ஐ.நா.வில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
ஐ.நா. மன்றிலும் கொரோனாவிற்கு பின்னர் அமைய உள்ள புதிய உலக ஒழுங்கின் மாதிரியே உலக தலைவர்களின் பேச்சுக்களில் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முன்னணியில் வந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவுகையை மையப்படுத்தி சீனாவை குற்றம் சாட்டினார். இந்நிலையில் இக்கட்டுரையானது, 2020க்கான ஐ.நா. மன்றின் பொதுக்கூட்டத்தில் உலக தலைவர்களால் உரையாடப்பட்ட விடயங்களை தொகுப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு உலக தலைவர்களின் பொதுக்கூட்டமானது, பேரழிவு தரும் தொற்றுநோயால் தடுத்து உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட சூழலில், 2020 ஆகஸ்ட்-22 அன்று முன்னோடியில்லாத வகையில் உயர்மட்டக் கூட்டத்திற்கு மின்னணு முறையில் நியூயார்க்கில் கூட்டப்பட்டது. இது உலகின் மோசமான ஜூம் சந்திப்பு எனக் கூறப்படுகிறது. இது "பொது விவாதம்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், ஒரு ஜூம் கூட்டத்தைப் போலன்றி, இதில் எந்த விவாதமும் இருக்கவில்லை. இந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெறும் உச்சிமாநாடு மெய்நிகர் முறையில் நடைபெறுவதனால், உலகத் தலைவர்கள் முன்பே பதிவுசெய்யப்பட்ட உரைகளை வழங்குகிறார்கள். உலகத் தலைவர்கள் உள்நாட்டு பார்வையாளர்களை மனதில் கொண்டு காணொளிகளை உருவாக்கி அவர்கள் கடந்த வார இறுதியில் அனுப்பியுள்ளனர். பொதுச்சபை கூட்ட காலத்தின் நிலவரப்படி, பாதி மட்டுமே காணொளியினுள்ளே நுழைந்தது.
"பொது சட்டசபை மண்டபத்திற்குள் மக்கள் பேசும்போது, அவர்கள் மற்ற உலகத் தலைவர்களுடன் பேசுகிறார்கள் என்பது இழக்கப்படும் ஒரு பகுதியாகும். ஆனால் இந்த பதிவு செய்யப்பட்ட உரைகள் மூலம், அவர்கள் தங்கள் உள்நாட்டு பார்வையாளர்களை குறிவைப்பார்கள்” என்று சர்வதேச நெருக்கடி குழுவின் ஐ.நா. மூத்த ஆய்வாளர் ஆஷிஷ் பிரதான் கூறினார். அதுவே ஐ.நா.வின் 75ஆம் ஆண்டுக்கான மெய்நிகர் கூட்டத்தில் உலக தலைவர்களின் பேச்சுக்களும் பிரதிபலித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை குறிவைத்தே தனது பேச்சை காணொளி வடிவில் உருவாக்கி ஐ.நா.விற்கு அனுப்பியுள்ளார். அதன் வடிவமே சீனா எதிர்ப்புநிலை கருத்தாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் சீனா எதிர்ப்புவாதம் முதன்மைபெற்றிருந்தது. இம்முறையும் தேர்தல் பிரச்சாரமாக, அமெரிக்காவின் கொரோனா இழப்பை கட்டுப்படுத்த இயலாத நிலையில் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவுகைக்கு சீனா மீது குற்றஞ்சுமத்தி சீனா எதிர்ப்புவாதம் மூலம் அமெரிக்காவின் கொரோனா இழப்பு பலவீனத்தை ஈடுசெய்ய முயலுகின்றார். அதனையையே ஐ.நா. மன்றிலும் தனது உரையாக காணொளி வடிவில்தொகுத்துள்ளார்.
"இந்த பிரகாசமான எதிர்காலத்தை நாங்கள் தொடரும்போது, இந்த பிளேக்கை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட சீனா பொறுப்பேற்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும்” எனவும் ” கொரோனாத் தொற்றினால் இதுவரை 188 நாடுகளில் எண்ணிலடங்கா உயிர்கள் பலியாகியுள்ளன. கொரோனாத் தொற்றுப் பரவிய ஆரம்ப காலகட்டத்தில், சீனாவின் உள்நாட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட போதும், வெளிநாடுகளுக்கு விமானங்களைச் செல்ல அனுமதித்துத் கொரோனா தொற்றை சீனா பரவ வழிசெய்தது” என்று ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து "188 நாடுகளில் எண்ணற்ற உயிர்களைக் கொன்ற கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக நாங்கள் கடுமையான போரை நடத்தியுள்ளோம்" என்று டிரம்ப் ஏழு நிமிடங்களுக்கும் குறைவாக முன்னர் பதிவு செய்யப்பட்ட உரையில் கூறினார்.
கொரோனா வைரஸ் குறித்த தனது சொந்த பதிவுகள் அமெரிக்கா தேர்தல்களுக்கு தலைமை தாங்குவதால் நெருக்கமான நெருக்கடிக்கு உட்பட்டுள்ள ட்ரம்ப், பெய்ஜிங் வைரஸை மூடிமறைப்பதாக அடிக்கடி பயன்படுத்தும் குற்றச்சாட்டையே ஐ.நா. பொதுச்சபையின் 75வது கூட்டத்திற்கான காணொளியிலும் கூறியுள்ளார் என்பதே தெளிவான வெளிப்பாடாகும். சீனா இந்த தாக்குதல்களை ஆதாரமற்ற கவனச்சிதறல் என்றே தொடர்ச்சியாக கூறி வருகிறது.
ஐ.நா. பொதுச் சபையின் 75வது கூட்டம் வாதங்களுக்கு அப்பாற்பட்ட ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளியாயினும் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்-இன் காணொளி பதிவு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிப்பதாகவே அமைகிறது. எனிலும் சீனா சமரசமான கருத்தையே முன்வைத்துள்ளது. அமெரிக்கத் தலைவருக்குப் பிறகு பேசிய சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங், பனிப்போருக்கு பின்னராக கட்டமைக்கப்பட்ட "நாகரிகங்களின் மோதல்" அபாயங்கள் குறித்து எச்சரித்தார். "நாங்கள் தொடர்ந்து வேறுபாடுகளைக் குறைப்போம், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மற்றவர்களுடனான மோதல்களைத் தீர்ப்போம். நாங்கள் நம்மை மட்டும் வளர்த்துக் கொள்ளவோ அல்லது பூஜ்ஜிய தொகை விளையாட்டில் ஈடுபடவோ முயற்சிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார். அத்துடன் தொற்றுநோய்க்கு மேம்பட்ட ஒத்துழைப்பைக் கோரியதுடன், வேறு எந்த நாட்டினருடனும் "ஒரு பனிப்போர் அல்லது கொதிநிலை ஒன்றை" எதிர்த்துப் போராடும் எண்ணம் சீனாவிற்கு இல்லை என்பதை வலியுறுத்தினார். மேலும் “தொற்றுநோயை அரசியலாக்கும் முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும்” என்று ஜி ஜின்பிங் ட்ரம்பின் அரசியலை கடுமையாக சாடியுள்ளார். தொடர்ந்து, "சீனா உலகின் மிகப்பெரிய வளரும் நாடு, அமைதியான, திறந்த, கூட்டுறவு மற்றும் பொதுவான வளர்ச்சிக்கு உறுதியளித்த நாடு" என்று அவர் மேலும் கூறினார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கருத்துரைக்கையில், சீனா அல்லது அமெரிக்கா என்று பெயரிடாமல் "ஒரு புதிய பனிப்போரைத் தவிர்க்க எல்லாவற்றையும் செய்ய வேண்டும்" என்று எச்சரித்தார். மேலும் "நாங்கள் மிகவும் ஆபத்தான திசையில் நகர்கிறோம். இரண்டு பெரிய பொருளாதாரங்கள் உலகத்தை ஒரு பெரிய முறிவாகப் பிரிக்கும் எதிர்காலத்தை நம் உலகத்தால் வாங்க முடியாது - ஒவ்வொன்றும் அதன் சொந்த வர்த்தக மற்றும் நிதி விதிகள் மற்றும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களைக் கொண்டுள்ளன." என்று போர் அரசியலை கடுமையாக சாடியிருந்தார்.
ட்ரம்பின் கொரோனா வைரஸ் அரசியலையும் குடெரஸ் எதிர்த்திருந்தார். “கொரோனா வைரஸின் முகத்தில் சுயநலத்திற்கு இடமில்லை. ஜனரஞ்சகமும் தேசியவாதமும் தோல்வியடைந்துள்ளன" என்று அவர் கூறினார். "வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அந்த அணுகுமுறைகள் பெரும்பாலும் விஷயங்களை மோசமாக்கியுள்ளன. நீங்கள் உங்கள் சொந்த குடிமக்களை கவனித்துக் கொள்ளும்போதுதான் நீங்கள் ஒத்துழைப்புக்கு உண்மையான அடிப்படையைக் காண்பீர்கள்" என்று முழுமையாகவே ட்ரம்பின் பார்வைக்கு எதிராக ட்ரம்பின் பெயர் குறிப்பிடாது ட்ரம்ப் மீது கடுமையான சாடலை குடெரஸ் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், ஐ.நா கூட்டத்தொடரில் பதிவு செய்யப்பட்ட காணொளி வடிவிலான கருத்தாடலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சீனா மீதான குரோத கருத்தை வெளிப்படுத்திய போதிலும், இதற்கு நேர்மாறாக சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு இணக்கமான தொனியின் முரண்பாடற்ற அமைதியான சூழலை வெளிப்படுத்தி கருத்தை வெளிப்படுத்தியுள்ளமையானதும் ட்ரம்ப் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
உலகாளும் அமெரிக்காவின் ஜனாதிபதி உலக அரங்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பொதுக்கூட்டத்தில் அதிகளவு எதிர்மறையான கருத்தை எதிர்கொள்வது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தையே கேள்விக்குள்ளாக்கிறது. சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் பனிப்போரை தாம்விரும்பவில்லை என கருத்துரைத்தாலும் உலக வல்லாதிக்க போட்டியில் சீனா உள்ளமை தவிர்க்க முடியாத யதார்த்தமான வெளிப்பாடாகும். இந்நிலையில் ட்ரம்பின் ஆளுமையால் சரியும் அமெரிக்காவின் வல்லாதிக்க சிம்மாசனத்தை ஜி ஜின்பிங் தனது ஆளுமையால் கைப்பற்ற முயலுகின்றமையையே ஐ.நா.வின் 75வது ஆண்டு கூட்டத்தொடரின் கருத்தாடல்கள் வெளிப்படுத்தி நிற்கிறது.
Comments
Post a Comment