள் ஆராய வேண்டும். அத்துடன் வெளிப்படையிலேயே இன்றைய அரசாங்கம் ஒற்றையாட்சியையே மீள மீள வலியுறுத்தும் நிலையில் குறித்த அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப்பதவியை ஏற்பதற்கான அங்கீகாரத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோருவது என்பது பகுப்பாய வேண்டிய விடயமாகவே உள்ளது.
இன்றும் தற்போதைய அரசாங்கம் தமிழ்த்தேசியத்தை முற்றாக நீக்கி செயற்படும் கூட்டமைப்பின் வெற்றுக்கோசங்கள் நிறைந்த ஓர் விஞ்ஞாபனத்தை நாட்டை பிரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனமாகவும், ஈழத்துக்கான தேர்தல் விஞ்ஞாபனமாகவும், கூட்டமைப்பினரை தேசியவாதிகளாகவும் காட்சிப்படுத்த முனைவது கூட்டமைப்பை மீளவும் வடக்கு கிழக்கில் ஆதிக்கம் பெற வைப்பதனூடாக தமிழ் மக்களின் அரசியலை தென்னிலங்கை அரசியலுக்கு சாதகமாக கையாள முடியும் என தென்னிலங்கை கருதுகிறது. இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்களின் நலன்களை புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்காவின் விருப்பத்திற்காக கூட்டமைப்பு செயற்பட்டமையிலிருந்து அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த 13அம்ச கோரிக்கைக்கு ஐந்து கட்சிகள் உடன்பட்டதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 100சதவீத அங்கீகாரத்தை அதற்கு வழங்கி இருந்தது. எனிலும் குறித்த கூட்டு தீர்மானத்திலிருந்து கூட்டமைப்பினர் நழுவி சஜித் பிரேமதாசாவிற்காக வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் தென்னிலங்கையில் அவரின் தோல்வியை உறுதிப்படுத்தியது. அதன்பின்னால் ரணில் விக்கிரமசிங்காவின் திட்டமிடலே அடிப்படையாக இருந்தது. கூட்டமைப்பினரும் தாங்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது என்பது சஜித் இன் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதை முன்கூட்டியே நன்கு அறிந்தே செயற்பட்டிருந்தனர். இன்று வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பினரின் செல்வாக்கு சரிந்து கொண்டு செல்கையில் தமிழ்த்தேசியவாதத்தை முடக்க நினைக்கும் ஒரு தரப்பு தமிழ்த்தேசியவாதிகளாக போலிகளை அடையாளம் காட்ட முயலுகின்றனர். எதிரிகளின் தெரிவுகளை மக்கள் ஆராய்ந்தே பார்க்க வேண்டும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் தேசிய நீக்க அரசியலினாலேயே தமிழரின் ஒற்றுமை சிதையும் வகையில் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மாற்று அணிகளாக தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்க முற்பட்டனர். எனிலும் அவர்களின் செயற்பாடுகளும் மக்களிடம் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தி தமிழ் மக்களிடம் உள்ள தமிழ்த்தேசிய அலையை திரட்ட முயலுகின்றனர். அதுவும் முழுமை பெறவில்லை.
2010ஆம் ஆண்டிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியினர் தமிழ்த்தேசிய பாதையை அடையாளப்படுத்தி பயணத்தை மேற்கொள்கின்ற போதும் தேசியவாத அலையை திரட்டக்கூடிய தன்மையில் அவர்களுடைய பாதையை இதுவரை செப்பனிட முடியவில்லை. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் தங்களை உறுதிப்படுத்த முடிந்த போதிலும் அதன் முழுமையான வெற்றியை உறுதி செய்ய வேண்டிய களமாகவே 2020 பொதுத்தேர்தல் அமைகிறது. அவ்வாறே அரசியலினுள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அழைத்துவரப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறிது காலத்திலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழ்த்தேசிய நீக்கலை எதிர்த்து சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்தார். அதன்வழி 2018ஆம் ஆண்டு முதல் தமிழ்த்தேசிய அரசியலை திரட்ட தனியான அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையிலான அணியினரும் தமிழ்த்தேசியத்தை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் ஒப்பிட்டடிப்படையில் மேற்குறித்த இருதரப்பினரையும் விட தமிழ்தேசிய அரசியலை ஒருங்கிணைப்பதிலும் தேசிய அலையை ஏற்படுத்துவதிலும் வெற்றி பெற்ற போதும் முழுமை பெறவில்லை. இவர்களின் அறுவடையும் 2020 பொதுத்தேர்தலை பொறுத்தே தீர்மானிக்க கூடியதாக உள்ளது.
சரியான தலைமை யார் என்பதை தலைவர்களின் செயற்பாடே மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். தமிழ் மக்களிடம் தேசிய உணர்வு இயல்பாகவே ஆழமாக பொதிந்துள்ளது. அதனை நம்பிக்கையூட்டி ஒருங்குசேர்க்கக்கூடிய தலைமைத்துவ பண்பே பெரும் பலவீனமானதாகவே உள்ளது. ஆனால் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைமை சரியான புலமைசார்ந்த ஆளுமைகளை கொண்டு செயற்பட கூடிய விதத்தில் தன்னை வெளிப்படுத்துகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியினரும் ஒப்பீட்டில் இளையோரை ஒருங்குசேர்ப்பதில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர். அத்தகைய தலைமைகளை நோக்கி தமிழ் மக்களின் தெரிவு அமைதல் வேண்டும். மக்களும் அரசியலை வெளிப்போர்வையில் பார்க்காது உள்ளார்ந்து பார்த்து செயற்பட வேண்டியோராய் உள்ளனர். தமிழ்த்தேசியவாதிகளை அடையாளங்கண்டு தேர்வு செய்ய முடியாவிடினும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்குள் செயற்படுவோரிலிருந்து தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய தலைமுறையினரிடம் உள்ளது. அவ்வாறு பாதுகாக்காவிடில் இன்று தலைமைகளற்ற சூழலிலும் தமிழ் சமூகத்திடம் ஆழமாக பொதிந்துள்ள தமிழ்த்தேசியம் நாளை தமிழ் சமுகத்திடம் இல்லாது போய்விடும்.
Comments
Post a Comment