தேருநர் இடாப்பு சீரான பதிவு தமிழர்ஆசனத்தை பலப்படுத்தும்! -ஐ.வி.மகாசேனன்-

 தமிழர்களின்  வாக்குச்சிதறலால் பிரதிநிதித்துவத்தில் பெரும் சரிவை சந்திக்கும் அவலமான சூழலியே தமிழர்கள் இன்று உள்ளனர். இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளும் அவ்உண்மையையே வெளிப்படுத்தி உள்ளது. வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்களில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் ஊசலாடியுள்ளது. அம்பாறை மாவட்டம் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை முழுமையாய் இழந்துள்ளது. வன்னித்தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டமும் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கின் பாராளுமன்ற ஆசனங்களும் குறைக்கப்படுமாயின் தமிழ்த்தேசியத்துக்கான பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாவதுடன் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்குரலும் முற்றாக முடக்கப்படும் சூழலே உருவாகும்.


இந்நிலையில் இக்கட்டுரை வடக்கு, கிழக்கு பாராளுமன்ற ஆசனத்தை உறுதிசெய்ய தமிழ் சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 96 – 98ஆம் உறுப்புரைகளில் தேர்தல் மாவட்ட தெரிவு மற்றும் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை ஒதுக்கீடு தொடர்பில் விபரமாக கூறப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்திற்கான ஆசன ஒதுக்கீட்டில்  29 தேசியப்பட்டியல் மற்றும் மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான தலா நான்கு வீதம் 36 ஆசனங்களும் ஆரம்பத்திலேயே ஒதுக்கப்படுகிறது. மிகுதி 160 ஆசனங்களுமே 22 தேர்தல் மாவட்டங்களினதும் தேருநர் இடாப்பில் (வாக்காளர் இடாப்பு) உள்ள எண்ணிக்கையின் விகிதாசாரங்களுக்கு ஏற்ப ஆசனங்கள் பகிரப்படும்.


இலங்கையின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும்  தேருநர் இடாப்பில் பதிவு செய்த மொத்த வாக்காளர் எண்ணிக்கையை 160ஆசனங்களால் பிரிக்க பெறப்படும் முழு எண்  ‘தகைமை பெறுதொகை' எனக்குறியீடு செய்யப்படும். அத்தகைமை பெறுதொகையையால் ஒவ்வொரு மாவட்ட தேருநர் இடாப்பு எண்ணிக்கையையும் பிரிப்பதன் மூலம் கிடைக்கப்பெறும் முழு எண்களின் அடிப்படையிலேயே ஆசனங்கள் தேர்தல் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆக இலங்கை பாராளுமன்ற ஆசன பகிர்வில் தேருநர் இடாப்பில் பதிவை உறுதி செய்யும் எண்ணிக்கையே தீர்மானிக்கும் சக்தி பெறுகிறது. இந்நிலையறியாது ஈழத்தமிழர் பலரும் தேருநர் இடாப்பு மீளாய்வு காலத்தை மெத்தனக்கடந்து செல்லும் போக்கு காணப்படுகிறது. உரிய வடக்கு, கிழக்கு அரசாங்க அதிகாரிகளும் அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி ஈடுபடுத்த முற்படுவதில்லை.


30 ஆண்டு கால போர் அதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் புலம்பெயர்வு சார்ந்த பிரச்சினைகளால் தமிழ் சமுகத்தின் சனத்தொகையே பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்வழி வாக்காளர் எண்ணிக்கையும் பாரிய விழ்ச்சியடைந்து வந்துள்ளது. அதன் பிரதிபலிப்பே வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களை கொண்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 2010ஆம் ஆண்டு 9ஆசனங்களிலிருந்து 2015ஆம் ஆண்டு இரு ஆசனங்களை இழந்து 7 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இனிவரும் தேர்தலில் மேலும் 2 குறைவடைந்து 5 ஆகவும் வாய்ப்பு உண்டெனவே எதிர்வு கூறப்படுகிறது.


வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர்த்தப்படாத பிரதேசங்களில் கடந்த காலங்களில் தேருநர் இடாப்பு மீளாய்வுகளின் போது மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. 2019ஆம் ஆண்டு வருடாந்த தேருநர் இடாப்பு புதுப்பித்தலின் போதும் மீளக்குடியமர்த்தப்படாத பிரதேசங்களில் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டாமென யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் திணைக்களத்தால், தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் அந்தப்பகுதிகளை சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.   21 கிராம அலுவலகர் பிரிவுகளில் 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. எனிலும் சரியான முறையில் பதிவுகளை மேற்கொள்ளாவிடில் 25,000இற்கும் அதிகமான வாக்காளர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு காணப்பட்டதாக எதிர்வுகூறப்பட்டது. இது யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையையும் மேலும் குறைக்க கூடியதாகும்.


தமிழ் சமூகத்திடம் தேருநர் இடாப்பின் மீளாய்வுகள், பதிவுகள் தொடர்பில் சரியான புரிதல் காணப்படுவதில்லை. சரியான புரிதலுக்கான வேலைத்திட்டங்களை தமிழரசியல் கட்சிகளும் நெறிப்படுத்த தவறிவிட்டார்கள் என்பதுவே உண்மையாகும். 2019ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படாத பிரதேசங்களின் மீளாய்வின் போது, குறித்த பிரதேச தேருநர் இடாப்பு பதிவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தேர்தல்கள் திணைக்களம் தெரியப்படுத்தியும் அவர்கள் அக்கறையற்று இருப்பதாக குற்றம்சுமத்தப்பட்டது. எனினும் 2019ஆம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வில் குறிப்பிடத்தக்க பெரும் வீழ்ச்சி காணப்படவில்லை.  எனினும் இவ்அக்கறையீனம் எதிர்வரும் காலங்களில் சரிவை ஏற்படுத்தலாம்.


தேருநர் இடாப்பு மீளாய்வில் புலம்பெயர்தேசங்களில் வாழும் இலங்கையர்களை இலங்கையில் வாழும் உறவினர்கள் பதிவு செய்வதற்கு வசதிகள் உண்டு. 2009இலிருந்து 2010இல் தேருநர் இடாப்பு மீளாய்வில் சடுதியாக 331,214 வாக்காளர்கள் குறைவடைந்திருந்தனர். இதில் போரில் உயிரிழந்தோர் தொகைக்கு சமாந்தரமாக புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும் உண்டு என்பதே நிதர்சனமாகும். ஆக இலங்கை குடியுரிமை உடைய புலம்பெயர் தமிழர்களை தேருநர் இடாப்பில் இணைப்பதன் மூலம் குறைவடைந்து செல்லும் தமிழர் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.  எனிலும் இலங்கைத்தமிழர்கள் சரியான தெளிவூட்டல்கள் இன்மையால் புலம்பெயர்ந்தவர்களை வாக்காளர்களாய் பதிவு செய்ய முயலுவதில்லை.


வருடந்தோறும் தேருநர் இடாப்பு மீளாய்வு செய்யப்படும் ஜூலை மாதத்தில் கிராமசேவையாளர் பிரிவுகளில் கணக்கெடுப்பு அலுவலகராகவும் பணிபெறும் கிராம சேவையாளர்களும் வேலைப்பளு காரணமாக புலம்பெயர்ந்தவர்களின் பதிவுகளை நீக்கி விடுவதிலேயே மும்மரமாக உள்ளனர். தமிழ்த்தேசிய நலன் சார்ந்தோ/ ஆகக்குறைந்தது அரசாங்க ஊழியராய் ஜனநாயகத்தை மையப்படுத்தியோ கிராம சேவையாளர்கள் செயற்படாத துர்ப்பாக்கியமே தமிழர் தாயகத்தில் உண்டு. ஆயினும் தேர்தல் ஆணைக்குழு தேருநர் இடாப்பு  மீளாய்வின் முக்கியத்துவத்திற்காய் கிராம சேவையாளர்களை வீடுகளுக்கு போய் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறது. எனிலும் தமிழர் தாயகப்பகுதிகளின் பெரும்பகுதிகளில் அவ்வாறான நடைமுறை இல்லை. கிராமசேவையாளர் தனது அலுவலகத்துக்கு தமது பகுதி மக்களை அழைத்தே பதிவதுண்டு. இதனாலும் சில பதிவுகள் விடுபடும் நிலை காணப்படுகிறது


மேலும், இலங்கை குடியுரிமை உடைய புலம்பெயர் இலங்கையர்களை தேருநர் இடாப்பில் பதிவு செய்ய, தேருநர் இடாப்பு மீளாய்வு காலப்பகுதியில் புலம்பெயர் தேசத்தில் வாழ்பவரின் உறவினர் உரிமை கோரல் விண்ணப்பப்படிவம் பெற்று புலம்பெயர்ந்து உள்ளவரின் அடையாள அட்டை பிரதி மற்றும் கடவுச்சீட்டு பிரதியையும் இணைத்து விண்ணப்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.இச்செயற்பாட்டு விளக்கத்தை தமிழ் மக்களிடையே விதைத்து மாற்றத்தை ஏற்படுத்த, தமிழ் மக்கள் மீது அக்கறை உடைய இளைஞர் அணியே முன்வந்து செயற்பட வேண்டும். இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களின் பங்குபற்றல் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலை தொடர்ச்சியாக காணப்பட வேண்டும். சமகாலத்தில் இளையோரின் ஆர்வமான அரசியல் பங்குபற்றலே தமிழ்சமூகத்தின் தேவைப்பாடாகும். 


இவ்வாறானா அறிவுசார் நுண்அரசியல் செயற்பாடுகளுக்கே பொதுக்கட்டமைப்பு தமிழ்சமூகத்துக்கு அவசியமாகிறது. எனினும் தமிழ் சமூகத்திடையே உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்புக்கள் அரசியல் கட்சிகளைப்போன்றே அறிக்கை அரசியல்களையே முதன்மைப்படுத்தி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாற்றம் வர வேண்டும். சமகாலத்தில் பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் இளைஞர் அணிகள் பல முன்வந்துள்ளன. அத்தகைய இளையோர் தமிழர் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய வகையிலான அறிவுசார் நுண்அரசியலை முதல் பிரச்சாரமாக கொண்டு மக்களிடையே களமிறங்குவார்களாயின், சரியானதொரு பொதுக்கட்டமைப்பாக மக்கள் மனதில் பதிவதுடன் தமிழ் சமூகத்துக்கு தேவையான ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியோராகவும் மாற முடியும்.


வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும் தேருநர் இடாப்பு மீளாய்வு செயற்பாடானது, இவ்வருடம் கொரோனா முடக்கம் மற்றும் ஆகஸ்ட்-5 பாராளுமன்ற தேர்தல் காரணமாக செப்டெம்பர்-2 தொடக்கம் செப்டெம்பர்-25 வரை நடைபெறுகின்றது. ஒவ்வொரு தமிழரும் தங்கள் கடமையுணர்ந்து செயற்படுவார்களேயானல் பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கின் ஆசனங்களை தக்க வைத்துக்கொள்வதுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் அதிகரிக்கவும் வழிவகைசெய்யலாம். 

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-