வல்லரசுக்களின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெலாரஸ் அரசியல் -ஐ.வி.மகாசேனன்-

வல்லரசுகளின் போட்டிக்குள் பூகோள அரசியலில் பிராந்தியங்களின் மூலோபாய அரசுகள் நசுக்கப்படுவதே சர்வதேச அரசியல் களநிலவரமாகும். அவ்வாறானதொரு சூழலிலேயே பெலாரஸின்அரசாங்கத்துக்கு எதிரான ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டம் சூடுபிடித்துள்ளது. அவ்வகையில் இக்கட்டுரையும் பெலாரஸ் போராட்டத்தின் அரசியல் பின்புலத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.


பெலாரஸ் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் அரசியில் பின்புலத்தை தேட முயலுவமாயின், முதலிலே பெலரஸ் அரசின் அமைவிட முக்கியத்துவத்தை அறிதல் அவசியமாகும். பெலாரஸ், அதன் முந்தைய எஜமானும் தற்போதைய நட்பு நாடாகிய ரஷ்சியாவுக்கு கிழக்குப் பகுதியிலும்,  தெற்கில் உக்ரைனையும், வடக்கு மற்றும் மேற்கில் லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து என்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளையும் கொண்டுள்ளது. ரஷ்சியாவுடன் தோழமை கொண்டிருக்கும் ஜனாதிபதி லூகஷென்கோவை தலைமையாக கொண்ட கிழக்கு ஐரோப்பிய அரசாக பெலாரஸ் காணப்படுகிறது. 9.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, உக்ரேனைப் போல மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்சியாவுக்கு இடையிலான பகையில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் நீண்டகாலம் ஆட்சி செய்து வருபவராக பெலாரஸ் ஜனாதிபதி லூகஷென்கோ இருந்து வருகிறார். 1991இல் சோவியத் யூனியன் பிளவுபட்டபோது பெலாரஸ் தனி அரசாக உருவாகி, ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து 1994இல் லூகஷென்கோ பதவிக்கு வந்தார். கடந்த 26ஆண்டுகளாக அவர் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். உற்பத்தித் துறையின் பெரும்பகுதியை அரசின் கட்டுப்பாட்டில் பேணுவதுடன், சோவியத்கம்யூனிஸ சித்தாந்த அம்சங்களை அமுல்படுத்த முயற்சித்து வருகின்றார். இதனால் ஐரோப்பாவின் 'கடைசி சர்வாதிகாரி' என ஐரோப்பிய மேற்குலக அரசுகளாலும், ஊடகங்களாலும் வருணிக்கப்படுகின்றார்.


ஆயினும் பெலாரஸ் நாட்டின் முக்கியமான தொலைக்காட்சி சனல்கள், அரசுக்கு விசுவாசமானவையாக உள்ளன. சக்திவாய்ந்த ரகசிய காவல் துறையின் பெயரும் இன்னமும் கே.ஜி.பி (ரஷ்சிய புலனாய்வுதுறை) என்றே குறிப்பிடப்படுகிறது. அதேசமயத்தில் தன்னை கண்டிப்பான தேசியவாதியாக காட்டிக் கொள்வதற்கும் லூகஷென்கோ முயற்சித்து வருகிறார். அந்நிய சக்திகளின் தாக்கங்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து, ஸ்திரத்தன்மையை உறுதி செய்பவராக இருக்கிறார். அவருடைய ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்கள் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், அவருக்கு இதுவரையில் வலுவான அடிமட்ட ஆதரவு இருந்து வந்துள்ளது.


ஆனால் அவரைப் பற்றிய எண்ணங்கள் சமீப காலத்தில் மாறிவிட்டன. பரவலான ஊழல், வறுமை, வாய்ப்புகள் மறுப்பு, குறைவான ஊதியம் என்று பல புகார்களை மக்கள் எழுப்பியுள்ளதால், மக்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கருதுகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் இது மேலும் தீவிரமாகியுள்ளது. இந்நிலையிலேயே பெலாரஸ் நாட்டில் புதிய ஜனநாயகத் தலைமை மற்றும் பொருளாதார சீர்திருத்தம் கோரி அங்கே பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், லூகஷென்கோ முறைகேடு செய்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், அவர் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்டிப்பான செயல்பாடு காரணமாகத்தான் நாடு ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையிலே, கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாகவும், காவல்துறையினரின் வன்முறை தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவிக்க வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு எதிர்கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறும் லூகஷென்கோ, பதவி விலக மறுத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட்-16, நாட்டையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்கும்படி தமது ஆதரவாளர்களுக்கு ஜனாதிபதி லூகஷென்கோ அழைப்பு விடுத்தார். தமது ஆதரவாளர்களிடம் பேசிய லூகஷென்கோ, நாட்டில் மறுதேர்தல் நடத்தப்படுமானால் அது, ஒரு நாடு இறந்து போவதாக கருதப்படும் என்றார். 'இங்கு நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள். கால் நூற்றாண்டு காலத்தில் முதல் முறையாக உங்கள் நாடு, உங்கள் சுதந்திரம், உங்கள் மனைவி, சகோதரிகள், பிள்ளைகளை உங்களால் பாதுகாக்க முடியும் என்பதால் இங்கு வந்திருக்கிறீர்கள்' என்று பேசினார். 'இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படாவிட்டால், அவர்கள் பொந்தில் எலிகள் ஊர்ந்து வருவது போல வருவார்கள்' என்று பேசினார்.


பெலாரஸில் ஜனாதிபதியின் எதிர்ப்பாளர்கள் ஆகஸ்ட்-16 தலைநகரில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். சுமார் 31ஆயிரம் பேர் அந்த போராட்டங்களில் பங்கேற்றதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்ட வேளையில், உள்துறை அமைச்சகம் அந்த எண்ணிக்கை 65ஆயிரமாக இருக்கலாம் என்று மதிப்பிட்டது. இருப்பினும் ஏ.எஃப்.பி(யுகுP) செய்தியாளர், அந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியிருந்ததாக கூறியுள்ளார்.

 

இதற்கிடையே, சர்வதேச அளவில் ஐரோப்பிய மற்றும் ரஷ்சிய தலைவர்களிடையே பெரும் உரையாடலை பெலாரஸ் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. இவ்உரையாடல் பெலாரஸின் பூகோள முக்கியத்துவத்தையும் போராட்டத்தின் அரசியல் பின்புலத்தையும் பறைசாற்றுகிறது. லூகஷென்கோவை பதவி விலகக்கோரும் தலையங்கக்கட்டுரைகளை அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் இந்த வாரம் பிரசுரித்துள்ளது. மேலும் லூகஷென்கோவிற்கு எதிரான நிலைப்பாட்டை பல ஐரோப்பிய நாடுகளும் எடுத்து வருகின்றன. 


பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவேல் மக்ரோங், அமைதியான முறையில் தங்களுடைய உரிமைகள், சுதந்திரம், இறையாண்மைக்காக போராடி வரும் லட்சக்கணக்கானோருக்காக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜெர்மன் ஆட்சித்துறை துணைத் தலைவர் ஒலஃப் ஷோல்ஸ், பெலாரஸ் ஜனாதிபதி கெட்ட சர்வாதிகாரி என்று அழைத்தார். மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்த பெலாரஸ் ஜனாதிபதி, ஜனாதிபதி பதவியை வகிக்கும் சட்டப்பூர்வ உரிமையை இழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.


இவ்சர்வதேச கருத்தாடல்களிடையே, நாட்டில் தொடர்ந்து அமைதியின்மை தொடருவதால் ரஷ்சியாவின் உதவியை லூகஷென்கோ நாடியிருக்கிறார். மாஸ்கோவை பலவீனப்படுத்த மேற்கு தன்னை வீழ்த்த முயற்சிப்பதாக லூகஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார். ஆகஸ்ட்-16 ரஷ்சிய அதிபர் விளாடிமிர் புடினுடன் லூகஷென்கோ பேசியபோது, பெலாரஸ் நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து இராணுவ உதவி தேவைப்படும் சூழல் எழும்போது, பிரத்யேகமாக உதவிகள் செய்யப்படும் என்று அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். இது குறித்து ரஷ்சிய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெலாரஸில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், வெளியில் இருந்து அந்நாட்டு அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களையும் ரஷ்சிய அதிபர் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய அரசியல் ஒழுங்கைக் குறைக்க போராட்டக்காரர்கள் முயன்றால் இராணுவத்தை பெலாரஸ்க்கு அனுப்புவதாகவும், அண்டை நாட்டில் படைகளை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாகவும் புடின் ஆகஸ்ட்-27 அன்று உறுதி அளித்தார்.


பெலாரஸ் தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் வழமைக்கு மாறான இரகசிய கூட்டத்திற்கு முன்னதாக, ஜெர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இருவரும் ரஷ்சிய அதிபர் விளாடிமிர் புட்டினை ஆகஸ்ட்-18 அழைத்துப் பேசினர். அத்துடன் ஆகஸ்ட்-28அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜோசப் பொரெல் மாஸ்கோவிற்கு பெலாரஸில் தலையிடுவதைத் தவிர்க்கவும், பெலாரஸ் மக்களின் 'ஜனநாயகத்தேர்வுகளை மதிக்கவும்' அழைப்பு விடுத்தார். 'ஒரு தேசத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் ரஷ்சியா மதிக்கிறதென்றால், அது பெலாரஸ் மக்களின் விருப்பங்களையும் ஜனநாயகத்தேர்வுகளையும் மதிக்க வேண்டும்' என்று பொரெல் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

பேர்லினும் பாரிஸூம் மாஸ்கோவை அழைத்து பேசியது, 'லூகாஷென்கோ மற்றும் பெலாரஸியப் பொருளாதாரம் இரண்டின் மீதும் மாஸ்கோ கொண்டிருக்கும் அதிகப்படியான செல்வாக்கிற்கான ஒப்புதலாக அமைந்துவிட்டது' என்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது. மேலும், பெலாரஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க லூக்காஷென்கோ மற்றும் எதிர்க்கட்சி முதன்மை பிரதிநிதி  டிக்கோனோவ்ஸ்காயா இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த புடின் இடைத்தரகர் வேலை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் விரும்புவதாகவும் கூறியுள்ளது. அதாவது 'இந்த நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கான செல்வாக்கை புடின் பயன்படுத்துவார் என்பதே ஐரோப்பிய தலைநகரங்களின் நம்பிக்கையாக உள்ளது.'


ஐரோப்பிய, நேட்டோ நாடுகளின் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்தியல்களும் ரஷ்சிய அதிபர் புடினுடைய பெலாரஸ் ஜனாதிபதி லூகாஷென்கோவிற்கு ஆதரவான அணுகுமுறைகளும் பெலாரஸ் போராட்டம் என்பது முழுமையாக பெலாரஸின் உள்ளக அரசியல் போராட்டம் என்பதை தாண்டி வல்லாதிக்க அரசுகளின் இச்சைக்கான குழப்பம் என்பதையே உறுதி செய்கிறது. மீளவொரு உக்ரேன் களச்சூழலுக்கே பெலாரஸ் வல்லரசுகளால் திருப்பப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-