மொன்ரீநீக்ரோ அரசியல் மேற்கிலிருந்து கிழக்கிற்கு செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
சர்வதேச அரசியலின் சமீபத்திய நிகழ்வுகள் சில மீள பனிப்போர்க்காலத்தை ஒத்த பதிவுகளை நினைவுபடுத்தி செல்கிறது. அதாவது ரஷ்சியா சார்பு, மேற்குலகு சார்பு என்ற நிலைப்பாட்டில் ரஷ்சியா, ஐரோப்பிய எல்லையோர நாடுகள் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு குழப்பகரமான அரசியல் சூழலில் காணப்படுகிறது. ஆகஸ்ட்-9 பெலாரஸ் தேர்தல் முடிவிற்கு பின்னரான மக்கள் போராட்டம் வல்லரசுகளின் மோதுகை பற்றி ஓர் ஆழமான செய்தி சொல்வது போன்றே, ஆகஸ்ட்-31 மொன்ரீநீக்ரோ தேர்தல் முடிவுகளும் வல்லரசுகளின் மோதுகையில் மக்களின் விருப்பை ஆழமான செய்தியாக வெளிப்படுத்தியுள்ளது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் மொன்ரீநீக்ரோ தேர்தல் முடிவுகளையும் அதன் அரசியல் செல்நெறியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் பலரும் முன்னறியாத நாடாக மொன்ரீநீக்ரோ காணப்படுமாயின், அதுவும் ஈழத்தமிழர் தங்கள் சுயநிர்ணயஉரிமை போராட்டத்தில் இதுவரை வெற்றி பெறாமைக்கான காரணமாகவும் இருக்கலாம். சுயநிர்ணயஉரிமைக்காக போராடி கடந்த 2006ஆம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சுதந்திரம் பெற்ற அரசாக மொன்ரீநீக்ரோ காணப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் 2007ஆம் ஆண்டு தனது மாவீரர் தின உரையில், “விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன.” என மொன்ரீநீக்கோவை சுட்டிக்காட்டியிருந்தார்.
சுயநிர்ணயஉரிமைக்காக போராடும் இனம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமைக்காக போராடி விடுதலை பெற்ற தேசங்களின் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்பது அவசியமாகிறது. மொன்ரீநீக்கோவின் கடந்தகால வரலாற்றை தனியாக அவதானிப்போம். இக்கட்டுரை மொன்ரீநீக்கோவின் நிகழ்கால அரசியலை தேடுவதாகவே அமைகிறது.
மொன்ரீநீக்கோவின் அரசியலை தேடுவதாயின் அதன் புவியியல் அமைவிடத்தையும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகிறது. இது வடமேற்கில் போஸ்னியா-ஹெர்சகோவினா, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் கொசோவோ, தென்கிழக்கில் அல்பேனியா, தெற்கே அட்ரியாடிக் கடல் மற்றும் தென்மேற்கில் குரோஷியாவின் எல்லையாக உள்ளது. பூகோள அரசியலை நோக்குமிடத்து கிழக்கே ரஷ்சியாவையும், மேற்கே ஐரோப்பிய ஒன்றியத்தையும் கொண்டு மொன்ரீநீக்கோ காணப்படுகிறது. கடந்த அரசாங்கம் மொன்ரீநீக்கோவை ஐரோப்பிய ஒன்றித்தினுள் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்அறிவுடன் மொன்ரீநீக்கோவின் அரசியலை தேடுவதே அதன் உள்ளார்ந்த அரசியல் விருப்புகளை அறிய இலகுவாகும்.
மொன்ரீநீக்கோவில் கடந்த ஆகஸ்ட்-30 பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட்-31 பொதுத்தேர்தல் முடிவில், கடந்த 30வருடங்களாக மொன்ரீநீக்கோவின் அடையாளமாக திகழ்ந்த ஆளுங்கட்சியான சோசலிச ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. மொன்ரீநீக்கோவின் ஜனாதிபதியாக சோசலிச ஜனநாயக கட்சியின் தலைவர் மிலோ யுக்கேனாவிச் காணப்படுன்றார். யுக்கேனாவிச், 2023ஆம் ஆண்டிலேயே மறுதேர்தலை எதிர்கொள்கிறார், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரது பதவிக்காலம் முடிவதற்குள் பொதுத்தேர்தல் முடிவில் கட்சியின் தோல்வியை ஏற்று ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்தலின் சோசலிச ஜனநாயக கட்சியின் தோல்வியானது, கட்சியினதும் யுக்கேனாவிச்சினதும் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
மிலோ யுக்கேனாவிச் 1991ஆம் ஆண்டில் தனது 29வது வயதில் ஜனாதிபதியானர். யுக்கேனாவிச், ஐரோப்பாவில் மிக இளம் வயதில் ஜனாதிபதியானவர் என்ற பெருமையை பெற்றவராக காணப்படுகின்றார். 1990களின் ஆரம்பத்தில் யுகோஸ்லாவியாவின் உடைவை தொடர்ந்து, சேர்பியாவுடனான ஒன்றியம், 2006இல் சுதந்திர நாடு எனப் பல பரிமாணங்களை மொன்ரீநீக்ரோ சந்தித்த போதெல்லாம் யுக்கேனாவிச்சும் ஜனாதிபதி, தலைமை அமைச்சர் என்ற பல பரிமாணங்களில் நாட்டை வழிநடாத்தி வந்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு பொதுவுடமைவாதியாக விளங்கிய அவர் காலப்போக்கில் தேசியவாதியாகவும், பின்னாளில் மேற்குலகு சார்பானவராகவும் கொள்கை மாற்றம் பெற்று வந்துள்ளார்.
2006ஆம் ஆண்டில் மொன்ரீநீக்கோ சுதந்திரம் பெற்ற நாள் முதலாக மொன்ரீநீக்கோவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கான விருப்பம் கொண்டிருந்த யுக்கேனாவிச், அதற்காக விண்ணப்பித்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொண்டுள்ளார். அதேவேளை 2017 இல் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளுடன் (நேட்டோ) மொன்ரீநீக்கோவை இணைத்துள்ளார். யுக்கேனாவிச்சின் மேற்குசார் நிலைப்பாட்டு மாற்றம் மொன்ரீநீக்ரோ மக்களில் பெரும்பான்மையோருக்கு உடன்பாடிருக்கவில்லை. சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, நாட்டின் 630,000 மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை சேர்பிய இனமாக அடையாளம் காணப்படுகிறது. பெரும்பான்மையானவர்கள் திருச்சபையின் உறுப்பினர்களாக இருப்பதால், அதன் செல்வாக்கு கணிசமானது. அச்சமூகம் மேற்குலகுடனான உறவை விட சேர்பியா மற்றும் ரஷ்சியா ஆகியவற்றுடனான உறவைப் பேணவே பெரிதும் விரும்புகின்றனர்.
ஆளுந்தரப்பின் மேற்குசார் உறவின் விருப்புக்கு எதிரான மக்கள் விருப்பே தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. செர்பியா மற்றும் ரஷ்சியாவுடன் நெருக்கமான உறவுகளை விரும்பும் மற்றும் சக்திவாய்ந்த செர்பிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ஆதரவுடன் இருக்கும் 'எதிர்காலம் மொன்ரீநீக்கோவிற்காக’ என்ற செர்பிய தேசியவாத கட்சிகளின் கூட்டணி 32.55% வாக்குகளைப் பெற்றது. இக்கட்சியே 12.53% வாக்குககளை பெற்ற ஒரு மைய-வலது குழுவான அமைதி என்பது எங்கள் தேசம் கட்சியுடனும், 5.53% வாக்குகளை பெற்ற பசுமை கட்சியான ஐக்கிய சீரமைப்பு கட்சி கூட்டணியுடனும் இணைந்து மொன்ரீநீக்ரோவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படுகிறது. சேர்பிய ஆதரவு நிலைப்பாட்டைக்கொண்ட ஜனநாயக முன்னணியின் தலைவர் ஸ்ட்ராவ்கோ கிரிவோகபி புதிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக வரவும் வாய்ப்புள்ளது.
சோசலிச ஐனநாயக கட்சியின் தோல்வியில் செல்வாக்கு செலுத்திய உடனடி காரணியாக, சக்திவாய்ந்த சேர்பிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் மீதான பிளவுகள் காணப்படுகிறது. வரலாற்று உரிமையை நிரூபிக்க முடியாதபோது, மதச்சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் ஒரு சட்டம் டிசம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து பல மாதங்கள் யுக்கேனாவிச்சிற்கு எதிர்ப்புக்கள் உள்ளன. அதாவது ‘குறித்த திருச்சபை தன்வசம் வைத்திருக்கும் காணிகளை அவை தனக்குரியவை என நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில் அவை அரசுடமையாக்கப்படும்’ என்பதாக சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் திருச்சபையை மட்டுமன்றி அதனை ஆதரித்து நிற்கும் மக்களையும் அரசின் மீது சினம் கொள்ளச்செய்தது. இதனைத் தொடர்ந்து திருச்சபையின் ஆதரவோடு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழத்தொடங்கின. மக்களின் மதச்சுதந்திரத்தில் அரசாங்கம் கைவைக்க அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மேற்குலக சார்பு கொள்கைக்கு எதிராகவும் மக்களை திரட்டியது.
மொன்ரீநீக்ரோவில் வாழும் மக்களில் அநேகமானோர் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றினாலும் கூட அவர்கள் மேற்குலக வத்திக்கானில் உள்ள திருச்சபையினைச் சார்ந்த மரபினர்கள் இல்லை. மாறாக ரஷ்சியாவில் பின்பற்றப்படும் பழைமவாத கத்தோலிக்கத் திருச்சபையை பின்பற்றுபவர்களாகவே மொன்ரீநீக்ரோ கத்தோலிக்கர்கள் உள்ளனர். கலாசார, பண்பாட்டு, மத அம்சங்களில் ரஷ்சியா மற்றும் சேர்பியாவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள மொன்ரீநீக்ரோ மக்கள் தமது பழமையான நெருக்கத்தைப் பேண விரும்புகையில் அவர்களை மேற்குலகை நோக்கி இழுத்துச்செல்ல முனையும் யுக்கேனாவிச்சின் செயற்பாடுகள் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் யுக்கேனாவிச்சிற்கு எதிராக வாக்களிக்குமாறு மொன்ரீநீக்ரோ திருச்சபை விடுத்த அழைப்பை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது.
மதரீதியான காரணியால் மேற்கை தவிர்த்து கிழக்கே ரஷ்சியாவுடன் நெருக்கமான உறவைப்பேண மொன்ரீநீக்ரோ அரசாங்கத்தை மக்கள் நிர்ப்பந்திப்பது சாமுவேல் பி. ஹண்டிங்டன் நாகரீகங்களின் மோதல் (The Clash of Civilization) எனும் நூலில் குறிப்பிட்டுள்ள பனிப்போருக்கு பிறகு உண்டான உலக அரசியல் கலாசாரங்களுக்கிடையிலா மோதலாக கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு அரசுகளின் கூட்டுக்கான காரணியாக கலாசாரங்களே காணப்படும் என்பதையே உறுதி செய்கிறது.
ஆயினும் மேற்குசார் ஊடகங்கள் புதிய அரசாங்கம் ரஷ்சியா சார்பாக செயற்படுவதை எச்சரிக்கை செய்யும் வகையிலேயே செய்தியிடுகின்றன. ஈரோ நியூஸ் (Euro news) செய்தித்தளத்தில் மொன்ரீநீக்ரோவின் போட்கோரிகாவை தளமாகக் கொண்ட மத்திய தரைக்கடல் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் அட்லஸ் குழுமக் கழகத்தின் தலைவர் டுஷ்கோ க்னெஷெவிக் எழுதியுள்ள கட்டுரையில், “ரஷ்சிய செல்வாக்கு குறித்த அச்சத்திற்கு எதிராக மேற்கு நாடுகளுக்கு எதிராக விளையாடுவதற்கான அவரது திறமையே யுக்கேனாவிச்சின் கட்சி இவ்வளவு காலமாக அதிகாரத்தில் ஒட்டிக் கொள்ள முடிந்தது. ஒரு மேற்கத்திய சீர்திருத்தவாதியாக தன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவர், தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் கிழக்கு நாடுகளாக மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக முத்திரை குத்தினார். அதே நேரத்தில் பரவலான மற்றும் நன்கு அறிவிக்கப்பட்ட ஊழல் மற்றும் தேர்தல் மோசடிகளுக்கு கண்மூடித்தனமாகத் திரும்பினார்.” என யுக்கேனாவிச்சின் நிலைப்புக்கு மேற்குசார்பு நிலையை ஒய்யாரமாகவும், வீழ்ச்சிக்கு ஊழலே காரணமென கருத்தை வலிந்து திணிக்கிறார். மேற்கு சார்புக்கு எதிரான ரஷ்சிய திருச்சபையின் பிரச்சாரத்தையும் இலாபகரமாக மூடி மறைக்க முயலுகின்றார்.
புதிய கூட்டணி அரசாங்கமும் மேற்கு சார்ந்த கொள்கைகளை தொடரப்போவதாக வெற்றியின் பின் கருத்துரைத்துள்ளனர். செப்ரெம்பர்-09 அன்று புதிய அரசாங்க கூட்டணி மூன்று தலைவர்களிடையே வெளியிடப்பட்ட ஒரு ஒப்பந்தம் "நேட்டோவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும்" உறுதியளிக்கிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவது தொடர்பான முந்தைய அறிவிப்புகளுடன் இணைந்து, அவர்கள் யுக்கேனாவிச்சின் கூற்றுக்களை முன்வைத்துள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்கான பிரச்சார பின்னணி மேற்கு எதிர்ப்பையும், பண்பாட்டுரீதியான ரஷ்சிய சார்பு நிலையையும் வெளிப்படுத்தி நிற்க, உறுதியற்று அமைக்கப்பட்ட புதிய கூட்டணி அரசாங்கம் ரஷ்சியா தொடர்பாக நேராகவோ/ எதிராகவோ எவ்வித கருத்தின்றி தொடர்ச்சியாக மேற்கு சார்பு நிலைப்பாட்டை பேணுவதற்கான உறுதிப்பாடு குழப்பமான சூழலை ஏற்படுத்துகிறது. புதிய கூட்டு அரசாங்கத்தின் செயற்பாட்டு காலப்பகுதியிலேயே மொன்ரீநீக்ரோ மேற்கு சார்பானதா? ரஷ்சியா சார்பானதா? என உறுதி செய்யக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment