பாராளுமன்றமும் தமிழ்தலைமைகளின் வியூகமும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் சமீபத்தில் பெரும் விவாதப்பொருட்களை உருவாக்கும் களமாக புதிய பாராளுமன்றம் அமைகிறது. அவ்வாறானதொரு அண்மைய விவாதப்பொருளே பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணமும் அதுசார்ந்து எதிர்க்கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளின் எதிர்ப்பும் அமைகின்றது. அதனை தழுவியே குறித்த கட்டுரை புதிய பாராளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதாயின் தமிழ் அரசியல் தலைமைகளின் பாராளுமன்ற நகர்வு எவ்வாறாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீளெழுச்சி பெற்ற ராஜபக்ஷாக்கள் அரசாங்கம் மீது தமிழர் தரப்பால் போர்க்குற்றவாளிகள்/ இனப்படுகொலையாளர்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. அதனை சுட்டிக்காட்டியே 9வது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் தரப்புகளால் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் சர்வதேச விசாரணை கோரலை முதன்மையான விடயமாகவும் உள்ளடக்கியிருந்தனர்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை முன்னின்று நடாத்தியோரை முதன்மையாய் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 2/3 பெரும்பான்மை ஆசனங்களுடன் வெற்றி பெற்றிருந்தனர். அதுவே புதிய பாராளுமன்றம் தமிழ்த்தரப்பின் பார்வையில் குற்றவாளிகள் கூடாரம் என்ற எண்ணப்பாட்டையே உருவாக்கியிருந்தது. ஆயினும் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் சிறைச்சாலையில் இருக்கும் ஒருவரையும், கொலைக்குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள நிலையில் மேல்முறையீடு செய்துள்ள ஒருவரையுமாக ஆக மொத்தமாக கொலைக்குற்றவாளியாய் சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றம் வரும் இருவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி ஜனநாயகவாதிகள் மத்தியிலும் புதிய பாராளுமன்றம் குற்றவாளிகளின் கூடாராமா? என்ற விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54,198 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார். சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின் போது, கொலை செய்தது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியல் கைதி என்ற அடிப்படையில், ஆகஸ்ட்-20ஆம் திகதி நடைபெற்ற 9வது பாராளுமன்றத்தின் முதல் அமர்விலேயே கலந்து கொள்வதற்கான அனுமதியை நீதிமன்றம் அனுமதித்திருந்தது.
இவ்வாறே இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட, நீதிமன்ற விசாரணை பொறிமுறையிலுள்ள மற்றொரு குற்றவாளியாக, இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர காணப்படுகிறார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் ஏற்பாடுகளில் போது இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் இருக்கையிலேயே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டிருந்தார். ஜூலை-31 அன்றே மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. ஆதலால் அவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்கப்படவில்லை. அவருக்கு அனுமதி வழங்குமாறு சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் நீதி அமைச்சிற்கு அறிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்ததனடிப்படையில், பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையிலேயே பிரேமலால் ஜயசேகரா செப்டெம்பர்-8 பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சத்தியப்பிரமானம் செய்தார்.
இதனையே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்திருந்தனர். குறிப்பாக 2010ஆம் ஆண்டில் சரத்பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்ட போது பாராளுமன்றத்திற்கு வர சபாநாயகர் அனுமதியளித்திருக்காமையையும், அன்றும் இன்றைய அரசாங்கமே ஆட்சியிலிருந்து சிறைச்சாலையை காரணங்காட்டி பொன்சேகாவின் பாராளுமன்ற வரவை தடுத்தார்கள் என்பதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு குரல்களை முன்வைத்தனர். குறிப்பாக இன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் 2010இல் சரத்பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பதற்கு காட்டிய எதிர்ப்பை, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரிஎல்லா அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் பிரேமலால் ஜெயசேகராவிற்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கண்டித்து செப்டெம்பர்-08 பாராளுமன்ற அமர்வை வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க முடியாமற் செய்யும் தகைமையீனங்களை கூறும் 91ஆம் உறுப்புரிமையின் பிரகாரம், அதன் ‘அ' பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி 89ஆம் உறுப்புரிமையிலுள்ள மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவராயிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழப்பதாகவே கூறப்படுகிறது. அரசியலமைப்பின் விளக்கப்படி ஜூலை-31ஆம் திகதி பிரேமலால் ஜயசேகராவிற்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட்-5ஆம் திகதி பாராளுமன்ற வெற்றி என்பது வலுவிழந்ததாகவே காணப்படுகிறது. எனிலும் பிரேமலால் ஜயசேகரா தனக்கு எதிரான தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளமையால், மேன்முறையீட்டின் பலனாய் முன்னைய தீர்ப்பு இடைநிறுத்தப்படுகிறது என்ற சட்ட நுணுக்கத்தின் அடிப்படையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றமும் பிரேமலால் ஜயசேகரா பாராளுமன்றம் செல்ல அனுமதித்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்த்தரப்பால் மாத்திரமின்றி சிங்கள மக்கள் மத்தியிலும் ஜனநாயகவாதிகள், மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி சார் தரப்பினரும் இலங்கையின் பாராளுமன்றத்தை குற்றவாளிகளின் கூடாரமாகவே விமர்சித்து வருகின்றனர்.
இவ்வாறாக குற்றவாளிகள் கூடாரமாக பரிணமித்துள்ள புதிய பாராளுமன்றத்தில் தமிழ்த்தரப்பு தங்கள் உரிமைகள்சார் கோரிக்கைகளை முன்வைப்பது மாத்திம் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் போதுமான செயற்பாடா? என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் ஆழமாக சிந்திக்க வேண்டும். தமிழ் அரசியல் தரப்பு இலங்கை பாராளுமன்றத்துக்குள் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காது என்று தெரிந்திருந்தும், தமிழர்கள் உரிமைகளை பறைசாற்றும் களமாகவே கடந்த காலங்களில் பெருவாரியாக இலங்கை பாராளுமன்றத்தை பயன்படுத்தினார்கள் என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும். எனிலும் இன்றைய 2/3 பெரும்பான்மை குற்றவாளிகளின் கூடாரமாகவும், சிங்கள-பௌத்த பேரினவாதத்தில் முதன்மையானவர்கள் தாமென பறைசாற்ற போட்டிபோட்டு இனவாத கருத்தியல்களை கக்கும் ஆளும், எதிர்க்கட்சிகளை கொண்டதுமான இப்புதிய பாராளுமன்றத்தினை தமிழர் உரிமை கோரிக்கைகளை பறைசாற்றும் களமாக பயன்படுத்துவம் பயனற்ற செயற்பாடு என்பதுவே யதார்த்தமான களச்சூழ்நிலையாகும்.
சிதறியுள்ள தமிழ்த்தலைமைகள் இப்புதிய பாராளுமன்றத்தையும் தமக்கு நன்மையளிக்கும் களமாக மாற்ற புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 2/3 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியயமைத்துள்ளம் என்ற எண்ணத்தில் ராஜபக்ஷாக்களின் குடும்ப சர்வாதிகார ஆட்சியை மலர செய்வதற்கான ஏற்பாடுகளை ஆளும் அரசாங்கம் செய்கையில் அதனை தடுப்பதற்காக, சிதறியுள்ள தென்னிலங்கை கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமக்குள் ஒரு கூட்டை உருவாக்கி பலமான எதிர்க்கட்சியை அமைப்பதற்கான உரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக உள்ள போதும் 20வது சீர்திருத்தம் தொடர்பாக காட்டும் எதிர்ப்பு கூட்டு எதிர்க்கட்சி உருவாக்க சமிக்ஞையாகவே உள்ளது. ஆயினும் உரிமைசார்ந்து நீண்டகாலமாக போராடும் மற்றும் ராஜபக்ஷாக்களை இனப்படுகொலை குற்றவாளிகளாய் சுட்டிக்காட்டி சர்வதேச விசாரணையை கோரும் தமிழர் தரப்பு புதிய பாராளுமன்றம் உருவாகி ஒரு மாதங்களாகின்ற போதிலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஓர் கூட்டை உருவாக்க முடியாமை தமிழர்களின் வியூகமற்ற அரசியல் நகர்வாகவே காணப்படுகிறது.
குற்றவாளிகள் கூடாரமாய் விமர்சிக்கப்படும் இப்பாராளுமன்றத்தை தமிழர்கள் ஏதோ சிறுஅளவிலாவது பயன்படுத்த முயலுவார்களாயின் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான கூட்டு அவசியமாகிறது. அதற்கான ஏற்பாட்டையே தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் முன்நகர்த்த வேண்டும்.
சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ளவரையும், மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளியையும் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைத்து வருவது, பாராளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரம் என்ற விமர்சனத்தை ஏற்படுத்துவதனை தவிர்க்க முடியாதது. இக்களத்தை தமக்கு பயனுடையதாய் சீர்செய்ய சிதறியுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கூட்டு உருவாக்குவதும் தவிர்க்க முடியாத தமிழரசியல் வியூகமாகும்.
Comments
Post a Comment