இஸ்ரேலுடனான மேற்காசிய அமைதி திட்டத்தில் அடுத்தது ஓமானா? -ஐ.வி.மகாசேனன்-
அமெரிக்காவில் கோவிட்-19 பற்றி காரசாரமான உரையாடல் இடம்பெற்றுகொண்டிருக்கும் சமகால பகுதியில், இஸ்ரேலுடன் அரபு நாடுகளை இணைப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் மும்மரமாக உள்ளார். 2020ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் ஆகஸ்ட்-13அன்று இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சமாதான திட்டத்திற்கும், செப்டெம்பர்-15 அன்று இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் சமாதான ஒப்பந்தத்திற்கும் தரகு வேலையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் இஸ்ரேலுடன் அதிகரிக்கும் அரபு நாடுகளின் உறவை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவினுள் 1948ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளால் உருவாக்கப்ட்டு அங்கீகரிக்கப்பட்ட நாடே இஸ்ரேல் எனப்படும் யூத தேசமாகும். மேற்காசிய அரபு உலகில் ஏற்கனவே காணப்பட்ட பாலஸ்தீனத்தை கூறாக்கி இஸ்ரேலின் உருவாக்கம் அமைந்ததால், இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அதன் பிராந்தியமான அரபு நாடுகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை. குறிப்பாக 1948 மே-14அன்று நள்ளிரவில் பாலஸ்தீனத்திற்கான பிரிட்டிஷ் ஆணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன போர் ஆரம்பமாகியது. அரபு நாடுகளின் இராணுவ கூட்டணி பாலஸ்தீனம் சார்பாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் களமிறங்கி மே-15 காலையில் பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தின் எல்லைக்குள் நுழைந்தது. இஸ்ரேலிய சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் முதலாகவே பலஸ்தீனத்தினத்திற்கான தனி அரசு அங்கீகாரத்தை கோரி அரபு நாடுகள் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டி வந்தன.
எனிலும், அமெரிக்காவின் தரகில் எகிப்திய ராணுவம் முதன்முதலாக இஸ்ரேலுக்கு எதிரான அரபுநாடுகளின் எதிர்ப்பிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. 1979இல், எகிப்து முதல் முறையாக இஸ்ரேலுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரபு லீக், எகிப்தை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. தொடர்ந்து இஸ்ரேலுடனான பகைமையிலிருந்து பின்வாங்கிய இரண்டாவது நாடாக ஜோர்டான் காணப்படுகிறது. 1994இல் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் ஜோர்டான் கையெழுத்திட்டது. நீண்ட காலத்துக்கு பிறகு 2020ஆம் ஆண்டில் இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனும் கையெழுத்திட்டுள்ளன.
இஸ்ரேலிடம் அரபு நாடுகள் முன்னர் விடுத்த நிபந்தனையாவது, பாலஸ்தீனத்திற்கு ஒரு தனி நாடு என்ற அந்தஸ்தை இஸ்ரேல் வழங்காவிட்டால், அதனுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள முடியாது என்பது ஆகும். எனிலும் ஒரு தனி பாலஸ்தீனம் உருவாகாமலேயே, எகிப்து, ஜோர்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் முறையே இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கைககளை மேற்கொண்டதனூடாக, இஸ்ரேலை அங்கீகரித்திருப்பது ஒரு ஏமாற்று வேலை என்று பாலஸ்தீன தலைவர்கள் கூறியுள்ளனர். மே 4, 1994 அன்று, பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத், இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபினுடன் கெய்ரோவில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அவர்களின் தரகில் ஒரு உடன்பாட்டை எட்டினார்கள். பின்னாளில் யாசிர் அராபத் மீதான நம்பிக்கையை இழக்கவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வீழ்ச்சிக்கும் அவ்உடன்படிக்கை ஊடாக யாசிர் அராபத் இஸ்ரேலை ஏற்றுக்கொண்டார் என்பதே பெரும் விமர்சனமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி ஒப்பந்தத்தில் பஹ்ரைனின் இணைவிலும் பாலஸ்தீன விவகாரம் முதன்மை பெறுகின்றது. அரபு அமைதி துவக்கத்தின் கட்டமைப்பில் இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான தீவிர முயற்சிக்கு பஹ்ரைனின் மன்னர் ஹமாத் அழைப்பு விடுத்துள்ளதாக இஸ்ரேலுடன் "சமாதான பிரகடனத்தில்" கையெழுத்திட சில மணி நேரங்களுக்கு முன்னர் அவரது வெளியுறவு மந்திரி தெரிவித்திருந்தார்.
ஒரு நேர்காணலில், அப்துல்லதிஃப் பின் ரஷீத் அல் சயானி, இஸ்ரேலுடனான இயல்பாக்கம் ஒப்பந்தம், “உலகில் அமைதி கலாச்சாரத்தை பரப்புவதற்கான ஹமாத்தின் மன்னரின் பார்வைக்கு ஏற்ப உள்ளது. சமாதான முன்முயற்சியின் படி இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவது அவரது உத்தரவுகளுக்கு ஏற்பவும் உள்ளது. 2002ஆம் ஆண்டில் அரபு லீக்கால் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரபு அமைதி முயற்சி, 1967 வரிகளின் அடிப்படையில் ஒரு பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதற்கு ஈடாக முழு முஸ்லீம் உலகத்துடனும் இஸ்ரேலுக்கு முழு இராஜதந்திர உறவுகளை உறுதியளிக்கிறது. பஹ்ரைன் எப்போதுமே சகோதரத்துவ பாலஸ்தீனிய மக்களின் உரிமையை நோக்கி அதன் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது, அவை அதன் முன்னுரிமைகளில் முதன்மையானவை. பாலஸ்தீன மக்கள் தங்களது முழுமையான நியாயமான உரிமைகளைப் பெற வேண்டும்.” என்று கூறுகிறார்.
ஆயினும் மறுதலையாய் இஸ்ரேல் - அரபு நாடுகளிடையேயான அமைதி ஒப்பந்தங்கள் மேற்காசியா பிராந்தியத்தில் அமைதியையே சீர்குலைக்கிறது என்பதனை இஸ்ரேலுடன் உறவை இறுகப்பற்றும் அரபு தேச தலைவர்கள் மறக்க / மறைக்க முயலுகிறார்கள். கடந்த செப்டெம்பர்-15 அன்று அமெரிக்க வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – பக்ரைன் சமாதான ஒப்பந்தத்தை தொடர்ந்து மேற்காசியா இஸ்ரேல் – காசா பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீனத்தின் வாபா செய்தி நிறுவனம் தரப்பில், “ இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவின் பெய்ட் லஹியா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தின. மேலும் காசாவின் மத்திய பகுதிகலிலும் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் தரப்பில் 15 ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் கருத்துரைக்கையில், “இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தியதாக” தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேலும்சில அரபு நாடுகளும் இஸ்ரேலிய உறவில் இணையப்போவதாக ட்ரம்ப் கருத்துரைத்துள்ளார். இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பிறகு, 7-9 நாடுகள் இஸ்ரேலுடன் சமாதானத்தை நாடுகின்றன என்று டிரம்ப் கூறியுள்ளார். யூத அரசுடனான அரபு உறவை சீராக்க தயாராகி உள்ள அமெரிக்க ஜனாதிபதி, அந்த நாடுகளில் சவுதி அரேபியாவை உள்ளடக்கியுள்ளார்,
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுக்குப் பிறகு, இஸ்ரேல் விரைவில் ஓமானுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் ஆரூடமும் காணப்படுகிறது. ஓமான் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தில் இணையக்கூடிய வாய்ப்பை பல விடயங்கள் உறுதி செய்கின்றன. ஆகஸ்ட்-13இல் இஸ்ரேல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுகையிலேயே, ஆகஸ்ட்-16 அன்று இஸ்ரேலிய உளவுத்துறை அமைச்சர் எலி கோஹன் இராணுவ வானொலியில், “இஸ்ரேலுடனான உறவுகளை முறைப்படுத்துவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பின்பற்றும் அடுத்த வளைகுடா நாடுகளாக பஹ்ரைனும் ஓமானும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்தார். மேலும், "பஹ்ரைன் மற்றும் ஓமான் நிச்சயமாக நிகழ்ச்சி நிரலில் உள்ளன என்று நான் நினைக்கிறேன். கூடுதலாக, எனது மதிப்பீட்டில், ஏற்கனவே வரும் ஆண்டில் ஏற்கனவே ஆப்பிரிக்காவில் கூடுதல் நாடுகளுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அவற்றில் முக்கியமானது சூடான்," என்று அவர் கூறினார். அவருடைய உறுதியான இணைவு வரிசையில் செப்டெம்பர்-15அன்று பஹ்ரைன் இணைந்துள்ளது. ஆதலால் அடுத்தது ஓமானே எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், அமெரிக்கா நிதியுதவி அளித்த இஸ்ரேலுடனான அரபு நாடுகளின் ஒப்பந்தத்தை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் இல்லாத ஓமான், பகிரங்கமாக வரவேற்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் ஓமனி தூதர் ஹுனைனா அல் முகைரி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சமாதான ஒப்பந்த கையெழுத்திடும் விழாவில் கலந்துகொள்வதை, ஓமானின் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் இயல்பாக்கப்பட்ட உறவுகளுக்கான தங்கள் சொந்த வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அல்லது இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பதற்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆயினும் இஸ்ரேலுடனான ஏனைய அரபு நாடுகளின் ஒப்பந்தத்தை வரவேற்பது ஓமானின் எதிர்கால இணைவுக்கான சமிக்ஞையாகவே காணப்படுகிறது.
இஸ்ரேலிற்கும் ஓமனிற்கும் இடையே ஏற்கனவே அமையப்பெற்றுள்ள முறையான தூதாண்மையும் இரு நாடுகளதும் உறவுகளின் தொடக்கத்திற்கும் ஒரு வலுவான வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 2018 அக்டோபரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஓமானிற்கு அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு சுல்தான் கபூஸ் அவர்களை சந்தித்திருந்தார். ஓமானுக்கு கடைசியாக விஜயம் செய்த இஸ்ரேலிய தலைவர் 1996 இல் ஷிமோன் பெரெஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓமானுக்கான விஜயம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், "பிராந்தியத்தின் மாநிலங்களுடனான உறவை ஆழப்படுத்தும்" கொள்கையின் ஒரு பகுதியாக இது அமைந்தது என்று கூறியது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2019 பெப்ரவரியில், போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற அமெரிக்கா நிதியுதவி அளித்த மத்திய கிழக்கு மாநாட்டின் ஒரு பகுதியாக ஓமானின் வெளியுறவு மந்திரியை சந்தித்து அங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மற்ற அரபு நாடுகள் இஸ்ரேலுடன் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டினார். இராஜதந்திர உறவற்ற நிலையில் தொடரும் இவ்வாறான சந்திப்புக்கள் இராஜதந்திர உறவிற்கு வித்திடவே வாய்ப்புக்கள் உள்ளது.
1970களில் இருந்து தனது நாட்டிற்காக ஒரு தனித்துவமான செயல்தந்திர திட்டத்தை ஓமான் பின்பற்றிவருகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளில் அரிதாகவே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பிராந்திய தகராறுகளில் ஓமான் பொதுவாக நடுநிலை வகிக்கிறது. இதனை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசியா மையத்தின் பேராசிரியர் அப்தாப் கமால் பாஷாவும் பின்வருமாறு விளக்குகிறார். “ஓமனுக்கு ஈரானுடன் நீண்டகால உறவுகள் உள்ளன. டோஃபாரில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டபோது, ஈரான் தன் படைகளை அங்கு அனுப்பி அவர்களை விரட்டியது. புரட்சிக்குப் பிறகும் ஈரானுடன் ஓமான் நல்ல உறவை பராமரித்து வருகிறது. 1979இல் எகிப்து முதன்முதலில் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்தபோது அதை பகிரங்கமாக வரவேற்ற ஒரே நாடு ஓமான் மட்டுமே," என்று பேராசிரியர் கூறுகிறார். ஓமானுக்கு தனித்துவமான இவ்நடுநிலைக்கொள்கை ஓமான் இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்த ஏதுவாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
இன்றைய மேற்காசிய பிராந்திய அரசியல் அமெரிக்க தரகில் அரபு நாடுகள் இஸ்ரேலை நோக்கி பயணிப்பதாகவே உருமாறி வருகிறது. எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் வரிசையில் ஓமான் இஸ்ரேலுடனான அமைதி திட்டமே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான ட்ரம்பின் நகர்வாக காணப்படும்.
Comments
Post a Comment