புதிய பாராளுமன்றத்தில் கூட்டாக ஓங்கி ஒலிக்குமா தமிழரின் நியாயமான கோரிக்கைகள்! -ஐ.வி.மகாசேனன்-
புதிய பாராளுமன்ற ஆரம்ப நாட்களில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற விவாத உரையாடல்கள் தமிழ் மக்கள் ஆழமாக தம் அரசியல் தொடர்பாக சிந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் சுயரூபங்களையும், தமிழரசியல் செல்ல வேண்டிய பாதை தொடர்பாகவும் ஆராய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. அதனை மையப்படுத்தியே குறித்த கட்டுரை தமிழர்களை வாக்குகளுக்காக ஏமாற்றும் தென்னிலங்கை கட்சிகளின் தேர்தலின் பின்னரான துரோகங்களை விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலப்பகுதிகளில் தமிழர் உரிமை சார்ந்த அரசியலை வீரவசனங்களுடன் பிரச்சார மேடைகளில் அள்ளி வீசி தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளும் தரப்புக்கு நிபந்தனையற்ற முண்டு கொடுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு மாற்றாக தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும், செல்வராசா கஜேந்திரன் அவர்களையும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளனர். அத்துடன் அபிவிருத்தி அரசியலுக்காக அங்கயன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, திலீபன், பிள்ளையான், வியாழேந்திரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்ற விம்பம் தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதன்மையாக உரையாடப்படுகின்ற போதிலும் வடக்கு, கிழக்கு தேர்தல் பிரச்சார மேடைகளில் தென்னிலங்கை அரசியல் கட்சி முகவர்கள் அபிவிருத்தியோடு தமிழ்த்தேசிய உரிமையையும் ஆழமாக பேசியே இருந்தார்கள். அவர்களது வெற்றியில் அவர்களின் உரிமை அரசியல் பிரச்சாரத்தின் பங்கும் முதன்மை பெறுவதாக உள்ளது.
ஆயினும் தேர்தல் வெற்றியின் பின்பும் புதிய பாராளுமன்றத்திலும் தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியவற்றையே பாராளுமன்றிலும் முதன்மைப்படுத்தி அதனை விவாத பொருளாக மாற்றுவதில் முதன்மையானவர்களாய் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுமே காணப்படுகிறார்கள். அவர்களின் உரைகளை மையப்படுத்தி தென்னிலங்கை கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பும் தமிழ்ப்பிரதிநிதிகளின் ஒருமித்த ஆதரவு குரல்களும் தமிழ்த்தேசிய அரசியல் நெறி ஆய்வுக்கு உட்படுத்தி ஒழுங்கமைக்க வேண்டியதன் தேவைப்பாட்டை உணர்த்தி நிற்கிறது.
குறிப்பாக, சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய பாராளுமன்றத்தின் முதல்அமர்வில் ஆற்றிய முதலாவது உரையே சிங்கள பேரினவாத தரப்பிடையே பெரும் விவாதப்பொருளாகியது. சிங்கள பேரினவாத தரப்பினர் தமிழர்களை கள்ளத்தோனி என்றும் வந்தேறு குடிகள் என்றும் பரப்புரை செய்து கொண்டிருக்கையில், “உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்” என்றும் தமிழர்களே இலங்கையின் ஆதிக்குடி என்று சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றில் உரையாற்றியமை சிங்கள பேரினவாத தரப்பை சீண்டியது. குறித்த விடயத்தை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆரம்பத்திலும் தொல்லியல்துறை பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் சரித்திர விபரிப்பை அடிக்குறிப்பிட்டு விபரித்திருந்தார். அதன்வழி தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியே சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது உர்ஜிதமாகிறது.
சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் இலங்கையின் ஆதிக்குடி தமிழர் என்ற உரையை பாராளுமன்ற கன்ஷாட்டில் இணைக்க கூடாது என்ற முதல் எதிர்ப்பை வெளிப்படுத்தியவராக ஐக்கிய மக்கள் சக்தி காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார காணப்படுகிறார். இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றியுள்ளாரெனவும், இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்று இந்த பாராளுமன்றத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறான கருத்து ஹென்சாட்டில் இடம்பெறுவது தவறு என்றும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் கருத்தை தொடந்து சிங்கள பேரினவாத சக்திகள் ஒற்றுமைப்பட்டு விக்னேஸ்வரன் அவர்களின் உரைக்கு கடுமையான எதிர்ப்பை காட்டியிருந்தனர். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பாகுபாடில்லாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா ஆளுந்தரப்பும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்தரப்பும் கூட்டாக இணைந்து எதிர்த்தனர். வெளிப்படையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா தம்மை சிங்கள பௌத்த பேரினவாதிகளாக அடையாளப்படுத்தியது. இந்நிலையில் அவர்களது எதிர்ப்பு ஏற்க முடியாததாயினும் இயல்பானதே. எனிலும், தம்மை நல்லிணக்கவாதிகளாய் அடையாளப்படுத்தும் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரே இனவாதத்தை முன்னிலைப்படுத்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளமை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்ற செய்தியை வழங்குகிறது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற போதும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என தமிழ் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்ற சஜித் பிரேமதாசா தன் அணியினர் தமிழ் மக்களுக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்களை கட்டுப்படுத்தாமல் இருப்பது அவருடைய கருத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதையே வெளிப்படுத்துகிறது.
மேலும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது தமிழர் ஆதிக்குடி கருத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அதிகமாக வலியுறுத்தும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பிலும் பாராளுமன்றில் கருத்துரைத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொலை அச்சுறுத்தல் விடும் தொனியில் கருத்துரைத்துள்ளார். “விக்னேஸ்வரன், பொன்னம்பலம் போன்றவர்கள் இந்த சபையில் பூர்வீக உரிமைகள் குறித்து பேசியுள்ளனர். பூர்வீக பூமி குறித்து இந்த சபையில் பேசுவது எமக்கு செய்யும் அவமதிப்பு என்றே நாம் நினைக்கின்றோம். தேசியம், சுய நிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனுக்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். விக்கினேஸ்வரன் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விக்கினேஸ்வரனும் அதேதவறை செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என சரத்பொன்சேகா எச்சரித்தார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இதே பொன்சேகா அவர்கள் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மாற்றாக ஜனாதிபதியாக வேண்டுமென கூட்டமைப்பினரும் கைகாட்டினர். தமிழ் மக்களும் வாக்களித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப்பெற்ற தென்னிலங்கை அரசியல் தலைமைகளே இன்று தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத கருத்தியலில் முன்னிலையில் உள்ளனர். இது தென்னிலங்கை தலைமைகள் யாவும் மோதகம், கொழுக்கட்டை என வடிவம் மாறுபட்டாலும், உள்ளீடு சிங்கள-பௌத்த பேரினவாதம் முதன்மையானது என்பதையே உறுதி செய்கிறது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்தே அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் இந்நிலையினை முன்னுணர்ந்தே ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய உரிமையை முன்னிறுத்தி தமிழ் வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் ஓர் திரளாய் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை முதன்மைப்படுத்தி வருகின்றார். எனிலும் தமிழ் சமூகத்தின் பலவீனமான தமிழ்த்தேசிய கொள்கைசார் அறிவு குழாம் ஒன்றை உருவாக்கி முக்கிய அரசியல் தீர்மானங்கள் எடுக்கையில் தமிழ் அரசியல் தரப்பு அவ்அறிவுக்குழாமிடம் ஆலோசனை கேட்கும் அரசியல் அறிவுசார் ஒழுக்கம் இன்மையால், ராஜபக்ஷா என்பவரை பொது எதிரியாக வைத்து அவரை தோற்கடிக்க பிற தென்னிலங்கை எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க சொல்லும் மரபையே தமிழ்த்தலைமைகள் பின்பற்றி வந்துள்ளன.
இனிவரும் காலங்களிலாவது தமிழ்த்தலைமைகள் தமிழ்த்தேசிய கொள்கைசார்ந்து பயணிக்கும்உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து நிலத்திலும் புலத்திலும் கொள்கைவகுப்பு கட்டமைப்புக்களை உருவாக்கி, அதன் ஆலோசனையுடன் செயற்பட முயல வேண்டும். தம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்விடயத்தினையும் உள்ளடக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல சந்தர்ப்பங்களில் எதிரியை எதிராளியை ஒற்றுமைப்படுத்துகிறான். அந்த வகையில் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கருத்தை தழுவி தமிழ் சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை சிங்கள பேரினவாதிகள் முன்வைக்கையில் வேறுபட்ட கட்சிகளாயினும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய கருத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்கள். இவற்றைவிட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களில் ஒருவரான கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக கருத்துரைத்ததுடன் மனுஷ நாணயக்காரவினுடைய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என எதிர்த்திருந்தார். அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் பாராளுமன்றில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நின்றார். இவ்ஒற்றுமை எதிர்காலங்களிலும் தமிழ் தலைமைகளிடையே தொடர வேண்டும். முன்னைய அரசாங்க காலப்பகுதியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கட்சி வேறுபாடுகளை தாண்டி ஒரு கட்டமைப்பை உருவாக்க மனோகணேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இம்முறை பாராளுமன்றத்திலாவது நிறைவேற வேண்டும். தமிழர் இருப்பை பாதுகாக்க அதுவே உசிதமான மாற்றமாக அமையும்.
9வது பாராளுமன்றத்தின் ஆரம்ப விவாதங்களே தமிழர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது. இதிலிருந்தாவது தமிழ்த்தலைமைகள் சிந்தித்து செயற்படுவார்களாயின் இப்பாராளுமன்ற ஐந்து ஆண்டுகளிலும் தமிழர்களின் உரிமைக்கோரிக்கைகளை வலுவாக ஓங்கி ஒலிக்க வைக்க முடியும். இல்லையேல் கடந்த கால வரலாற்றை ஒத்தே இம்முறையும் கடந்து செல்ல வேண்டிய சூழலே அமையும்.
Comments
Post a Comment