கொரோனா இரண்டாவது அலை ; உலகை மீள முடக்குமா? மக்கள் விழிப்படைவார்களா? -ஐ.வி.மகாசேனன்-
கொரோனாவின் முதலாவது அலைத்தாக்கமே சில நாடுகளில் குறையாத நிலையில் பல நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து விட்டது. நீண்ட சமூக முடக்கத்தின் பின் திறக்கப்பட்ட பல பெரிய நகரங்கள் மீள மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொரோனாவின் இரண்டாம் அலை என்றால் என்ன? கொரோனா பரவுகையின் இரண்டாவது அலைக்கான காரணத்தை அடையாளப்படுத்தி நம்மை தற்பாதுகாத்து கொள்வதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவுகையின் இரண்டாவது அலைகளை நாம் அறிவிப்பதற்கு முன்னர் இரண்டு தேவையான காரணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதலில், வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பரவுதல் மிகக் குறைந்த நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது முதல் அலையின் முடிவாக இருக்கும். பின்னர், வைரஸ் மீண்டும் தோன்ற வேண்டும் மற்றும் இதன் விளைவாக வழக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகரிப்பு ஏற்படும். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நாடுகள் முதல் அலையை வெற்றிகரமாக முடித்துவிட்டன. நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளும் தங்கள் முதல் அலைகள் மூலம் பரந்த பரவலை எதிர்கொண்ட நிலையில் தற்போது அதனை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இப்போது அவை கொரோனா வைரஸ் பரவுகை இல்லாதவை அல்லது மிகக் குறைந்த அளவிலான சமூகப் பரவல் கொண்ட நாடுகளாக காணப்படுகின்றன.
2020ஆம் வருடத்தின் ஆரம்ப மாதங்களில் (ஜனவரி, பெப்ரவரி, மார்ச்) கொரோனா வைரஸ் பெரும்பாலான நாடுகளை புரட்டிப் போட்டு வந்த நாட்களில், அந்த வைரஸின் தீவிரத்தை சிறப்பாக கட்டுப்படுத்தியதாக சிங்கப்பூரை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியது. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே அங்கு நிலைமை தலைகீழானது. சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்த அரசு, அங்கிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்கும் முகாம்களை கண்காணிப்பதில் கோட்டை விட்டது. அதன்மூலம் கொரோனா பரவல் சிங்கப்பூரில் சடுதியாக அதிகரிக்க காரணமாகியது.
அதே போல தென்கொரியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சில வாரங்களில் வர்த்தக நிறுவனங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அந்நாட்டின் தலைநகர் சோலில் உள்ள சில மதுபான விடுதிகளுக்கு வந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பலத்த அடி வாங்கிய சீனாவின் வூஹான் நகரம், பல மாதங்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், மற்றொரு சீன நகரான ஜிலினில் மீண்டும் கொரோனாவின் உள்ளூர் பரவல் கண்டறியப்பட்டது.
இந்த நிலையைத்தான் கொரோனா பரவலின் இரண்டாவது அலை என விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.
அமெரிக்காவிலும் கொரோனாவின் இரண்டாம் அலைக்கான வீரியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலாவுகிறது. எனிலும் அமெரிக்காவில் கொரோனாவிற்கான முதலாவது அலையினையே இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மையாகும். அமெரிக்காவின் அரசியல் வாதங்கள் மற்றும் நிகழ்வுகள் கொரோனா செய்தியை ஊடகங்களிலிருந்து மழுங்கடித்துள்ளனவே தவிர அமெரிக்காவில் கொரோனாவின் முதல் வீரியமே இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை. சமீபத்திய மாதங்களில் Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்த பின்னர், அமெரிக்கா முழுவதும் கட்டுப்பாடுகள் எளிதாக்கத் தொடங்குகின்றன. புதிய வழக்குகளின் எண்ணிக்கை சில மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியடைகிறது. அல்லது நிலையாய் காணப்படுகிறது. ஆனால் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் ஒரு நாளைக்கு புதிய வழக்குகளின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஜூன் மாத இறுதியில், ஏப்ரல் தொடக்கத்தில் காணப்பட்ட பரவலின் உச்ச விகிதத்தை தாண்டிவிட்டது. இதனாலேயே இது இரண்டாம் பரவலாக காணப்படுமா? என்ற செய்தி பரவலாக காணப்படுகிறது. எனிலும் அமெரிக்க ஒட்டுமொத்தமாக இரண்டாவது அலைகளில் இல்லை, ஏனெனில் முதல் அலை உண்மையில் நிறுத்தப்படவில்லை. வைரஸ் வெறுமனே புதிய மக்கள் தொகைக்கு பரவுகிறது அல்லது மிக விரைவில் தங்கள் பாதுகாப்பைக் குறைக்கும் இடங்களில் மீண்டும் எழுகிறது. இதுவே யதார்த்தமான பார்வையாகும்.
அமெரிக்காவானது முதல் அலையிலிருந்தே மீளாத தேசமாக காணப்பட் பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் உலக நாடுகளில் கொரோனா பரவலானது உச்ச அளவில் காணப்பட்ட போது கட்டுப்பாடுடன் இருந்த போதும் உலக நாடுகள் பலவற்றில் கட்டப்பாட்டுக்கு வந்த சூழலில் இந்நாடுகளில் கொரோனா பரவலின் வீரியம் அதிகரித்துள்ளது. இன்று உலகளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிப்படைந்த நாடுகள் வரிசையில் அமெரிக்காவின் முதல் நிலையை தொடந்து பிரேசில், ரஷ்சியா, இந்தியா ஆகிய நாடுகள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. இப்பரவலானது உலக நாடுகளின் தொடர்பை தொடர்ச்சியாய் முடக்குவதாகவே காணப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் ஆலோசகரும், ஜனாதிபதியின் செயலாளருமாகிய கென்ரி கீசிங்கர்-இன் 'உலக ஒழுங்கினை நிரந்தரமாக மாற்றியமைக்க போகும் கொரோனா வைரஸ்' என்கின்ற தலைப்பிலான அவரது பதிவு முக்கியமானது. 'கொரோனா தொற்று முடிவுக்கு வரும்போது பெரும்பாலான நாடுகளின் நிறுவனங்கள் தாம் தோல்வியை தழுவியதை உணர்திருப்பார்கள்' எனக்குறிப்பிடுகின்றார். அதன் யதார்த்தத்தை சமீபத்திலேயே அறிய முடிகிறது. கொரோனா யாரையும் விட்டு வைப்பதாயில்லை. கொரோனாவிலில் இருந்து தப்பித்தோம் என பெருமைப்பட்ட நாடுகளெல்லாம் பிணக்குவியலை அடுக்குகின்றன.
இலங்கையில், உலகளவில் கொரோனா பரவல் சர்வதேச ரீதியில் பரவிய ஆரம்பகாலங்களில் தீவிர முடக்கத்தை பேணியமையால் கொரோனா பரவலின் உயிரிழப்புக்களை ஓரளவு தவிர்க்கக்கூடியதாக காணப்பட்டது. அதனால் இன்று இலங்கையின் அரசாங்கமும் மக்களும் கொரோனா வைரஸின் பாதிப்பை ஆழமாக புரியாதவர்களாய் செயற்படுவதாக தோன்றுகின்றது. கொரோனா பரவுகை ஆரம்ப காலங்களில் அரசியல் விமர்சகர் ம.நிலாந்தன் அவர்கள் ஓர் நேர்காணலில், 'கொரோனா காலத்தில் இயற்கை அழகாகிறது. கொரோனாவிற்கு பின்னர் மீள இயற்கை தன் அழகை கெடும். மக்கள் மீள இயல்பான இயந்திர வாழ்க்கைக்கு திரும்புவார்கள் கொரோனா சாதாரண ஓர் நிகழ்ந்த நிகழ்வாக கடந்து செல்லும்.' எனக்கூறியிருந்தார். அவ்வாறான சூழலே இன்று நம் சமூகத்தில் காணப்படுகிறது. சில புதுவிதிகள் செய்திகளாக வருகிற போதும் மக்கள் தங்கள் இயந்திர வாழ்க்கைக்கு மீள திரும்பியுள்ள சூழ்நிலையே காணப்படுகிறது. இயந்திர வாழ்வில் கொரோனா அபத்தத்திலிருந்து பாதுகாப்பதற்கான விதிகளை தொலைத்தே செல்கின்றார்கள். அரசாங்கமும் விதிகளை அறிவிக்கின்ற போதிலும் அதன் நடைமுறை தன்மையை தங்கள் அரசியல் நலன் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலே எதிர் எதிர் முகாம்களை பழிபோடும் அரசியல் போட்டியிலே அரசியல்கட்சிகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். நாடளாவிய ரீதியில் பெருங்கூட்டங்களுக்கு தடை போட்டிருப்பதாலேயே இன்னும் பெரும் பிரச்சார கூட்டங்கள்னு சூடு பிடிக்கவில்iயாயினும் 200 - 300 பேர் வரையில் பங்குபற்றுமளவில் ஓரளவு பெரும் பிரச்சார கூட்டங்களும் நடைபெற தொடங்கிவிட்டது. காலப்போக்கில் இதுவும் சாதாரணமாக இயல்புக்கு திரும்பலாம். எனிலும் இக்கட்டுப்பாட்டில் ஆளும் கட்சிக்கு அரசியல் நலன் இருப்பதால் இது மட்டும் இறுக்கமாக கட்டுப்படுத்தகூடிய சூழல் காணப்படலாம்.
படசாலைகளும் பல விதிமுறைகளுடன் புதிய நேர ஒழுங்குகளுடன் கடந்த ஜூன்-29ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கிலேயே பாடசாலைகளின் சமூக இடைவெளி தொடர்ந்து வெற்றியளிக்கிறதா என பகுப்பாய முடியும். கொரோனாவை அதிவேகமாக கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடுகள் பலவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பட கொரோனா பரவல் வேகம் மீள அதிகரிப்பதை அனுபவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கையிலும் கல்வி திணைக்களமும் பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாகவே தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களும் அரசாங்கமும் சுகாதார திணைக்களத்தின் ஆலோசணையை புறந்தள்ளி செயற்படுவார்களாயின் பிரேசில், ரஷ்யா, இந்தியா வரிசையில் இலங்கையும் சேரக்கூடிய வாய்ப்பே அதிகமாக உள்ளது.
கொரோனா பற்றிய போதிய அனுபவத்தை பெற்றுள்ள உலகில், கொரோனாவின் இரண்டாம் அலை பற்றிய உரையாடல் மேலோங்குகின்றதாயின் மக்களினதும், ஆட்சியாளர்களதும் தொடர்சியான அசமந்தமே காரணமாகின்றது. கொரோனாவின் முதலாவது பரவுகைக்காலத்தில் அனுபவமற்ற நிலையில் அசமந்த போக்கால் கொரோனாவின் பரவல் அதிகமாயின சூழலில் அவ்அசமந்தம் தவறாயினும் ஏற்கக்கூடிய நிலையாகும். எனிலும் இன்று கொரோனா அபத்தம் உலகளவில் தந்த அழிவுகளை அனுபவித்த பின்னரும் அசமந்த போக்கால் இரண்டாம் அலையை உருவாக்கும் சூழல் உருவாகுமாயின் அழிவை வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.
1918-ஆம் ஆண்டில் சுமார் 5 கோடி பேரை கொன்று குவித்து ஸ்பானிஷ் ஃப்ளு தொற்று, முதல் முறை பரவியதை விட இரண்டாவது அலையாக பரவிய போதுதான் அதிக உயிர்களை காவு வாங்கியது. இதன் மூலமே இந்த இரண்டாவது அலை எவ்வளவு ஆபத்தானது என்பதை பற்றி மக்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் மக்களை நெறிப்படுத்தும் ஆட்சியாளர்களும் சரியான புரிதலை பெற வேண்டும். கொரோனாவோடு வாழப்பழக உலக நாடுகளின் தலைவர்கள் மக்களை கோருகிற போதிலும் கொரோனாவோடு வாழப்பழகுதல் எளிதில்லை என்பதையே பலியெடுப்புகள் உணர்த்துகிறது. அதனை உணர்ந்து விழிப்புடன் செயற்படினேயே மீள முடக்கம் தடுப்பது சாத்தியமாகும்.
Comments
Post a Comment