போர் புரியாமல் இந்தியாவை தோற்கடிக்க முயலுகிறதா சீனா! -ஐ.வி.மகாசேனன்-

 2020 ஆரம்பம் முதல் இயற்கை அழிவு, பிராந்திய நாடுகளிடையேயான மோதல், தொற்று நோய் எனப்பலதரப்பட்ட காரணங்களை மையப்படுத்தி தொடர்ச்சியாக உலகம் கொதிநிலையிலேயே காணப்படுகிறது. அந்தவகையில் நீண்டகால பகைமையுடைய ஆசியப்பிராந்திய நாடுகளான இந்தியா - சீனா நாடுகளுக்கிடையிலான மோதலும் 2020ஆம் ஆண்டு சர்வதேச கொதிநிலையின் ஓர் அங்கமாக மே மாதப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அணுவாயுத பலங்களையுடைய இரு நாட்டு இராணுவ வீரர்களும் கற்களை எறிந்தே மோதலை ஆரம்பித்திருந்தமை மோதலின் போக்கை சூசகமாக சொல்லும் விடயமாகும். மூன்று மாதங்களை தாண்டியும் இந்தியா - சீனா எல்லை மோதல், சீரான பதிலற்ற உரசல்களாகவே நீடித்து வருகிறது. அதனை மையப்படுத்தியே சர்வதேச அரசியலில் இந்தியா - சீனா எல்லை முரண்பாட்டின் போக்கை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லை முரண்பாடு இன்று உரசல்களாக நீடித்தாலும், இந்தியா – சீனா எல்லை முரண்பாட்டில் கொடிய போரியல் பதிவுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையில் பெரும் போர் இடம்பெற்றது. 1988ஆம் ஆண்டில் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சீனத்தலைவர் லீ பெங் ஆகியோர் எல்லைப்பிரச்சினையை மையப்படுத்திய இந்தியா - சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 1988ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள்ளேயே எல்லைப்பிரச்சினையை மையப்படுத்தி இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனிலும் எல்லை நிர்ணயம் தொடர்பில் இருதரப்பும் முழுமையாக இணங்கக்கூடிய வகையிலான சீரான ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முடியவில்லை. எல்லைகளில் பிரச்சினை ஏற்படும் போது அதனை தீர்த்துக்கொள்ள இரு தரப்பு உயர்மட்ட குழுவொன்று அமைத்தல், இராணுவத்தாக்குதல் மற்றும் கைதுகள் இடம்பெறாதிருக்கும் வகையிலேயே ஒப்பந்தங்கள் அமையப்பெற்றுள்ளது. இதனாலேயே இன்றும் எல்லைப்பிரச்சினை தீர்வற்ற முரண்பாடாக நீடித்து வருகிறது.


1975ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியா, சீனா இரு தரப்பிலுமேயே எல்லைப்பிரச்சினை சார்ந்து உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மே மாதப்பகுதியில் இந்தியா, சீனா எல்லைப்பிரதேசங்களில் இராணுவம் குவிக்கப்பட்டதும் அதன் தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்பட்டு இரு தரப்பிலுமேயே உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்றைய கொதிநிலை பற்றி கருத்துரைக்கையில், 'இது நிச்சயமாக 1962க்குப் பிறகு மிக மோசமான நிலைமை. 45 ஆண்டுகளுக்குப் பிறகும், சீனாவுடனான மோதலில் இராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எல்லையில் இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களை அனுப்புவது முன்னெப்போதும் இல்லாதது.' எனத்தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல்-19ஆம் திகதியே எல்லையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டு வருவதை இந்திய உளவுத்துறை இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மே-5 லடாக்கில் 250 இந்திய - சீன வீரர்கள் இரும்பு, கம்பு, கற்களால் 'கைகலப்பில்' ஈடுபட்டுள்ளனர். ஆனால், அது தனிப்பட்ட நிகழ்வு என இந்தியத் தரப்பில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அதுவே இந்தியா – சீனா எல்லைப்பிரச்சினை தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் கடந்தும் கொதிநிலையில் தொடர விதையாகியது. குறித்த மோதலில் இந்திய இராணுவத்தினர் 20பேர் இறந்ததாகவும்,  சீன இராணுவத்தினர் 43பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் இந்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இது குறித்த விவரங்கள் எதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.


இந்தியா – சீனா இராணுவத்தினரின் எல்லைப்பிரதேசத்தில் ஏற்பட்ட கைகலப்பு  மோதலை பரிணமிக்க விடாது தடுக்கும் வகையில் மத்தியஸ்தத்தை வகிக்க சர்வதேச நாடுகள் முயன்ற போதிலும், எம்முயற்சியும் சாத்தியப்படவில்லை. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மத்தியஸ்தத்க்கு விட்ட அறைகூவலை உடனடியாகவே சீனா நிராகரித்திருந்தது. தொடர்ச்சியாக ரஷ்சியாவின் வெளியுறவுத்துறை இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளினதும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கலந்துரையாடலை ஜூன்-06ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. எனிலும் இறுதிநேரத்தில் அம்முயற்சியும் சாத்தியப்படாது போனது. சமாதான முன்னெடுப்புகளின் தோல்விகளின் விளைவாகவே உரசலும் நீடித்து கொண்டுள்ளது. சீனா நிறுவன செயலிகளை இந்தியாவில் தடைசெய்துள்ளமை மற்றும் கடந்த செப்டெம்பர்-07ஆம் திகதி இந்தியா - சீனா எல்லைப்பிரதேசமாகிய லடாக்கின் பாங்கோங் ஏரியின் தென் கரையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு யாவுமே உரசல்களின் பிரதிபலிப்பாகவே காணப்படுகிறது.


உரசல்களின் மத்தியிலும் இந்தியா, சீனா எல்லைப்படை தளபதிகள் ஐந்து தடவை பேச்சுவார்த்தைகளிம் ஈடுபட்டுள்ளனர். எனிலும் தீர்வுகள் சாத்தியப்படவில்லை. இந்நிலையிலேயே ரஷ்யாவின் மாஸ்கோவில் செப்ரெம்பர்-04அன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தின் ஒரு பக்கமாக சீனா மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்தனர். இதில் சீன தரப்பிலிருந்து அதன் பாதுகாப்பு துறை அமைச்சர் வீ ஃபெங், மற்றும் இந்திய தரப்பிலிருந்து ராஜ்நாத் சிங் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டனர். இது கொதிநிலை காலப்பகுதியில் முதல்முறையாக இந்தியா - சீனா நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் சந்திப்பாக அமைந்தது. இதில், 'உலக மக்கள்தொகையில் 40சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடானா இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகள் அமைதி, நிலையான பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றோடு ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். சர்வதேச விதிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும்.' என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங், 'தற்போதைய சீனா - இந்தியா எல்லை பதட்டங்களுக்கு இந்தியா முழுப்பொறுப்பையும் கொண்டுள்ளது. சீனாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க சீனாவின் இராணுவம் முழுமையாக உறுதியானதும், திறமையும், நம்பிக்கையும் கொண்டது. மேலும் ஒரு அங்குல சீன நிலப்பரப்பை கூட இழக்க முடியாது.' என்றும் கூறியுள்ளார்.


மறுபுறம் செப்ரெம்பர்-07 அன்று இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையை ஒட்டி அமைந்துள்ள ஷெண்பாவோ மலைப் பகுதி அருகே மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை, இந்திய இராணுவம் சட்டவிரோதமாக கடந்து வந்தது என்று சீன இராணுவம் தெரிவித்துள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்த சீன இராணுவ வீரர்களை நோக்கி இந்தியப் படையினர் எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுட்ட பின்பு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீன எல்லை பாதுகாப்பு படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்றும் சீன இராணுவத்தின் வெஸ்டன் தியேட்டர் கமாண்ட்-ன் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் சாங் ஷூலி தெரிவித்துள்ளார். எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுடுவது என்பது பதற்றமான சூழல்களில், எதிர்த்தரப்பை நோக்கி சுடாமல், வானை நோக்கிச் சுடுவதாகும். இந்தியப் படையினர் சட்டவிரோதமாக மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து வந்தது இந்தியா மற்றும் சீனா இடையே உள்ள ஒப்பந்தங்களை கடுமையாக மீறும் செயல்; இது அப்பிராந்தியத்தில் பதற்றநிலை தூண்டுவதுடன், தவறான புரிதல்கள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சீனாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய இராணுவம் தாங்கள் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை (எல்.ஏ.சி) தாண்டி செல்லவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்திய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கர்னல் அம்ன் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்தவிதமான உக்கிரமான முறைகளையும் இந்திய இராணுவம் கையாளவில்லை என்று தெரிவித்துள்ளார். எல்.ஏ.சி-யை ஒட்டி அமைந்துள்ள இராணுவ நிலை ஒன்றின் அருகே சீன இராணுவத்தினர் நெருங்க முயற்சித்ததாகவும், அதை இந்திய இராணுவத்தினர் தடுத்ததால் தங்களை தூண்டும் நோக்கில் சீன இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. மிகவும் மோசமாக தூண்டிவிடப்பட்டு இருந்தாலும், கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடித்த இந்தியப் படையினர், மிகுந்த முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் செயல்பட்டனர் என்று இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.


இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுமே அணுவாயுத நாடுகள் என்றரீதியில் பெரும் கெடுபிடிப்போருக்குள் செல்வதற்கான எவ்வித வாய்ப்பின்மைகளையே மூன்று மாதங்களுக்கு மேலாக தொடரும் உரசல்களும், மோதலின் ஆரம்பத்திலும் ஆயுதப்பயன்பாடுகளின்றி இரு நாட்டு இராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டமையும் பறைசாற்றுகின்றது. இது உலக பொருளாதாரத்தில் போட்டிபோடும் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளிடையே சீனா தன் வல்லாதிக்கத்தை நிலைநாட்ட, கொரோனாவிற்கு பின்னர் மாறப்போகும் புதிய உலக ஒழுங்கில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக எடுத்துள்ள நகர்வாகவும் அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது. இந்தியா - சீனா மோதல் போக்கும் அதனையே உறுதி செய்கிறது. சீனாவின் பண்டைய இராணுவ தளபதி சுன் ஜூ, இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 'போர்க்கலை' (வுhந யுசவ ழக றுயச) என்ற புத்தகத்தில் 'எதிரிகளிடம் சண்டையிடாமல் தோற்கடிப்பதே சிறந்த போர்க் கலையாகும்' என்று எழுதியுள்ளார். சீனர்கள் தங்களது இராஜதந்திர செயற்பாடுகளுக்கு முன்னோடியாக இன்றும் போர்க்கலை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளையும் பின்பற்றுகின்றனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போது நடந்து வரும் எல்லை சார்ந்த கொதிநிலையிலும் போர்க்கலை புத்தகத்தின் கருத்துதுக்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.


இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையிலான எல்லை முரண்பாட்டை சார்ந்து எழும்பியுள்ள கொதிநிலை போக்கு வல்லாதிக்க போட்டியின் நிலையை உறுதி செய்வதற்கானது தான் என்பதையே முன்னாள் மற்றும் இந்நாள் வல்லாதிக்க நாடுகளான ரஷ்சியா மற்றும் அமெரிக்காவினுடைய தலையீடுகளும் உறுதி செய்கிறது. சீனாவின் வெற்றி என்பது கொரோனாவிற்கு பின்னர் மாறப்போகும் புதிய உலக ஒழுங்கில் சீனாவை வல்லாதிக்க சக்தியாக முடிசூட்டும் விடயமாக மாறிவிடும் என்ற அடிப்படையிலேயே சீனாவின் வெற்றியை தடுக்கும் வகையில் அமெரிக்கா தன் நட்பு நாடுகளாகிய பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா ஊடாக இந்தியாவிற்கு நவீனரக ஆயுதம், இராணுவ பயிற்சிகளை வழங்கி வருகிறது.


இந்தியா – சீனா முரண்பாடு கெடுபிடிப்போருக்கு நகராது, வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான களமாக சீனாவால் நகர்த்தப்படுவது தெளிவாக இந்தியா – சீனா மோதல் போக்கும், சீனாவின் போர்க்கலை தந்திரமும் தெளிவாக பறைசாற்றுகிறது. சீனாவை நெறிப்படுத்தும் 'போர்க்கலை' என்ற புத்தகம் போன்றே இந்தியாவிற்கும் இந்திய இராஜதந்திரத்தை வரலாற்றில் வகுத்த 'அர்த்த சாஸ்திரம்' என்ற புத்தகம் காணப்படுகிறது. போர்க்கலையை அர்த்த சாஸ்திரம் வெற்றி கொள்ளுமா? என்பதில் அதனை நுட்பத்துடன் பயன்படுத்தும் தலைமைகளின் கைகளிலேயே உள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-